கடல் ஆமை விஞ்ஞானி

கடல் ஆமை விஞ்ஞானி

அ.முத்துலிங்கம்

இது ஓர் உண்மைக் கதை. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்தில் நடந்தது. அவருடைய பெயர் டேவிட் (பொய்ப் பெயர்). அமெரிக்காவில் கடல் ஆமைகள் ஆராய்ச்சி மையம் ஒன்றில் விஞ்ஞானியாக  பணியாற்றுகிறார். ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத முடிவில் தவறாமல் காட்டுக்குச் சென்று ஒரு கிறிஸ்மஸ் மரம் வெட்டி வருவார். அவரும் மனைவியும் கிறிஸ்மஸ் மரத்தை சோடித்து வண்ணமயமான மின்விளக்குகள் பூட்டி கொண்டாடுவார்கள். இந்த வருடம் விசேடமானது. அவர்களுடன் மூன்று வயது மகனும் சேர்ந்துகொள்வான். மனைவியின் பெயர் லூசி (உண்மையான பெயர்), மணமுடித்து ஏழு வருடங்கள் ஆகின்றன.  லூசி வீட்டிலிருந்தபடியே கம்புயூட்டர் வரைபடங்களை ஒப்பந்தத்துக்கு  வரைந்து நல்ல வருமானம் ஈட்டினார். மகிழ்ச்சியான குடும்பம். 

இம்முறை, அதாவது நவம்பர் 2022ம் வருடம், டேவிட்டும் அவருடைய இரண்டு நண்பர்களும் காட்டுக்குள் கிறிஸ்மஸ் மரம் வெட்டப் போனார்கள். மூன்று மரங்கள் வெட்டுவது என்று திட்டம். டேவிட் பல வருடங்களாக இந்தக் காட்டில் மரம் வெட்டுகிறார். அவருடைய நண்பர்களுக்கு இது முதல் முறை. நல்ல கிறிஸ்மஸ் மரங்களை இலவசமாக வெட்டலாம் என்று சொல்லி அவர்களை அழைத்து வந்திருந்தார். டேவிட் நல்ல அழகான, நேர்த்தியான மரம் ஒன்றை தெரிந்துவிட்டு அதை வெட்ட முன்னர் நண்பர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான மரங்களை தேர்வு செய்யச் சொன்னார். அவர்கள் இடத்தை விட்டு அகன்றதும், தன்னுடைய சங்கிலி வாளை எடுத்து டேவிட் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். வெட்டிய பின்னர் மரம் இன்னும் அழகாகவும், அவர் வீட்டுக்கு அளவானதாகவும்  இருந்தது. லூசிக்கு பிடிக்கும் என மனதில் நினைத்துக் கொண்டார். மரத்தை தூக்கி தன்னுடைய பொதி சுமக்கும்  வாகனத்தில் ஏற்றினார்.

நண்பர்களைத் தேடிய போது, கறுப்பு பூட்ஸ்போட்ட,  காட்டு வாசிகளின் போர்வையை எறிந்து உடலில் சுற்றிகொண்ட, உருண்டையான  மனிதர் ஒருவர் உரத்துக் கத்தியபடி ரெமிங்டன் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியவாறு வேகமாக வந்தார். அவருடைய அகலமான முகம் சூரிய ஒளியில் சிவந்துபோய் கிடந்தது. பற்கள் தாறுமாறாக இருந்தபடியால் அவர் பேசியது குளறுபடியாக வெளியே வந்தது. சட்டென்று நின்று, ஒரு நிமிடம் ஒன்றுமே பேசாமல் டேவிட்டையும் அவர் சாய்த்த  மரத்தையும் கூர்மையாகப் பார்த்தார். ’யார் அனுமதியுடன் மரத்தை வெட்டினீர்கள்?’ என்றார். காடு அதிரும் சத்தத்தை கேட்டு நண்பர்கள் சூழ்ந்து விட்டார்கள். விஞ்ஞானி திடுக்கிட்டு ’மன்னிக்க வேண்டும். கடந்த எழு வருடங்களாக நான் இங்கே வந்துதான் கிறிஸ்மஸ் மரம் வெட்டுவேன்.’ ’நான் கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலா? இந்த இடம் உங்களுக்கு சொந்தமானதா?’ ’இல்லை, ஆனால் நான் இங்கேதான் கிறிஸ்மஸ் மரங்கள் வெட்டினேன்.’ ’ஏழு வருடங்களாக  நீங்களும் நண்பர்களும் மரம்  திருடியிருக்கிறீர்கள்.’ நண்பர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நடுங்கத் தொடங்கிவிட்டார்கள்.

டேவிட் டுக்கு ஒருவாறு நிலைமை புரிந்தது. ’ஐயா, எனக்கு இந்த இடம் உங்களுக்கு சொந்தமானது என்று தெரியாதே?’  ’அது எப்படி? இங்கே பலகையில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறதே. கடந்த ஒரு வருடமாக இந்த இடம் எனக்குச் சொந்தம்.’ ’பெரிய தவறு நடந்துவிட்டது, ஐயா. இம்முறை எங்களை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இப்படியான பிழை நடக்காது.’ ’உங்களை எப்படி நம்புவது. மூன்றுபேர் திட்டமிட்டு  மரம் திருட வந்திருக்கிறீர்கள். பார்த்தால் திருடர் மாதிரியே தெரிகிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா மொன்ரானாவில் மரம் திருடுவது பாரதூரமான குற்றம்.’

’தயவுசெய்து சொல்லுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நாங்கள் கட்டத் தயாராக இருக்கிறோம். இப்பவே பணத்தை செலுத்தி விடுகிறோம். நாங்கள் விஞ்ஞானிகள். நான் கடல் ஆமைகளைக் காப்பாற்றும் விஞ்ஞானி.’ இப்படிச் சொல்லியபடி டேவிட் தன்னுடைய  அலுவலக அடையாள அட்டையை எடுத்து நீட்டினார். இத்தனை நேரமும் அவருடைய நெஞ்சைக் குறிவைத்த துப்பாக்கியை நிமிர்த்தி ஆறுதலாக  அட்டையை வாங்கி எழுத்துக்கூட்டி படித்தார். முகத்தில் பெரிய மாற்றமில்லை.

’உங்கள் நண்பர்களும் விவரங்களை தரட்டும். போலீஸ்காரர் முடிவு செய்வார்.’ சிக்கல் அதிகாமாகிக்கொண்டே போனது. இந்த மனிதருக்கு என்ன தேவை? எதற்காக இப்படி பழிவாங்குவதிலேயே குறியாக இருக்கிறார். மறுபடியும் துப்பாக்கிக்காரர் பேசினார். ’விஞ்ஞானியான உங்களுக்கு நாட்டின் சட்டம் தெரியும்தானே. மரம் திருடுவது மாநிலச் சட்டத்தை மீறுவது  மட்டுமல்ல;  நாட்டின் சட்டத்தை மீறுவதும் கூட. இதற்கு சிறைத்தண்டனை உண்டு.’

பிரச்சினை என்னவென்றால் மூன்று விஞ்ஞானிகளுக்கும் மன்றாடத் தெரியவில்லை. அவர்கள் தொழில்கள் அப்படி. இப்பொழுது மற்ற விஞ்ஞானிகளும் சேர்ந்துகொண்டு, அழுகை வாசலில் நிற்க, தாங்கள் திருட வரவில்லை. இம்முறை மட்டும் மன்னிக்க வேண்டும் என்று அவரவருக்கு தெரிந்த முறையில் கெஞ்சினார்கள். இறுதியில் துப்பாக்கிக்காரரின்  கண்களில் ஒரு சொட்டு கருணை தெரிந்தது. ‘சரி, நான் மரங்களை காப்பாற்றுகிறேன். நீங்கள் போய் கடல் ஆமைகளை காப்பாற்றுங்கள். என் முடிவு இதுதான். உங்கள் சங்கிலி வாளையும், வெட்டிய மரத்தையும் இங்கே இறக்கி வைத்துவிட்டு போங்கள். இப்பவே ஒரு கிறிஸ்மஸ் மரக்கன்று வாங்கி வந்து அதே இடத்தில் நட்டுவிட்டு வாளையும், மரத்தையும் மீட்டுக்கொண்டு போகலாம். இனிமேல் இந்தப் பக்கம் நான் உங்களை பார்க்கக்கூடாது.’ பெருந்தன்மையுடன் சிரித்தார். ஒரு சுறா மீன் சிரித்ததுபோல இருந்தது.

மூவரும் பாய்ந்து வெளியேறினார்கள். வெறும் 150 டொலர் பெறுமதியான கிறிஸ்மஸ் மரத்துக்கு இந்த மனிதன் துப்பாக்கியை தூக்கி விரட்டிவிட்டான். விஞ்ஞானிகள் என்றதும் எவ்வளவு இளக்காரமாகப் பார்த்தான். மூவரும் தங்கள் தங்கள் யோசனைகளில் குமைந்தார்கள். டேவிட்டுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. அதுவும் தன் நண்பர்கள் முன்னிலையில், ஏதோ தலைமைக் கொள்ளைக்காரனை பிடித்ததுபோல நெஞ்சுக்கு நேராக அவன் துப்பாக்கி நீட்டியதை நினைத்தார். கேவலமாகவிருந்தது. அவருடைய நண்பர்கள் வெளியே அமைதியாக காணப்பட்டாலும் உள்ளுக்குள் என்ன நினைத்திருப்பார்களோ?

இரண்டு நண்பர்களும் அவருடன் பல்கலைக்கழகத்தில்  படித்தவர்கள்தான். குர்தி  மயக்க மருந்து துறையில் நிபுணராக கடமையாற்றுகிறார். அவர் வேண்டாமென்று சொல்லியும்  அவருக்கு நல்ல கிறிஸ்மஸ் மரம் இலவசமாக கிடைக்கும் என்று ஆசைகாட்டி டேவிட் கூட்டி வந்திருந்தார். வயது 31, கொசோவோ நாட்டுக்காரர். தன் நாட்டின் வயதிலும் பார்க்க தன் வயது அதிகம் என்று பெருமையடித்துக்கொள்வார்.  புதுக் கார் வாங்கினால் அதை ஓட்டிப் பார்ப்பது போல அவருடைய 31ம் பிறந்த தினம் வந்தபோது அந்தப் புதிய வயது  சரியாக வேலை செய்கிறதா என்பதை நாள் முழுக்க பரீட்சித்துப் பார்த்தார் என்று நண்பர்கள் சொல்வார்கள்.  சில வேளைகளில் ஏதாவது தப்பாகச் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பார். லூசிக்கு அவரை பிடிக்காது. ஒரு முறை அவர் வீட்டுக்கு விருந்துக்கு போய்விட்டு திரும்பும் சமயம் வாசலில் அவர்கள் பேசிக்கொண்டு விடைபெறும்போதே  கதவை சாத்திவிட்டர். இப்படி ஏதாவது சின்னப் பிழை விடுவாரே ஒழிய  விசுவாசமான நண்பர்.

ஸ்டீவ் உயிர் வேதியியல் துறையில் உயர் பதவியில் இருந்தார். பின்னர் என்ன காரணமோ வேலையை வேண்டாமென்று உதறிவிட்டார். அஞ்சலகத்தில் போய் கையொப்பம் வைக்கும்போதும் தன் பெயரை எழுதி பி.எச்டி என்று பதிய மறக்க மாட்டார். இப்பொழுது உச்சரிப்பு பயிற்சியாளராக பணிபுரிகிறார். அக்கா, தங்கைகளை ஒருவர் பின் ஒருவராக காதலித்தார். பின்னர் இருவரையும் விட்டுவிட்டு தான் ஒருபால் விருப்பினன் என முகப்புத்தகத்தில் அறிவித்திருக்கிறார். கிறிஸ்மஸ் மரத்து சம்பவத்துக்கு பின்னர் அவர் நட்பை தொடர்வாரோ தெரியாது. முகத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் வாகனத்தில் பயணம் செய்கிறார்.

கிறிஸ்மஸ் மரங்கள் விற்கும் கடை வந்ததும் டேவிட் மரக்கன்று தேடி உள்ளே நுழைந்தார். மற்றவர்கள் அலங்காரத்துக்கு வைக்கும் கிறிஸ்மஸ் மரங்களை தங்கள் தங்கள் வீடுகளுக்கு காசு கொடுத்து வாங்கினார்கள்.

திரும்பவும் காட்டுக்கு போனபோது துப்பாக்கிகாரரை காணவில்லை. அவர் வேறு திருடர்களை பிடிக்கப் போயிருக்கலாம். ஆனால் மரமும், சங்கிலி வாளும் கவனிப்பாரின்றி கிடந்தன. வாக்கு கொடுத்தபடி கிறிஸ்மஸ் மரக்கன்றை நட்டுவிட்டு, வெட்டிய கிறிஸ்மஸ் மரத்தையும், சங்கிலி வாளையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பினார்கள். ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை.

  •                               *                                           *

கதை இங்கே முடியவேண்டும். ஆனால் முடியவில்லை. இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

லூசியை அழகி என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு அழகியாக வர விரும்பும் முகம் இருந்தது. சமீபத்தில் டேவிட்டுக்கு பதவி உயர்வு கிடைத்தபோது அவருக்குத் தெரியாமல் ரகஸ்யமாக அவர்கள் நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து கணவனை ஆச்சரியப்படுத்தினார். மிக நல்ல மனைவி, ஆனால் அபூர்வமாக எப்பவாவது கோபம் வரும்போது ஆக மலிவான இரண்டு கோப்பைகளை தேடியெடுத்து போட்டு உடைப்பார்.

லூசிக்கு கிறிஸ்மஸ் மரம் நன்றாகப் பிடித்துக்கொண்டது. கணவனும், மனைவியும் மகனுமாக  மரத்தை சோடித்தார்கள். அன்றிரவு சீன உணவகத்திலிருந்து வரவழைத்த உணவை கிறிஸ்மஸ் மரத்துக்கு கீழே அமர்ந்து உண்டார்கள்.

அடுத்த நாள் காலை டேவிட் வழக்கம்போல அலுவலகத்துக்கு புறப்பட்டு போய்விட்டார். லூசி மகனை குழந்தைகள் காப்பகத்துக்கு கூட்டிக்கொண்டு போனார். பின்னர் அன்று முடிக்கவேண்டிய கம்புயூட்டர் வரைபடங்களை செய்து அனுப்பினார். வீட்டை சுத்தமாக்கினார். துணிகளை சலவை யந்திரத்தில் போட்டார். அஞ்சல் பெட்டியில் சேகரமான கடிதங்களை எடுத்து வந்து மேசையில் வைத்தார். முதல் நாள் வாங்கிய சீன உணவு  கொஞ்சம் மீதம் இருந்தது. ஒரு கோழிக்கால் சூப்  செய்தார். காப்பகத்துக்கு  போய் மகனை அழைத்து வந்தார். அவருடைய மனம் அலை பாய்ந்தது. நிம்மதி போய்விட்டது. எப்படி யோசித்தாலும் மனம் ஓர் இடத்தில் வந்து நின்றது, மேலே நகரவில்லை.

நாற்காலியை  இழுத்து வரவேற்பு அறையின் நடுவில் போட்டு அதன் மேல் உட்கார்ந்தார். அப்படித்தான் அவர் மனதை அமைதிப்படுத்துவார். பக்கத்தில் தரையில் உட்கார்ந்து மகன் புத்தகப் பக்கங்களை திருப்பி விளையாடினான். ஒவ்வொரு பக்கம் புரட்டும் போதும் ஒரு புது மிருகம் எழும்பி நின்று சத்தம் போடும். அவனைப் பார்க்க பார்க்க லூசிக்கு துயரம் பொங்கியது. வாய்விட்டு அழுதார். மகனை எடுத்து மடியில் வைத்து கொஞ்சினார். அவன் தாயாரை நோக்கி ஒன்றுமே புரியாமல் கன்னத்தை தடவினான். அவனுடைய சின்ன விரல்கள் கண்ணீரில் நனைந்தன. அவன் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.

லூசிக்கு தன்னுடைய அம்மாவின் யோசனை வந்தது. அம்மாவுக்கு தொலைபேசினார். அவர் என்ன சொல்வார் என்று லூசியால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. லூசி சொன்னதில் தாயார் பாதியைத்தான்  கேட்டார். உடனேயே குழறத் தொடங்கினார். ’நான் உனக்கு சொன்னேனே. விஞ்ஞானிகளை நம்பக்கூடாது என்று. இதுதான் எனக்கும் நடந்தது. உன் அப்பா உனக்கு மூன்று வயது நடந்தபோது ஒருவித காரணமும் இல்லாமல் திடீரென்று மறைந்தார். நான் உனக்குத் தந்த  ஆலோசனைகளை நீ எப்பவும் மதித்தது கிடையாது. இப்ப ஒன்றுக்கும் யோசியாதை. குழந்தையை தூக்கிக்கொண்டு உடனே புறப்படு. சிலந்தி தான் உண்டாக்கிய நூலில் தொங்குவதுபோல நீ தொங்கிக்கொண்டு இருக்கிறாய். தேவை இல்லை.  உன்னுடைய அறை அப்படியே இருக்கிறது. நான் இருக்கிறேன், நீ இங்கே வா. நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.’

லூசி தனக்கு வேண்டிய அத்தியாவசியமான பொருள்களை ஒரு சூட்கேசில் அடுக்கினார். இன்னொடு பெட்டியில் குழந்தையின் சாமான்களை  அடைத்தார். இரண்டுக்கும் நடுவில் ஒரு கதிரையில் உட்கார்ந்து காத்திருக்கத் தொடங்கினார்.  கிறிஸ்மஸ் மரம் அழகாக அலங்கரிக்கப்பட்டு மின் விளக்குகள் எரிந்து நூர்ந்து மறுபடியும் எரிந்தன. மகனை பார்க்க லூசிக்கு மறுபடியும் துக்கம் பொங்கி வந்தது. அவனை அணைத்துக்கொண்டு பேசினார். ‘நீ இனிமேல் தகப்பன் இல்லாமல் வாழப்பழக வேண்டும். நான் அப்படித்தான் வளர்ந்தேன். துணிவாக இரு’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையை தூக்கி கொஞ்சினார். அது புரியாமல் மிரள மிரள விழித்தது.

டேவிட் வழக்கத்திலும் பார்க்க ஒரு மணி பிந்தி அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். எப்பவும் அவர் கிளம்பத் தயாராகும் போதுதான் தலைமைச் செயலகத்திலிருந்து முக்கியமான தகவல் ஏதாவது வரும். கடந்த வருடங்களிலும் பார்க்க நடப்பு வருடத்தில் மீன் வலையில் மாட்டி இறக்கும் கடல் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒரு பத்திரிகை விளக்கம் கேட்டிருக்கிறது. அது சம்பந்தமாக சிந்தித்தபடி வேகமாக காரை ஓட்டினார்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. டேவிட் இறங்கி உள்ளே நுழைந்தார். மனைவியின் கோலத்தைப் பார்த்து ஒரு கணம் திகைத்து அப்படியே நின்றார். லூசிக்கு அவரைக் கண்டதும் கோபத்தை மீறி அழுகைதான் வந்தது. ‘என்ன? என்ன நடந்தது?’ டேவிட் பதறினார்.

’எனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது. இனிமேல் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு இரண்டு வாழ்க்கை தேவையில்லை. எனக்கு ஒரு வித தடையும் இல்லை. நான் அம்மா வீட்டுக்கு போறேன்’ என்றபடி லூசி எழும்பினார்.

‘என்ன பேசுகிறீர். ஏன் அம்மா வீட்டுக்கு போகவேண்டும்? என்ன நடந்தது? சொன்னால்தானே தெரியும். விளையாடுகிறீரா?’

’விளையாட்டா? நான் மணத்தை முறிக்கப் போறேன்.’

’பரவாயில்லை. என்ன குற்றம் என்றாவது சொல்லலாம். இல்லையா?’

’நீங்கள் இனி இன்னொருத்தியுடன் வாழ்வதுதான் முறை. அம்மாவுடன் பேசிவிட்டேன். அங்கேதான் நானும் பிள்ளையும் போகப் போகிறோம்.’

’இன்னொருத்தியா? இது என்ன கூத்து. அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.’  

’விளையாட்டாய் பேசினால் போதுமா? உங்களுடன் கதைப்பதில் ஒருவித  பிரயோசனமும் இல்லை.’ லூசி சூட்கேசை தூக்கினார்.

துப்பாக்கிக்காரனுடைய சம்பவத்துக்கு பிறகு டேவிட்டுக்கு  நன்றாக மன்றாடுவதில் பயிற்சி இருந்தது. கெஞ்சும் குரலில் கேட்டார், ’அந்த இன்னொருத்தி யார் என்றாவது சொல்லிவிட்டு போகலாமே. நான் நிறுத்த மாட்டேன்.’

’சரி, சொல்கிறேன். எங்கள் வீட்டுக்கு ஒரு கிறிஸ்மஸ் மரம் காட்டிலிருந்து வெட்டிக்கொண்டு வந்தீர்கள். அது இங்கே சோடிப்போடு இருக்கிறது. உங்கள் கோட்டுப் பையில் நேற்று இன்னொரு கிறிஸ்மஸ் மரம் வாங்கிய ரசீது காணப்பட்டதே. அது யாருக்கு, அவளுக்குத்தானே?’

நூறு மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழும் கடல் ஆமைகளின் வழித்தடத்தை ஆராய்ந்து,  அவை அடுத்து எந்தப் பாதையில் போகும், எங்கே முட்டை இடும், அதற்கு எத்தனை நாட்கள் செல்லும்  என்பதை முன்கூட்டியே துல்லியமாக கணித்துச் சொல்லும் வல்லமை படைத்த  கடல் ஆமை விஞ்ஞானி, அரைக் கணம் திகிலடித்து சும்மா நின்றார். பின்னர் அவர் வாய், பட்டனை அழுத்தினால் கார் பின்கதவு மெள்ள மெள்ள திறப்பதுபோல,  ஆவென்று திறக்க ஆரம்பித்தது.

அது மூட முன்னர் கதை முடிந்தது.

END

About the author

49 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta