நல்ல சிறுகதை

 

சென்ற முறை நத்தார் விடுமுறையின்போது நண்பர் செல்வம் ஒரு பரிசு தந்தார். 'சொல்வலை வேட்டுவன்' என்பது புத்தகத்தின் பெயர். அதன் ஆசிரியர் பா.ரா.சுப்பிரமணியன். வழக்கம்போல புத்தகத்தை பின்னட்டையில் தொடங்கி வாசித்துக்கொண்டே வந்தபோது ஓர் இடம் வந்ததும் அப்படியே நின்றேன். அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

'சென்னை மாநகரில் 'அகராதி' என்கிற சொல்லைவிட டிக்சனரி என்னும் வார்த்தையைத்தான் அதிகமாகக் கேட்கமுடியும். ஒருமுறை மைலாப்பூர் குளக்கரையின் ஒரு மூலையில் இருக்கும் மாணவர்களின் தேவையை பூர்த்திசெய்யும் கடை ஒன்றிற்கு போயிருந்தேன். கடையில் கூட்டமாக இருந்ததால் என் முறை வருவதற்காகக் காத்திருந்தேன். 'டிக்சனரி'  என்கிற வார்த்தை காதில் விழுந்தது. இரண்டு மூன்று பேராவது 'ஒரு நல்ல டிக்சனரி இருந்தால் கொடுங்களேன்' என்று கடைக்காரரிடம் கேட்டனர். கடைக்காரரும் 'இந்தாருங்கள், இந்த டிக்சனரியைத்தான் இப்போது எல்லோரும் வாங்குகிறார்கள்' என்று சொல்லி ஓர் ஆங்கிலத் தமிழ் அகராதியை எடுத்துக் காட்டினார். ஒருவர் அந்த அகராதியை கையிலே வாங்கினாலும் திறந்துகூடப் பார்க்கவில்லை. 'இது நல்ல டிக்சனரிதானே. என்ன விலை?' என்று கேட்டு, பணம் கொடுத்துவிட்டு வாங்கிக்கொண்டு போனார். மற்றொருவர் தன் மனைவியிடம் 'வாங்குகிறது வாங்குகிறோம். பெரிய டிக்சனரியாக வாங்கிவிடுவோம்' என்று சொல்லிவிட்டுக் கடைக்காரரிடம் 'இதைவிடப் பெரிய டிக்சனரி இருக்கிறதா?' என்று கேட்டார். கடைக்காரர் 'இல்லை' என்று சொன்னதும், அவரும் அந்த அகராதியை வாங்கிக்கொண்டு போய்விட்டார். அகராதி தயாரிக்கிற எனக்கு அவர்கள் கேட்ட விதமும், திறந்து பார்க்காமலேயே வாங்கிக்கொண்டு போனவிதமும் ஆச்சரியத்தை தந்தன. ….. வீட்டுக்கு நல்ல உறுதியான மேஜை, நாற்காலி வாங்கிப் போடுவதுபோல, ஒரு பெரிய அகராதியை வாங்கிப் போட்டுவிட்டால் 'அது பாட்டுக்கு கிடக்கும்' என்ற எண்ணம் குடும்பத் தலைவரின் கூற்றில் ஒளிந்து கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.' 

இதைப் படித்தபோது எனக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. அங்கே டாரா என்று ஓர் இடம் உண்டு. அது துப்பாக்கிக் கிராமம். குடிசைக் கைத்தொழில்போல இந்தக் கிராமம் முழுக்க துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபடும். உலகத்தில் எத்தனை வகையான துப்பாக்கிகள் உள்ளனவோ அத்தனை வகையும் அங்கே கிடைக்கும். ஜேம்ஸ் பொண்ட் பாவிக்கும் வால்தர் பிபிகே துப்பாக்கிகூட இருந்தது. அதன் அழகைப் பார்த்த எனக்கே தொட்டுப் பார்க்கும் ஆசை வந்தது. எல்லாமே நகல்தான். ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

நான் அங்கே போனபோது நீளமாக குஞ்சம் தொங்கும் தலைப்பா கட்டிய ஒருவர் ஏகே 47 துப்பாக்கி ஒன்றறை வாங்குவதற்காக பரிசீலனை செய்துகொண்டிருந்தார். இலக்குப் பலகையில் சுட்டுப் பரீட்சிப்பார் என்று நினைத்தேன். அவர் அப்படி ஒன்றுமே செய்யவில்லை. துப்பாக்கியை ஆகாயத்தை நோக்கி உயரப் பிடித்து சுட்டார். ஆனால் அவர் கண்கள் ஆகாயத்தை பார்க்காமல் நிலத்தை பார்த்தன. வாய்க்குள் இருந்த பற்களில் ஒன்றுகூட வெளியே தெரியாதபடி உதடுகள் இறுக்க மூடியிருந்தன. திரௌபதியை வெல்ல அர்ச்சுனன் கீழே பார்த்துக்கொண்டு அம்பை மேலே எய்ததுபோல இவரும் நிலத்தை பார்த்துக்கொண்டு சடசடவென சுட்டார். 75 தோட்டாக்களும் தீரும்வரை அவர் விசையிலிருந்து விரலை எடுக்கவில்லை. துப்பாக்கி சுடும் ஒலியை வைத்து அவர் துப்பாக்கியின் தரத்தை தீர்மானித்து அப்படியே வாங்கிக்கொண்டும் சென்றார். இப்படி துப்பாக்கி வாங்கியவருக்கும், நல்ல தொக்கையான உறுதியான  டிக்சனரியாகப் பார்த்து வாங்கியவருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குப் படவில்லை.

சின்ன வயதில் தொக்கையான ஆங்கிலப் புத்தகங்களை படிக்கும்படி பள்ளிக்கூடத்தில் தந்துவிடுவார்கள். புத்தகம் முழுவதும் பெரிய பெரிய வார்த்தைகளாக நிறைந்திருக்கும். ஒரு பக்கத்தை படித்து முடிப்பதற்கிடையில் குறைந்தது நாலு சொற்களையாவது அகராதியில் பார்க்கவேண்டி வரும். அகராதியை பக்கத்தில் வைத்துக்கொண்டு சிரமப்பட்டு பக்கம் பக்கமாகப் படிக்கும்போது எரிச்சல் ஏற்படும். புத்தகத்தை படித்த நேரத்திலும் பார்க்க சொற்களைத்தேடி அகராதியில் கழித்த நேரமே அதிகமாக இருக்கும். ஒரு நாளில் இரண்டு மூன்று பக்கம் படித்தாலே பெரிய வெற்றிதான்.

சமீபத்தில் ரொறொன்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பறந்தபோது பக்கத்து ஆசனத்தில் ஓர் எட்டு வயதுச் சிறுமி இருந்தாள். கையிலே இருந்த ஐபாட்டில் அவள் ஒரு நாவலைப் படித்தாள். ஒரு பக்கம் வாசித்து முடிந்ததும் ஒற்றை விரலால் தட்டுவாள். உடனே அடுத்த பக்கம் திறந்துகொள்ளும். புத்தகத்தை மூடும்போது அடையாளம் வைக்கலாம். ஏதாவது வரியை ஞாபகம் வைக்கவேண்டுமென்றால் அந்தச் சிறுமி ஒரு விரலால் அந்த வசனத்தின்மேல் இழுத்தாள். அது மஞ்சள் நிறமாக மாறியது. ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது அதில் இருந்த அகராதி வசதிதான். ஒரு வார்த்தை தெரியாவிட்டால் அந்தச் சிறுமி ஒரு விரலை அந்த வார்த்தைமேல் பதித்தாள். உடனே அப்படியே அந்த வார்த்தையின் பொருள் வந்தது. விரலை எடுத்ததும் பொருளும் மறைந்தது. என்ன அருமையான கண்டுபிடிப்பு.  இரவு நேரம் டிக்சனரியை கையில் வைத்துக்கொண்டு நான் பக்கம் பக்கமாக படித்தது ஞாபகத்துக்கு வந்தது. மறுபடியும் சிறுவனாக மாறி இப்படி ஒரு புத்தகமும் கையில் கிடைத்தால் எவ்வளவு நல்லாக இருக்கும் என்ற ஏக்கம் என்னை ஏதோ செய்தது. இப்படி அவசரமாக 60 வருடம் முன்னர் பிறந்துவிட்டோமே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் அகராதி ஒன்று வாங்கி ஒரு நண்பருக்கு பரிசாகக் கொடுத்தேன். என் வீட்டிலே பல அகராதிகள் இருந்தன. நான் ஓய்வாக இருக்கும் சமயங்களில் அகராதியை படிப்பதுண்டு. அமினாட்டா ஃபோர்னா என்ற எழுத்தாளருடன் பேசியபோது அவர் தானும் அடிக்கடி டிக்சனரியை படிப்பது பற்றி சொல்லியிருந்தார். என்னைப்போல பலரும் அகராதி படிப்பார்கள் என எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தில் நண்பருக்கும் டிக்சனரி தேவையாக இருக்கும் என்று நினைத்தது பெரும் பிழை. அவர் 'டிக்சனரியா? தமிழிலும் டிக்சனரி இருக்கிறதா?' என்றார். நான் அகராதி என்று சொன்னேன்.

நாலு வருடங்கள் சென்றிருக்கும். ஒருநாள் காலை அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. அகராதியை பற்றி ஒரு கேள்வி கேட்டார். நாலு வருடமாக அவர் அதை திறந்தே பார்க்கவில்லை.

'தமிழ் டிக்சனரியில் ஒரு சொல்லை எப்படி பார்ப்பது?'
நான் பத்து மட்டும் எண்ணிவிட்டு சொன்னேன்.
'கண்ணினால்தான்.'

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta