குழையல்

 

 நான் சின்ன வயதாயிருந்தபோது அம்மா சமைப்பதை பார்த்திருக்கிறேன். தினமும் பத்து பேருக்கு அவர் சமைப்பார். கிணற்றடியிலிருந்து தண்ணீர் அள்ளுவதிலிருந்து சமைப்பதற்கு விறகு பொறுக்குவதுவரை எல்லாம் அவர்தான் செய்யவேண்டும்.காலை ஐந்து மணிக்கு அடுப்பு மூட்டினார் என்றால் இரவு பத்துமணிக்கு படுக்கப்போகும்வரை அது எரிந்துகொண்டே இருக்கும். அவ்வளவு நேரமும் அம்மா அடுக்களையில்தான். காலை உணவு, மதிய உணவு, மாலை பலகாரம், பின்னர் இரவு உணவு என்று மாறி மாறி ஒரு தொழிற்சாலைபோல அங்கே உணவு உற்பத்திதான்.

 

ஒருநாள் அம்மாவுக்கு காலையில் எழும்போதே தலைச்சுற்றல் காய்ச்சல் எல்லாம் இருந்தது. ஆனாலும் ஏதாவது வேகமாகச் சமைத்துவிட்டு படுக்கவேண்டும். அவர் ஒரு காரியம் செய்தார். அங்கே கிடந்த காய்கறிகள், பருப்பு, கீரை எல்லாத்தையும் ஒன்றாக்கி அரிசியுடன் சேர்த்து சமைத்தார். தேவையான உப்பு, புளி, உறைப்பு சேர்க்கத் தவறவில்லை. வெந்ததை இறக்கிவைத்துவிட்டு அம்மா படுக்கப் போய்விட்டார். அன்றைய வேலை அவருக்கு ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

மதியம் நாங்கள் பசியுடன் வந்து நாங்களாகவே தட்டில்போட்டு சாப்பிட்டபோது அது அற்புதமான ருசியுடன் இருந்தது. இதற்கு என்ன பெயர் என்று கேட்டபோது அம்மா குழையல் என்று தானாகவே ஒரு பெயரைச் சூட்டினார். எத்தனையோ தடவை அதற்கு பின்னர் அம்மாவை குழையல் செய்யச் சொல்லி நாங்கள் தொந்திரவு செய்தோம். ஆனால் அம்மா  மறுத்துவிட்டார். அதி காலையிலிருந்து இரவு படுக்கப்போகும்வரை அடுக்களையே கதியாகக் கிடந்தார். ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் சமையல் தன்னுடைய தொழில் நேர்த்திக்கு ஏற்ற சவால் இல்லை என்று நினைத்தாரோ என்னவோ.  எப்போவாவது படுக்கையில் விழுந்தால்தான் மறுபடியும் செய்வார் போலும் என்று நாங்களும் விட்டுவிட்டோம்.

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு பறங்கியர் ஒருவர் விருந்துக்கு வந்தது ஞாபகமிருக்கிறது. அவர் தெற்கிலிருந்து தேயிலை விற்பதற்கு வந்தவர் எப்படியோ அப்பாவுடன் நண்பராகி வீட்டுக்கு வந்திருந்தார். அம்மா தலை வாழை இலை விரித்து அதிலே சோறும் பலவிதமான கறிவகைகளும் பரிமாறினார். நாங்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டும், அம்மாவின் முந்தானையை பற்றிக்கொண்டும், கதவு நிலையை தொட்டுக்கொண்டும் விருந்தாளியை சுற்றி நின்று அவர் உண்பதை புதினம் பார்த்தோம். அவருக்கு எங்கள் உணவை எப்படி உண்பதென்றே தெரியவில்லை. ஒரு கரண்டி கேட்டார். அம்மா மருந்துக்காக வைத்திருந்த ஒரேயொரு கரண்டியை எடுத்து நன்றாக துடைத்துவிட்டுக் கொடுத்தார். அவர் கரண்டியை வேல்பிடிப்பதுபோல சிறிது நேரம் செங்குத்தாக பிடித்துக்கொண்டு ஆலோசித்தார். பின்னர் கிழக்கிலிருந்து மேற்காக ஒவ்வொரு கறியாக அள்ளி வாயில் வைத்தார். ஒரு கரண்டி சோற்றையும் அள்ளி வாயிலே நுழைத்தார். இப்படியே தொடர்ந்தது. அவருக்கு சோற்றை குழைத்து உண்ணத் தெரியாதது எங்களுக்கு பெரும் வேடிக்கையாக அன்று பட்டது.

நான் கொழும்பில் படித்த காலத்தில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அரசாங்க திணைக்களம் ஒன்றில் எழுத்தராக பணி புரிந்தவர். வெள்ளவத்தையில்  தனி அறை எடுத்து தானே சமைத்து சாப்பிட்டுவந்தார். ஒரு ஞாயிறு மதியம் இவரும் நானும் சஃபையர் தியேட்டரில் ஓடிய மாயா பஜார் படத்தை பார்ப்பதற்கு திட்டமிட்டோம். படம் இரண்டு மணிக்கு ஆரம்பம். நான் இவரைத் தேடி அறைக்கு போனபோது ஒரு அலுமினியத் தட்டில் அவர் உணவைப் பரிமாறிவிட்டு அதை உண்ணாமல் அருவருப்பாக பார்த்துக்கொண்டே இருந்தார். அது தண்ணீரில் தளும்பி மஞ்சள் நிறமாக காய்கறிகள் சோறு எல்லாம் சேர்த்து அவித்த குவியலாக இருந்தது. முதல் பார்வையில் அது சாப்பிடப்போகும் உணவா அல்லது வயிற்றுக்குள் போய் திரும்பி வந்ததா என்பது தெரியவில்லை. என்ன விசயம் என்றேன். தனக்கு சமைக்க நேரம் கிடைக்கவில்லை என்றும் தான் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு அவித்ததாகவும், வாயில் வைக்க முடியவில்லை என்றும் மனைவிமேல் குறைபட்டுக்கொள்வதுபோல புலம்பினார். படத்துக்கு நேரமாகிவிட்டதால் அவர் அன்று சாப்பிடாமலேயே என்னுடன் புறப்பட்டு வந்தார். படத்தில் கடோத்கஜன் வேடத்தில் நடித்த ரங்கராவ் கண்டசாலாவின் இரவல் குரலில் 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்' என்று பாடினார். என் நண்பர் அந்த சமயம் பசியில் பெரும் வேதனை அனுபவித்திருக்கக்கூடும் என்பதை நான் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.

நான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது பல நாட்டு உணவுப் பழக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. வெள்ளைக்காரர்கள் சூப்பை கரண்டியினால் குடித்தார்கள். வேகவைக்காத கீரையை அள்ளி உண்டார்கள். அரைப்பதமாக வாட்டிய மாட்டிறைச்சியை வெட்டி வெட்டி சாப்பிட்டார்கள். உணவை குழைத்து உண்பதென்ற வழக்கம் அவர்களிடம் கிடையாது. பல நாடுகளில் ரொட்டியை பிய்த்து பிய்த்துகறிக்குழம்புடன் தொட்டு சாப்பிடுவார்கள். குழைத்து உண்பது என்பது தொன்றுதொட்டு வந்த தமிழர்களின் வழக்கமாக இருக்கலாம். புறநானூறில் ஆத்தூர் கிழார் என்ற புலவர் புறாவின் முட்டைபோன்ற வரகரிசியை பாலில் அவித்து சோறாக்கி தேனோடு முயல் இறைச்சியையும் குழைத்து உண்பது பற்றி சொல்லியிருக்கிறார். ஆகவே தமிழர்களின் இந்தப் பாரம்பரியம் 2000 வருடங்களுக்கு மேலானது என்று சொன்னாலும் பிழையாகாது.

அமெரிக்காவில் லூயி எனக்கு பழக்கமானது அவன் காதலி வெனஸா மூலம்தான். இவள் துப்புரவுப் பணிப்பெண், பனாமா நாட்டைச் சேர்ந்தவள். இவளுடைய மார்பும் பிருட்டமும் முழு வளர்ச்சியடைந்து  ஒரே அளவில் இருக்கும். ஆனால் அதை தொடுக்கும் இடை திடீரென்று சிறுத்துப்போய் உடுக்கை போல ஒடுங்கி இருக்கும். தென் அமெரிக்காவையும் வட அமெரிக்காவையும் இணைக்கும் பனாமா போலவே அவள் இடுப்பு இருந்தது. பெல்ட்டின் கடைசி ஓட்டையில் இழுத்து இடையை கட்டிவைத்திருப்பாள்.  அவள் கள்ளமாக அமெரிக்காவில் வசித்து வந்ததால் அவளை பொலீஸ் பிடித்து நாடு கடத்திவிட்டது. லூயி கூரையிலே பனி அகற்றும் வேலையை செய்தான். அவனும் பனாமாக்காரன்தான். நாலு, ஐந்து அடி ஆழமான பனிக்கட்டிகளை நடுங்கும் குளிரில் கூரையில் நின்று வெட்டி அப்புறப்படுத்தும் ஆபத்தான வேலை. ஒரு பனிக்காலத்தில் உழைப்பது வருடம் முழுவதற்கும் போதும் என்று சொல்வான். எப்படியும் பணம் சம்பாதித்து தன் காதலியை திரும்பவும் எடுப்பிப்பதுதான் அவன் நோக்கம். வேலை இல்லாத நாட்களில் காதலியை நினைத்துக்கொண்டு தெருக்களில் திரிவான். என்னை அப்படித்தான் சந்தித்தான்.

ஸ்பானிய மொழி பேசும் யாரை சந்தித்தாலும் நான் ஆவலுடன் ஸ்பானிய எழுத்தாளர்கள் பெயர்களை வரிசையாகக் கூறி அவரைப் படித்தீர்களா, இவரைப் படித்தீர்களா என்று விசாரிப்பது வழக்கம். இது மூடத்தனமான வேலை என்பது எனக்கு தெரியும்.  தமிழ் பேசும் ஒருவரைச் சந்தித்ததும் உங்களுக்கு ஜெயகாந்தனை தெரியுமா, சுந்தர ராமசாமியை தெரியுமா, ஜெயமோகனை தெரியுமா என்று கேட்பதற்குச் சமம். லூயி பெரிய ஸ்பானிய இலக்கியங்கள் ஒன்றும் படித்திருக்கவில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில் பாப்லோ நெருடாவை படித்திருந்தான். 'உன் வாயை அவாவுகிறேன். உன் குரலை, உன் கூந்தலை. மௌனமாக பசியோடு தெருக்களில் அலைகிறேன்' என்ற நெருடாவின் வரிகளை ஒப்பிப்பான். நான் பாப்லோ நெருடா இலங்கையில் சில வருடங்கள் தூதரகத்தில் வேலைபார்த்தார், ஆனால் அது நான் பிறப்பதற்கு முன்னர் என்று சொன்னேன். நான் சொல்லாதது அவர் தூதரகத்தில் வேலை செய்தபோது நடந்த ஒரு சம்பவத்தை. தினமும் அவருடைய மலத்தை அள்ளிப்போவதற்கு வெள்ளவத்தையிலிருந்து ஒரு தமிழ் பெண் வருவாள். அகன்ற இடுப்பு, மெலிந்த இடை என கொடி போன்றவள். அவளை நெருடா பலாத்காரம் செய்தார். அவள் கண்களை மூடாமல் பலாத்காரம் முடியும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தாளாம். இந்த விவகாரத்தை முழுவதுமாக நெருடாவே பதிவுசெய்திருந்தார். ஆனால் அன்று நாங்கள் இருவரும் ஒரு பொதுவான சொந்தக்காரரை கண்டுபிடித்ததுபோல பெரு மகிழ்ச்சியடைந்தோம்.

லூயி ஒருநாள் என்னை தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். சாதாரணமாக யார் வீட்டுக்கு விருந்துக்கு போவதென்றாலும் எனக்கு பயம் உண்டு. ஆனால் இவன் வீட்டுக்கு போகத் தயங்கியதற்கு பல காரணங்கள் இருந்தன. இரண்டு நாள் பழசான ரொட்டியை மலிவு விலையில் விற்பார்கள், அதைத்தான் வாங்குவான். காலாவதியாக ஒருவாரம் இருக்கும் டின் உணவுகளும் அரை விலையில் கிடைக்கும். அவற்றையும் விட்டுவைக்க மாட்டான். அவன் சாப்பிடும்போது வாயை மூடுவதில்லை. தொண்டையில் உணவு இறங்கும்வரைக்கும் வாயில் பார்க்கலாம். உணவு வாயிலேயே காலாவதியாகிவிடுமோ என்று பயந்ததுபோல வேக வேகமாகச் சாப்பிடுவான். இவன் விருந்துக்கு அழைத்தபோது முன்னெச்சரிக்கையாக என்ன உணவு என்று கேட்டு வைத்தேன். அப்பொழுதுதான் அவன் Paella என்ற உணவின் பெயரைச் சொன்னான். 

ராணி இஸபெல்லா என்ற பெயரை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். 500 வருடங்களுக்கு முன்னர் இவர்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு மூன்று கப்பல்களை கொடுத்து உதவியவர். ஒருநாள் ராணிக்கு நேரமில்லாத நேரத்தில் பசியெடுத்தது. ராணியால் பசியை தாங்க முடியவில்லை. நேராக அரண்மனை சமையல்கூடத்துக்கு தன் சொந்தக்கால்களில் நடந்து சென்றார். அங்கே தலைமை சமையல்காரரும் உதவியாளர்களும் மும்முரமாக இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள்.  ராணியை நேரில் கண்டதும் நடுநடுங்கி ஸ்தம்பித்துப்போய் அப்படியே நின்றனர்.  கைகளும் ஓடவில்லை கால்களும் ஓடவில்லை என்பது இதுதான். மகாராணி 'எனக்கு பசிக்கிறது, இப்பொழுதே ஏதாவது வேண்டும்' என்றார்.

தலைமை சமையல்காரர் அங்கே ஏற்கனவே வெட்டி வைத்திருந்த காய்கறிகள், இறைச்சி, மீன் என்று சகலதையும் ஒரு பாத்திரத்தில் இட்டு வேண்டிய சரக்குகளும் சேர்த்து வேகவைத்து இறக்கி அரசியின் சின்னம் பொறித்த தங்க பிளேட்டில் பரிமாறிப் பணிவுடன் கொடுத்தார். ராணி எல்லாவிதமான இறைச்சியும் உண்பார் ஆனால் முயல் இறைச்சியை மட்டும் தொடமாட்டார். அன்றைய உணவில் முயல் இறைச்சியும் சேர்க்கப்பட்டிருந்தது. வேக வைத்ததில் ஒன்றோடு ஒன்று கலந்து தனித்தனியாக எதுவென்று கண்டுபிடிக்க முடியாமல் அவியலாகி ஒரு புதிய சுவையை கொடுத்தது. மகாராணி சுவைத்து சாப்பிட்டார். மிகவும் பிடித்துக் கொண்டது. அடுத்த நாளும் அதுவே வேண்டும் என்றார். அதற்கு அடுத்த நாளும். ராணியின் அதிவிருப்பமான உணவாக அது மாறிவிட்டது. அதற்குப் பெயரே இல்லை. தலைமை சமையல்காரர் Paella என்று நாமம் சூட்டினார். ஸ்பானிய மொழியில் அதன் பொருள் For her, அதாவது மகாராணியாருக்கு. ராணிக்கு பிடித்தமான அந்த உணவு ஸ்பெயின் தேசத்தில் பிரபலமாகி பின்னர் மற்றைய நாடுகளுக்கும் பரவியது.

லூயியின் சமையலை ருசிபார்க்க முன்னர் பலதடவை காலாவதியான உணவு ஒன்றும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என் கொலம்பிய நண்பர் அன்று படைத்த விருந்து நன்றாகவே இருந்தது. மகாரணிக்கு கிடைத்த சுவை எனக்கு கிடைத்ததோ தெரியாது ஆனால் என் அம்மாவின் சமையலை சாப்பிட்டது நினைவு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அம்மா சமைத்ததும் அதுவேதான். ஒருமுறைமட்டுமே அம்மா அப்படி சமைத்தார். இரண்டாவது முறை அதே நோய் வந்து படுத்தபோது   படுக்கையால் எழும்பி குழையல் சமைக்கக்கூட பெலன் இல்லாமல் இறந்துபோனார். அம்மா கண்டுபிடித்த  அந்த உணவு ஒரு ஸ்பெயின் நாட்டு மகாராணியின் பிடித்தமான உணவு என்பதும், அதன் பெயர் 'பாஎல்ல' என்பதும் அம்மாவுக்கு தெரிந்திருந்தால் அவர் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்.

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta