கைதட்டல் விழா

 

இம்முறை பொஸ்டனில் ஒரு பள்ளிக்கூட விழாவுக்கு போயிருந்தேன். ஆறு வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கான பிள்ளைகளுக்கு நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி முடிவில் நடந்த விழா.  சிறுவர்களும் சிறுமிகளும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் பாடினார்கள், ஆடினார்கள், நடித்தார்கள். இன்னும் பயிற்சியில் சிலர் பழகின வித்தைகளை செய்துகாட்டினார்கள். அந்தப் பிள்ளைகளின் பெற்றோரும் நண்பர்களும் ஆசிரியர்களும் கண்டு களித்தார்கள்.

ஒரு பயிற்சியாளர்தான் தொகுப்பாளினியாக கடமையாற்றினார். சற்று தொக்கையான பெண்மணி இந்த விழாவுக்காக விசேஷமாக அலங்கரித்து வந்திருந்தார். குறைந்தது ஒருமணி நேரமாவது எடுத்திருக்கும் தலையலங்காரம், முக ஒப்பனை, ஒருவித தோள் வாருமின்றி அவர் மார்புகளில் தானாகவே தொங்கும் நீண்ட ஆடை என நல்லாகத்தான் இருந்தார். ஆனால் அவர் மேடைக்கு வந்த சில நிமிடங்களிலேயே விழா எப்போது முடியும் என நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒவ்வொரு வசனத்தையும் 'நல்லது ஆ … ஆ .. ஆ' என்று ஆரம்பித்தார். 'இப்பொழுது 9 வயது ரேகன் வரப்போகிறார், அவருக்கு ஒரு கைதட்டல் கொடுங்கள்' என்றார். கொடுத்தோம். இவர் கோடைப்பயிற்சியில் உங்களுக்காக தயாரித்த இன்ன பாடலைப் பாடப்போகிறார். அதற்கு ஒரு கைதட்டல் என்று கேட்டார். கொடுத்தோம். இது போதாது. சும்மா இருக்கும் உங்கள் இரண்டு கைகளையும் மோத விடுங்கள் என்றார். விட்டோம். பாடல் முடிந்ததும் மீண்டும் ஒரு கைதட்டல் என்று கதை போனது.

ஒரு பெண்குழந்தை அதனிலும் பெரிய வயலினைத் தூக்கிக்கொண்டு வந்து மேடையிலே நின்றது. அது போகமுன்னர் ஆறு கைத்தட்டல்களை பெற்றுவிட்டது. எல்லாம் கேட்டுக் கிடைத்ததுதான். பாராட்டியும் கெஞ்சியும் மிரட்டியும் கைதட்டல்களை வரவழைத்துக் கொண்டிருந்தார். இந்த நூற்றாண்டின் சிறந்த வயலின் இசைக்கு இவ்வளவுதானா கைதட்டல். மீண்டும் தட்டினோம். ஆறுவயது குழந்தைக்கு தட்டுவது ஆறு மைல் தூரத்துக்கு கேட்கவேண்டாமா? தட்டினோம். உங்கள் கைதட்டல் என்னிடம் வரமுன்னரே பாதி வழியில் மரித்துவிட்டது,

அன்று விழா முடியமுன்னர் 62 கைதட்டல்களை அந்த மண்டபம் கேட்டது. ஒரேயொருமுறை மாத்திரம் ஒரு சின்னக் குழந்தை வாய்ப்பாட்டு பாடி முடிந்ததும் எனக்கு தானாக கைதட்டத் தோன்றியது. அந்தக் குழந்தை அவ்வளவு அழகாக பாடியது. ஆனால் கைதட்ட எனக்குத் தோன்றவில்லை. ஏற்கனவே பலமுறை கைதட்டி கை புண்ணாகிப் போயிருந்தது. இப்படி கெஞ்சியும் மிரட்டியும் கைதட்டுப் பெறுவது எப்படி வந்தது என்று தெரியவில்லை.

சமீபத்தில் இந்திய டிவியில் ஒரு விழாக் காட்சி ஒளிபரப்பானது. தொகுப்பாளர் ஒரு பிரபல நடிகர். நிகழ்ச்சியின்போது கெஞ்சிக் கெஞ்சி சபையோரிடம் கைதட்டல்கள் வாங்கிக்கொண்டிருந்தார். ஒரு காலத்தில் சபையில் பிரசங்கம் நடக்கும்போது சபையினர் இடைக்கிடை ஆர்வத்தோடு கைதட்டுவார்கள். பாடகர் பாடி முடிந்ததும் கைதட்டுவார்கள். நடனம் சிறப்பாக நடந்து முடிந்ததும் அதற்கு ஒரு கைதட்டல். நாடகத்தில் ஒவ்வொரு சீனுக்கும் கைதட்டல் கிடைக்கும். இந்தக் கைதட்டல்கள் வேண்டிப் பெறுவதல்ல. கைதட்டலின் ஒலியை வைத்தே நிகழ்ச்சியின் வெற்றியை ஓரளவுக்கு தீர்மானித்துக் கொள்ளலாம். அந்த டிவி நிகழ்ச்சியை தொகுப்பாளர் தொகுத்ததை பார்த்தபோது இந்த அமெரிக்க கலாச்சாரம் இந்திய டிவியை தொட்டுவிட்டது தெரிந்தது.

நான் கல்லூரியில் படித்த சமயம் ஒரு வழக்கமிருந்தது. யாராவது வேண்டாத பேச்சாளர் மேடைக்கு வந்து அவர் பேச்சு அறுவையாக இருந்தால் நாங்கள் தொடர்ந்து நிறுத்தாமல் கைதட்டுவோம். ஆரம்பத்தில் பாராட்டு என்று நினைக்கும் பேச்சாளர், அவருடைய பேச்சை நிறுத்தச்சொல்லி கைதட்டுகிறோம் என்பதை புரிந்துகொண்டு பேச்சை நிறுத்திவிடுவார்.

அமெரிக்க தொகுப்பாளினி மேடையில் நின்றபோது இப்படி தொடர்ந்து கைதட்டினால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்திருந்தால் இந்தப் பெண் அதிக உற்சாகமாகி இன்னும் தொடர்ந்து கொண்டே போயிருப்பார். மார்புகள் தாங்கிப் பிடிக்கும் ஆடை இறங்கினாலும்கூட அவர் மேடையைவிட்டு இறங்கியிருக்கமாட்டார். அன்று 62 கைதட்டல்களோடு நாங்கள் நல்லகாலம் விடுபட்டு வீடு வந்து சேர்ந்தோம். வெகு சீக்கிரத்தில் யாராவது கைதட்டல் விழா எடுப்பார்கள்.
 

 

About the author

11 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta