நலம், நலமறிய ஆவல்

 பொஸ்டனில் நான் விடுமுறைக்கு போய் நின்றபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் காலை பத்துமணிக்கு  மனைவியையும் என்னையும் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் பலவருடங்களுக்கு முன்னரே ஓய்வெடுத்த அமெரிக்க தம்பதிகள். எங்களை அழைத்தது தேநீர் குடிப்பதற்கு மாத்திரமல்ல, இன்னொரு காரணமும் இருந்தது. அவர்கள் புதுக்கூரை போட்டால் எங்களை அழைத்துக் காட்டுவார்கள். புதுக் கார்பாதை உருவாக்கினால் எங்களை அழைத்துக் காட்டுவார்கள். வீட்டுக்கு புது வர்ணம் பூசியிருந்தால் அதையும் நாங்கள் பார்க்கவேண்டும். இவையெல்லாவற்றையும்விட முக்கியமான காரணம் இருந்தது. கணவன் மனைவி இருவரும் புது முழங்கால் பூட்டியிருந்தார்கள். அதை எங்களுக்கு காட்டுவதுதான் அவர்களுடைய நோக்கம்.

 

ஒரு 56 அங்குலம் தட்டை திரை பிளாஸ்மா டிவியை காட்டுவதுபோல, 116 கட்டளைகளை நிறைவேற்றக் காத்திருக்கும் புதுரக செல்பேசியை காட்டுவதுபோல, புதிதாக வந்த ஐபாட்டை காட்டுவதுபோல கணவனும் மனைவியும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் புது முழங்கால்களைக் காட்டினார்கள். கணவனுடைய கால்வெட்டுக் காயம் ஐந்து அங்குல நீளம் இருக்கும்; மனைவியினுடையது இன்னும் கொஞ்சம் சின்னது, நாலரை அங்குலம்  என்பதில் அவருக்கு பெருமை. தையலை பிரித்து பளபளவென்று மினுங்கும் இரும்பு முழங்கால் சில்லை காட்டமுடியுமென்றால் இருவரும் காட்டுவார்கள் போலவே பட்டது.

'பாருங்கள்' என்று கணவர் காலை நீட்டி மடக்கி நடந்து காட்டினார். மனைவி வழிதவறிவந்த ஒரு மான்குட்டிபோல படிகளில் தாவி ஏறி இறங்கினார். ஒரு குழந்தைப் பிள்ளைக்கு புது விளையாட்டுச் சாமான் கிடைத்தது போல இருந்தது. அவர்களுக்கு இனி வாழ்க்கை அலுக்காது. சலிப்பு வரும்போதெல்லாம் தங்கள் முழங்கால்களுடன் விளையாடியே பொழுதைக் கழித்து விடுவார்கள். இருவரும் நாளுக்கு ஒரு மணித்தியாலம் நடை போகிறார்கள்; யோகா பயிற்சி செய்கிறார்கள். மருத்துவர் பரிந்துரைத்த தேக அப்பியாசங்களை செய்யவும் தவறுவதில்லை.

கணவர் 'அறுபது வயதுமட்டும் உடம்பு எங்களை பராமரிக்கிறது. அதற்கு பிறகு நாங்கள் உடம்பை பராமரிக்கவேண்டும். இது நாங்கள் திருப்பிக் கொடுக்கவேண்டிய நேரம்' என்றார். மேசையில் உடல்நலம் பற்றிய ஒரு மாத இதழ் இருந்தது. யோகா பற்றிய ஒரு பத்திரிகையும் பாதி படித்தபடி கிடந்தது.  இருவரும் உடல்நல பத்திரிகைகளின் அவசியத்தை சொன்னார்கள். அவை உடம்பை சிநேகமாகப் பார்க்கும் ஒரு புத்தியை கொடுக்கின்றன. யோகா இந்தியாவில் உற்பத்தியானது என்ற சின்ன விசயம் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுடைய ஆறு வயது பேரன்கூட பள்ளிக்கூடத்தில் யோகா படிக்கிறான் என்றார்கள். எந்த நாடு கண்டுபிடித்தால் என்ன? அது அழியாமல் இன்றும் உலகத்து மக்களுக்கு பயன் தருகிறது. அதுதான் முக்கியம். ஆனால் ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழிலும் உடல் ஆரோக்கியத்துக்கென தனியான  பத்திரிகை இருந்தால் நல்லாயிருக்குமே என்று எண்ணினேன்.

அது எப்படியோ யாருக்கோ தெரிந்துவிட்டது. சமீபத்தில் ரொறொன்ரோவில் 'நலம்' (www.nalamonline.com) என்ற மாத இதழைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். மூன்று இதழ்கள் ஏற்கனவே வந்துவிட்டன; நான் பார்த்தது நாலாவது இதழ். முழுக்க முழுக்க மக்கள் உடல்நலத்தை கருத்தில்கொண்டு பயனுள்ள கட்டுரைகளை தாங்கிவரும் இந்த இதழ் இலவசமாக கிடைக்கிறது. நல்ல அட்டை, சுற்றுச்சூழல் நட்பான தாள், கண்ணுக்கு இதமான அச்சு, நேர்த்தியான வடிவமைப்பு. பெரும் சத்தத்துடன் வெளிவரும் பத்திரிகைகள் சத்தமில்லாமல் நின்றுவிடும்போது, இது தொடர்ந்து ஒழுங்காக வெளிவருவது ஓர் அதிசயம்தான்.

ஜெயமோகனுடைய ஒரு கட்டுரையை முதலில் படித்தேன். தன் சொந்த அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். குதிக்கால் வலிக்கு மருத்துவரிடம் போக அவர் குருத்து எலும்பு வளர்ச்சி என்று பயமுறுத்தி அறுவைச் சிகிச்சை செய்து அகற்றலாம் என்கிறார். அதை நீக்கினாலும் வலி மீண்டும் வரலாம், உத்திரவாதம் இல்லை. கொட்டம் சுக்காதி தைலத்தை வாங்கி கிரமமாக உருவ படிப்படியாக வலி குறைந்து மறைந்தே போய்விடுகிறது.  இதே வைத்தியத்தை நண்பர்களுக்கும் பரிந்துரை செய்ய அவர்களுக்கும் நோய் குணமாகிவிடுகிறது. மேல்நாட்டு வைத்திய முறை தீர்க்க முடியாத ஒன்றை நாட்டு வைத்தியம் சுலபமாக, செலவில்லாமல் தீர்த்துவிடுகிறது என்கிறார்.

மருத்துவ கலாநிதி இ.லம்போதரன் சமூக ஊடாடல் அச்ச நோய்பற்றி அருமையான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சிறிய கட்டுரைதான் ஆனாலும் உபயோகமான பல தகவல்கள் உள்ளன. ஒரு காலத்தில் மகாத்மா காந்திக்கும் இந்த நோய் இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன என்றும் பயிற்சியால் அவர் அதை வெற்றிகொண்டார் என்றும் எழுதுகிறார். முதியோர் பராமரிப்பு பற்றி சிவதாசன் எழுதிய கட்டுரையும் முக்கியமானது. வாழவேண்டிய தேவையும், பற்றும் இருக்கும்போது வாழ்வதற்கான வைராக்கியமும் வயதானவர்களுக்கு அதிகரிக்கிறது என்கிறார். சலரோகம் பற்றிய தொடர் கட்டுரை, மற்றும் கைத்தொலைபேசிகள் விளைவிக்கும் உடல் நலக்கேடு பற்றி மாமூலன் எழுதியது எல்லாமே படிக்கவேண்டியவைகள். இந்தப் பத்திரிகையில் எனக்குப் பிடித்தது ஆங்கிலக் கலப்பில்லாமல் கருத்துக்களை எளிமையாக நல்ல தமிழில் சொல்வது.
mental retardation – உளவிருத்தி மந்தம்
social anxiety disorder – சமூக ஊடாடல் அச்சநோய்
alzheimer – மூளைத்திறனிழப்பு
expired – நாட்பட்ட
prostate – விந்தகம்
பொருள் சட்டென்று புரிகிற மாதிரி தமிழ் மொழிபெயர்ப்புகள் இருந்ததுதான் சிறப்பு.

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையை முடிக்கும்போது இப்படிச் சொல்கிறார்.
'மண்ணில், விண்ணில், மனித உடம்பில் உள்ள பல நூறு ரகசியங்களை அறிந்த மூதாதையரின் ஒரு யுகமே முழுமையாக அழிந்து வருகிறது என்று எண்ணிக்கொண்டேன். எஞ்சுவதையாவது அமெரிக்கா திருடிக்கொண்டால் அவை அழியாமல் இருக்கும். நாம் பத்து மடங்கு விலை கொடுத்தாவது நல்ல காலம் பிறக்கும்போது வாங்கிக்கொள்ளலாம்.' யோகப்பயிற்சி இப்போது அமெரிக்காவின் சொத்தாகிவிட்டதுபோல எமது மூதாதையரின் நாட்டு சிகிச்சை முறைகளும் அமெரிக்கா வசம் கிடைத்தால் நல்லதுதான். சீனர்கள் கண்டுபிடித்த அக்குபங்சர் முறை உலக முழுவதிலும் பரவவில்லையா, அதுபோலத்தான். உடல் நலனை பேணுவதற்கான அறிவும், மூதாதையருடைய மருந்துகளின் பயன்களும் மக்களுக்கு கிடைத்தால் அதுவே பெரிய வெற்றி. இந்த இதழ் அதைத்தான் செய்கிறது.

'நலம்'  இதழை வெளியிடும் த.சிவதாசனும், ஆசிரியராக கடமையாற்றும் போல் சந்தியாபிள்ளையும், வடிவமைப்பு பொறுப்பாளர் சுகந்தன் தவராஜசிங்கமும் பாராட்டுக்குரியவர்கள். இதழுக்கு கட்டுரைகள் தந்துதவும் மருத்துவர்களும் பெரும் சேவை செய்கிறார்கள். அமெரிக்க தம்பதிகள் கூறியதுபோல இந்த இதழ் உடம்பை விளையாட்டாகப் பார்க்க வைக்கிறது. மிக முக்கியமாக எனக்குப் பிடித்தது மக்களின் ஆரோக்கியத்துக்காக உழைக்கும்  இதழ் தமிழையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அது சுலபமான வேலையில்லை. 'நலம்' நலமுடன் வாழ்க.

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta