அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை

டிசம்பர் 21 நடுச்சாமம். கனடாவின் அதி நீண்ட இரவு. 15 மணி நேரம் இரவு; 9 மணி நேரம் பகல். வெளியே பனி கொட்டிக்கொண்டே இருந்தது. யன்னலில் பாதி உயரத்துக்கு ஏறிவிட்ட்து. அது சற்று ஓய்ந்ததும் வேறு விதமான சத்தம் ஆரம்பித்தது. சற்று நேரம் நின்று மறுபடியும் துவங்கியது. பழுதுபட்ட வாகனம் கிளம்புவதுபோல ஒரு வித்தியாசமான ஒலி. மெதுவாக படுக்கையை விட்டு எழும்பி போய் வெளி லைட்டை போட்டேன். பக்கத்து வீட்டு நிலவறையில் வாடகைக்கு குடியிருக்கும் சோமாலியாக்காரர்  என் வீட்டு பனியை நீண்ட பனிவாரியால் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார். அடர்த்தியான கறுப்பு குளிர் அங்கி அணிந்து தலையையும் காதையும் மறைத்து தொப்பி அணிந்திருந்தார். என்ன காரணத்துக்கு அவர் இந்தப் பாடுபடுகிறார்.

அடுத்த நாளே காரணம் புரிந்தது. அவருடைய மகளுக்கு மறுபடியும் கணிதம் சொல்லித்தர வேண்டுமாம். நான் ஏற்கனவே மறுத்து விட்டேன். ஓய்வு பெற்ற பிறகு நான் ஒருவருக்கும் பாடம் சொல்லித் தருவதில்லை. ஆனால் ஓமர் ஆமெட் என்னை விடுவதாயில்லை. அவருடைய 12 வயது மகள் அபசிர் ஆறாம் வகுப்பு படிக்கிறாள் ஆனால் பத்தாம் வகுப்பு கணிதங்களை ஒருவித பிரச்சினை இல்லாமல் செய்துமுடிப்பாள். போன மாதம் அவள் என்னிடம் வந்தபோது நான் அவளை பரீட்சித்தேன். அந்தச் சிறுமிக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று எத்தனை தரம் சொன்னாலும் தகப்பன் கேட்பதாயில்லை. .

அபசிர்  வந்த முதல் நாள் அவளுடைய புத்திக் கூர்மையை சோதிக்க ஒரு சின்னக் கணக்கு கொடுத்தேன். ஒரு தோட்டத்தில் சில மரங்களும் குருவிகளும் இருந்தன. குருவிகள் மரத்துக்கு ஒன்றாக உட்கார்ந்தால் ஒரு குருவி மிஞ்சும். இரண்டு இரண்டாக உட்கார்ந்தால் ஒரு மரம் மிஞ்சும். எத்தனை மரங்கள், எத்தனை குருவிகள்?  அவள் நான் கேள்வியை முடிக்க முன்னரே பதில் சொல்லிவிட்டாள்.    

நீதான் மிக அருமையாக கணிதங்களுக்கு விடை காண்கிறாயே. உன் அப்பா விருப்பப்படி கனடாவில் நாடளாவிய விதத்தில் நடைபெறும் கணிதப் பரீட்சையில் ஏன் பங்கு பற்றக் கூடாது. என்று கேட்டேன். சிறுமியாக சோமாலியாவில் வாழ்ந்தபோதே அவளுக்கு கணிதத்தில் அளவற்ற ஆர்வம். போர் காரணமாக கென்யாவின் தலைநகரமான நைரோபிக்கு குடிபெயர்ந்தார்கள். அங்கே அவளுக்கு தகப்பன் கணிதப் பாடம் சிறப்பாகப் படிக்க ஒழுக்கு செய்தார். அபசிர் கணிதத்தில் பெரும் புகழ் பெறவேண்டும் என்பது அவர் விருப்பம். அவளுக்கு அது பிடிக்கவில்லை. அந்தச் சின்ன வயதில் தன்னுடைய சொந்த சிந்தனைப் பாதையை உருவாக்க  விரும்பினாள். ’எல்லா முறையும் ஒரே முடிவைத்தானே தரும்’ என்றேன். அவள் தலை குனிந்து நின்றாள். கணிதப் புதிரிலும் பார்க்க கூடிய புதிராக அவள் இருந்தாள்.

சாப்பிடுவதற்கு மனைவி ரொட்டி கொண்டுவந்து வைத்தார். சிறுமி சடக்கென்று ரொட்டியை எடுத்து பிசைந்து உருண்டையாக்கி மெள்ள கடித்து சாப்பிட்டாள். ஏன் அப்படி செய்தாள் என்று கேட்டேன். அகதி முகாமில் எப்பவும் உணவுத் தட்டுப்பாடு. காதிலே பசி பசி என்ற சத்தம் கேட்கும். ரொட்டியை உடனே சாப்பிடாவிட்டால் யாராவது பறித்து தின்று விடுவார்கள். உருட்டி வைத்ததும் அது உங்களுடையது ஆகிவிடுகிறது. ஒருவரும் தொடமாட்டார்கள் என்றாள். அவள் ஏதாவது பேசத் தொடங்கினால் அவளை மறுபடியும் கணிதப் பக்கத்துக்கு திருப்பமுடியாது. கதைத்துக்கொண்டே இருப்பாள்.

’எங்களுடைய வீடு ஒட்டகச் சாணியால் செய்தது. ரயில் வண்டிபோல வீடு நீளமாக இருக்கும். சோமாலியாவில் ஒரு பழமொழி உண்டு. ஒட்டகம் இல்லாதவன் செத்தால் அது செய்தியே அல்ல. என்னுடைய அப்பாவிடம் சில ஒட்டகங்கள் இருந்தன. அவர் அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போவார். சில சமயம் ஒரு மாதமாகியும் திரும்பமாட்டார். புல்வெளியில் ஒட்டகப் பாலைக் குடித்துக்கொண்டு வாழப் பழகியிருந்தார். திரும்பும்போது ஒட்டகம் கொழுத்திருக்கும், அப்பா மெலிந்துபோய் இருப்பார். ஒவ்வொரு வருடமும் அரபு நாடுகளுக்கு ஒட்டகம் ஏற்றுமதி செய்வார். ஒட்டக மூத்திரத்துக்கு மருத்துவ குணங்கள் உண்டு. நான் அவற்றை போத்தலில் அடைத்து விற்பேன். அப்பா அந்தக் காசை என்னிடமே தருவார். நாங்கள் பணக்காரர்கள் இல்லை ஆனால் வசதியாக இருந்தோம். நாட்டை விட்டு புறப்பட்டபோது ஒட்டகங்களை விற்றோம். ஒட்டகங்களில் அப்பாவின் டெலிபோன் நம்பர்களை பதிந்து வைத்திருப்போம். ஒட்டகங்களை வாங்கியவர், எங்களுடன் நல்ல உறவு வைத்திருந்தவர். விற்பனை கணக்குகள் என் மூளையில் இருக்கும். நண்பர் கணிசமான தொகைக்கு ஏமாற்றிவிட்டார் என்பது நான் சொல்லித்தான் அப்பாவுக்கு தெரியும். போர் நல்லவர்களையும் மோசமானவர்களாக மாற்றிவிடும்.’

அபசிர் தினம் வருவாள். ரொட்டியை உருட்டி உருட்டி சாப்பிடுவாள். பிறகு அன்றைய கதையை ஆரம்பிப்பாள். என்னிடம் படிப்பதை நிறுத்திவிட்டாள். எனக்கும் சொல்லிக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. ’சோமாலியாவில் ஐந்து குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டன. நீங்கள் ஒரு குழுவிடம் பிடிபட்டதும் மற்றக் குழுக்களை தாக்கிப் பேசினால் விட்டுவிடுவார்கள். ஆனால் எங்களை பிடித்த குழு எது என்பதை எப்படியோ நுட்பமாக அறிந்து வைக்கவேண்டும். உங்கள் வாழ்க்கை அதில்தான் தங்கியிருக்கிறது.’

’துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் நாங்கள் ஓடத் தொடங்குவோம். எந்த திசை என்று இல்லை. எந்தப்பக்கம் ஓடினாலும் ஒரு காட்டில்தான் முடியும். இரண்டு நாட்கள் நாங்கள் மரத்திலே தங்கினோம். நான் கீழே இறங்கவே இல்லை. அப்பா பழங்களும் கிழங்குகளும் பறித்து தந்தார். யாரிடம் இருந்து மறைந்து வாழ்ந்தோம் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. பக்கத்து மரத்திலே தங்கிய பெண் மரத்திலேயே ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தார். அது இரண்டு நாள் வாழ்ந்தது. மூன்றாவது நாள் அந்த மரத்தின் அடியிலேயே அதை புதைத்தார்கள்.’

’மரத்திலே வாழ்ந்த அந்த இரண்டு நாளும் என் மனதிலே நிறைய கணித தேற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவற்றை என்னால் நினைவில் நிலைநிறுத்தி  வைக்க முடியவில்லை. அத்தனை வேகமாக அவை கொட்டிக் கொண்டே இருந்தன. மரத்திலே இருந்து இறங்கிய பின்னர் என் கையில் கிடைத்த பழைய தினசரி பேப்பர் ஒன்றில் ஞாபகத்தில் வந்த தேற்றங்களை குறித்து வைத்துக் கொண்டேன். பாதிக்கு மேல் அவை மறந்துபோய் விட்டன. பின்னர் எத்தனை முறை யோசித்தாலும் அந்த தேற்றங்கள் எனக்கு மறுபடியும் கிடைக்கவே இல்லை.’

’சோமாலியாவில் இருந்து தப்பி நைரோபி வந்த பிறகு கனடாவுக்கு போவதற்கான முயற்சிகளை அப்பா தொடங்கினார். நைரோபியின் பெரிய ஆடைக்கடை ஒன்றுக்குள் நானும் அப்பாவும் நுழைந்தோம். விசா எடுப்பதற்கு நல்ல ஆடை உடுத்தி நான் நிற்கும் படம் தேவை என்று அப்பா சொன்னார். நான் நல்ல அளாவான ஆடை ஒன்றை தெரிவு செய்துவிட்டு உடை மாற்றும் அறைக்குள் அளவு பார்க்க நுழைந்தேன். நல்ல அளவாக இருந்தது. ஒரு சீமாட்டிபோல என்னை அந்த ஆடை மாற்றிவிட்டது. அப்பா அங்கேயே என்னை படம் பிடித்தார். ஆடையை அங்கேயே விட்டோம், படத்தை விசாவுக்கு அனுப்பினோம்.  விசா நிராகரிக்கப்பட்டது.’ 

’துரோகத்துக்கு மாத்திரம்தான் ஆகக்கூடிய தண்டனை சோமாலியாவில்கிடைக்கும். கல்லால் எறிந்து கொல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை இறந்தால் போதுமானது., விட்டுவிடுவார்கள். அது என்னை தொந்தரவு செய்தது. அடுத்த தடவை அகதி விண்ணப்பம் கொடுக்க அப்பா போனபோது அவருடன் நானும் போனேன். வெள்ளைக்காரர் கறுப்பு கண்ணாடி மாட்டியிருந்தார். அவர் என்னவோ கேட்டார். அப்பாவின் பதில்கள் தாறுமாறாக இருந்தன. அப்பா சொன்ன சம்பவங்கள் அகதிக் கோரிக்கைக்கு காணாது என்றார் வெள்ளைக்காரர். மரத்தில் ஏறி அங்கே இரண்டு நாட்கள் உணவின்றி கழித்ததை அப்பா சொன்னபோது அதை  எல்லோரும்தான்  சொல்கிறார்கள் என்றார் கண்ணாடிக்காரர்.’

அடுத்த முறை அதிகாரி ஒரு பெண்மணி. வெள்ளைக்காரி. தாடை கீழே இறங்கியிருக்கும் பெண்மணி.. அப்பாவுக்கு நம்பிக்கை பிறந்தது. வெள்ளைக்காரி கேட்டார் ’உங்களுடைய விருப்பம் என்ன?’ அப்பா நான் எதிர்பார்க்காத பதிலை சொன்னார். ’நான் வறுமையில் வாடி சாகவேண்டும். மரத்தில் இருந்து கீழே விழுந்து சாகக்கூடாது. கொலைபட்டு சாகக்கூடாது. போராளிகள் சண்டைபோடும்போது இடையில் புகுந்து குண்டடிபட்டு சாகக்கூடாது. இவ்வளவுதான் கேட்கிறேன்’ என்றார் அப்பா. இதற்கும் விசா கிடைக்கவில்லை. இப்படி பலமுறை நடந்தது. கடைசியில் விண்ணப்பம் வெற்றியடைந்ததற்கு ஒரு சம்பவம்தான் காரணம். கென்யா பேப்பர்கள் அதைப் பற்றி விரிவாக எழுதின. அந்தச் சமயம் அப்பா அனுப்பிய விண்ணப்பத்துக்கு அவர் எதிர்பாராத தருணத்தில் விசா கிடைத்தது.’

அன்றும் அபசிர். சிரித்து குதித்தபடி ஓடி வந்தாள். 13 வயதுகூட இராது. தலையில் சால்வையால் அவசரமாகச் சுற்றி மீதித்துணியை முதுகிலே வழிய விட்டிருந்தாள். கண்களில் ஏதோ புதிதாக கண்டுபிடித்த அறிகுறி. அவை பளபளவென்று மின்னின. அவள் உடல் சரும நிறமும் ஆடையும் ஒரே நிறத்தில் இருந்தது. ‘இன்று வீட்டுக்கார அம்மா என்னை கூப்பிட்டார். அவருடன் மேல்மாடிக்கு போனேன். அங்கே பெரிய அறை இருந்தது, எங்கள் முழு வீட்டிலும் பார்க்க பெரிய அறை. நம்ப முடியுமா? உடுப்புகள் வைப்பதற்கு மாத்திரம் அந்தப் பெரிய அறை’ என்றாள். அதைத் தெரிந்து என்ன பிரயோசனம். உனக்கு ராமானுஜன் எண் பற்றி தெரியுமா? என்றேன். தெரியாது என்றாள். அந்த மந்திர எண் 1729. அபூர்வமானது. யோசித்து அதைக் கண்டுபிடி. தெரியாவிட்டால் கூகிளில் தேடு’ என்றேன்.

அவள் சொல்லத் தொடங்கினாள். ‘ஐந்து வயது தொடங்கும்போதே எனக்கு எல்லா எழுத்துக்களும் எண்களும் தெரியும். கூட்டல் கழித்தல் பெருக்கல் என  கொஞ்சம் கொஞ்சமாக நானே பயின்றுகொண்டேன். அந்தக் குக்கிராமத்தில் இருந்த ஒரேயொரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். அங்கே நாள் முழுக்க விளையாட்டுத்தான். களிமண்ணைப் பிசைந்து மரம், செடி, பூனை, ஒட்டகம், எலி, என்று உருவங்கள் செய்வது. என் மூளை எண்களை வைத்து விளையாடியது. கணக்குகளை மனதுக்குள் போட்டபடி களிமண்ணை உருட்டுவேன். நான் எப்பவும் செய்வது உருளைக்கிழங்குதான். என்ன உருவம் இறுதியாக கிடைத்தாலும் உலகத்தில் எங்கோ ஒரு கிழங்கு அதுபோல இருக்கும்தானே.’

’நான் எப்படி எதை நோக்கி ஆராய்ச்சியை ஆரம்பிப்பது?’ நான் சொன்னேன், ’சோமாலிய மரத்திலே தோன்றியதுபோல சில உண்மைகள் உனக்கு தானாகவே கிடைக்கலாம். அல்லது ஒன்றை நோக்கி உன் ஆராய்ச்சியை தொடங்கலாம். உதாரணம், ஆறுகோண வடிவத்தில் தேனீக்கள் உண்டாக்கும் தேனடை. அது திறன் நிறைவு கொண்டது. அது எப்படி என்று நீ ஆராய்ச்சி செய்து கணிதமூலம் நிரூபிக்கலாம்.’

’சரி, செய்கிறேன். இதைக் கேளுங்கள். நான் இரவு முழுக்க யோசித்து முடித்த ஒன்றை இன்று எப்படியும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேன். உங்களுக்கு தெரியும் பைதகரஸ் தேற்றத்தை மூன்றுவிதமாக நிரூபிக்கலாம். நான் நாலாவது நிரூபணத்தை கண்டுபிடித்தேன். அந்த நிரூபணத்தின் கடைசி வரியை எழுதியபோது இரவு மூன்று மணி. உங்களை நினைத்துக்கொண்டேன். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தேன்.’

’ஆனால் காலையில் எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. இந்த தேற்றத்தை ஏற்கனவே ஒருவர் கண்டுபிடித்துவிட்டார் என்று கூகிள் சொன்னது. அழுதுகொண்டே இருந்தேன். அப்பா என்னை திட்டி இங்கே அனுப்பியிருக்கிறார்.’ ’இதற்கெல்லாம் யாராவது அழுவார்களா? கணித மேதை எஸ். ராமானுஜன் கண்டு பிடித்த அனேக கணித தேற்றங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவைதான். அவர் அழுது பின்வாங்கினாரா?’

’நாலாவது தேற்றத்தை கண்டுபிடித்தது யார் என்று நீங்கள் கேட்கவில்லையே. சொன்னால் நம்பமாட்டீர்கள்.’

’அப்படியா? அதுயார்?’

’ஜேம்ஸ் கார்ஃபீல்டு. அமெரிக்காவின் 20வது ஜனாதிபதி. லத்தீனும் கிரேக்கமும் படித்தவர். கணிதப் பின்புலம் அவருக்கு கிடையாது. அவர் போய் இந்த தேற்றத்தை கண்டுபிடித்திருக்கிறார்.’

’அது சரி. நீ பெருமைப் பட அல்லவா வேண்டும். ஒரு ஜனாதிபதி கண்டுபிடித்ததை நீ 13 வயதிலேயே அடைந்துவிட்டாய். நீ சரியான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்றுதானே அர்த்தம்.’

’அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்தானே?’

’அதுவும் ஒருவித திறமைதான்.’

’ஆனால் எனக்கு ஏமாற்றம் ஏற்படுவதை தாங்கமுடியவில்லை.’

’உனக்கு என்ன வேண்டும்? கணிதத்தில் பரிசு வேண்டுமா உன் அப்பா சொல்வது போல. அல்லது புகழ் வேண்டுமா?’

’பரிசு வேண்டாம். புகழும் வேண்டாம். ஒரு புது தேற்றம் கண்டு பிடிப்பதில் உள்ள மகிழ்ச்சி இருக்கிறதே. அதுதான் முக்கியம்.’

’நீ ஓர் அபூர்வமான பெண். கணித சிந்தனை உனக்கு இயல்பாகவே உள்ளது. உயிருக்கு பயந்து மரத்தின் மேல் ஒளித்திருந்த ஒரு சிறுமிக்கு அந்த நேரத்தில் சிக்கலான கணிதங்களுக்கு விடைகள் தோன்றியிருக்குமா? பலனை எதிர்பாராமல் கணிதத்துக்குள் நீ மூழ்கவேண்டும். உனக்கு அமெரிக்க கணித நிபுணர் George Dentzig இன் கதை தெரியுமா?’

’இல்லை.’

’இவர் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது ஒருநாள் மிகவும் தாமதமாக வகுப்புக்கு வந்தார். அங்கே வகுப்பு முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். ஆனால் கரும்பலகையில் இரண்டு கணிதப் புதிர்கள் எழுதியிருந்தன. இவர் அவற்றை தன் கொப்பியில் எழுதிக்கொண்டு தன் விடுதிக்கு திரும்பினார். நாலு நாட்கள் அந்தப் புதிருடன் இரவும் பகலும் கழித்தார். அப்படி கடினமான ஒரு கணிதத்தை அவர் முன்னர் கண்டதில்லை. ஆனல் ஒருவாறு புதிரை அவிழ்த்துவிட்டார். ஐந்தாவது நாள் பேராசியரைக் கண்டு மன்னிக்க வேண்டும். கொஞ்சம் தாமதமாகிவிட்டது என்று விடையை காண்பித்தார். பேராசிரியர் மயங்கி விழத் தயாரானார். அந்தக் கணிதங்கள் வீட்டுப் பாடம் அல்ல. உலகத்திலே யாரும் தீர்க்க முடியாத கணிதப் புதிர்கள். இந்த மாணவன் வீட்டுப் பாடம் என நினைத்து அவற்றுக்கு விடை எழுதிவிட்டான். மேலும் படிப்பை தொடரும் அவசியமின்றி அவனுக்கு உடனேயே  பி.எச்டி பட்டம் கிடைத்தது. இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா?’

’தெரியாது?’

’கணிதத்தை கணிதத்துக்காக காதலி. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதை எழுதி உன் டைரியில் வைத்துக்கொள்.’ சரி என்று சொல்லிவிட்டு போனாள்.

இரண்டு நாள் சென்றது.  காலை தொடங்க முன்னரே  வேகமாக வந்து தொப்பென்று என் முன் அமர்ந்தாள்.  முகம் கொந்தளித்தபடி இருந்தது.  நான் பேசாமல் இருந்தேன். ’நான் மூக்கில் வளையம் மாட்டப்  போறேன்.’ ‘ நல்லது.’ ‘ தோள் மூட்டில் பச்சை குத்தப் போறேன்.’ ‘ அதுவும் நல்லது, தோள் மூட்டு வெறுமையாகத்தான் இருக்கிறது.’ ‘நைரோபியில் விசா படமெடுப்பதற்காக திருடிய  ஸ்டைலான ஆடை போல அணியவேண்டும்.’ ‘அதற்கென்ன, கனடாவில் இல்லாததா? வாங்கலாம்.’ ‘ ஒரு மீன் இருக்கிறதாம். ஆற்றிலே பிறக்கும் பின்னர்  நீந்திப் போய் கடலிலே வாழும். இறுதியில் ஆற்றுக்கு திரும்பி  அது பிறந்த  இடத்திலே சாகும். எனக்கு சோமாலியா போய் அங்கே சாகவேண்டும்.’  ’உடனே செய்யவேண்டியதுதான்.  மரத்திலே  தனிமையில் நாட்களைக் கழிக்கலாம். புது தேற்றங்கள் கண்டுபிடிக்கலாம்.’ ‘ அப்பா என் அமைதியை குலைக்கிறார். கணிதப் போட்டியை தினம் நினைவுபடுத்துகிறார். கணிதத்தை நினைத்தாலே வெறுப்பு வெறுப்பாக வருகிறது. ’ ‘சரி, இந்த ரொட்டியை சாப்பிடு.’ அவள் கண்களில்  கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

‘எத்தனை பாடுபட்டு கனடா விசா கிடைத்தது. நீ மகிழ்ச்சியாக இல்லையா?’

’ஒரு சம்பவம் நடந்தது. அதை நைரோபி பேப்பர்கள் எழுதின. அந்தச் சம்பவத்தை காட்டி அப்பா விசா பெற்றுவிட்டார். எனக்கு அது அளவில்லா வெறுப்பை தருகிறது.’

‘வெறுப்பு உன் சிந்திக்கும் திறமையை எரித்துவிடும். நைரோபி ஆசிரியர் எங்கே படிப்பை விட்டாரோ அங்கேயிருந்து ஆரம்பி.’

‘அது எப்படி?. என் ஆசிரியரில்தானே பிரச்சினை.’

’நீ சொல்லவில்லையே..’

’ஓ, அந்த துரோகிக்கு நைரோபி சிறையில். ஏழு வருடங்கள் தண்டனை. பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பற்றி எழுதினவே.’

’ஏன்? என்ன செய்தார்?’

‘றேப் பண்ணினார்.’

’யாரை?’

’என்னைத்தான்.’

END

About the author

50 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta