5000 குழந்தைகள்

5

 சீனாவுக்கு போய்விட்டு திரும்பிய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். இரவிரவாக அவர் சீனாவை பற்றியே பேசிக்கொண்டிருந்தார், அத்தனை விசயங்கள் அவருக்கு சொல்ல இருந்தன. உலகிலேயே அதிவேகமாக ஓடும் காந்த ரயிலைப்பற்றி சொன்னார். அதற்கு சில்லும் இல்லை, எஞ்சினும் இல்லை ஆனால் நிலத்திலிருந்து ஒரு சென்டிமீட்டர் உயரம் எழும்பி 430 கி.மீட்டர் வேகத்தில் பறக்கிறது என்றார். இனிமேல் வரும் மூன்று மாதங்களும் நண்பர் யாரைக் கண்டாலும் இது பற்றியே பேசுவார். எனினும் அவர் சொன்ன ஒரு விசயம் ஆச்சரியத்தை தந்தது உண்மைதான்.

 

என் நண்பரை ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துப்போனார்கள். இது என்ன சுற்றுலாத்தலமா, அங்கே எதற்கு அழைத்துப் போனார்கள் என்ற கேள்வி எழலாம். உலகிலேயே அதுதான் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை. ஒரு நாளைக்கு அங்கே 5000 குழந்தைகள் பிறக்கின்றன. நண்பர் அங்கே சென்ற நேரம் குழந்தைகளை குளிக்கவைக்கும் காட்சி நடந்துகொண்டிருந்தது.

பெரிய பெரிய உணவகங்களில் உருளைக்கிழங்கு சீவல்களை பொரிப்பது பார்த்திருக்கிறோம். ஒரு பெரிய வலைப்பாத்திரத்தில் சீவல்களை நிரப்பி கொதிக்கும் எண்ணெயில் அமுக்கிவைப்பார்கள். அது பொரிந்ததும் அப்படியே தூக்கி ஒரு தட்டிலே கொட்டி பரவிவிடுவார்கள். அப்படித்தான் இங்கேயும். பிரம்மாண்டமான தொட்டிகளில் மெதுவான சூட்டில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நீளமான வலை தொட்டில்களில் ஒரு நூறு குழந்தைகளை குறுக்குவாக்கில் அடுக்கினார்கள். ஒரு ராட்டினம் இந்த வலை தொட்டிலை தூக்கி தண்ணீரில் அமுக்கி சிறிது நேரம் கழித்து தூக்கிவிட்டது. அடுத்து ராட்டினம் இன்னொரு நூறு குழந்தைகள் அடுக்கிய வலைத் தொட்டிலை தண்ணீரில் அமுக்கி தூக்கிவிட்டது. அடுத்து இன்னொன்று. இப்படி ராட்டினம் மாறி மாறி தொட்டில்களை அமுக்கி 5000 குழந்தைகளையும் குளிப்பாட்டியது. இது வேறு எந்த ஒரு நாட்டிலும் பார்க்கமுடியாத காட்சி.

குழந்தைகளை எப்படி வலை தொட்டில்களிலிருந்து வெளியே எடுக்கிறார்கள் என்பதையோ, எப்படி துடைக்கிறார்கள் என்பதையோ, எப்படி உடை அணிவிக்கிறார்கள் என்பதையோ, எப்படி பாலூட்டுகிறார்கள் என்பதையோ நண்பர் பார்க்கவில்லை. நான் அடுத்த முறை சீனாவுக்கு போகும்போது 5000 குழந்தைகளுக்கும் எப்படி தலை சீவி, பொட்டு வைக்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். அதற்கு அரைநாளாவது பிடிக்குமே.

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta