ஐயம் தீரவில்லை

 

எனக்கு தெரிந்த ஒரு கல்விமான் இருந்தார். தீவிரமான இடதுசாரிக் கொள்கை உடையவர். இவருடைய பையன் ஒரு பெண்ணைக் காதலித்தான். ஒரு வித மறுப்பும் தெரிவிக்காமல் அவர் பஞ்சாங்கத்தில்  நல்லநாள் பார்த்து  அவர்கள் திருமணத்தை நடத்திவைத்தார். அது ஒரு கலப்புத் திருமணம். கல்விமானைப் பற்றி அவர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடியது.

 

அவர் நல்ல பேச்சாளர். அடிக்கடி கூட்டங்களில் கலந்துகொண்டு தோள்மூட்டு ஒலிவாங்கிக்கு நேராக நிற்கிறமாதிரி நின்றுகொண்டு நீண்ட நேரம் பேசுவார். அவருடைய பேச்சுக்கு கூட்டத்தில் நல்ல வரவேற்பு. 'செல்வந்தர்கள் இந்த உலகத்தில் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் அப்படியல்ல, அவர்கள் நிரந்திரமானவர்கள். இந்தப் பூமியில் இருந்து அவர்களை ஒழிக்கவே முடியாது' என்று பேசுவார்.

அவருடைய மகள் வயதுக்கு வந்தாள். உடனே திருமணப் பேச்சு தொடங்கியது. அவர் சொந்தத்திலே தங்கள் சாதிக்குள் ஒரு பையனைப் பார்த்து கட்டி வைத்தார். சிலருக்கு இது பிடிக்கவில்லை. பேச்சுக் கல்யாணத்தின்போதுதான் அவர் தன்னுடைய கொள்கைப் பற்றைத் தீவிரமாகக் காட்டியிருக்கவேண்டும். மகனுடையதில் அவருக்கு வேறு தேர்வு கிடையாது. மகளுக்கு வெளியே கல்யாணம் செய்திருந்தால்தான் அவருடைய நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் உறுதியாகியிருக்கும் என்றார்கள்.

திருமணத்தின்போதுதான் ஒருவருடைய சாதி நிலைப்பாட்டை கண்டுகொள்ளலாம். மற்ற நேரங்களில் தாராளமாக இருப்பவர்கள் திருமணம் என்று வரும்போது இறுகிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். சில நண்பர்கள் சேர்ந்து சினிமாவுக்கு போவார்கள். விருந்துக்கு போவார்கள். ஒன்றாகச் சேர்ந்து குடிப்பார்கள்.  ஆனால் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அழைப்பிதழ் அனுப்பமாட்டார்கள். தன் மகளுடைய திருமணத்துக்கோ, பிறந்த நாள் விழாவுக்கோ அல்லது அவர்கள் கல்யாணநாள் விருந்துக்கோ அழைப்பு வராது.

ஆனபடியால்தான் கல்விமானுடைய கொள்கையிலும் எனக்கு ஐயம் இருந்தது.

கம்பராமாயணத்தில் விபீடணனிடத்தில் ராமன் பேசும் இடம்.
 குகனொடும் ஐவரானோம்
 முன்பின் குன்று சூழ்வான்
 மகனொடும் அறுவரானோம்
 அம்முறை அன்பின்வந்த
 அகமறர் காதல் ஐய
 நின்னொடும் எழுவரானோம்.
படகோட்டும் குகனைச் சந்தித்தபோது அவன் எனக்கு சகோதரனானான். அவனோடு நாங்கள் ஐந்துபேர். சுக்கிரீவனோடு ஆறுபேர். இப்பொழுது உன்னோடு சேர்த்து நாங்கள் ஏழுபேர் ஆகிவிட்டோம் என்கிறான் ராமன்.
இது ஒரு பேச்சுக்காகச் சொன்னதா அல்லது ராமன் உண்மையில் அவர்களைச் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டிருந்தானா என்ற ஐயம் எனக்கு இருந்தது.

ராமன் அயோத்தி திரும்பிவிட்டான். பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் திருப்தியாக நடக்கின்றன. அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. விபீடணன் வந்துவிட்டான். சுக்கிரீவன் வந்துவிட்டான். பட்டாபிஷேகமும் நடக்கிறது.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் குடை பிடிக்க, சகோதரர்கள் கவரி வீச, வசிட்டன் ராமனுக்கு முடி சூட்டுகிறான். சகோதர்களில் விபீடணன் வந்திருக்கிறான். சுக்கிரீவன் வந்திருக்கிறான். படகோட்டி குகன் வந்தானா? அது தெரியவில்லை. இந்தச் சந்தேகம் எனக்கு பல வருடங்களாக இருந்தது.

சமீபத்தில் ரொறொன்ரோவில் ஒரு தமிழ் பேராசிரியரைச் சந்தித்தேன். அவரிடம் என் சந்தேகத்தை கேட்டேன். அவர் உடனே பதில் சொல்லவில்லை, கம்பராமாயணத்தை படித்துப்பார்த்து சொல்வதாகக் கூறினார். அதேநாள் தொலைபேசியில் அவருடைய பதில் வந்தது. பாடல் 10341. கம்பன் ஒரு முழுப்பாட்டில் பட்டாபிஷேகத்துக்கு வந்திருந்த குகன் ராமனிடம் விடைபெறுவதை சொல்கிறான்.

கம்பனில் எனக்கிருந்த ஐயம் தீர்ந்தது. ராமனில் எனக்கிருந்த ஐயம் தீர்ந்தது. கல்விமானில் இருந்த ஐயம் இன்னும் தீரவில்லை.

 

About the author

1 comment

  • அருமையான சந்தேகம். அதனால் கிடைத்த காவியத்தை உயர்த்தும் விடை.
    வே. ராஜகோபால்

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta