கூகிள் பற்றி தெரியாதவர்கள் குறைவு. மாணவர்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வரை இன்று கூகிளைப் பாவிக்கிறார்கள். ஒருநாளில் ஐம்பது அறுபது தடவை கூகிளை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஒரு வார்த்தையின் முதல் எழுத்தை அடித்ததும் கூகிள் பத்து வார்த்தைகளை உங்களுக்கு தெரிவு செய்கிறது. வார்த்தையின் அடுத்த எழுத்தை எழுதியதும் கூகிள் இன்னொரு பத்து வார்த்தைகளை காட்டுகிறது. இப்படியே கூகிள் நீங்கள் என்ன வார்த்தையை தேடுகிறீர்கள் என்று உங்களுக்கு முன்னரே சிந்தித்து உதவுகிறது. உங்கள் வேலையை இலகுவாக்குகிறது.
முன்னெப்பொழுதும் இல்லாத மாதிரி பூமியை ஒரு பந்துபோல பார்க்கும் வசதியையும் கூகிள் செய்து கொடுத்திருக்கிறது. கனடாவில் இருந்தபடி அவுஸ்திரேலியாவில் இருக்கும் உங்கள் நண்பரின் வீட்டை அவர் அறியாமல் உங்களால் பார்க்க முடியும். அவர் வீட்டு எண், அவர் வீட்டு மரம், அவருடைய நாய் எல்லாவற்றையும் பார்க்கலாம். நான் ஒரு முறை அமெரிக்காவில் இருந்தபோது கனடாவில் இருக்கும் என் வீட்டைப் பார்த்தேன். என் வீட்டு கார்ப்பாதையில் யாரோவுடைய கார் தரித்து நின்றது. அதனுடைய நம்பரை என்னால் குறித்து வைக்க முடிந்தது. இதுவெல்லாம் கூகிள் நிறுவனம் இலவசமாக செய்து தந்திருக்கும் வசதி.
2010 பூமி தினத்தின்போது கூகிள் நிறுவனம், சூழலியல் விஞ்ஞானி சஞ்சயனை ஓர் உரை நிகழ்த்த அழைத்திருந்தது. அந்த உரையின் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தன்சேனியாவில் லேரொலி என்ற இடத்தில் 3.6 மில்லியன் வருடங்கள் பழமையான மனித காலடிச் சுவடுகள் பதிவாகி இன்றுவரை பார்க்கக் கிடைத்திருக்கின்றன. இத்தனை மில்லியன் வருடங்கள் எரிமலைச் சாம்பலால் பழுதடையாமல் பாதுகாக்கப்பட்ட சுவடுகள். மனிதன் நிமிர்ந்து நடந்ததற்கான தடயம். பக்கத்தில் ஒரு பெண்ணின் காலடியும் உள்ளது. அது சரிந்து பள்ளம் கூடியிருந்ததால் அவள் ஒரு பிள்ளையை காவியிருக்கிறாள் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள். ஆக ஒரு குடும்பம் நடந்துபோன அடையாளம். குனிந்து பார்த்து நடந்த நிலைமாறி மனிதன் நிமிர்ந்து நடந்ததற்கான முதல் ஆதாரம்.
திறந்த வெளியில், ஒரு நல்ல நாளில் நிமிர்ந்த மனிதன் ஐந்து, ஆறு மைல்கள் தூரம் பார்க்கலாம். இன்று, எங்கள் தலைமுறையில் சாட்டிலைட் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பூமி முழுவதையும் எங்களால் பார்க்க முடியும். இந்தப் பெரிய அறிவு எங்கள் முந்திய தலைமுறையினருக்கு கிடைக்கவில்லை. சுற்றுச்சூழல் கேடு பூமியில் உச்சத்தை தொட்டதும் எங்கள் தலைமுறையில்தான். பூமியை காப்பாற்றும் முழுப் பொறுப்பும் எங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவையும் வைத்துக்கொண்டு பூமியை காப்பாற்ற நாங்கள் தவறினால் அடுத்த தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் போதாது. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்காது, ஏனென்றால் காலம் கடந்துவிடும்.
நாங்கள்தான் சிந்திக்கவேண்டும். கூகிள் எங்களுக்காக சிந்திக்கமுடியாது.
END
சூழலியல் விஞ்ஞானி சஞ்சயனின் உரையின் தொடுப்பு: http://www.youtube.com/watch?v=7jYzfDlAUj4
இது முக்கியமான உரை. உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் அவர்கள் மாணவர்களுக்கும் இதை அனுப்புங்கள்.