என்னைப் பார்த்து ஒரு பெண் கண்ணடித்தாள். இது நடந்தது கனடாவில் ஒரு பலசரக்குக் கடையில். நான் ஓர் உணவுப் பக்கற்றை தூக்கி வைத்து இது பழசா? இதை வாங்கலாமா? என்று விசாரித்தேன். அவள் கீழ்ப்படிவதற்கு பழக்கப்பட்ட ஒரு விற்பனைப் பெண். ஒரு மயிலின் தலைபோல தானாக ஆடுகிற சிறய தலை அவளுக்கு. என்னை உற்றுப் பார்த்தாள். என்னிடம் அவளுக்கு இரக்கம் உண்டாகியிருக்கலாம். உடம்பின் சகல அங்கங்களையும் ஒடுக்கி, விறைப்பாக வைத்துக் கொண்டு கண்ணை மட்டும் சிமிட்டினாள். கடை முதலாளி பின்னால் நின்றார். அவள் கொடுத்த சைகையில் நான் பொருளை வாங்கவில்லை. வாரம் 250 டொலர் சம்பளம் வாங்கும் இந்தப் பெண் செய்த துரோகச் செயலுக்காக வேலையை இழந்துவிட்டாள் என்று எனக்கு பின்னால் தெரியவந்தது.
ஒருமுறை நான் நயாக்கரா நீர்வீழ்ச்சியை பார்க்கப் போனபோதும் இப்படியான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. கார் சிடியில் அப்பொழுது பிரபலமான ‘ஓ போடு’ பாடல் போய்க் கொண்டிருந்தது. கனடாவின் தேசியகீதமும் 'ஓ கனடா' என்றே ஆரம்பமாகிறது. ஒன்பதே வரிகள் கொண்ட இந்தக் கீதத்தில் ஐந்து தடவை ‘ஓ கனடா’ பிரயோகம் வரும். பல கனடியர்களுக்கு இந்தப் பாட்டின் வரிகள் பிடிக்கவில்லை. மெட்டும் பிடிக்கவில்லை, இதைத்த திருத்தி அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. என் நண்பர் ஒருவர் ‘ஓ போடு’ மெட்டையும், அதன் வரிகளையும் தான் பரிந்துரை செய்யப்போவதாக பயமுறுத்துகிறார். யார் கண்டது, அவருக்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்கலாம்.
இந்த நயாக்கரா பயணத்தில் கடையில் வாங்கிய உணவுப் பக்கெற் சிலதை எடுத்துப் போயிருந்தேன். இந்த உணவு வகைகள் யாரோ ஒரு மூதாட்டியாரால் இரவிரவாக ஒரு தொடர் மாடிக்கட்டிட சமையலறையில் தயாரிக்கப்பட்டவை. அவை செயற்கை காற்று அடித்து ஊதிப் போய் பருத்து அழகாக இருந்தன. உள்ளே இருப்பதை பெரிதாக வேறு காட்டின. ஓர் இடத்தில் ‘இங்கே கிழிக்கவும்’ என்று கறுப்பு கோடு போட்டிருந்தது. இந்தக் கறுப்பு கோடுகளை உலகத்தில் யாரும் நம்பக்கூடாது. கார் 120 கி.மீ வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. விரல்களினால் எவ்வளவு முயன்றும் அந்த பக்கெற்றை அசைக்க முடியவில்லை. பல்லின் உதவியை நாடியும் பிரயோசனமில்லை. யாராவது உள்ளே இருக்கும் உணவை அபகரித்துவிடுவார்கள் என்பது போல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிட நேரம் இந்தக் சண்டை தொடர்ந்தது. நான் உணவைச் சாப்பிட விரும்பிய இடத்தில் இருந்து 30 கீ.மீட்டர் தள்ளி பக்கெற் விட்டுக்கொடுத்தது. அளவுக்கு மீறிய பலத்தை பிரயோகித்ததால் பக்கெற் உடைந்து உணவுப் பொருள்கள் காலடியில் சிதறி விழுந்தன.
ஒரு சமயம் இப்படியான தொழிலில் ஈடுபட்டிருந்த என் நண்பர் ஒருவரிடம் இந்த சம்பவத்தை விவரித்தேன். இவ்வளவு கடுமையான உழைப்பில் ஒரு பொருளை சந்தைக்கு கொண்டு வரும்போது கொஞ்சம் வாடிக்கையாளரின் வசதியையும யோசித்திருக்கலாமே என்று சொன்னேன். அவர் ‘இந்த தயாரிப்புகளில் 50 வீதம் உற்பத்தி விலை, மீதி 50 வீதம் விளம்பரத்துக்கும், பக்கெற் செலவுக்கும் போய்விடுகிறது. எங்கள் லாபம் சிறுதொகைதான்’ என்றார். நான் சொன்னேன் ‘தரமான பொருளை பயனர் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார். நீங்கள் தரத்தைக் கூட்டுங்கள். சேவையை மேம்படுத்துங்கள், விளம்பரத்தைக் குறையுங்கள். அது விரயம்.’ அவருக்குப் பிடிக்கவில்லை. உங்களுக்கு மேல் நாட்டு விளம்பர உத்திகள் பற்றிய அறிவு போதாது என்றார். அதற்குப் பிறகு என்னை எங்கே கண்டாலும் எங்கள் இடைவெளியை அவர் அகலப்படுத்தத் தொடங்கி விட்டார்.
உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். ரொறொன்ரோவில் இளைஞர் ஒருவர் புகைப்பட கம்பனி ஒன்று ஆரம்பித்தார், 8×8 அடி அறையில் ஒரு சிறிய மேசை போட்டு. அதற்கு மேல் பாதி கடித்த ஆப்பிள் படம் போட்ட ஒரு கம்புயூட்டர். ஒரு பச்சை கலர் டெலிபோன். விலை உயர்ந்த காமிரா. அவ்வளவுதான். அவரே முதலாளி, விற்பனையாளர், படப் பிடிப்பாளர், பொதுசன தொடர்பு அதிகாரி எல்லாம். இவரை ஊக்குவிக்க வேண்டும் என்பது என் கொள்கை. ஒரு படம் பிடிக்கும் விசயமாக ஒரு நாள் அவரை தொலைபேசியில் அழைத்தேன். யந்திரக் குரல் ஒன்று பேசியது. ‘எங்களுடைய எல்லா பிரதிநிதிகளும் அழைப்பில் இருக்கிறார்கள். அவகாசம் கிடைக்கும் முதல் பிரதிநிதி உங்களுடன் தொடர்பு கொள்வார், தயவுசெய்து அழைப்பில் இருங்கள். உங்கள் வாடிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியம்’ என்று திருப்பி திருப்பிச் சொன்னது. இதைவிட அப்பட்டமான பொய்யோ, படாடோபமான தோரணையோ உலகத்தைப் புரட்டிப் போட்டாலும் கிடைக்காது. எந்தக் காரணம் கொண்டும் வாடிக்கையாளர் தன் தொடக்க நிலையை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதிலேயே இந்த இளைஞர் குறியாக இருந்தார். வாடிக்கை பிடிப்பது இரண்டாம் பட்சம்தான். நான் பத்து நிமிடம் காத்திருந்த பிறகு ஒரு மெசின் வந்து தகவலை விடச் சொன்னது, விட்டேன். அந்த இளைஞர் அந்தக் கணமே என்னை மறந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.
என் வீட்டுக்கு விளம்பரத் துண்டுகள் வந்தபடியே இருக்கும் அவற்றை எடுத்து மேலோட்டமாகப் பார்த்துவிட்டு குப்பையில் போடுவேன். சமையல் அடுப்புகள், நுண்ணலை அடுப்புகள் உடனுக்குடன் திருத்தி தரப்படும் என்று ஒரு விளம்பரத் துண்டு வந்தது. என்னுடைய மின் அடுப்பு இரு பாதிகள் கொண்டது. அதில் ஒரு பாதி வேலை செய்வதை நிறுத்தி சில மாதங்கள் கடந்துவிட்டன. உடனேயே விளம்பரக்காரரை தொலைபேசியில் அழைத்து, பீப் என்ற சத்தம் வந்த பிறகு தகவலை விட்டேன். பதில் இல்லை. இன்னொருமுறை கூப்பிட்டேன். அப்போதும் மௌனம், எப்படியோ கடைசியில் ஒருவர் வீட்டுக்கு வந்து சோதனை செய்து ஓர் உதிரிப்பாகம் மாற்றவேண்டும் என்று சொல்லி அதைக் கழற்றிப் போனார். அதற்குப் பிறகு அவர் வரவே இல்லை. எத்தனை தகவல் விட்டாலும் பதில் இல்லை. ஆனால் வாரத்துக்கு ஒரு முறை அவருடைய நிறுவனத்தில் இருந்து விளம்பரத் துண்டுகள் வருவது மட்டும் நிற்கவில்லை. கையில் இருக்கும் வேலையை முடிக்க முடியாதவர் எதற்காக திருப்பித்திருப்பி விளம்பரம் செய்கிறார். அவரிடமே கேட்டேன் ‘மூச்சு விடுவது உயிரினத்தின் அறிகுறி என்பது போல விளம்பரம் செய்வதும் ஒரு நிறுவனம் உயிரோடு இருக்கிறது என்பதின் அடையாளம்’ என்கிறார்.
ஓர் உணவகத்தின் உரிமையாளரை எனக்கு தெரியும். கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் எது நடந்தாலும் அங்கே உணவு சப்ளை இவர் தான். இதுவரையில் ஒரு புத்தகமும் எழுதி தான் வெளியிடவில்லை என்றார். இது என்னை ஆச்சரியத்தின் உச்சிக்கே தூக்கிச் சென்று அங்கேயிருந்து சட்டென்று கையை விரித்து கீழே போட்டது. கனடாவில் இப்படி ஒருவரைக் காண்பது அபூர்வம்.
இவர் நாளுக்கு பன்னிரெண்டு மணி நேரம் நின்ற நிலையிலேயே வேலை செய்வார். அவருடைய வலதுகை மெசினில் விலைப் பட்டியலைப் பதியும் அதே நேரத்தில் அவருடைய சொண்டுகளும் வேகமாக அசைந்து அந்தக் கணக்கை போடும். எப்பொழுதும் இவருடைய கடை வாசலில் ‘எடுத்துப்போகும்’ உணவு பார்ச்சலுக்காக சனங்கள் வரிசையில் நிற்பார்கள். அப்பொழுது யாராவது வெள்ளைக்காரர் வந்தால் இந்த உரிமையாளர் அவரை லைனுக்கு வெளியே வைத்து கவனித்து முதலில் அனுப்பிவிடுவார். இப்படியான வாடிக்கைகளை எப்படியும் நிரந்தரமாக்கி விடவேண்டும் என்பது அவருடைய கொள்கை.
ஒருமுறை ஒரு புது வாடிக்கையாளர் இந்த வரிசையில் வெகுநேரம் நின்றார். அப்போது பார்த்து ஒரு வெள்ளைக்காரி, ஆட்டுக்தோல் முழு அங்கியைக் கழற்றாமல், விடுமுறையில் வந்த ராசகுமாரி போல பொன்முடி பிரகாசிக்க உள்ளே நுழைந்தாள். அவள் முகத்தில் சிநேகம் விரும்பும் தன்மை இருந்தது. இந்த முதலாளி எல்லோரையும் உதறிவிட்டு அந்தப் பெண்ணை கவனிக்க விரைந்தார். அவள் வரிசையில் நிற்கும் தன் கணவரைச் சுட்டிக்காட்டி அவரைத் தேடி வந்ததாகச் சொன்னாள். கடைக்காரருக்கு முகம் சுருங்கிவிட்டது. ஒரு இலங்கைக்காரர் வெள்ளைக்காரப் பெண்மணியை மணமுடித்திருப்பது அவருக்கு சங்கடத்தை கொடுத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகாவது அவர் தன்னுடைய ரூல்ஸை மாற்றிவிட்டாரா என்பதும் இன்றுவரை தெரியவில்லை.
இன்று நான் வீட்டுக்கு வந்து சல்லடைக் கதவைத் திறந்தபோது எழு விளம்பரத் துண்டு பிரசுங்கள் அகப்பட்டன. பிரதான கதவைத் தள்ளியதும் அவை எழுந்து எழுந்து பறந்தன. அதிக பணச் செலவில் என் வீடு தேடி வந்த அத்தனை விளம்பரத்தாள்களையும் பார்வையிட்டு விட்டு நான் குப்பையில் போடுவேன். இவர்கள் விளம்பரத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவ்வளவு பயனர்களின் அறியாமையிலும் வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஏமாளி அல்ல. முட்டாளும் இல்லை, என்னுடைய குதிரையின் விலை ஐந்து பணம் தான். அது ஆறு கடக்கவும் பாயும், முக்கியமாக என்னை எமாற்ற நினைக்கும் நிறுவனங்களின் முன்னே நிற்காது தாண்டிப் பாய்ந்து போகும்.