நன்றி கூறல் நாள் மறுபடியும் வந்து போனது. அமெரிக்க ஜனாதிபதி வழக்கம்போல ஒரு வான்கோழியை மன்னித்து அதற்கு விடுதலை வழங்கினார். அந்த வான்கோழி ஒருவித குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தது மனிதன்தான். அன்றிரவு மட்டும் அமெரிக்காவில் ஐந்து கோடி வான்கோழிகள் கொல்லப்பட்டு அவனுக்கு உணவாகின. இந்த விழாவுக்காக இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகையில் பாதுகாப்பார்கள். விருந்துக்கு முன்னர் ஒன்றுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்பதற்காக. முதலாவதை விடுதலை செய்துவிட்டு இரண்டாவதை உண்டுவிடுவார்கள்.
இந்த வான்கோழிகள் எல்லாம் செயற்கையாக வளர்க்கப்பட்டவை. வான்கோழிகள் மாத்திரமல்ல நாங்கள் உண்ணும் இறைச்சி வகை, முட்டை, மரக்கறி மற்றும் உணவுப்பொருள்கள் யாவுமே செயற்கையாக தயாரிக்கப்பட்டவைதான். ஏதாவது ஒருவிதத்தில் இயற்கைக்கு ஊறு விளைவித்தே அவை உண்டாக்கப்பட்டிருக்கும். அவற்றை உண்ணும் நாங்களும் இயற்கையை சேதப் படுத்துவதில் உடந்தையாக இருப்போம்.
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கடும் பனிக்காலத்தில் போலந்துக்கார் ஒருவரை என் வீட்டு நிலவறையை செப்பனிட அமர்த்தியிருந்தேன். ஒரு வெள்ளிக்கிழமை மதியநேரம் அவர் வேலையை அவசரமாக நிறுத்திவிட்டு புறப்பட்டார். மறுநாள் சனிக்கிழமை Ice Fishing செய்யப் போகவேண்டுமென அவர் சொன்னார். பனிக்கட்டியாக மாறிவிட்ட ஒட்டாவா ஆற்றின் மீது துளைபோட்டு அதற்குள் தூண்டிலை விட்டு மீன் பிடிக்கப்போகிறார். விளையாட்டுக்காகவா இதைச் செய்கிறார் என்று கேட்டேன். அவர் கூறிய பதில் ஆச்சரியத்தை தந்தது.
'என் உணவை இயலுமட்டும் நானே சம்பாதித்துக் கொள்கிறேன். பனிக் காலத்தில் மீன் பிடிப்பேன். கோடை காலத்தில் வீட்டில் காய் கறித்தோட்டம் போடுவேன். இலையுதிர் காலத்தில் தாரா, வாத்து போன்ற பறவைகளை வேட்டையாடுவேன். இயற்கையோடு ஒன்றி எவ்வளவு பின்னோக்கிபோய் உணவை தேடமுடியுமோ அவ்வளவுக்கு அதைச் செய்வேன். என்னுடைய உணவு சுத்தமானது, ஆரோக்கியமானது, இயற்கையின் அழிவில் உண்டாகாதது. இது நான் பூமிக்கு திருப்பி கொடுப்பது.'
போலந்துக்காரர் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை. இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்தப் பூமியில் 100 கோடி மக்கள் வாழ்ந்தார்கள். இன்று 680 கோடி மக்கள், ஆனால் பூமியின் பரப்பு அதே அளவுதான், மாறவில்லை. ஒரு றாத்தல் இறைச்சி உற்பத்தி செய்வதற்கு பத்து றாத்தல் தானியம் தேவைப்படுகிறது. உலகத்தில் விளையும் தானியத்தில் 40 வீதம் மாட்டுத் தீவனத்துக்கே சரியாகிவிடுகிறது. இன்னொரு விதத்தில் சொல்வதானால், ஒரு றாத்தல் இறைச்சி உண்டாக்குவதானது ஒரு கனரக வாகனத்தை 40 மைல் தூரம் ஓட்டிச்செல்வதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டுக்கு நிகரானது. ஒருவர் தன் உணவை தானாக தேடும்போது இயற்கையின் அழிவு மட்டுப்படுகிறது.
அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்துக்கு சமீபத்தில் என் மகனிடம் போயிருந்தேன். அவன் வீட்டிலிருந்து யன்னல் வழியாகப் பார்த்தால் மலை தெரியும். ஆறு ஓடும் சத்தம் கேட்கும். சுற்றிலும் புற்களின் மணம். தலை சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு. ஒரு நாள் மகன் வீட்டுக் கதவில் அறிவிப்பு ஒன்றை யாரோ இரவு ஒட்டிவிட்டு போயிருந்தார்கள். அந்த வீதியிலுள்ள அத்தனை வீட்டுக் கதவுகளிலும் அதே அறிவிப்பு காணப்பட்டது.
'இன்று இந்த வீதியால் ஆட்டு மந்தையை ஓட்டிக்கொண்டு மலைக்கு போகிறோம். தயவுசெய்து உங்கள் நாய்களை கட்டி வையுங்கள். நன்றி.'
அவர்கள் அறிவித்தது போலவே சிறிது நேரம் கழித்து பெரிய ஆட்டு மந்தையை ஓட்டிக்கொண்டு மலைக்கு போனார்கள். எதற்காக பல மைல்கள் தொலைவிலிருந்து ஆட்டு மந்தையை வரவழைத்தார்கள் என்று விசாரித்துப் பார்த்தேன். மலையிலே ஒருவிதமான களை பல்கிப் பெருகிப் படர்ந்து அங்கே வளரும் இயற்கைப் புல்லை அழித்தது. கட்டுமீறி வளரும் களையை தின்று அகற்றுவதற்காக பெரும் செலவில் ஆட்டு மந்தையை வரவழைத்திருந்தார்கள். இயற்கை மேல் அவர்களுக்கிருந்த கரிசனை எனக்கு உவகை தந்தது.
ஆனால் அடுத்தடுத்து நடந்ததுதான் வியப்பூட்டியது. ஆட்டு மந்தைகளை அடைத்து வைப்பதற்கு வேலிகளை ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டுவந்து இறக்கினார்கள். தண்ணீர் பீப்பாய்கள் அடுத்து வந்தன. இன்னும் பலவிதமான உபகரணங்கள் வந்து குவிந்தன. ஒரே பரபரப்பாக அந்த மலையே இயங்கிக் கொண்டிருந்தது. இயற்கைச் சூழலை பாதுக்காக்க அவர்கள் எடுக்கும் முயற்சி சில கேள்விகளையும் எழுப்பியது.
இந்த நடவடிக்கைகளின் நன்மை தீமையை ஒரு சுற்றுச்சூழல் கணக்காளர்தான் சரியாகக் கணக்கிட முடியும். ஆயிரக்கணக்கான துண்டுபிரசுரங்களை அச்சடித்து விநியோகித்திருந்தார்கள். தண்ணீர் பீப்பாய்களையும், வேலிகளையும் ஹெலிகொப்டர்கள் மூலம் நகர்த்தினார்கள். மலையை நோக்கி வாகனங்கள் போவதும் வருவதுமாயிருந்தன. இந்த நடவடிக்கைகளினால் நிறைய சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டது. இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்தால்தான் உண்மையில் எவ்வளவு நன்மை அல்லது தீமை என்பதை கணக்கிட முடியும்.
ஒரு கேட்டை சரிசெய்வதற்கு மேலும் பல கேடுகளை விளைவிக்கவேண்டியிருக்கிறது. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில் ஏற்படும் ஆபத்து இதுதான். முதலில் ஒன்றை உண்டாக்கி அதை மனித பாவனைக்கு விட்டுவிட்ட பிறகுதான் அதன் நன்மை தீமைகளை ஆராய்வது. சுற்றுச்சூழல் தீமை என்பது ஒரு நாட்டுக்குச் சொந்தமானது அல்ல; அது உலகத்துக்கு பொதுவானது. இது என்னுடைய நாடு நான் என்னவும் செய்யலாம் ஒன்று ஒருவர் வாதிட முடியாது. அமேஸன் காட்டை அழிப்பதனால் ஏற்படும் தீங்கு உலகத்துக்கு பொதுவானது. இந்தியாவில் கட்டப்படும் ஒரு புதிய அணைக்கட்டினால் ஏற்படும் நன்மை இந்தியாவுக்கு; தீமை உலகத்துக்கு.
ஒன்றை விரட்ட இன்னொன்றை கண்டுபிடிப்பது சூழலியல்காரர்கள் செய்யும் வித்தை. அவுஸ்திரேலியாவில் கரும்பு பயிர் செய்வதற்காக அதை இறக்குமதி செய்தார்கள். கரும்புடன் சேர்ந்து அதை நாசமாக்கும் ஒருவித வண்டும் வந்துவிட்டது. அது பெருகி கரும்பு தோட்டத்தை அழித்தது. வண்டை ஒழிப்பதற்கு ராட்சத இனத் தவளைஒன்றை இறக்குமதி செய்தார்கள். அந்த தவளை வண்டுகளை திரும்பியும் பார்க்கவில்லை. அதற்கு அவுஸ்திரேலியாவில் தின்பதற்கு இன்னும் ருசியான விலங்குகளும், பறவைகளும் அகப்பட்டன. தவளை அவற்றை வேட்டையாடி சுற்றுச்சுழல் சமனுக்கு பெரும் கேட்டை விளைவித்தது. இப்பொழுது சூழலியல்காரர்கள் அந்த ராட்சத தவளையை ஒழிப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறார்கள்.
சூழலியல்காரர்களுக்கு ஏற்படும் சோதனைகள் முடிவதேயில்லை. ஒரு சின்ன உதாரணத்தை எடுக்கலாம். உலகில் பத்து வருடங்களுக்கு முன்னர் எத்தனை செல்பேசிகள் இருந்தன? அதன் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டாது. ஆனால் இன்று 460 கோடி செல்பேசிகள் உலாவுகின்றன. இந்த 460 கோடி செல்பேசிகளுக்கும் இரவில் மின்னூட்டம் தேவைப்படுகிறது. அந்த மின்சாரம் எங்கேயிருந்து வரும்? இன்னும் சில வருடங்களில் உலகின் செல்பேசிகளின் எண்ணிக்கை 700 கோடியை தாண்டிவிடும் என்று சொல்கிறார்கள். அப்பொழுது எவ்வளவு அதிகப்படி மின்சாரம் தேவையாக இருக்கும். இயற்கையை பிழிந்துதான் அது கிடைக்கும். ஒன்றை அழிக்காமல் ஒன்று கிடைக்காது.
ஆதியில் இருந்து மனிதன் இயற்கையோடு ஒட்டியே வாழ்ந்தான். நெருப்பின் உபயோகத்தை கண்டுபிடித்த மறு நாள் இயற்கைக்கு எதிரான வேலை தொடங்கியது. இன்று அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் பூமிக்கு தீங்கு விளைவிப்பதாகவே அமைகிறது. ஒரு நாளில் சராசரி மனிதன் 31,000 கலரிகளுக்கு சமனான சேதத்தை உண்டாக்குகிறான். சின்னச் சின்ன காரியங்கள் செய்வதன் மூலம் மனிதன் பூமியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிடலாம். தண்ணீரை சிக்கனமாகப் பாவிப்பது. மின்சாரத்தை சேமிப்பது. பிளாஸ்டிக் உபயோகத்தை குறைப்பது. சுழல் பாவிப்பு முறையை தூண்டுவது. இவை எல்லாமே பூமியின் ஆயுளைக் கூட்டும் செயல்கள்தான்.
ஒரு நண்பருடைய காரில் நான் சமீபத்தில் பயணம் செய்தேன். அது ஒரு ரொயோட்டா பிரியஸ் கலப்பு கார். மின்சாரத்திலும் பெற்றோலிலும் சேர்ந்து இயங்குவது. ஒவ்வொரு சிவப்பு விளக்கிலும் அதனுடைய கார் எஞ்சின் தானாக அணைந்து மறுபடியும் உயிர் பெற்றது. சின்ன விசயம்தான், ஆனால் எவ்வளவு சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படுகிறது. உலகத்து சூழலியல்காரர்கள் காட்டும் சிறந்த உதாரணம் ஈஸ்டர் தீவு. ஒரு காலத்தில் இங்கே நிறைய காடுகள் இருந்தன. இன்று அவை எல்லாம் மனிதனால் அழிக்கப்பட்டு அந்த தீவு பாலைவனமாக மாறிவிட்டது. பறவைகள், மிருகங்கள் என்று அழிந்த இனங்கள் ஏராளம். இங்கே நாகரிகம் உச்சமாக இருந்த காலத்தில் இந்த தீவு வாசிகள் பிரம்மாண்டமான கற்சிலைகளை நிறுவினார்கள். இன்றும் ஆயிரக் கணக்கான சிலைகள் அங்கே காட்சியளிக்கின்றன. அவற்றை தூக்கி நிறுத்துவதற்காக மரங்களை அழித்தார்கள். இன்று சிலைகள் இருக்கின்றன, மரங்கள் மறைந்துவிட்டன. முற்றிலும் மனிதனால் அழிக்கப்பட்ட தீவு என்று ஈஸ்டர் தீவை உதாரணம் காட்டுவார்கள்.
உலகில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் இன்று ஒன்று சேர்ந்து கூட்டாக முயற்சி செய்தாலும் ஒரு முறை அழிக்கப்பட்ட இந்த தீவை இனிமேல் மீட்கவே முடியாது. இன்று உலகமும் ஒரு ஈஸ்டர் தீவுபோலவே மாறிக் கொண்டு வருகிறது. இயற்கை வளங்கள் கண்களுக்கு முன்னால் அழிகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. அழிந்தவற்றை மீட்க முடியாது. பரிணாம வளர்ச்சியில் உச்சக் கிளையில் இருப்பவன் மனிதன். அவனுக்கு முன்பு படைக்கப்பட்ட அத்தனை உயிர்களையும் தாண்டி அவன் உயரத்துக்கு சென்றுவிட்டன். இன்றுகூட அவன் உண்டாவதற்கு 100 மில்லியன் வருடங்கள் முன்னர் தோன்றிய கரப்பான் பூச்சியை அவன் கடக்கும்போது ஒருவித தயக்கமும் இல்லாமல் காலால் அதை நசுக்கி கொல்கிறான். நாம் அறிந்த மட்டில் இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழும் ஒரே கிரகம் பூமிதான். இந்தப் பூமியின் வயது கோடிக்கணக்கான வருடங்கள். இதில் வாழும் ஜீவராசிகளில் அதி உன்னதமானதும், சிந்திக்கக்கூடியதும், பரிணாமத்தின் உச்சத்தை எட்டியதுமானது மனித உயிர்தான். பேசி, எழுதி, சிந்தித்து செயல்படும் திறமை பெற்ற மனிதன் இந்தப் பூமியில் வாழ்ந்த காலம் 0.0001 சதவீதம்தான். ஆனால் அவனே அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவனாக இருக்கிறான். சகல அறிவையும் பெற்ற மனிதனாகிய புத்திஜீவியிடம் இந்த பூமிக்கிரகம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே வாழ முடியாவிட்டால் அவனுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அவனுடைய எதிர்காலம் அவன் கையிலேயே தங்கியிருக்கிறது.
பன்னிரெண்டு வயதுச் சிறுமி செவன் சுஸிக்கி ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது ஞாபகத்துக்கு வருகிறது. அந்தச் சிறுமி துக்கம் தாளாமல் தாயாரிடம் ஒடும்போது அவளுடைய தாயார் 'It is not the end of the world. Everything will be all right' ( உலகம் முடியவில்லை. எல்லாம் சரியாய் போய்விடும்) என்று அவளை தேற்றுவாராம். இனிமேல் வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அப்படித் தேற்றமுடியாது. இப்படித்தான் தேற்றலாம். It is the end of the world. Everything will be done to make it all right. உலகம் முடிவுக்கு வரும். நாங்கள் என்ன என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்து சரியாக்குவோம். பூமியில் இன்றைய வேகத்தில் இயற்கை அழிவுகள் தொடர்ந்தால், இன்னும் 30 வருடங்களில் எங்களுக்கு இன்னொரு பூமி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். வெள்ளை மாளிகையில் இரண்டாவது வான்கோழியை தயாராக வைத்திருந்ததுபோல நாங்களும் இரண்டாவது பூமியை தயார்செய்ய வேண்டிய தருணம் நெருங்குகிறது.