விடுபட்டுவிட்டது

நான் ஒரு ஜேர்மன் அதிகாரியிடம் சில காலம் வேலை பார்த்தேன். ஜேர்மன் அதிகாரி என்றால் கண்டிப்பானவர் என்பது சொல்லாமலே விளங்கிவிடும். முதல் பிரச்சினை அவர் பெயர். அவருடைய பெயரிலுள்ள எழுத்துக்களுக்கும் உச்சரிப்புக்கும் ஒருவித தொடர்பும் இல்லை. தன் பெயரை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதை தினமும் மினக்கெட்டு சொல்லித் தருவார். உச்சரிப்புக்குத் தக்கமாதிரி எழுத்தை மாற்றிவிடவேண்டியதுதானே. ஆனால் அவரிடம் அதை துணிந்து சொல்வதற்கு ஆள் கிடையாது. ஏனென்றால் அத்தனை பெரிய உருவம். இரண்டுபேருக்கு போதுமான துணியில் உடுப்பு தைத்து, இரண்டு பேருக்கு போதுமான உணவை உண்டு, இரண்டு பேருக்கு போதுமான கட்டிலில் படுத்து எழுந்து அலுவலகத்துக்கு வருவார் என்று நினைக்கிறேன். உங்கள் கதவை தட்டமாட்டார், இடிப்பார். கதவை தட்டுகிறாரா வீட்டுக்கு எடுத்துச் செல்ல பெயர்க்கிறாரா என்ற சந்தேகம் அங்கே வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி எழும்.

இந்த அதிகாரி காலையில் வந்ததும் முதல் வேலையாக ஒரு பட்டியல் போடுவார். மாலையில் வீடு திரும்பமுன்னர் அன்று முடிந்துபோன அலுவல்களை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார். மீதியை அடுத்த நாள் காலை போடும் புதிய பட்டியலுடன் சேர்த்துக்கொள்வார். இப்படி அந்த பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். மீந்துபோன தோசை மாவுடன் புதிய மாவை சேர்ப்பதுபோல இது முடிவுக்கு வருவது கிடையாது.

சமீப காலங்களில் நான் அவரை அடிக்கடி நினைக்கிறேன். சுப்பர்மார்க்கட்டுக்கு போகும்போது  என் மனைவி தீவிரமாகப் பட்டியல் போடுவதற்கு தொடங்கிவிட்டார். அது நல்ல மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு சாமான்களை ஒவ்வொன்றாக பட்டியலில் இருக்கும் ஒழுங்கில் தெரிவு செய்வார். பட்டியலில் எழுதிய சாமான் கண்ணுக்கு முன்னே இருந்தாலும் அதன் முறைவரமுன்னர் அதை எடுக்கமாட்டார். இந்த பிடிவாதமான கொள்கையால் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு மேலும் கீழுமாக அலைந்துதான் வண்டியை நிரப்பமுடியும். என்னுடைய அணுகுமுறை முற்றிலும் வேறுமாதிரி இருக்கும். பட்டியல் போடுவதில்லை. வண்டியை தள்ளிக்கொண்டு போகும்போதே கண்ணில் தெரியும் சாமான்களை அள்ளிப்போட்டு நிரப்பலாம். இறுதியில் பணம் கொடுக்கும்போது சுப்பர்மார்க்கெட் பெண்ணே நீங்கள் வாங்கிய பொருள்களுக்கு பட்டியல் போட்டு தருவாள். எவ்வளவு வசதியானது.

சங்ககாலத்து புலவர்களில் பட்டியல் போடுவதில் தலை சிறந்தவர் கபிலர். பாரியை நோக்கி பாடும்போது பறம்பு மலை சிறந்தது அதை எதிரிகள் அடைய முடியாது என்று சொல்லிவிட்டு அதன் சிறப்புகளை பட்டியலிடுகிறார்.
ஒன்று – விளையும் நெல்
இரண்டு – இனிப்பான பலாப்பழம்
மூன்று –  வள்ளிக்கிழங்கு
நான்கு – குன்றுத்தேன்

கவியின் பட்டியல் இப்படி போகிறது. பாடலைப் பாடியபோது கபிலர் மிகவும் பட்டினியாக இருந்திருப்பார் போலும். பறம்பு மலையில் உள்ள உணவைத் தவிர வேறு ஒரு சிறப்பும் அவர் கண்களுக்கு தெரியவில்லை.

சிலப்பதிகாரத்து கண்ணகியும் ஓர் இடத்தில் பட்டியலிடுகிறார். கணவன் கொலையுண்ட துயரத்தில் பிறந்த கூற்று ஒரு பட்டியல்போல வெளிப்படுகிறது.
முறையில்லா அரசன் ஊரில் வாழும் பத்தினிப் பெண்கள் – இது ஒன்று
பிறர் படாத துன்பத்தை அடைந்தேன் – இது ஒன்று
கொன்ற என் கணவர் கள்வர் அல்ல – இது ஒன்று
என் கணவரைக் காண்பேன் – இது ஒன்று
அவரிடம் நல்ல வார்த்தை கேட்பேன் – இது ஒன்று
அப்படிக் கேட்காவிட்டால் இகழுங்கள் – இது ஒன்று

கண்ணகி ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணவில்லை. தமிழ் இலக்கியத்தில் துறைபோன ஒரு புலவரிடம் ஏன் கண்ணகி இப்படி ஒன்று, ஒன்று, ஒன்று என எண்ணினார் என்று கேட்டேன். கணவன் கொலையுண்ட பிறகு கண்ணகி இருந்த மனநிலையில் அவரால் ஒன்றுக்குமேல் எண்ணமுடியவில்லை என்றார். அதுவும் நல்ல விளக்கமாகத்தான் இருந்தது. 

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பட்டியல் போடுவது தொடர்கிறது. பத்துப்பாட்டின் குறிஞ்சிப்பாட்டில் பூக்களின் பட்டியல் ஒன்று வரும். சுந்தரரிடம் கொள்ளையடித்த நகைகளின் பட்டியலை வேடுபறி சொல்லும். ஒருமுறை லாகூரில் மொகலாய மன்னர்களின் நவ்லாக் என்ற சலவைக்கல் மாளிகையை பார்க்க நேர்ந்தது. விமானம் முழுக்க நுணுக்கமான வண்ண வேலைப்பாடுகள். அந்தக் கட்டிடத்தில் பாவிக்கப்பட்ட ஒவ்வொரு சின்னப் பொருளுக்கும் பட்டியல் இருப்பதாகச் சொன்னார்கள்.

அஹமட் ஃபயாஸ் என்ற உருதுக்க கவிஞர் அவர் இறக்க முன்னர் எழுதிய கடைசி கவிதையில் இப்படி சொல்கிறார்.
 மரணம் வந்துவிட்டது
 கையில் ஒரு பட்டியலோடு.
 இன்றைய பட்டியலில்
 யார் பெயர்கள் இருக்கின்றன?
 எனக்கு தெரியவில்லை.

நானும் ஒருமுறை இலக்கியப் பட்டியல் ஒன்றை தொலைத்திருந்தேன். நீண்ட புனைவு ஒன்றை எழுதினேன் ஆனால் முடிவு திருப்திகரமாக அமையவில்லை. தனிமையில் ஒருநாள் ரயிலில் பயணம் செய்தபோது மெலிதான ஒருகனவு நிலைக்குள் தள்ளப்பட்டேன். திடீரென்று வார்த்தைகள் வார்த்தைகளாக கொட்டத் தொடங்கின. ஒரு குளவிக்கூட்டை கலைத்துவிட்டதுபோல வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தன. சில சமயம் இரண்டு வார்த்தைகள் ஒரே நேரத்தில் வந்தன. இந்த வார்த்தைகளைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன். அவசர அவசரமாக அவற்றைக் குறித்துகொள்வதற்கு தேடியதில் பேனை அகப்பட்டது. ஒரு துண்டு பேப்பர் கிடைக்கவில்லை. யாரோ படித்துவிட்டு எறிந்த தினசரி பேப்பர் ஒன்றின் ஓரத்தை கிழித்து அந்த வார்த்தைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வேகமாக எழுதி பையில் வைத்து பத்திரப்படுத்தினேன். வீடு வந்து தேடியபோது அது தொலைந்து விட்டது. எப்படி தேடியும் கிடைக்கவில்லை. புனைவு முடியாமலே நின்றது. பேரிலக்கியம் ஒன்றிலிருந்து வாசகர்கள் தப்பியது அப்படித்தான்.

சமீபத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகத்துப் பணக்காரர்களின் பட்டியலை டொக்ரர் ராமானுஜம் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவருடைய குறிப்பு இப்படி இருந்தது. ’உங்களுடைய பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.’உலகத்துப் பணக்காரர்கள் ஓர் ஆயிரம் பேர் இருப்பார்கள். கார்லொஸ் ஸ்லிம் முதலில் இருந்தார், இரண்டாவது பில் கேட்ஸ். நாலாவதாக முகேஷ் அம்பானி. இப்படியே பட்டியல் நீண்டது. நண்பருக்கு பதில் எழுதினேன். ‘இந்த முறையும் என் பெயர் தவறிவிட்டது.’

END

About the author

10 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta