அற்புத விளக்கு

 

அமெரிக்காவில் கேப்கொட் என்ற சிறிய நகரத்தில் ஒரு புத்தகக்கடை உண்டு. சமயம் கிடைக்கும்போது நான் அங்கு போவேன். அந்தக் கடையின் உரிமையாளர் ஒரு பெண்மணி. மற்றைய புத்தகக் கடைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கடை நடத்தும் பெண்மணி நிறைய வாசித்தவர். இலக்கியத் தரமான புத்தகங்களே அங்கே கிடைக்கும். அதுமட்டுமல்ல அங்கே விற்கும் புத்தகங்கள் அனைத்தையும் அவர் ஏறக்குறைய படித்திருப்பார். படித்திருக்காவிட்டாலும் அந்தப் புத்தகத்தைப்பற்றியும் அதை எழுதிய எழுத்தாளர் பற்றியும் நிறையப் பேசுவார். புத்தகத்தை வாங்க முன்னரோ வாங்கிய பின்னரோ அவருடன் ஒரு நீண்ட உரையாடலை நடத்தமுடியும். சிலபேர் ஒரு புத்தகமும் வாங்காமல் திரும்பக்கூடும். ஆனால் நாலு புத்தகங்கள் படித்த அறிவு அவர்களுக்கு கூடியிருக்கும்.

சில தமிழ் புத்தகக் கடைகளுக்குள் போனால் அவர்களுக்கு அங்கே விற்கும் புத்தகங்களைப் பற்றிய ஓர் அறிவும் கிடையாது. 'இந்தப் புத்தகம் இருக்கா?' என்று கேட்டால் 'அங்கே அந்த மூலையில் பாருங்கோ' என்று பதில் வரும். 'இல்லையே' என்றதும் 'சரி, அப்ப இல்லை' என்பார்கள்.
கனடாவின் பிரபல எழுத்தாளர் அலிஸ் மன்றோ மணமுடித்த புதிதில் கணவருடன் சேர்ந்து ஒரு புத்தகக் கடை நடத்தினார். அந்த நேரத்தில் அவர் புத்தகக் கடையில் உள்ள புத்தகம் எல்லாவற்றையும் வாசித்து தள்ளியதாகச் சொல்லியிருக்கிறார். அவர் வேகமான வாசகி. அங்கு விற்கும் புத்தகங்களை அவர் ஏற்கனவே வாசித்திருந்ததால் வாசகர்களுக்கு அவர் புத்தகம் தெரிவு செய்வதில் நல்ல வழிகாட்டியாக செயல்பட முடிந்தது.

சென்னையிலும் இப்படி புத்தக வாசிப்புக்கு நல்ல வழிகாட்டி ஒருவர் இருக்கிறார். தமிழ் புத்தகங்கள் வாங்க நான் சென்னைக்குச் சென்றிருந்தபோது திலீப் குமாரைச் சந்திக்க முடிந்தது. அப்பொழுதே அவருடைய சிறுகதைகளை நான் படித்திருந்தேன். ஓர் எழுத்தாளர் புத்தகக்கடை நடத்தினால் அது புத்தகம் வாங்க வரும் வாசகர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். திலீப் குமாருக்கு புத்தகத்தைபற்றி மட்டுமல்ல அதை எழுதிய எழுத்தாளர்களையும் தெரிந்திருந்தது. அவருடன் கலந்தாலோசித்து புத்தகங்கள் வாங்குவது ஓர் இன்பமான நினைவாக மனதில் நிற்கும். நான் முதன்முறை போனபோது அப்படித்தான். சில புத்தகங்கள் அப்போது கிடைக்கவில்லை. அடுத்த நாள் ஓர் ஆள் பெரிய புத்தக் கட்டு ஒன்றைக் கொண்டுவந்து நான் தங்கியிருந்த ஹொட்டலில் கொடுத்துவிட்டு போனார்.

அதன் பின்னர் இரண்டுமுறை அவரை சந்தித்திருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவதிலும் பார்க்க அவரைச் சந்திப்பதில்தான் ஆர்வம். அவருடைய சிறுகதைகள் எவ்வளவு கச்சிதமாக இருக்குமோ அப்படியே அவருடைய கணக்கு வழக்குகளும் இருக்கும். புத்தகம் வாங்குவதையே ஓர் இலக்கிய அனுபவமாக ஆக்கிவிடுவார். இவருடைய சிறுகதைகளில் எல்லோருக்கும் பிடித்தது 'தீர்வு' என்ற கதைதான். எனக்கும் பிடிக்கும். நான் அதை பலமுறை படித்ததுண்டு. 'கடிதம்' என்ற சிறுகதையும் நுட்பமான படைப்பு. அதை குறும்படமாக எடுத்திருந்தார்கள். கலையம்சம் கெடாமல் நேர்த்தியாக அந்த திரைப்படம் வந்திருந்தது.

அவருடைய 'மூங்கில் குருத்து' சிறுகதை பற்றி திலீப் குமாருடன் நான் பேசியிருக்கிறேன். தமிழில் வந்த சிறந்த சிறுகதைகளில் எண்ணிச் சொல்லக்கூடியது அது. வறுமையைப் பற்றி பல சிறுகதைகள் படித்திருப்போம். இதில் வறுமையின் வலி ஆரம்பத்திலிருந்து மெள்ள மெள்ள மனதில் ஆழமாக இறங்குகிறது. சோகமான ஒரு கதையை நகைச்சுவையாகச் சொல்வது ஆபத்தான விளையாட்டு. சிறிது பிசகினால் நகைச்சுவையும் கெட்டுவிடும், கதையும் கெட்டுவிடும். மிக நுட்பமாக எழுதப்பட்டு வெற்றி பெற்ற கதை.

கதையில் வரும் முதலாளி பெரும் பணக்காரர் அல்ல. அவர் வீட்டிலும் வறுமைச் சூழல். அங்கே வேலை செய்பவர்களுக்கும் அதே நிலை. கதைசொல்லியின் வீட்டிலும் வறுமை பிடுங்கித் தின்னுகிறது. அவர் பணம் வாங்கப் போகும் கல்லூரி மாணவர்களையும் வறுமை விடவில்லை. கதையின் கடைசியில் தாயார் மூங்கில் குருத்தை எறிந்து 'குப்பைத்தொட்டியில் போடு' என்கிறார். கதைசொல்லி 'நீயே போய்ப்போட்டுக்கொள்' என்பதோடு கதை முடிவுக்கு வருகிறது. மூங்கில் குருத்து வாடியிருக்கிறது. அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. வறுமையின் வெக்கைதான்.

திலீப் குமாருக்கு விளக்கு விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள். தாமதமானாலும் தரமான விருது அவரைத் தேடி வந்திருக்கிறது. சென்ற முறை அவர் விளக்கு தேர்வுக்குழுவில் இருந்ததால் அவருடைய பெயர் முன்னிலையில் இருந்தாலும் அவர் பெற்றுக்கொள்ள மறுத்ததாக அறிகிறேன். இந்த முறை ஏற்றுக்கொண்டதால் அவருக்கும் பெருமை, விளக்குக்கும் பெருமை. இவருடைய கதையை படிக்கும்போது இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் நான் பார்த்த ஒரு பிச்சைக்காரப் பெண் நினைவுக்கு வருவாள். கிழிந்த ஆடை, கலைந்த தலை. அவள் முதுகிலே தொங்கும் சீலைத் துணியில் ஒரு குழந்தை தொங்கிக்கொண்டு போவோர் வருவோரைப் பார்த்து சிரிக்கும். இதுதான் வாழ்க்கை. இவருடைய கதைகளும் அப்படித்தான். தனித்துவமான கதை சொல்லல் முறை. ஒருவரையும் நகல் செய்வதில்லை, இவரையும் ஒருவர் நகலெடுக்க முடியாது. 'மூங்கில் குருத்து' கதையில் 'தொந்தி' வர்ணனை ஒரு பந்தியை நிறைத்திருக்கும். மறக்கமுடியாத வர்ணனை. 'அந்த வாரத்தின் கடைசிச் சோற்றை பரிமாறினாள்' என்ற வரி இருபது வருடம் கழித்தும் வாசகர் மனதில் ஞாபகம் இருக்கும்.

திலீப் குமார் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை. அலாவுதீனின் விளக்கு அற்புதம் விளைவித்ததுபோல இந்த விளக்கு விருது ஓர் அற்புதம் செய்து அவர் மீண்டும் எழுத வரவேண்டும். அதுவே என் விருப்பம். வாசகர் விருப்பமும்.
 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta