சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு சட்டப்படி மணவிலக்கு கிடைத்தது. அது அவருக்கு சுலபமாகக் கிடைக்கவில்லை. இரண்டு வருட போராட்டத்தின் பின்னர்தான் கிடைத்தது. இவரும் மனைவியும் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் கூட்டாகக் கொடுத்தது என் ஊகத்தில் 50,000 டொலர் இருக்கலாம். நண்பர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார். அவருக்கு வாழ்த்து அனுப்புவதா அல்லது அனுதாபம் தெரிவிப்பதா என்று எனக்கு தெரியவில்லை. பிரிவு எப்படி மகிழ்ச்சியை கொடுக்கமுடியும்? நான் ஒன்றுமே செய்யவில்லை, அப்படியே விட்டுவிட்டேன்.
இன்னொரு நண்பர் தன்னுடைய 47வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். அவர் மனைவியுடன் பக்கத்தில் நின்றபோது சிரித்ததுபோலத்தான் பட்டது. ஆகவே வாழ்த்து அனுப்புவதென்று முடிவு செய்தேன். வாழ்த்து அட்டைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவை நான் சொல்ல நினைப்பதை ஒருபோதும் சொல்வதில்லை. இதுதான் நான் நண்பருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி.
'என் மனைவி என்னை மா வாங்கி வரும்படி சுப்பர்மார்க்கெட்டுக்கு அனுப்புவார். வழக்கம்போல என்ன மா என்பதைச் சொல்லவில்லை. ஒரு துண்டில் 'மா' என்று ஒற்றை எழுத்து வார்த்தையை எழுதி என்னிடம் தந்திருந்தார். பேப்பரில் நிறைய இடம் இருந்தது. பேனையிலும் மை இருந்திருக்கும். கையும் உளைவெடுத்திராது. மா என்பதை நீட்டி வேறு விவரங்களும் தந்திருக்கலாம், ஆனால் அவர் அப்படிச் செய்யார். திருவள்ளுவருக்கு தான் பெரிய போட்டி என்று மனதிலே நினைப்பு. எத்தனை விதமான மா இருக்கிறது. நான் எதை வாங்குவது, எதை விடுவது?
முட்டை வாங்கப் போனாலும் இதே பிரச்சினைதான். வெள்ளை முட்டை, சிவப்பு முட்டை, ஒமேகா 3 சிவப்பு முட்டை, ஒமேகா 3 வெள்ளை முட்டை, நாட்டுக்கோழி முட்டை, கூட்டுக்கோழி முட்டை இன்னும் எத்தனையோ வகை. பால் வாங்கப் போனாலும் பிரச்சினை ஒழியாது. முழுப் பால், 1% கொழுப்பு அகற்றிய பால், 2% கொழுப்பு அகற்றிய பால், லக்டோஸ் மட்டும் அகற்றிய பால், லக்டோசும் கொழுப்பும் அகற்றிய பால் இப்படி அதிலும் பல வகை.
சுப்பர்மார்க்கட்டில் மா பக்கெட்டுகள் அடுக்கியிருக்கும் தட்டுக்கு முன் நின்று அண்ணாந்து பார்த்தேன். Wheat flour, self rising floor, bleached, unbleached, all purpose floor என எத்தனையோ வகை. ஒரு தட்டு நிறைந்து பக்கத்து தட்டிலும் தொடர்ந்தது. அப்பொழுது பார்த்து கடவுள் அனுப்பியதுபோல எனக்கு பக்கத்தில் ஒரு நடுத்தர வயது அம்மையார். அவருடைய உடை, ஒப்பனை, காலணி, கைப்பை எல்லாம் அவர் அலங்காரத்திலும், தன் தோற்றத்திலும் அக்கறை எடுப்பவர் என்பதை உணர்த்தியது. சுப்பர்மார்க்கெட்டில் எந்த வரிசையில் என்ன ஒழுங்கில் சாமான்களை அடுக்கியிருப்பார்களோ அதே ஒழுங்கில் பட்டியலை தயாரித்து வந்திருந்ததால் அதைப் பார்த்து அதி விரைவாக தள்ளுவண்டிலை நிறைத்தபடியே நகர்ந்தார். ஒரு முடி வெட்டுபவரிடம் எப்படி முடி வெட்டவேண்டும் என்று சொல்வோமோ அப்படி விவரமாக என்னுடைய பிரச்சினையை அவரிடம் சொன்னேன். அவர் all purpose flour ஐ வாங்கச் சொன்னார். ஏனென்றால் அதை எல்லா விதமான தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
ஆகவே, என்னருமை நண்பரே, தம்பதியரே,
உங்களுக்கு என்னுடைய all purpose வாழ்த்துக்களை அனுப்பிவைக்கிறேன். அதாவது உங்களுக்கு என்ன விதமான தேவைகள், ஆசைகள், விருப்பங்கள் உள்ளனவோ அவை எல்லாவற்றிற்கும் பொதுவாக இந்த வாழ்த்துக்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
என் வாழ்த்துக்களுக்கு காலாவதி தேதி இல்லை. ஆகவே இந்த வாழ்த்துக்களை நீங்கள் ஆண்டாண்டு காலமாக உபயோகித்துக்கொள்ளலாம். உங்கள் ஆசைகளும் விருப்பங்களும் ஆண்டுதோறும் மாறும்போது வாழ்த்துக்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம். உங்கள் மனம் முழுக்க உவகை நிறைந்து நீங்கள் இணைந்து வாழும் ஒவ்வொரு நாளும் என்னை நிறைவடையச் செய்யும்.'