முதல் சம்பளம்

                                          முதல் சம்பளம்

                                        அ.முத்துலிங்கம்

வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால் தொண்டு வேலை அல்ல; அது நிறையச் செய்துகொண்டிருக்கிறேன்.  சம்பளத்துக்கு வேலை. என்ன வேலை என்றாலும் பரவாயில்லை. தோட்ட வேலை. சுப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலை. உணவகத்தில் கோப்பை எடுக்கும் அல்லது கழுவும் வேலை.  மூளை உபயோகிக்கும் வேலை மட்டும் வேண்டாம். அதுவும் கணக்கு எழுதும் வேலை எனக்கு தேவையே இல்லை. வாழ்நாள் முழுக்க அதைத்தானே செய்தேன்.

சுப்பர்மார்க்கட்டில் வண்டில் தள்ளும் வேலைக்கு முயற்சி செய்தேன். வாடிக்கையாளர்கள் சாமான்களை வண்டிலிலே வைத்து தள்ளிச் சென்று காரிலே சாமான்களை ஏற்றி வண்டிலை விட்டுவிட்டு போவார்கள். அவற்றை சேகரித்து சுப்பர்மார்க்கட் உள்ளே கொண்டு போய் நிறுத்தவேண்டும். அதைக் கெடுத்தவர் புலம்பெயர்ந்த  தமிழர்தான். அவர் அங்கே 30 வருடமாக சேலை செய்கிறாராம். 20 வண்டில்களை சேகரித்து ஒரேயடியாக உள்ளே தள்ளிக்கொண்டு போவதில் ஒரு சாதனை வைத்திருந்தார். அந்தச் சாதனையை நான் முறியடித்துவிடுவேன்  என பயந்தாரோ என்னவோ, அந்த வேலை எனக்கு கிடைக்காமல் தடுத்துவிட்டார்.  

வேறு பல வேலைகளுக்கு முயற்சிகள் செய்தாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. இப்படி நான் சோர்ந்துபோய் இருந்த சமயம்தான் ஒரு நாள் அதிகாலை டெலிபோன் மணி அடித்தது. மற்றப் பக்கம் இருந்தவர் ஒரு நிமிடம் பேசிய பின்னர்தான் அவர் ஆங்கிலம் பேசுகிறார் என்று எனக்குப் புரிந்தது. தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வரமுடியுமா என்று என்னிடம் கேட்டார். எப்போது என்று கேட்டேன். இன்றைக்கு. எத்தனை மணிக்கு? காலை 9 மணி. என்ன இடம்? அவர் முகவரியை சொல்லச் சொல்ல எழுதினேன்.  தூரமான தேசம்.  நான் அது பற்றி யோசிக்கும்போதே வாய் ’சரி வருகிறேன்’ என்று சொல்லிவிட்டது. உடல் உழைப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; மூளை பாவிக்கத் தேவையில்லை.

ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது போய்ச் சேர்ந்தேன்.  நான் சந்தித்தது  ஒரு யூதப் பெண்மணி. பெயர் எமூனா என்றார். அவர் உடையும், இருந்த தோரணையும், பேசிய விதமும் எனக்குப் பிடித்துக்கொண்டது. கருணை உள்ளவர் என்று உடனேயே என் மனதில் பதிந்தது. காப்புறுதி நிறுவனம் சார்பில்   விபத்தில் மாட்டிய ஒரு தமிழ் பெண்மணியின் உடல், மன நிலையை அவர் மதிப்பீடு செய்யவேண்டும். இவருடைய மதிப்பீட்டின் அளவுகோல் படி அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப் படும் என்பதை எமூனாவே என்னிடம் சொன்னார்.

விபத்தில் மாட்டிய பெண்ணின் பெயர் சின்னநாயகி என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெரியநாயகி கேள்விப்பட்டிருக்கிறேன். சின்னநாயகி புதிதாக இருந்தது. அவர் ஒரு திருமண விழாவுக்கு உறவுக்காரருடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது வேறு காருடன் மோதி விபத்து நடந்தது. மூன்று நாள் மருத்துவமனையில் நினைவு தப்பிக் கிடந்தார். உடம்பில் பல இடங்களில் முறிவு. தலையில் பலமான அடி. காரில் பயணம் செய்த மற்றவர்கள் சிறிய காயங்களுடன் தப்பிவிட்டனர். ஒருமாத காலமாக இவருக்கு  சிகிச்சை நடந்தது.  இப்பொழுது வீட்டில் இருந்து சிறிது சிறிதாக தேறி வருகிறார். 

சின்னநாயகி கட்டையாக உருண்டையாக  இருந்தார். தும்மல் ஆரம்பிப்பதுபோல முகம் கோணலாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்து புலம்பெயர்ந்தவர். அவருக்கு கணவரும் ஒரு மகனும்.  நோயாளியும் மொழிபெயர்ப்பாளரும் அவர்களுக்குள் பேசுவது தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சின்னநாயகி இடைவேளைகளில் தன் சரிதத்தை எனக்குச் சொல்லிவிடுவார். மகன் அவரை பின்னேரம் வந்து கூட்டிப்போவார் என்றார்.  

நான் தயாராக இருந்தேன். எமூனா ஆரம்பித்தார். நான் மொழிபெயர்த்தேன்

இன்று எப்படி உடம்பு இருக்கிறது?

வலிதான். வலியில்லாத ஒரு நிமிடத்தைக்கூட நான் அனுபவித்தது கிடையாது.

இரவு தூங்கினீர்களா?

நித்திரை மாத்திரை போட்டுவிட்டு படுத்தேன். மூன்று மணி நேரம் தூங்கினேன். பின்னர் எழும்பி இன்னொரு வலி மாத்திரை போட்டேன். சிறிது நடந்தேன். சுடுதண்ணீர் வைத்துக் குடித்தேன். தூங்க முடியவில்லை.

உங்களுக்கு சொல்லித்தந்த உடல் பயிற்சிகளை செய்கிறீர்களா?

பயிற்சி செய்தால் வலி இன்னும் கூடுகிறதே. ஏதோ கொஞ்சம் ஏலக்கூடியதை செய்கிறேன்.

கல்யாணவீடு, பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படியான நிகழ்வுகளுக்கு போகிறீர்கள? அப்படிப் போனால் உங்களுக்கு நல்லது என்று சொல்லியிருக்கிறேன்.  முகத்தில் சிரிப்பு வரும்.

போகிறேன். என்னுடைய அக்கா அதுகளுக்கு கூட்டிப் போவார்.

நல்லது. நல்லது. உங்கள் சுவாச…….

திடீரென்று சின்னநாயகி எழுந்து நின்று தாதி வெப்பமானியை உதறுவதுபோல கையை உதறினார். என்ன என்று கேட்டபோது மருத்துவருடைய குறிப்பை மறந்துவிட்டதாகக் கூறி கைப்பையில் துளாவி எடுத்து  எமூனாவிடம் நீட்டினார்.

உங்கள் மருத்துவரும் சுவாசப் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறார். இது என்ன புதிதாக இருக்கிறது?

மூச்சு விடக் கஷ்டம். பாதி மூச்சுத்தான் வருகிறது. சுவாசப்பை நிறைவதே இல்லை. உடனே களைப்பும் வருகிறது என்றுவிட்டு இளைத்தார்.

நீங்கள் உங்கள் சமூகக் கூட்டங்களில் பாடியுள்ளதாக முன்பு சொன்னீர்களே. எங்கே ஒரு பாட்டுப் பாடுங்கள் பார்ப்போம்.

உடனே சின்னநாயகியிடம் ஒரு மாற்றம் வந்தது. முகத்திலே சிரிப்பு போல ஒன்று தோன்றியது. அழகாகக்கூட தெரிந்தார்.

சுவாசமே சுவாசமே

என்ன சொல்லி என்னை சொல்ல

காதல் என்னை கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம்

சுவாசமே சுவாசமே.

அவர் பாடிய சங்கீதத்தில் கொஞ்சம் மீதி இன்னும் இருந்தது.  இரண்டு மைல் ஓடியதுபோல அவருக்கு மேலும் கீழும் இழுத்தது. நான் திகிலுடன் இதையும் மொழிபெயர்க்க வேண்டுமா என்பதுபோல பார்த்தேன். எமூனா  வேண்டாம் என்றார்.

தொடர்ந்து சின்னநாயகி பேசினார். திடீரென்று வலி வருகிறது. சிவப்பு வலி மாத்திரை போட்டாலும் போகுதில்லை. மஞ்சள் போட்டாலும் போகுதில்லை. அது நினைத்த பாட்டுக்கு  வருகிறது. நினைத்த நேரம் போகிறது.

கழுத்து வலியா?

இல்லை, கை வலி.

அங்கேயுமா? நடுச்சாமத்தில் வலி வந்தால் என்ன செய்வீர்கள்?

கையை  நீட்டிக்கொண்டு சுடுதண்ணீர் பைப்பை திறந்துவிடுவேன். முதலில் குளிர்ந்த தண்ணீர் வரும். பின்னர் அது சூடாகி சுடுநீர் வரும். அதை மாறி மாறிப் பிடிப்பேன். வலி போகாது. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

உங்கள் கணவரையும் நீங்கள்தான் பார்க்கவேண்டுமா?

வேறு ஆர்? நான்தான் பார்க்கவேண்டும். அவர் மறதி என்னிலும் மோசம். குளிர் பெட்டியை திறந்து தலையை நுழைத்து எதையோ தேடுவார். ஆனால் மறந்துவிடும். கதவு வந்து அவர் குண்டியிலே அடிக்கும். அப்படியே உறைந்த கல்லைப்போல நிற்பார்.

போனதடவை உங்களுக்கும் மறதி வருகிறது என்று சொன்னீர்களே.

அதுதான் மோசம். பக்கத்து கடைக்கு போனால் என்ன சாமான் வாங்க வந்தேன் என்பது நினைவில் இல்லை. ஒருநாள் எங்கே நிற்கிறேன் என்பது மறந்துவிட்டது. என்னுடைய வீட்டு முகவரியும் ஞாபகத்தில் இல்லை. ஒன்பது  வயதுச் சிறுமி ஒருத்தி என்னப் பிடித்து அழைத்துப்போய் வீட்டில் சேர்த்தாள்.

 உங்கள் பெயரையும் முகவரியையும் டெலிபோன் நம்பரையும் ஓர் அட்டையில் எழுதி அதை எந்நேரமும் கழுத்தில் தொங்க விடவேண்டும். அதை கடந்த தடவை சொன்னேனே.

அதுவும் எனக்கு மறந்துபோனது.

 சரி, மருந்தாவது கிரமமாக எடுக்கிறீர்களா?

எங்கே எடுக்கிறேன். எனக்கு அதைப் பார்த்து நேரத்துக்கு நேரம் தவறாமல் தர ஒருவரும் இல்லையே. சிலவேளை முற்றிலும் மறந்துபோகிறேன்.

இப்படி எங்கள் அறிவுரைகளை உதாசீனம் செய்தால் எப்படி உடம்பு சுகப்படும்?

திடீரென்று ஒரு பழைய பாடலை சின்னநாயகி சொன்னார். ’அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி/ எடுத்த கருமங்கள் ஆகா – கொடுத்த/  உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்/ பருவத்தால் அன்றி பழா.

நான் அங்குமிங்கும் தலையை திருப்பினேன். அதையும் மொழிபெயர்ப்பதா என்பதுபோல பரிதாபமாக எமூனாவைப்  பார்த்தேன். அவர் மொழிபெயர்க்கச் சொன்னார்.

சுருக்கமாக ’எது எது எப்போ நடக்கவேண்டுமோ அது அது அப்போ நடக்கும்’ என்றேன்.

உங்கள் கால்வலி எப்படி?

உடனேயே சின்னநாயகியின் முகம் மலர்ந்தது. சொல்லவேணும் சொல்லவேணும் என்று நினைத்து வந்தனான். எல்லாம் மறந்துவிட்டது. அந்த வலியை விளங்கப்படுத்தவே முடியாது. எலும்புக்குள் இருந்து தொடங்கும். வித்தியாசமானது.

அது என்ன வித்தியாசமான வலி?

வித்தியாசம் என்றால் வித்தியாசம்தான். அமெரிக்கா காசும் காசு. கனடா காசும் காசு. ஆனால் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

எமூனா சிரித்தார். நானும் சிரித்தேன்.

உடனேயே சின்னநாயகி உசார் வந்து இடது கால் சப்பாத்தை அதிகாரிக்கு காட்டுவதற்காக சட்டென்று குனிந்து அகற்றினார். மோசமான  நாற்றம் ஒன்று எழுந்தது. சதை அழுகிய மணம். காற்றின் நிறம்கூட மாறியதுபோல எனக்குப் பட்டது. எமூனா பார்க்க முன்னரே நான் அவர் பாதத்தை கண்டுவிட்டேன். வீங்கி வரிவரியாக சிவந்துபோய் முயல்குட்டி போல உட்கார்ந்திருந்தது. அதற்குள் இருந்து என்னவோ வெளியே வரத் துடித்தது. கால் விரல்கள் ஒன்றுடன் ஒன்று  ஒட்டிப்போய் வாத்தின் விரல்கள்போல ஆகிவிட்டன.

’மூடுங்கள் மூடுங்கள்’ என்று எமூனா கத்தினார். நாங்கள் அங்கேயிருந்த ஒரு மணி நேரத்தில் முதல் தடவையாக எமூனா குரலை உயர்த்தினார்.

இப்பொழுது வலி எண் என்னவென்று அமைதியாக கேட்டார்.

எந்த வலி?

எது ஆகக்கூடிய வலியோ அது?

நான் மொழிபெயர்க்க முன் அவர் ‘ரென்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

எமூனா எழுதிக்கொண்டார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு கிடைத்துவிட்டதாக  அறிந்தேன். தொகை தெரியவில்லை. ஒரு லட்சம் டொலராக இருக்கலாம். ஒரு மில்லியன் கூட இருந்தாலும் அதிசயப்படக் கூடாது. அந்த இழப்பீட்டுப் பணத்தில் என் பங்கும் இருந்தது. எமூனா வைத்திருந்த கோப்பில் சின்னநாயகியின் படம் ஒன்று இருந்தது. விபத்துக்கு முன்னர் எடுத்தது.  நான் அதை என் பக்கத்தில் இருந்து தலை கீழாகப் பார்த்தேன்.  அழகான சிரித்த முகம். ஒரேயொரு கணநேரத்தில்  நடந்த விபத்தில்  அவர் முகம் அப்படி மாறிவிட்டது. இனிமேல் அவருக்கு அதுதான் முகம். ஒரு மில்லியன் டொலர்கூட அந்த வலி முகத்தை மாற்றமுடியாது.

இன்று என்னுடைய சம்பளக் காசு 50 டொலர் வந்தது. ஊபரில் போக 48 டொலர். திரும்ப 48 டொலர்; மொத்தம் 96 டொலர். இந்த விவகாரத்தில் எனக்கு நட்டம் 46 டொலர்.  ஆனாலும் என் உழைப்பில் கிடைத்த முதல் சம்பளம். அப்படியே, அது என்ன வார்த்தை, உடம்பு எல்லாம் புளகாங்கிதம் அடைந்தது.

END

About the author

2 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta