காலைத் தொடுவேன்
(நிதி திரட்டிய அனுபவங்கள்)
அ.முத்துலிங்கம்
ஹார்வர்ட் தொடக்கம்
அமெரிக்காவில் இரண்டு பெருந்தகைகள், மருத்துவர் விஜய் ஜானகிராமனும் மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தமும் தமிழ் இருக்கை தொடர்பாக ஆர்வத்தோடு ஹார்வர்டு அதிகாரிகளைச் சந்தித்தபோது நானும் கூட இருந்தேன். ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி நிதி திரட்டலை ஆரம்பித்து வைத்தார்கள். தேவையான இலக்கு 6 மில்லியன் டொலர்கள். அது ஏறக்குறைய இரண்டரை வருடங்களில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு தொடங்கியது. அவர்கள் இலக்கு 3 மில்லியன் டொலர்கள். 2016ல் தொடங்கிய ஹார்வர்டு நிதி திரட்டல் தொடர்ந்து ரொறொன்ரோ தமிழ் இருக்கை நிதி திரட்டலாக மாறி 2021 தொடக்கத்தில் முடிவை எட்டியது. இந்த ஐந்து வருடங்களும் நான் எழுத்து வேலையை தள்ளிவைத்துவிட்டு இரண்டு பல்கலைக்கழகங்களின் தமிழ் இருக்கைகளுக்கும் முழுநேரமாக நிதி சேகரிப்பதில் மும்முரமாகி உழைத்தேன். உலகமெங்கும் பல நூறு பேர்களுடன் தொடர்புகள் கிடைத்தன. சில அனுபவங்கள் நெகிழ வைத்தன; சில அதிர்ச்சி அளித்தன; சில அவமானத்தால் என்னை நிலைகுலையச் செய்தன; சில சிரிப்பு மூட்டின. எல்லாவற்றையும் இங்கே சொல்ல முடியாது. பத்து வருடம் கழிந்தாலும் நினைவில் நிற்கக்கூடிய சில சம்பவங்களை மாத்திரம் கீழே பகிர்ந்திருக்கிறேன்.
சிறைக்கைதி
தமிழ்நாட்டில் ஒரு சின்னக் கிராமத்தில் இளைஞன் ஒருவன் ஏதோ குற்றம் செய்து நாலு வருடம் சிறையில் இருந்தான். அவன் வெளியேறியபோது அவனுடைய உழைப்பு கூலியை சிறை அதிகாரிகள் அவனிடம் கொடுத்தார்கள். அவன் செய்த முதல் வேலை அந்தப் பணத்தை அப்படியே ஹார்வர்டுக்கு அனுப்பியதுதான். எப்படியோ, யாரையோ பிடித்து பணத்தை செலுத்திவிட்டான். அவனுக்கு ஹார்வர்ட் எங்கே இருக்கிறது, அந்தப் பெயரை எப்படி எழுத்துக்கூட்டுவது என்பதெல்லாம் தெரியாது. பிழையான எழுத்துகளுடன் பணம் வந்து சேர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை அவனிடம் எதற்காக பணம் அனுப்பினாய் என்று கேட்டது. அவன் ‘ஹார்வர்ட் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழ் வளராது; வெளிநாட்டில் இப்படியான பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் வளரும். அதுதான் பணம் அனுப்பினேன்’ என்றான். என்னை நெகிழவைத்த முதல் சம்பவம் இது.
50,000 டொலர்
ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதற்காக நான் ஒரு சமயம் பொஸ்டன் சென்றிருந்தேன். அவசரமாக ஒரு டெலிபோன் அழைப்பு கனடாவிலிருந்து வந்தது. முன்பின் தெரியாத ஒருவர் சொன்னார், ’தமிழ் இருக்கை முக்கியமானது. நான் இந்த முயற்சியில் உங்களுடன் பங்காற்றுவேன். உங்கள் குழு தாமதமாகவும், அவசரமில்லாமலும் செயல்படுகிறது. எனக்கு விஜய் டிவியை தெரியும். சன் டிவியை தெரியும். ஓர் இரவுக்குள் என்னால் 50,000 டொலர்கள் திரட்டமுடியும். உடனே வாருங்கள்.’
எனக்கு மகிழ்ச்சி சொல்லமுடியாது. பல தொலைபேசி அழைப்புகள்; பல மின்னஞ்சல்கள். கடைசியில் ஒருநாள் ரொறொன்ரோ உணவகம் ஒன்றில் அவரை சந்திப்பதற்காக நான் காத்திருந்தேன். முதலில் அவர் வந்தார். தொடர்ந்து அதே உயரமான மனைவி; அதே பருமன். பின்னால் நாலு குழந்தைகள். பெரும் ஆரவாரமாகவும், கூச்சலாகவும் இருந்தது. 50,000 டொலர் திரட்டி வைப்பதாக சொல்லியிருந்தாலும் அது பற்றிய பேச்சே இல்லை. சந்திப்பு முடிந்ததும் கார் கண்ணாடி துடைப்பான்போல இருவரும் ஒரே நேரத்தில் சாய்ந்து, ஒரே நேரத்தில் எழும்பி, ஒரே நேரத்தில் நடந்தனர். இப்படியே பல வாரங்கள் ஓடின; ஒன்றுமே பெயரவில்லை.
மதிய உணவுக்கு வழக்கம்போல சந்தித்தோம். அவர் கழுத்திலே தடித்த சங்கிலி. என்னுடன் பேசுவதும், கையிலே கட்டியிருந்த அப்பிள் கடிகாரத்தில் செய்திகள் பார்ப்பதுமாக நேரம் ஓடியது. இது எங்கே போகிறது என்றே எனக்கு தெரியவில்லை. துணிந்து அவரிடம் கேட்டேன். ’உங்கள் நண்பர்களும், டிவி காரர்களும் பணம் தரும்போது தரட்டும். நீங்கள் ஒரு நன்கொடை கொடுத்து தொடக்கலாமே. எவ்வளவு எழுதலாம் என்று நன்கொடை பத்திரத்தை வெளியே எடுத்தேன். அவர் மிரண்டுவிட்டார். இதை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். பெரும் யோசனைக்கு பின்னர் சொன்னார், ‘என்னால் 100 டொலர் கொடுக்கமுடியும். இந்த மாதம் 50 டொலர்; அடுத்த மாதம் 50 டொலர்.’
நான் அன்றைய 7 பேரின் உணவுக்கான தொகை $162 ஐக் கட்டிவிட்டு வெளியேறினேன்.
துப்புரவுத் தொழிலாளி
அவருடைய பெயர் தேசோமயானந்தன். பாரிஸிலிருந்து எப்படியோ என் நம்பரை தேடிப்பிடித்து அழைத்திருந்தார். ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது என்று கேட்டார். நான் சொன்னேன். அவர் வயது 77. நாற்பது வருடங்களாக துப்புரவுத்தொழில் செய்கிறார். திடீரென்று $500 வந்து சேர்ந்தது. ’எதற்காக இத்தனை பெரிய தொகை?” என்றேன். அவர் சொன்னார் ‘ஐயா, என் அம்மா இப்ப இல்லை. தமிழுக்கு கொடுப்பது என் அம்மாவுக்கு கொடுப்பது போலத்தானே’ என்றார். பின்னர் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.
சுந்தர் பிச்சையை தெரியும்
சுந்தர் பிச்சையை எனக்குத் தெரியும்.
யார் அது?
இது என்ன? கூகிள் நிறுவனத்தின் தலைவர்.
ஓ, அவரா? எப்படித் தெரியும்?
என் பக்கத்து வீட்டுக்காரரின் மாமனாரும், சுந்தர் பிச்சையின் பெற்றோரும் சிநேகிதர்கள்.
எப்படி?
அவர்கள் பஜனைக்கு ஒன்றாகப் போவார்கள், வருவார்கள்.
அப்படியா?
என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சுந்தர் பிச்சையின் வருட வருமானம் எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு 380 மில்லியன் டொலர்கள்.
அதனால் எனக்கு என்ன?
அவர் நினைத்தால் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு ஒரு மில்லியன் டொலர் கொடுப்பார். அது அவருக்கு காசே அல்ல.
அவருக்கு எத்தனையோ வேலை. இன்னும் எவ்வளவோ பணம் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் கொடுப்பாரா?
அப்படிவிட முடியாது. நான் இப்பவே எழுதுகிறேன். ஒரு மில்லியன் டொலர் காசோலை வரும். அதற்கு நான் உத்தரவாதம்.
எப்படி வரும்?
கூரியரில்தான். நேராக ரொறொன்ரோ பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவிடுவார்.
எப்படி முகவரி கிடைக்கும்?
உலகத்துக்கே தேடுதலை சொல்லிக் கொடுத்தவர். அவருக்கு ஒரு முகவரி தேடுவதா பிரச்சினை?
நண்பர் சொன்னபடியே பக்கத்து வீட்டுக்காரரின் மாமாவுக்கு எழுதிப்போட்டார். அவரும் இதோ, அதோ என்று சொன்னார். நினைவூட்டல்களும் அனுப்பினார். இப்பொழுதெல்லாம் நண்பர் கண்ணில் படுவதே இல்லை. நானோ நம்பிக்கை இழக்கவில்லை. யார் கண்டது? நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரம் கலிஃபோர்னியாவிலிருந்து காசோலை கிளம்பியிருக்கும்.
பிரபலமல்லாத கல்லூரி
தொலைபேசியில் ஒருவரை அழைத்தேன். அவர் அழைப்பை துண்டிக்காமல் உடனேயே பேசினார். ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய பெயர் டெலிபோனில் விழுந்தால் ஒருவரும் எடுப்பதில்லை. ’வில்லங்கம் பிடித்தவர் வருகிறார். தமிழ் இருக்கைக்கு நிதி கேட்டு தொல்லைப்படுத்துவார்’ என்ற செய்தி எப்படியோ பரவிவிட்டது. ஈழத்துக் கல்லூரிகளின் பழைய மாணவ மாணவியர் சங்கங்கள் நூற்றுக்கு மேலே கனடாவில் இயங்கின. பிரபலமில்லாத கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர் தகுதிக்கு மீறி அள்ளி அள்ளிக் கொடுத்தனர். ஒருநாள் ஓர் அழைப்பு வந்தது. அவரை எனக்கு தெரியாது. நான் சந்தை அழைப்பு என்று நினைத்து டெலிபோனை துண்டித்துவிட்டேன். பத்து நிமிடம் கழித்து டெலிபோனை எடுத்தபோது அவர் இன்னும் எனக்காக காத்து நின்றார். ‘ஐயா, போன வருடம் 1000 டொலர் அனுப்பினேன். மேலும் 1000 டொலர் அனுப்பவேணும். எப்படி அனுப்புவது’ என்றார். எனக்கு சங்கடமாய்ப் போய்விட்டது.
பிரபலமான கல்லூரி
மெய்நிகர் கூட்டம் ஒன்றுக்கு அழைத்திருந்தார்கள். தமிழ் இருக்கைக்கு நிதி சேர்த்து தருவதாக ஒப்பந்தம். குறித்த நேரத்துக்கு அழைத்தேன். என்னால் உள்ளே நுழைய முடியவில்லை, ஆனால் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஒரு பெண் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் கத்தினேன். அவருக்கு கேட்கவில்லை. என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. வாசலிலே நின்றேன். என்னை அழைத்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
ஈழத்தில் அதிபிரபலமான கல்லூரி ஒன்றின் பழைய மாணவர் சங்கத்துக்கு தமிழ் இருக்கைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். இது பணக்காரக் கல்லூரி, 150 வருடங்களாக இயங்குவது. இங்கே படித்தவர்கள் பலர் மருத்துவர்களாகவும், எஞ்சினியர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் கனடாவில் சம்பாதிக்கிறார்கள். பதில் இல்லை. மின்னஞ்சலில் மன்றாடினேன். தொலைபேசியில் நினைவூட்டினேன். மின்னஞ்சல்களை தலைவர் செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் பார்ப்பார் என்று சொன்னார்கள். இது என்ன சட்டம்? புதனும், திங்களும் என்ன பாவம் செய்தன? ஆனாலும் காத்திருப்பதில் பிழையில்லை. நிதி சேர்ப்பதில் முக்கியமான விதி, பொறுமை .
பழைய காலப் புலவர்கள் அரசனின் வாசலில் பரிசுக்கு காத்து நிற்பதுபோல நான் நின்றேன். பல மணி நேரங்கள்; பல நாட்கள். ஒரு புலவர் பலநாள் நின்று அலுத்து ’வாயிலோயே, வாயிலோயே’ என்று கூவி அழைத்து வெறுத்துப்போய் ’எத்திசை செல்லினும், அத்திசை சோறே’ என்று திரும்பியதுபோல நான் திரும்பப் போவதில்லை. காத்திருக்கிறேன். ஒரு நாள் சூம் வாசல் கதவு திறக்கும். பெரிய பள்ளிக்கூடத்து தலைவர் செவ்வாய்க் கிழமை மின்னஞ்சலை திறப்பார். அவர் இருதயமும் திறக்கக்கூடும். வேறு என்ன வேலை எனக்கு? கதவுகள் திறக்குமட்டும் பொறுமையாக நிற்பதுதானே!
மகன் பெயர்
முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து சமீபத்தில் கம்புயூட்டரில் ஒரு தகவல் வந்தது. என்னுடைய தொழில்நுட்ப அறிவு மிகவும் குறைச்சலானதால் நான் இப்படி வரும் செய்திகளுக்கு பதில் அனுப்புவது கிடையாது. வந்த தகவல் இதுதான். ’நான் உங்கள் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.’ இதற்கு என்ன பதில் எழுதுவது? அடுத்த நாள் இப்படி வந்தது. ’ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது?’ நான் சும்மா பதில் எழுதி வைத்தேன். என்ன ஆச்சரியம், அன்று மாலையே ரொறொன்ரோ பல்கலைக்கழகம் 50 டொலர் வந்ததாக அறிவித்தார்கள்.
ஒருநாள் இந்த மர்மமான மனிதர் தொலைபேசியில் பேசினார். இவர் 17 வயதில் ஈழத்திலிருந்து அகதியாக பாரிசுக்கு வந்து 18 வருடமாக அங்கே வாழ்கிறார். ஈழத்தில் வாழ்ந்த நாட்களிலும் பார்க்க அதிக நாட்களை பாரிசில் கழித்துவிட்டார். ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு மொழி கொஞ்சம்தான் தெரியும். ஆங்கிலமும் அப்படியே. நல்ல தமிழில் பேசுகிறார். டாக்சி ஓட்டிச் சம்பாதிக்கிறார். ’உங்களுக்கு பெரிதாக பிரெஞ்ச் மொழி தெரியாது, எப்படி சமாளிக்கிறீர்கள்?’ ’ இதிலே என்ன பிரச்சினை? எங்கே போகிறீர்கள்? காசா கிரெடிட் கார்டா? என்று கேட்கத் தெரியவேண்டும். தமிழ்தானே என் மொழி. பிழைப்புக்காக இரண்டு பிரெஞ்சு வார்த்தைகளை பாடமாக்கி வைத்திருக்கிறேன்.’
’டாக்சி ஓட்டுவதற்கு உரிமம் பெறுவது கடினம் என்று சொல்கிறார்களே?’ ’உண்மைதான். ஒருவருடமாக 2000 யூரோ கட்டிப் படித்த பின்னர் நடந்த பரீட்சையில் பெயிலாகிவிட்டேன்.’ ’எப்படி?’ ’டாக்சி ஓட்டுநருக்கு எல்லா ரோட்டுப் பெயரும் தெரிந்திருக்கவேண்டும். அதிலே சின்னப் பிழை விட்டுவிட்டேன்.’ ’அடுத்த தடவை சித்தியடைந்தீர்களா?’ ’இல்லை, வருமான வரி கேள்வியில் பெயிலாகிவிட்டேன்.’ ’வருமான வரியா? டாக்சி ஓட்டுவதற்கும் வருமான வரிக்கும் என்ன சம்பந்தம்?’ ’டாக்சி ஓட்டினால் என் தொழிலுக்கு நானே முதலாளி. ஒரு முதலாளிக்கு எவ்வளவு வருமானத்துக்கு எத்தனை வரி என்ற கணக்கு தெரிந்திருக்க வேண்டும். அடுத்த தடவை வெற்றி பெற்றுவிட்டேன்.’
’கொரோனா நாட்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?’ ’மிகவும் மோசம், வாடிக்கையாளர்கள் பாதியாக குறைந்துவிட்டார்கள். ஆனால் செலவு அதிகம். சிரமம்தான்.’ ’உங்கள் மனைவி வேலை செய்கிறாரா?’ ’அதிலே ஒரு பிரச்சினை. என் மகனுக்கு அபூர்வமான வியாதி. அவனுக்கு உணவை விழுங்கத் தெரியாது. நானும் மனைவியும் மாறி மாறி அவனை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று தினமும் பயிற்சியளிக்கவேணும்.’
’ஓ, அப்படியா? மன்னியுங்கள். கொரோனா சமயம் உங்களுக்கு வருமானம் இல்லை. செலவும் அதிகம். மகனுடன் மருத்துவ மனையில் நேரம் செலவழிக்கவேணும். இந்த சமயத்தில் நீங்கள் தமிழ் இருக்கைக்கு நிதி கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?’ ’அது முக்கியம் ஐயா. தமிழ் இருக்கை அமைவது பெரிய விசயம். மொழிக்காகத்தானே நான் நாட்டைவிட்டு துரத்தப்பட்டேன். எங்கள் மொழிக்கு கிடைக்கும் கௌரவம் எனக்கு கிடைத்தது மாதிரித்தான். கொடையாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கவேணும்.’
தொலைபேசியை வைத்தபின்னர் யோசித்தேன். இந்த அருமையான மனிதருடைய மகன் பெயரை கேட்க மறந்துவிட்டேன். உடனேயே குறுஞ்செய்தி அனுப்பி அவருடைய மகன் பெயர் என்னவென்று கேட்டேன். அது நேற்று. அதிகாலை ஐந்து மணிக்கே கணினியை திறந்து வைத்து அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன். சிலவேளை நாளை வரலாம்.
பத்து ஏக்கர் செல்வந்தர்
பொது வாழ்க்கையில் நிதி சேகரிப்பவர்களுக்கு பல அவமானங்கள் நேர்ந்திருக்கின்றன. ஒரு நகரத்து மக்கள் பொது நீச்சல் குளம் கட்ட தீர்மானித்தார்கள். வீடு வீடாகப் போய் அதற்காக பணம் சேர்த்தார்கள். ஒரு வீட்டில் போய் கதவைத்தட்டி பொது நீச்சல் குளம் கட்ட உதவி தேவை என்று யாசித்தபோது வீட்டுக்காரர் உள்ளே சென்று ஒரு வாளி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இது மிகையல்ல, அடிக்கடி நடப்பதுதான்.
கனடாவின் அதிசெல்வந்தர்களில் ஒருவரிடம் அவரை சந்திப்பதற்கு நேரம் வாங்கிவிட்டேன். இவர் சிறுவயதில் அகதியாக பெற்றோருடன் கனடாவுக்கு வந்தவர். அந்த வயதில் அவருக்கு தமிழ் அன்றி வேறு ஒரு மொழியும் தெரியாது. அவரை வகுப்பில் சேர்த்தபோது ஆங்கிலம் தெரியாததால் அவராகவே ஆசிரியரிடம் வேண்டி ஒரு வகுப்பு கீழே இறங்கி படிப்பை தொடங்கியவர். ஆரம்ப தடங்கலைத் தாண்டி இங்கேயே படித்து முன்னேறி சொந்தமாக கம்பனி தொடங்கி மிகப் பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்துவிட்டார்.
அவருடைய வீடு பத்து ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. கேட்டுக்கு வெளியே நின்று செல்பேசியில் அழைக்க அவர் அங்கிருந்தபடியே கேட்டைத் திறந்துவிட்டார். வாசலிலே உள்ள காலநிலை வேறு, வீட்டின் எல்லையில் உள்ள கால நிலை வேறு. அத்தனை பெரிய வீடு. நாலு பிள்ளைகள். ஒவ்வொருவரும் வீட்டிலே ஒவ்வொரு திசையில் இருந்தபடியால் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கிடையில் உரையாடல்கள் நடந்தன. அவருடைய மனைவி விருந்துக்கு புறப்பட்டவர்போல நீண்ட ஆடையணிந்திருந்தார். தேநீர் கொண்டுவந்தபோது பறவை சிறகடிப்பதுபோல அவருடைய ஆடை மடிந்து மடிந்து விலகியது.
தேநீரை அருந்தியபடியே நான் விசயத்தை சொன்னேன். அவர் அமைதியாக கேட்டார். இடைக்கிடை செல்பெசி அழைப்பு வந்தபோது அதை எடுக்காமல் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டபின்னர் ஒரேயொரு கேள்வி கேட்டார். ’என்னுடைய பிள்ளைகளுக்கு தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. அவர்கள் ஆங்கிலமும், பிரெஞ்சும் படிக்கிறார்கள். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதால் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ என்ன பிரயோசனம்?’ எனக்கு வாய் அடைத்துவிட்டது. ’உங்களுடைய அம்மா உங்களை குழந்தையாக மடியில் கிடத்தி என்ன மொழியில் பேசினார்?’ என்று கேட்டேன். அவர் தமிழ் என்றார். நான் வேறு ஒன்றுமே பேசவில்லை. விடைபெற்றுக்கொண்டு வெளியேறினேன்.
தாம்பூலப் பை
எனக்கு சாக்குத் துணியில் செய்த தாம்பூலப் பை ஒன்று கும்பகோணத்திலுள்ள சின்னக் கிராமம் ஒன்றிலிருந்து வந்தது. பிரித்துப் பார்த்த நான் ஆச்சரியப்பட்டேன். அதில் இப்படி அச்சடித்திருந்தது. ’தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு. Tamil Chair Inc. University of Toronto, Canada.
ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கும், தாம்பூலப் பையுக்கும் என்ன சம்பந்தம்? அதை அனுப்பியவரையே அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் ‘வேறு ஒன்றுமில்லை, விளம்பரம்தான். கல்யாண வீட்டுக்கு வந்த ஒவ்வொருவருக்கும் பை வழங்கப்பட்டது. அவர் வாசகத்தை பார்ப்பார். அந்தப் பை வேறு ஒருவர் கையுக்கு போகும். அவரும் வாசகத்தை பார்ப்பார். இப்படி இந்தச் செய்தியை பத்தாயிரம் பேராவது படிப்பார்கள்’ என்றார். அத்துடன் அந்த அன்பர் நிற்கவில்லை. ஒருவாரம் கழித்து மிகப் பெரிய தொகை ஒன்றை தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அனுப்பினார்.
அன்பரின் வீடு ரொறொன்ரோவிலிருந்து 13,000 கி.மீட்டர் தூரத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் இருந்தது. இவர்கள் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை பார்த்ததில்லை. அங்கே இவருடைய சொந்தக்காரர் யாராவது படித்ததும் கிடையாது. இந்த நன்கொடையால் பெரிய புகழ் ஒன்றும் இவருக்கு கிடைக்கப் போவதில்லை. இவருக்கும் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமே இல்லை, தமிழ் என்னும் மொழி தான். இந்த நன்கொடையால் அவருக்கு என்ன பிரயோசனம்? பத்து ஏக்கர் வீட்டுக்காரருக்கு இதுதான் பதில் என்று தோன்றியது.
இளம் எழுத்தாளர்
நிதி சேகரிப்பு, வெற்றி தோல்விகள் நிறைந்தது. முன்பின் தெரியாத ஓர் இளம் எழுத்தாளர் தன்னுடைய புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை கேட்டிருந்தார். முன்னுரை எழுதச் சொல்லி யார் கேட்டாலும் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். ஏன் என்றால் ஒரு முன்னுரை எழுதும் நேரத்தில் நான் மூன்று கட்டுரைகள் எழுதிவிடுவேன். அத்துடன் ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிது சேர்ப்பதில் நான் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழித்தேன். ஆகவே சில மணி நேரத்தை திருடித்தான் முன்னுரை எழுதவேண்டும். நான் இளம் எழுத்தாளரிடம் இப்படிச் சொன்னேன். ‘எப்படியும் நேரம் சம்பாதித்து முன்னுரை எழுதிவிடுகிறேன். நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?’ ‘சொல்லுங்கள், ஐயா காத்திருக்கிறேன்.’ ‘ உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் தமிழ் பற்றாளர் என்பது தெரிகிறது. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு உங்கள் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஆதரவு திரட்டமுடியுமா? எத்தனை சிறு நன்கொடை என்றாலும் பரவாயில்லை. அதை நேரே பல்கலைக்கழக வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றேன். மிக்க மகிழ்ச்சியுடன் ’செய்கிறேன், செய்கிறேன்’ என்று உறுதியளித்தார்.
வாக்குக் கொடுத்தபடியே எழுத்தாளரின் புத்தகத்தை இருதரம் வாசித்து குறிப்புகள் எடுத்து முன்னுரை எழுதினேன். நாலு தடவை திருத்தங்கள் செய்தேன். முன்னுரை திருப்தியாக அமைந்ததும் எழுத்தாளருக்கு அனுப்பிவைத்தேன். அவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அது மூன்று மாதங்களுக்கு முன்பு. பின்னர் புத்தகம் வெளிவந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். என்னுடைய முன்னுரையினால் ஒரு பிரதிகூட அதிகமாக விற்காது என்பது எனக்குத் தெரியும்; ஒன்றிரண்டு குறைவாகக்கூட விற்றிருக்கலாம். எனக்கு ஒரு பிரதி அனுப்புவார் என எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் பல்கலைக்கழகத்தை அழைத்து இன்னார் பணம் அனுப்பினாரா என்று கேட்பேன். அவர்கள் இல்லை என்பார்கள். அது ஆறுமாதம் முன்னர். இப்பொழுது கேட்பதை நிறுத்திவிட்டேன்.
சந்தைப்படுத்தல்
ஒருநாள் தமிழ் இருக்கைக்கான telemarketing ரொறொன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. 25 பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தொலைபேசி முன் அமர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே படித்த பழைய மாணவ மாணவியரை அழைத்து தமிழ் இருக்கைக்கு நன்கொடை யாசித்தனர். பணியில் அமர்ந்த எல்லோருமே வெவ்வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள். தமிழ் இருக்கை பற்றி அவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக நான் அங்கே சென்றிருந்தேன். அவர்கள் பேசாத ஒரு மொழிக்காக அவர்கள் அப்படி உளமார உழைத்தது என்னை நெகிழவைத்தது. அன்று அவர்கள் 53 பழைய மாணவ மாணவியரிடம் உரையாடி ஏறக்குறைய 3000 டொலர்கள் திரட்டியிருந்தனர். ‘ஒரு யப்பானிய மாணவியிடம் ஏன் இந்த தொண்டு வேலையை செய்கிறீர்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாக வாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால் அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’ அந்த நொடியில் என் கண்களை அவர் திறந்துவிட்டார். அதுவரைக்கும் நான் தமிழ் இருக்கை அமைவதால் தமிழுக்குத்தான் பெருமை என நினைத்திருந்தேன்.
காலைத் தொடுவேன்
தமிழ் இருக்கைக்கு இணையம் வழியாக பணம் அனுப்புபவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்தது. ஒரு முறை பணம் அனுப்பியவர்களின் பட்டியலைப் பார்வையிட்டபோது முன்பின் தெரியாத ஒருவர் 50 டொலர் அனுப்பியிருந்தார். ஏதோ உந்துதலில் அவரை தொலைபேசியில் அழைத்து பேச்சுக்கொடுத்தபோது அவர் தன் அனுபவத்தை சொன்னார். தொழில்நுட்பக் கோளாறினால் பலதடவை முயற்சி செய்தும் பணம் அனுப்ப முடியவில்லை. இறுதியில் விரக்தி மேலிட ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை நேரிலே அழைத்து பிரச்சினையை சொன்னார். அவர்கள் வழிகாட்ட, இவர் ஒருவாறு 50 டொலர் காசை கடனட்டை மூலம் செலுத்திவிட்டார்.
இத்தனைக்கும் எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே நடந்தது. அவருடைய பெயர் ஆனந்த் மன்னா என்று இருந்ததால் என் சந்தேகத்தை கேட்டேன். ’நீங்கள் தமிழரா?’ அவர் ’இல்லை, நான் தெலுங்கு மொழி பேசுபவன்’ என்றார். ’நீங்கள் தமிழ் பேசுவீர்களா?’ அவர் தனக்கு தமிழ் பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது என்றார். ஆச்சரியமாயிருந்தது. ’எதற்காக தமிழ் இருக்கைக்கு இரண்டு நாட்கள் விடாப்பிடியாக முயன்று பணம் கட்டினீர்கள்?’ அவர் சொன்னார், ’தமிழ் மிகப் பழமையானது. இந்திய மொழிகளில் அரிய இலக்கியங்களைக் கொண்டது. தமிழுக்கு ஓர் இருக்கை அமைந்தால் அது எங்கள் எல்லோருக்கும் பெருமைதானே.’ என்னால் நம்ப முடியவில்லை. உணர்ச்சி பெருகி என் குரல் தழுதழுத்தது. நான், ’அன்பரே, உங்களை எங்காவது வழியில் சந்தித்தால் நான் உங்கள் காலைத் தொடுவேன்’ என்றேன். அவர் பதில் பேசாது அமைதியாக டெலிபோனை வைத்தார்.
வோல்வோ கார்
கனடாவில் மிகவும் பிரபலமான வீடு விற்பனை முகவர் ஒருவரை அணுகினேன். மாதம் தோறும் அவர் பல மில்லியன்கள் பெறுமதியான வீடுகளை விற்றுக்கொடுப்பார்; அல்லது வாங்கிக் கொடுப்பார். ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை என்று சொன்னவுடன் அவர் ஆரம்பித்தார். ’என்னுடைய மகனுக்கு மேற்படிப்புக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதற்கு 10,000 டொலர் தேவைப்படுகிறது. வன்னியில் என் அம்மாவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் அனுப்பவேண்டும். நேற்று எங்கள் ஊர் கோயில் கும்பாபிசேகத்தை முன்னின்று நடத்தியதில் எனக்கு பெரும் செலவு’ என்றார். போன மாதம் வாங்கிய வொல்வோ C 90 கார் பற்றி அவர் மூச்சு விடவே இல்லை.
நான் கற்றுக்கொண்டது இதுதான். ஒருவருடைய நிதி நிலைமை பற்றி தெரிய வேண்டுமானால் அவரிடம் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை யாசிக்கவேண்டும்.
விசுவாசமான வாசகர்
எனக்கு ஒரு விசுவாசமான வாசகர் இருந்தார். மாதத்தில் ஒரு முறையாவது அழைப்பார். என்னுடைய தீவிரமான வாசகர். நான் எழுதிய எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறார். பேசும்போது என்னுடைய சிறுகதையிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து அப்படியே போகிறபோக்கில் வீசிவிடுவார். அவர் எப்ப அழைத்தாலும் உரையாடல் ஒரு மணி நேரம் நீளும். கடைசியில் நான்தான் ஏதாவது சொல்லி உரையாடலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அடுத்த தடவை அழைக்கும்போது ஏதாவது புது விசயத்தை எடுத்து வருவார். ஒருமுறை பேசியதை மீண்டும் பேசுவதே கிடையாது. இத்தனைக்கும் அவருடைய முகத்தை நான் பார்த்ததில்லை.
ஒருநாள் ஓர் அதிசயம் நடந்தது. நான் ஒரு பல்கடை அங்காடியில் நின்றபோது ஒருவர் வந்து கைகொடுத்து என்னை தெரிந்தது போலப் பேசினார். பார்த்தால் அவர்தான் அந்த வாசகர். தோளிலே மாட்டியிருந்த பையை எடுத்து காட்டினார். அதற்குள்ளே நான் எழுதியக கதைகள் பல ஒளிநகல்களாக காட்சியளித்தன. ’இதை ஏன் இப்படி காவித் திரிகிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் அப்போது சொன்ன பதில்தான் என் வாழ்நாளில் நான் என்றுமே மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. ’எப்பவாவது உங்களைச் சந்திக்கலாம் என்று இவற்றை சுமந்து திரிவேன்’ என்றார். ’ஒவ்வொரு நாளுமா?’ ’ஆமாம், எங்கே புறப்பட்டாலும் பையை எடுத்துத்தான் செல்வேன்.’
அந்த சந்திப்புக்கு பின்னரும் அவருடைய அழைப்பு தொடர்ந்தது. நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் நான் பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வருவேன். அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்ற சம்பளத்தில் ரொட்டியை பிளாஸ்டிக் உறையில் அடைக்கும் வேலை. நாளுக்கு ஒன்பது, பத்து மணித்தியாலம் வேலை செய்வார். வாரத்துக்கு ஆறு நாட்கள். சிலவேளை ஏழாவது நாளும் வேலை செய்வதுண்டு. அன்று மணித்தியாலத்துக்கு அதிகமான தொகை கிடைக்கும்.
ஒருநாள் இவர் என்னை வழக்கம்போல அழைத்தபோது நான் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய இருப்பதைப் பற்றி சொன்னேன். ’உங்களால் முடிந்ததை, 25 டொலரோ அல்லது 50 டொலரோ நன்கொடை வழங்கினால் பெரிய உதவியாயிருக்கும். உங்கள் பெயர் கொடையாளர்களின் பட்டியலில் நிரந்தரமாக பதிவாகிவிடும்’ என்று கூறினேன். ’ஐயா, லைன் ஒன்று வருகுது’ என்றுவிட்டு அவசரமாக டெலிபோனை துண்டித்தார். இது நடந்து ஒரு வருடம் ஆகிறது. அதன் பின்னர் அவர் என்னை அழைக்கவே இல்லை.
அவசர டொக்ரர்
டொக்ரர் முத்துலிங்கத்துடன் பேசமுடியுமா?
அப்படி ஒருவரும் இல்லையே.
கலாநிதி முத்துலிங்கம்?
அவரும் இல்லை.
முனைவர் முத்துலிங்கம்
இல்லையே.
இந்த நம்பரில் அவர் இருக்கிறார் என்று சொன்னார்கள். நான் அவருடன்தான் பேசவேண்டும். அவர் ஒரு பேராசிரியராகக் கூட இருக்கலாம். அவசரமான விசயம்.
அப்படியா? என்ன விசயம் என்று சொல்ல முடியுமா?
அது ஒன்றும் ரகஸ்யமில்லை. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கவேண்டும் என்று என்னுடைய husband சொன்னார். டொக்ரர் இதற்கான ஏற்பாடு செய்வார் என்றார். அதுதான் அவரை தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.
நான் உசாரானேன்.
நீங்கள் எவ்வளவு நன்கொடை கொடுக்க திட்டம் போட்டிருக்கிறீர்கள்?
என்னுடைய husband 50,000 டொலர் என்று சொன்னார்.
நான் நிலத்திலே விழுந்து புரளத் தயாரானேன்.
எனக்கு எல்லா விவரங்களும் தெரியும். நானே அவற்றை தருகிறேன்.
அது கூடாது. என் husband டின் கட்டளை டொக்ரர் முத்துலிங்கத்துடன் பேசவேண்டும் என்பதுதான்.
பட்டத்தில் என்ன இருக்கிறது? நானே இந்த நன்கொடையை ஏற்று முறையாகப் பதிவு செய்வேன். பல்கலைக் கழத்திலிருந்து உடனேயே உங்கள் கைக்கு ரசீது வந்து சேரும்.
அது ஏலாது. டொக்ரர் பட்டம் உள்ளவரிடம் பேசவேண்டும் என்பதுதான் கடுமையான கட்டளை.
’இது என்ன கட்டளை? ‘காரைக்கால் அம்மையார் வியக்கும் வண்ணம் நாலு கட்டளைக் கலித்துறை பாடல்களை இடது கையால் எழுதினாலும் எழுதலாம். இந்த அம்மையாரை தகர்க்க முடியாது போலிருக்கிறதே.’
டொக்ரர் பட்டம் எடுப்பது சாமான்ய காரியம் இல்லை. இனி ஒருவர் படித்து எடுப்பதும் முடியாது. அம்மையே, டொக்ரர் பட்டத்துக்கு எவ்வளவு கழிக்க வேண்டுமோ அதைக் கழித்துக்கொண்டு மீதியை தாருங்கள். உடனேயே ரசீது அனுப்ப ஏற்பாடு செய்வேன்.
நோ நோ, அப்படி எல்லாம் செய்யமுடியாது.
ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று நினைக்கிறேன்.
இது என்ன? விடாப்பிடியாக இருக்கிறீர்கள். நீங்கள் யார்?
சும்மா முத்துலிங்கம்.
END
ஐயா, கடைசி வரியை வாசித்த பிறகு சிரித்துச சிரித்து வயிறு வலிக்கிறது.
Dude that is a LOT of Aromatase inhibitor AI for such a small dose of testosterone cialis generic online The use of ОІ blockers should be strongly considered on the basis of evidence suggesting that these agents likely offer the greatest cardioprotection 15, 21, 22, 44, including their beneficial actions on regression of LVH and arterial stiffness 23, 29, 45
Generally I don’t read post on blogs, but I wish to say that this write-up very forced me to try and do so! Your writing style has been surprised me. Thanks, very nice article.
Wonderful work! This is the type of info that should be shared around the internet. Shame on Google for not positioning this post higher! Come on over and visit my site . Thanks =)
Woh I enjoy your posts, saved to bookmarks! .
I like assembling useful information , this post has got me even more info! .
I have been absent for a while, but now I remember why I used to love this website. Thanks , I will try and check back more frequently. How frequently you update your site?