அந்தப் பெண் தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டபோது நான் யோசித்திருக்கவேண்டும். யோசிக்கவில்லை. அடுத்தநாள் காலை வந்து தன்னை சந்திக்க முடியுமா என்று கேட்டார். சரி என்றேன். என்ன நேரம் என்று கேட்க எட்டு மணி என்றார். விலாசம் தரவில்லை. சிறிது நேரத்தில் தானே அழைத்து அதை தருவதாகச் சொன்னார். சம்மதித்தேன்.
இரவு படுக்கைக்கு செல்லும் நேரமாகிவிட்டது, தொலைபேசி வரவில்லை. நானே அழைத்துக் கேட்டேன். அவர் சொன்ன முகவரியை குறித்து வைத்துக்கொண்டேன். காலை எழும்பி ஒரு மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டேன். பள்ளிக்கூட, அலுவலக நேரம் என்பதால் சாலை நெருக்கியடிக்கும். ஊர்ந்து ஊர்ந்து பாதி தூரம் வந்திருப்பேன், கார் டெலிபோன் அடித்தது. மனைவிதான், ஏனென்றால் வேறு ஒருவருக்கும் அந்த எண் தெரியாது. 'உங்களைக் கூப்பிட்ட பெண் வேறு விலாசத்துக்கு உங்களை வரச் சொன்னார்' என்றார். ஓர் இரவுக்குள் வேறு வீடு மாறிவிட்டாரா? நான் பெண்ணை தொலைபேசியில் அழைத்தேன். அவர் 'நேற்று அவசரத்தில் உங்களிடம் தவறான முகவரியை தந்துவிட்டேன். இதுதான் சரியான முகவரி' என்று வேறொன்றைச் சொன்னார். நான் குறித்துக்கொண்டேன். அது இன்னும் பல மைல் தூரத்தில் வேறு திக்கில் இருந்தது.
அவர் சொன்ன இடத்துக்கு வந்தால் அவர் குறிப்பிட்ட கட்டிடத்தை காணவில்லை. இடது பக்கம் என்று சொல்லியிருந்தார். இடது பக்கம் காடாக வர முயற்சி செய்துகொண்டிருந்தது. மறுபடியும் அழைத்தேன். அவர் வலது பக்கம் என்றார். மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை. கட்டிடத்தை ஒருவழியாகக் கண்டுபிடித்து சடாரென்று திரும்பி ஒரு பாதசாரியிடம் பேச்சு வாங்கி கார் தரிக்கும் இடத்துக்கு வந்த பிறகு அவரை அழைத்தேன். அவர் எண் 913க்கு வரச்சொன்னார். தகவலை அவர் தவணை முறையில்தான் தருவார்.
அந்தப் பழைய கட்டிடத் தொகுதி ரொறொன்ரோ நகரம் உண்டாகியபோது கட்டியதாக இருக்கவேண்டும். வீட்டு வாசல் கூடத்தின் உள்கதவு பூட்டியிருந்தது. அவர் தன் மாடியிலிருந்தபடி ஒரு பட்டனை அமத்தினால்தான் நான் கதவை திறந்து உள்ளே போகலாம். கதவை திறப்பதற்கான ரகஸ்ய எண்ணை நான் அழுத்தினேன். அம்மணி கதவை திறப்பதாகக் காணவில்லை. ஐந்து நிமிடம் கழிந்தது. ஓர் இளம் பெண் இளம் புயல் நுழைவதுபோல நுழைந்து கடவு எண்ணை பதிந்து, கதவை ஒருகையால் இழுத்து திறந்து உள்ளே போனார். கதவு மூடமுன்னர் வேகமாக நானும் பின்னே சென்றேன். அவர் மின்தூக்கிக்குள் நுழைய நானும் நுழைந்தேன். அவர் நாலை அமத்தினார். நான் ஒன்பதை அமத்தினேன். மின்தூக்கி ஒருநிமிடம் நின்று இளைப்பாறி மெள்ள அசைந்து உயிர்பெற்று பெரும் சத்தம் உண்டாக்கி உயரத் தொடங்கியது. அந்தப் பெண் அதே தொகுதியில் வசிப்பவராக இருக்கவேண்டும். என்னைப்போல பயப்படாமல் தைரியமாக நின்றார். அவர் கண்களின் ஓரத்தில் உப்புக்கல் பதித்திருப்பதுபோல மினுங்கியது. நேற்றைய ஒப்பனையின் மிச்சம் அது என்று ஊகித்துக்கொண்டேன்.
நாலாவது மாடி வந்ததும் கதவு திறக்க இளம் பெண் என்னை விட்டுவிட்டு போய்விட்டார். நான் தனிய நின்றேன். மின்தூக்கி ஒரு இருபதுபேர் புதிதாக ஏறிவிட்டதுபோல முக்கி முனகி கடபுடா என்ற சத்தம் எழுப்பி மேலே சென்றது. ஏழாவது மாடியில் நின்று கதவை திறந்தது. நான் மறுபடியும் ஒன்பதை அமத்தினேன். கதவு மூடியது மறுபடியும் திறந்தது, மின்தூக்கி நகராமல் ஏழாவது மாடியிலேயே நின்றது. சரி ஏழாவது மாடியில் இறங்கி படிக்கட்டுகள் வழியாக ஒன்பதாவது மாடிக்கு ஏறவேண்டுமாக்கும் என்று நினைத்து படிக்கட்டுகளை தேடிப் பார்த்தேன். இல்லை. மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கு கீழே வந்து சேர்ந்தேன். அந்தப் பெரிய கட்டிடத் தொகுதியில் ஒரு மனித உயிரைக் காணமுடியவில்லை.
நான் சந்திக்கவந்த பெண்ணை மறுபடியும் அழைத்தேன். அவர் குரலில் எரிச்சல் தெரிந்தது. ஒன்பதாவது மாடிக்கு எப்படி வரவேண்டும் என்று ஒரு குழந்தைப்பிள்ளைபோல கேட்டேன். அவர் மின்தூக்கியில் ஏழாவது பட்டனை அமத்தவேண்டும் என்றார். ஒன்பதாவது மாடிக்குவர ஏழாவது பட்டனையா அமத்தவேண்டும். இதை எனக்கு முன்பே சொல்லியிருக்கலாமே. நான் என்ன மூக்குச் சாத்திரமா பார்ப்பது என்று பற்களைக் கடித்து மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். ஒருவழியாக ஒன்பதாவது மாடியை அடைந்து 913வது கதவை கண்டுபிடித்து அவரைச் சந்தித்தேன். இரண்டு தேயிலை பைகள் தொங்கும் தேநீர் கோப்பையை கையிலே வைத்து அதை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கேட்ட உதவி ஒரு சின்ன விசயம். தொலைபேசியிலேயே அதை முடித்திருக்கலாம். என்னை வீணாக அலையவிட்டிருக்கத் தேவையில்லை.
நான் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் செல்பேசியை திறந்து தகவல் ஒன்றைப் பார்த்தார். முழங்கைக்குள் ஒரு கொட்டாவி விட்டார். குதிச் சப்பாத்தை மாட்டி கைப்பையையும் எடுத்து தயாராக பக்கத்தில் வைத்துக்கொண்டார். தான் அவசரமாக வெளியே போகவேண்டும் என்பதை எனக்கு சாடையாக உணர்த்துகிறாராம். நான் 'சரி, புறப்படுகிறேன். நான் முதலாவது மாடிக்கு போக வேண்டும். அங்கேதான் காரை நிறுத்தியிருக்கிறேன். நான் மின்தூக்கியில் எத்தனையாவது பட்டனை அமத்தவேண்டும்?' என்றேன்.
அந்தப் பெண் இதைவிட மோட்டுத்தனமான ஒரு கேள்வியை ஒருவன் கேட்டிருக்கமுடியாது என்பதுபோல என்னைப் பார்த்துவிட்டு 'இரண்டுதான்' என்றார்.