ரொறொன்ரோ தமிழ் மாணவ மாணவிகள் தங்கள் பல்கலைக் கழகங்களை வீட்டிலிருந்து தூரமாகத் தெரிவு செய்கிறார்கள். வீட்டுக்கு கிட்ட நல்ல பல்கலைக் கழகம் இருந்தாலும் தூரமாய் இருக்கும் பல்கலைக் கழகங்கள்தான் அவர்களுக்கு பிடிக்கும். அப்போது பெற்றோர் கண்காணிப்பும் கண்டிப்பும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம். ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கி படிப்பதற்கு விரும்புவார்கள். மாதத்தில் ஒருதடவை வந்து பெற்றோரைப் பார்த்து போவார்கள். உண்மையில் ஊத்தை உடுப்பை கழுவிக் கொண்டு போவதற்காகத்தான் அவர்கள் வருவது.
சில சமயங்களில் இரண்டு அறை உள்ள வீட்டை எடுத்து இரண்டு பெண் சிநேகிதிகளோ இரண்டு ஆண் சிநேகிதர்களோ பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பகிர்ந்து கொள்வதில் கூடிய வசதியும் குறைந்த செலவும் உண்டு. சமீப காலங்களில் ஆண் பெண் சிநேகிதர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பகிர்ந்து கொள்வது அதிகமாகி வருகிறது.
ஒரு தாய் தன் மகளைப் பார்க்க 80 மைல்தூரம் பயணம் செய்து போனார். மகள் அவளோடு படிக்கும் மாணவன் ஒருவனுடன் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்தாள். தாயாருக்கு இது பிடிக்கவில்லை. மகளிடம் கேட்டபோது அவள் 'அம்மா இது கனடா, ஊரில்லை. இங்கே ஆணும் பெண்ணும் சமம். என் அறையில் நான் தங்குவேன்; அவன் அறையில் அவன் தங்குவான். சமையல் ஒருநாள் அவன், அடுத்த நாள் நான். படிக்கும்போது ஒருவருக்கொருவர் பாடத்தில் வரும் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வோம். இங்கே எல்லோரும் இப்படித்தான் படிக்கிறார்கள். ஒரு பிரச்சினையும் இல்லை' என்றார். தாயார் யோசித்தபடியே வீட்டுக்கு போய்ச் சேர்ந்தார்.
அடுத்த தடவை மகளைப் பார்க்கப் போனபோது சந்தேகம் கூடியது. சிநேகிதன் வீட்டுக்குள்ளும் மேலங்கியை கழற்றாமல் நடமாடினான். சாப்பிடும்போது பயந்த விலங்கு சாப்பிடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தபடியே சாப்பிட்டான். அவன் வீட்டில் இருக்கும்போது மகளின் நடத்தை ஒரு மாதிரியும், அவன் இல்லாதபோது இன்னொரு மாதிரியும் இருந்தது. அவளுடைய பேச்சு வித்தியாசம், அசைவு வித்தியாசம், சிரிப்புக்கூட வித்தியாசம். தாய் மகளிடம் 'உண்மையை சொல்லு, நீ அவனுடன் படுக்கிறாயா?' என்றார்.
மகள் 'அம்மா, நாங்கள் நல்ல நண்பர்கள். உன்னிடம் நான் ஏன் பொய் சொல்லவேண்டும். நீ எத்தனைதரம் கேட்டாலும் இதுதான் மறுமொழி' என்றாள்.
தாய் திரும்பிய மூன்றாவது நாள் மகளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.
'அம்மா, நீ எப்ப வந்தாலும் ஒரு பிரச்சினை உண்டாகிவிடும். முதல்தரம் வந்தபோது என் புத்தகம் ஒன்றை கைமறதியாக உன்னுடன் எடுத்துப் போய்விட்டாய். அடுத்த தடவை சோத்துப் பானையை இடம் மாற்றி வைத்து நான் தேடவேண்டி வந்தது. இந்த தடவை ஊறுகாய் போத்தலைக் காணவில்லை. மூன்று நாளாய் தேடுகிறேன்.'
தாய் மகளுக்கு எழுதினாள்.
'அன்பான மகளே,
மூன்று நாளாகத் தேடுகிறாயா? ஊறுகாய்ப் போத்தல் உன் தலையணையின் கீழ்தான் இருக்கிறது.
அம்மா'
[இந்தக் கதை என் நண்பர் ஒருவர் கூறியது.]