ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி

 

இம்முறையும் பொஸ்டன் போனபோது வழக்கமான புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பொஸ்டனில்தான் பிரபலமான Barnes and Noble புத்தகக் கடை உள்ளது. ரொறொன்ரோவில் பார்க்கமுடியாத புத்தகங்களையெல்லாம் அங்கே காணலாம். பின்னட்டைகளைப் படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை வாசித்தும், பத்திரிகை மதிப்பீடுகளைப் படித்தும் நண்பர்களின் பரிந்துரைகளை கணக்கிலெடுத்தும் முடிவு செய்யப்பட்டது.

வீட்டுக்கு வந்து புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். முதல் மூன்று புத்தகங்களும் முப்பது பக்கங்களை தாண்டவில்லை. முப்பது பக்கங்கள் என்பது கூட்டுத் தொகை. எவ்வளவு முயன்றும் உள்ளே நுழைய முடியவில்லை. முன்னர் என்றால் காசு கொடுத்து வாங்கிவிட்டோமே என்று கல்வயலை உழுவதுபோல இடறி விழுந்து எழுந்து விழுந்து ஒருவாறு முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன். இப்பொழுதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. நேரம் முக்கியமானது. புத்தகம் என்பது அறிவைக் கூட்டவேண்டும் அல்லது வாசிப்பு இன்பத்தைக் கூட்டவேண்டும் அல்லது சொல்வங்கியைக் கூட்டவேண்டும். விருப்பமில்லாத, ஈர்ப்பில்லாத ஒரு புத்தகத்தை எதற்காக இந்தப் பாடுபட்டு படித்து முடிக்கவேண்டும். என் மனைவி கேட்பதுபோல ஏதாவது பரீட்சை எழுதப் போகிறேனா? எனவே நிறுத்திவிட்டு இன்னொரு புத்தகத்தை தொடங்க வேண்டியதுதான்.

நாலாவது புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அது என்னைக் கைவிடவில்லை. நூலை நாவல் என்று சொன்னாலும் அது 13 தனித்தனி சிறுகதைகளைக் கொண்டது. அந்தப் பதின்மூன்று சிறுகதைகளும் ஒன்றையொன்று தொட்டும், பொருந்தியும் நிரப்பியும் ஒரு நாவல் வடிவத்தை கொடுத்தன. இதற்கு முன்னரும் ஆங்கிலத்தில் இப்படிச் சின்னச் சின்ன முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்த நூல் இரண்டு இலக்குகளையும் எட்டியதுடன் முன்பு ஒருவரும் எட்டாத உயரத்தையும் அடைந்திருந்தது.

நான் நாவல் முடியும்வரை புத்தகத்தை கீழே வைக்கவில்லை. ஆங்கில புனைவு உலகத்தில் நிறைய பேசப்படும் ’கட்டுமானம் கட்டுமானம் கட்டுமானம்’ என்ன என்பதைக் கண்டேன். விறகு காலையில் விறகு நிறுத்து விற்பார்கள். மரக்கறிக் கடையில் மரக்கறி நிறுத்து விற்பார்கள். தங்கம் விற்கும் கடையில் தங்கம் நிறுத்து விற்பார்கள். ஆனால் தங்கம் விற்கும் தராசு மிகவும் நுண்ணியதாக இருக்கும். அப்படியான ஒரு தராசில் நாவலின் ஒவ்வொரு வசனமும் நிறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் பூரணமான வடிவத்துடன் தனியாக நின்றது. அவை ஒன்றாகச் சேர்ந்தபோது இன்னொரு வடிவத்தை கொடுத்தன. கண்ணுக்கு தெரியாத மெல்லிய இழை அங்கே ஓடியது. ஒவ்வொரு சிறுகதையும் முடிவுக்கு வரும்போது கயிற்றுப்பாலத்தில் ஆற்றைக் கடப்பதுபோல மனம் முடிவெடுக்கமுடியாமல் தள்ளாடும். கண்களை மூடிக்கொண்டு கதையின் முடிவை கற்பனையில் பூர்த்திசெய்து பார்ப்பேன். பின்னர் ஆசிரியரின் முடிவை வாசிப்பேன். ஒவ்வொரு தடவையும் ஆசிரியரின் முடிவு என் கற்பனையை தாண்டி இன்னும் ஓர் அடி முன்னால் போயிருக்கும். யாரோ தள்ளிவிட்டதுபோல உணர்வேன்.

ஆங்கிலத்தில் இந்த வகையை Novel in stories (சிறுகதைகளில் நாவல்) என்று சொல்கிறார்கள். Elizabeth Strout எழுதிய Olive Kitteridge என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டு புனைவு இலக்கியப் பிரிவில் புலிட்சர் பரிசு கிடைத்திருக்கிறது. இது அமெரிக்காவில் வருடா வருடம் கொடுக்கும் ஆகச் சிறந்த பரிசு. இங்கிலாந்தின் புக்கர் பரிசுக்கும் கனடாவின் கில்லர் பரிசுக்கும் நிகரானது. இந்தப் பரிசைத்தான் ஜும்பா லாஹிரிக்கும் 2000ம் ஆண்டு புனைவு இலக்கியத்துக்கு கொடுத்திருந்தார்கள்.

என்னுடைய நாவலான ’உண்மைகலந்த நாட்குறிப்புகள்’ உயிர்மை வெளியீடாக வெளிவந்த அதே காலப் பகுதியில்தான் ஒலிவ் கிற்றரிட்ஜ்  நாவலும்  வெளிவந்தது. என்னுடைய நாவல் 46 தனித்தனி சிறுகதைகளைக் கொண்டது. அவருடையது 13 சிறுகதைகளைக் கொண்டது. சமீபத்தில் என்னுடைய புத்தகம் நாவலா சிறுகதை தொகுப்பா என்ற விவாதம் நடந்தது. நாவல் இலக்கியம் என்பதே தமிழுக்கு புதிது. ஆங்கிலேயரிடம் இருந்து நாம் அந்த வடிவத்தை பெற்றுக்கொண்டோம். ஆங்கிலத்தில் ரொபின்ஸன் குரூசோதான் முதல் முழுமையான நாவல் என்று ஆங்கில இலக்கியம் தெரிந்தவர்கள் சொல்வார்கள். அந்த வடிவம் இன்றுவரை எத்தனையோ மாற்றம் பெற்றுவிட்டது. இப்பொழுது Novel in stories வடிவம் வந்து அங்கீகாரமும் பெற்றுவிட்டது. இன்னும் பல புதிய வடிவங்களுக்கும் நாங்கள் தயாராக வேண்டும். என்னுடைய நாவலும் ஒலிவ் கிற்றறிட்ஜ் நாவலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளிவந்திருந்ததால் அந்த நாவலைப் பார்த்துத்தான் என்னுடைய நாவலை எழுதினேன் என்ற குற்றச்சாட்டில் இருந்து நான் தப்பிக்கொண்டேன்.

இந்தக் கட்டுரை எழுதக் காரணம் நேற்று எனக்கு வந்த ஒரு மின்கடிதம். இதற்கு முன்னர் என்னை தொடர்பு கொண்டிராத சித்திரலேகா என்ற வாசகி எழுதியிருந்தார். உங்களைப்பற்றி கிரிதரன் என்ற எழுத்தாளர் எழுதியதை படித்தீர்களா என்று கேட்டு அந்தக் கொழுவியையும் அனுப்பியிருந்தார். வழக்கமாக ஓர் ஆசிரியரை வர்ணிக்கும்போது இவர் கல்கியைப்போல எழுதுகிறார், ஹெமிங்வேயைப்போல எழுதுகிறார் என்றுதான் சொல்வார்கள். கிரிதரன் என்னுடைய எழுத்தை ஒரு போலிஷ் எழுத்தாளருடைய எழுத்துடன் ஒப்பிட்டிருந்தார். அவருடைய பெயர் Ryszard Kapuscinski ஆனால் நான் அவரைப்பற்றி கேள்விப்பட்டது கிடையாது. இதில் எனக்குப் பிடித்தது என்னவென்றால் அந்தப் போலிஷ் எழுத்தாளர் என்னைப்போல எழுதுகிறார் என்று சொல்லியிருந்ததுதான். அவரைப்போல நான் எழுதுகிறேன் என்று சொல்லவில்லை. இதைவிட வேறு என்ன புகழ்ச்சி வேண்டும்? எனக்கு ஏதோ பெரிய விருது கிடைத்ததுபோல இருந்தது.

நான் புத்தகக் கடையில் வரிசையில் நின்றபோது எனக்கு முன்னால் ஒருவர் நின்றிருந்தார். தோட்டத்து சப்பாத்தும் தோட்டத்து கையுறையும் தோட்டத்து தொப்பியும் அணிந்தபடி தோட்டத்திலிருந்து நேராக வந்தவர்போல காணப்பட்டார். அவருடைய கையிலும் ஒலிவ் கீற்றறிட்ஜ் நாவல் இருந்தது. தோட்டக்கலை பற்றிய புத்தகம் என்றால் வியப்படைந்திருக்கமாட்டேன். ’உங்கள் கையிலிருக்கும் புத்தகம் நல்லதுதானா?’ என்று கேட்டுவைத்தேன். அவர் ’நான் ஏற்கனவே படித்துவிட்டேன். என் மகளுடைய பிறந்த நாளுக்கு அவருக்கு பரிசளிக்கப் போகிறேன்’ என்றார். ’அப்படியென்றால் உங்களுக்கு நாவல் பிடித்திருக்கிறது’ என்றேன். அவர் சொன்ன பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ’எல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது. என் மகளுக்கு இந்த அறிவு வேண்டும் என நினைக்கிறேன்’ என்றார்.

அவர் அப்படிச் சொன்னபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தகத்தை படித்து முடிந்த பின்னர்தான் புரிந்தது.  இந்த நாவல் எல்லாவிதமான காதல்களையும் சொன்னது. இளையோரின் காதல், முதியவருக்கும் இளையவருக்குமான காதல்,  கணவருக்கு தெரியாமல் மனைவியின் காதல், மனைவிக்கு தெரியாமல் கணவரின் காதல், கணவருக்கும் மனைவிக்குமான காதல் அத்துடன் முதியோர் இருவருக்கிடையில் ஏற்படும் காதல். முதியோர் காதலை இவ்வளவு நுட்பமாகவும் உருக்கமாகவும் வேறு ஒருவர் வர்ணித்தது நினைவில் இல்லை. முதிர்ந்த, சுருங்கிய, முடிச்சுகள் விழுந்த உடல்களுக்கு கூட காதல் அவசியமாக இருக்கிறது. ஓட்டை விழுந்த இரண்டு சுவிஸ் வெண்ணெய் கட்டிகள் ஒட்டுவதுபோல வாழ்க்கையின் இழப்புகள் ஏற்படுத்திய ஓட்டைகளுடன் அவர்கள் இணைந்துகொண்டார்கள் என்று நாவலாசிரியர் வர்ணிப்பார். பல வருடங்களுக்கு முன்னர் தொலைத்த பழைய நாணயத்தை கண்டெடுத்ததுபோன்ற ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.  
 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta