இளையவரும், முதியவரும்

இளையவரும், முதியவரும்

சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரே பத்து கேள்விகளை சில எழுத்தாளர்களிடம் கொடுத்து அவர்கள் பதில்களை வெளியிட்டிருந்தார்கள். தமிழிலும் அப்படிச் செய்து பார்க்கும் ஆர்வம் வந்தது. அதே பத்து கேள்விகளை இரு எழுத்தாளர்களிடம் கொடுத்து பதில்களைப் பெற்றேன். ஒருவர் பேராசிரியர். மற்றவர் மாணவி. கேள்விகளும் பதில்களும் கீழே.

அஞ்சலி விவேகானந் – வயது 16.

கனடாவில், உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கிறார். இரண்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். முதலாவது  Defied, இரண்டாவது  Discovered. உலகம் சுற்றி பயணம் செய்வது அவரது நீண்டகால ஆசை. எதிர்காலத்தில் ஹார்வார்டில் படித்துப் பட்டம்பெற்று சட்டவாளராக வர விரும்புகிறார். தன்னார்வத் தொண்டராக சமுதாயச் சேவையில் செயல்படுகிறார்.

பேராசிரியர் சு.பசுபதி – வயது 80.

முப்பதாண்டுகளுக்கு மேல் டொராண்டோ பல்கலைக் கழகத்தில் மின்னியல் கணினித் துறையில் ஆசிரியப் பணிபுரிந்து, ஓய்வுக்குப் பின் தகைசார் வாழ்நாள் பேராசிரியராக ( Professor Emeritus ) அப்பல்கலைக் கழகத்தில் இருக்கிறார்.  தமிழில் அளப்பரிய ஆர்வம் உள்ளவர்.  பல பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை என எழுதியிருக்கிறார்.  கவிதை இயற்றிக் கலக்கு,  சங்கச் சுரங்கம் -1, சங்கச் சுரங்கம் – 2 ஆகியவை இவர் எழுதி வெளிவந்த நூல்கள்.

  1. நீங்கள் படித்த புனைவுகளில் உங்களுக்குப் பிடித்த கதை மாந்தர் யார்? வாழ்க்கையில் யார் உங்கள் ஆதர்சம்?

பதில் அஞ்சலி: கதை மாந்தர்களில் என்னுடைய ஆதர்சம் ஹெர்மியோன் கிராஞ்சர். இவர் ஹரி பொட்டர் நாவலில் வரும் பெண்பாத்திரம். இது  வலிமையான, சுதந்திரமான,  ஆற்றல் வாய்ந்த பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. உலகத்து சிறுமிகளுக்கு இவர் ஒப்பற்ற முன்மாதிரியாக விளங்குகிறார்.  அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு எனக்கு மிக நெருக்கமானது. ஹெர்மியோன் என்று சொன்னவுடன் அவருடைய மாண்பு, பலம் அல்லது வேகம் என்று தோன்றும். உண்மையில் அவருடைய புத்திக்கூர்மைதான் என்னை அவரிடம் இழுத்தது.

ஆச்சரியமாக என்னுடைய வாழ்வின் ஆதர்சம் எம்மா வாட்ஸன். இவர்தான் ஹரிபொட்டர் திரைப்படத்தில் எட்டு தொடர்களிலும் ஹெர்மியோனாக நடித்தவர். இவர் தான் நடிக்கும் பாத்திரம் போலவே தன் சொந்த வாழ்க்கையையும் அமைத்தவர். சுதந்திரமான, உறுதியான பெண்ணாகவே வாழ்கிறார். சிறுவயதில் ஹெர்மியோனாக நடிக்க ஆரம்பித்தபோதே புகழுக்கு பழக்கமாகிவிட்டார். ஆனாலும் உலகப் பிரபலமானபோது அவர் தன் வாழ்வின் விழுமியங்களை மறக்கவில்லை.  ஐ.நாவின் பெண்களுக்கான நல்லெண்ணத் தூதுவராக தெரிவு செய்யப்பட்டார்.  பங்களாதேஷ், ஜாம்பியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து பெண்கள் கல்விக்கு ஊக்கமளித்தார். அவர்  தன் போராட்டத்துக்கு கையில் எடுத்தது வன்முறை அல்ல; வார்த்தைகள். அவை எவ்வளவு பலம் வாய்ந்தவை என்பதை உலகத்துக்கு உணர வைக்கிறார்.

பதில் பேரா.பசுபதி: ‘துப்பறியும் சாம்பு’ புகழ் எழுத்தாளர் ‘தேவன்’ படைத்த இன்னொரு கதாநாயகன் ‘ஸி.ஐ.டி சந்துரு’ தான் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம். காரணங்கள் பல: கடந்த அறுபது வருடங்களில் புனைவிலக்கியத்தில் என் ரசனை எவ்வளவோ மாறினாலும், அன்றுபோல் இன்றும் நான் விடாமல் படிப்பது சில ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைத்தான். அவற்றின் சுவைக்குச் சிறிதும் குறையாமல் என்னை, என் இளம் வயதில் கவர்ந்தது 1956-இல் ’ஆனந்த விகடனில்’ தொடராய் வந்த ‘சி.ஐ.டி.சந்துரு’. அதன் முதல் அத்தியாயத்தில் வந்த ‘தேவனின்’ பாத்திரப் படைப்பே என்னை சந்துருவின் விசிறியாக்கி விட்டது .

 

இதோ ஒரு சிறு துளி :

“ குதிரைப் பந்தய மைதானத்தில் அவனைப் பார்க்கலாம்; அதே தினத்தில் கதா காலக்ஷேபங்களிலும் ஒரு மூலையில் அவனைக் காணலாம்.. . ஞாயிற்றுக்கிழமை காலைகளில் ஏலம் நடக்கும் இடங்களில் நிற்பான். மாலை வேளையில் மூர்மார்க்கெட்டில் பழைய புஸ்தகங்களை அலசிக்கொண்டு பொழுது போக்குவான். மண்ணடிப்பக்கம் ஏதேனும் ஒரு தண்ணீர்ப் பந்தலின் மண் தரையில் குத்திட்டு உட்கார்ந்து ‘சீராள’த்திற்குச் சட்னி கேட்பதும் உண்டு; மவுண்ட்ரோட் பெரிய ஓட்டலில்  ஏர்-கண்டிஷன் செய்த அறையில் “புரூட்-ஸாலட்” சுத்த மோசம் என்று புறங்கையால் தள்ளுவதும் அவனுக்குச் சகஜம் “.

என் அபிமான நகைச்சுவை எழுத்தாளர் ’தேவன்’ எழுதிய கடைசி நாவல் அது, இனிமேல் சந்துருவைப் பற்றிய இன்னொரு நாவல் வராது என்ற ஏக்கமும் எனக்குச் சந்துருவை விரும்பும் காரணமாய் இருக்கலாம்.

 

வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாதய்யர். நானும் என் ஆசிரியத் தொழிலில் பல ஆய்வுகள் செய்தவன் தான்; இருப்பினும், உ.வே.சா .வின் ‘குறுந்தொகை’ உரையைப் படித்தபின் “ இதுவன்றோ ஆய்வு! இப்படியல்லவா உரை இருக்கவேண்டும்!” என்று வியந்தேன். அதுவே நான்  சங்கப் பாடல்களுக்கு  நகைச்சுவை அறிமுகமாய்ப் பல கதைக்கட்டுரைகளை எழுதக் காரணமாய் இருந்தது.

 

  1. நீங்கள் எழுதிய அல்லது நீங்கள் படித்த உங்களுக்கு மிகப் பிடித்த ஒரு வசனம்?

பதில் அஞ்சலி: பல வருடங்களுக்கு முன்னர் நான் படித்த புத்தகம் நடாலி பாபிட் என்பவர் எழுதிய Tuck Everlasting. அதில் ஒரு வசனம் வரும். ‘மரணத்துக்குப் பயப்படாதே; நீ வாழாத ஒரு வாழ்க்கைக்கு பயப்படு. நீ என்றென்றுமாக வாழவேண்டியதில்லை. ஆனால் நீ வாழ்க்கையை உண்மையாக வாழவேண்டும்.’  முதன்முதலில் படித்தபோது இந்த வசனத்தின் முழு ஆற்றலும் எனக்குப் புரியவில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பின்னர் மறுவாசிப்பு செய்தபோது அதன் மகத்துவம் புரிந்தது. வாழ்க்கை என்பது எங்களுக்கு கிடைத்த ஒரு வரம். ஆனால் நாங்கள் அதை உணராமல் எங்கள் இலக்குகளை அடையாமல் வீணாக்கிவிடுகிறோம்.  நான் பெரியவளானதும் பல இடங்களுக்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். பயணம் செய்வது மட்டுமல்ல என்னுடைய கனவுகளையும் மெய்ப்படுத்துவேன். என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக வாழத் திட்டமிட்டிருக்கிறேன். நல்லாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையில் வருந்துவதற்கு ஒன்றுமே இருக்காது.

பதில் பேரா.பசுபதி: “ உருவேறத் திருவேறும்” – பழமொழி போல் ஒலிக்கும் இந்த வாக்கியம்  லா.ச.ராமாமிருதத்தின் ‘கங்கா’, “சிந்தா நதி”  இரண்டிலும் வருகிறது.. சாதாரணமான பொருள்: உரு ஏறத் திரு ஏறும். அதாவது, மந்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகத் தெய்வத்தன்மை அதிகமாகும் என்பதே. ஆனால், சரியோ, தவறோ, எழுத்தாளனான நான் இதற்குக் கொள்ளும் பொருள் வேறு. ‘திரு’ என்றால் சிறப்பு, அழகு என்றும் சொல்லலாம்  நம் கருத்தை மீண்டும் மீண்டும்  யோசித்துத் திருப்தி அளிக்காத எழுத்தை மாற்றி மாற்றி எழுதினால், அந்த எழுத்து ..கவிதையோ, கட்டுரையோ, கதையோ …  நிச்சயம் சிறப்புறும். இது என் அனுபவத்தில் உண்மையே! அதனால், இந்த வாக்கியம்   எனக்கு வேத வாக்கே!

 

  1. உங்களுக்கு அகத்தூண்டல் தந்த ஒரு புத்தகம், உங்களை மீண்டும் படிக்க இழுக்கும் ஒரு புத்தகம் இருந்தால், அது என்ன?

பதில் அஞ்சலி: நான் சிறுமியாயிருந்தபோது என்னுடைய அப்பா எனக்கு Hardy Boys என்ற நாவலை  அறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து எனக்கு அதுவே என் வாழ்க்கையில் கிடைத்த ஆகச் சிறந்த புத்தகமாகத் தோன்றியது. அது விடுக்கும் புதிர்களும், அதில் காணப்படும் சாகசங்களும் என்னை வியப்படைய வைத்தன. ஆசிரியர் கதையை எந்த விதமாக வளர்த்தெடுக்கிறார் என்பது ஆச்சரியமூட்டியபடியே இருக்கும்.  கதை செல்லும்  திசையை முன்கூட்டியே ஊகிக்க  என்னுடைய கற்பனை போதுமானதாய் இருக்கவில்லை. மர்மமான முடிச்சுகளை போடுவதும் அவற்றை சர்வசாதாரணமாக அவிழ்ப்பதுமாக முதல் தடவை அதைப் படித்தபோது அப்படியே என்னை உறையவைத்தது. அதில் சந்தித்த  சாதுர்யமான திருப்பங்களும் எதிர்பாராத முடிவுகளும் என்னை சிந்திக்க தூண்டின.  இவருடைய தொடர் நாவல்களைப் படித்த பின்னர்த்தான் நான் புதிய விசயங்களைத் தேடி ஓட ஆரம்பித்தேன். எத்தனை தரம் மறுவாசிப்பு  செய்தாலும் ஆசிரியரின் கற்பனையும் சாமர்த்தியமும் என்னை வியக்க வைக்க தவறுவதில்லை.

பதில் பேரா. பசுபதி: உ.வே.சாமிநாதய்யரின் “ என் சரித்திரம்”.  பழந்தமிழ் நூல்களைத் தேடிய அவருடைய அனுபவங்கள், சிரமங்கள், கிட்டிய பலன்கள், அவருடைய ஆசிரியரிடம் அவருக்கு இருந்த அளவற்ற பக்தி, நுண்மையான தகவல்களைத் தரும் நேர்மை, ஆய்வு மனப்பான்மை,  கணினி உதவியின்றி அவர் கொடுக்கும் பல குறிப்புகள், அவருடைய நினைவாற்றல், தமிழிசையில் அவருக்கு இருந்த ஆர்வம் யாவும் என்னை மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கும் மந்திரங்கள்.

 

  1. உங்கள் நாளில் உங்களுக்கு மிகவும் விருப்பமான பகுதி?

பதில் அஞ்சலி; பள்ளிக்கூடம் சம்பந்தமான அலுவல்கள், சமூக வேலைகள் என்று நான்         ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் எனக்கான தனி நேரம் வாய்ப்பதில்லை.  ஆனாலும் எனக்கே எனக்கான  நேரம் நான் படுப்பதற்கு முன்னர் எனக்கு கிடைக்கும் ஒரு மணிநேரம்தான். பள்ளிக்கூடத்தில் முழு நாளைக் கழித்த பின்னர், வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு, நான் எனக்கு ஒரு மணிநேரத்தை எடுத்துக்கொள்வேன். இறுகிய கயிறு சுருள் அவிழ்ப்பதுபோல  மெதுவக்க கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு தளர்வாகி அமைதி கிட்டும். ஓவியம் வரைவேன். வாசிப்பேன், எழுதுவேன் அல்லது தவறவிட்ட தொலைக்காட்சி காட்சிகளை பார்த்து முடிப்பேன்.

பதில் பேரா.பசுபதி; பிற்பகல். மதியச் சிற்றுண்டிக்குப் பின், நித்திரா தேவியின் மறுக்கவியலா அழைப்புக்குச் செவி சாய்த்து ( தலையையும் சில நிமிடங்கள் சாய்த்து!) , ஒரு சூடான காபி குடித்த பின் கிடைக்கும் மூன்று, நான்கு மணிகளே எனக்குப் பிடித்த நேரம்! இதோ, இந்தக் கட்டுரையை எழுதுவதும் அந்த நேரத்தில் தான்!

 

  1. எழுத்தாளர்களுக்கு அடிக்கடி சோர்வு வரும். அப்படியான ஒரு தருணத்தில் அதில் இருந்து வெளியே வர என்ன செய்வீர்கள்?

பதில் அஞ்சலி: மறுபடியும் சொல்வேன். வாசிப்புத்தான் எல்லா விதமான நோய்களுக்கும் மருந்து. ஒரு புத்தகத்தை எடுத்து அதை வாசிக்க ஆரம்பித்தவுடன் அந்த வார்த்தைகள் வந்து உங்களை மூடி ஒரு புது உலகத்துக்கு உங்களை கடத்திவிடும். சோர்விலிருந்து தப்பிப்பதற்கு இதுவே சிறந்த வழி. ஒன்றை வாசிக்கும்போது பலவிதமான உணர்வுகளுக்கு நீங்கள் ஆட்படுகிறீர்கள். ஒன்றிரண்டு பக்கம் வாசித்து முடிப்பதற்கிடையிலே கதைமாந்தர்களுடைய உணர்வுகளுக்குள் நகரத் தொடங்கிவிடுவீர்கள்.  நாவலிலிருந்து வெளியே வரும்போது சோர்வு போன இடம் தெரியாமல் போய்விடும்.

பதில் பேரா. பசுபதி:  எழுத்தாளருக்கு அவ்வப்போது வரும் சிந்தனையோட்டத் தடை எனக்கும் வரும்.. கற்பனை வறட்சி ஏற்படும். அப்போது நான் என்ன செய்வேன்? இதோ ஒரு உதாரணம்.  ஒரு தொடரின் கடைசிக் கட்டுரை எழுதி ஓர் இதழுக்கு அனுப்பவேண்டும்.. குறுந்தொகையில் யாவருக்கும் தெரிந்த ஒரு பாடலைப் பற்றிச் சிறிது நகைச்சுவை கலந்து ஒரு ‘புதுக்கதை எழுதவேண்டும். நான் எழுத எண்ணியது இந்தப் பாடலைப் பற்றி.

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?

யானும் நீயும் எவ்வழி அறிதும் ?

செம் புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

 

தலைவன் தலைவிக்குச் சொல்லும் ஆறுதல் இது. ”நம் பெற்றோர் ஒருவரை ஒருவர் அறியாவிட்டாலும், நாம் தாம் அன்பில் கலந்துவிட்டோமே? இனிப் பிரியமாட்டோம் “ என்கிறான். பல மணி மூளையைக் கசக்கியும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை. இரவில் யோசித்து யோசித்துச் சோர்வடைந்த பின்னர் படுத்துத் தூங்கிவிடுவேன். இப்படிச் சில இரவுகள். திடீரென்று ஒருநாள் காலையில் பாடலின் முதல் வரி என் மனக்கண்முன் விஸ்வரூபம் எடுத்து வந்தது. ஆமாம், “ இரு தாய்மாரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் அல்லர்” என்பது தலைவனின் “நம்பிக்கை” தானே? அது உண்மையாய் இல்லாமலிருந்தால்? அவ்வளவுதான். கதைக்குக் கரு கிட்டியது. அடுத்தநாளே கட்டுரையை முடித்துப் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன்.

 

சோர்வும், கற்பனை வறட்சியும் ‘சாதாரண’ மனத்திற்குத் தானே? அற்புதக் கனவுகளை அனாயாசாமாய் அள்ளித்தரும் ஆழ்மனத்திற்கு ஏது? சவாலை அதன் கையில் விட்டுவிட்டால், ஒருநாள் அது விடை கொடுத்துவிடும்!

 

  1. நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஐந்து சொற்கள் என்ன?

பதில் அஞ்சலி:  ஏன், எப்படி, ஆயின், நேரம், ஏனென்றால்.

ஏன், எப்படி என்ற வார்த்தைகள் என் சொல்தொகுதியில் அடிக்கடி வரும். அவற்றை நீக்கவே முடியாது. விசயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உள்ள பெண் நான். தொடர்ந்து என் அறிவை வளர்க்கவேண்டும் என்று எண்ணம் எனக்கு இருப்பதால் ஏன் இது நடக்கிறது. எப்படி நடக்கிறது ஆகிய கேள்விகளைக் கேட்டு என் அறிவை விசாலப் படுத்திக்கொள்வேன்.  அதேபோலத்தான் ‘ஆயின்’ if என்ற வார்த்தையும். ’இது இப்படி ஆயின் என்ன நடக்கும்?’ என்ற கேள்வி பல்வேறு சாத்தியக்கூறுகளை அலசி உண்மைக்கு சமீபமாக அழைத்துச் செல்லும்.

’ஏனென்றால்’ என்பதும் முக்கியமான வார்த்தைதான்.  ஒன்றை விளக்க  முற்படும்போது இந்த வார்த்தை அவசியமாகிறது. அடுத்தது நேரம். உயர் நிலைப் பள்ளியில்  படிக்கும் எனக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை. ’இன்னும் எத்தனை நேரம் மிச்சமிருக்கிறது?’ என்று கேட்டபடியே இருக்கிறேன். இளவயதிலேயே நேரத்தை எப்படி லாபகரமாகப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள நேரம் பற்றிய சிந்தனை உதவுகிறது.

பதில் பேரா. பசுபதி:  கவிதை, கட்டுரை, சிறுகதை, சங்கீதம், நகைச்சுவை

இவைதாம் என் வலைப்பூவில் நான் அதிகமாய்ப் பயன்படுத்தும் ஐந்து சொற்கள்.

 

  1. உங்களுக்கு வெறியேற்றும் பெரும் ஆசை என்ன?

பதில் அஞ்சலி: பயணம்தான் என்னுடைய பெரும் ஆசை. நான் இன்னும் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருப்பதால் நான் கனவு காணும் பல இடங்களுக்கு இன்னும் போகமுடியவில்லை.  எனக்கு பயணத்துடன் சாகசமும் விருப்பம்.  கொஸ்டரிக்காவுக்கு போகவேண்டும் என்பது என் சிறுவயது ஆசை. காரணம் அங்கே சாகசத்துக்கான வாய்ப்புகள் அதிகம். நாடுகளின் வரலாறுபற்றி படிக்கவும் விருப்பமுண்டு. ரோம், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளின் வரலாறு எத்தனை விசித்திரமானது. இந்த உலகத்தின் பலவிதமான மக்களையும், மொழியையும், கலாச்சாரத்தையும் நேரில் அனுபவிக்கும் தருணம் எத்தனை அபூர்வமானதாக இருக்கும்.

பதில் பேரா. பசுபதி: என்னிடம் உள்ள பழைய தமிழ்ப் பத்திரிகைகளில் உள்ள அரிய படங்கள், கட்டுரைகள் போன்றவற்றை என் வலைப்பூவில் பதிவு செய்வது.  இது ஒரு வெறியீர்ப்புத் தான்! இவற்றைப் படிக்க ஒரு சிறிய ரசிகர் பட்டாளமும் இருக்கிறது!

 

  1. உங்கள் படைப்புகளுக்கோ அல்லது உங்கள் வாழ்க்கை முறைக்கோ கிடைத்த விமர்சனம் என்ன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

பதில் அஞ்சலி: சில வருடங்களுக்கு முன்னர் நானும் அப்பாவும் இந்த உலகத்தில் நடக்கும் சில விசயங்கள் பற்றி பேசினோம். நான் ஒரு பக்கம் சார்ந்து பேசினேன். ஒரு பிரச்சினைக்கு விடை ஒன்று மட்டுமே என நினைத்தேன். என் அப்பா அதை மாற்றினார். எந்தக் கண்ணோட்டத்தில் ஒருவர் பிரச்சினையை பார்க்கிறார் என்பது முக்கியம். எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆரம்பத்தில் எனக்கு இது புரியவில்லை. ஒரு சம்பவத்திற்கு பின்னால் ஒரு கதை மாத்திரம் இல்லை. பல கதைகள் இருக்கின்றன.  இப்பொழுது ஒன்றை நான் ஆராய்ச்சி உணர்வுடன் பார்க்கிறேன். பல கோணங்களில் இருந்து அலசுகிறேன். புத்தகங்களை மேலோட்டமாகப் படிக்காமல் அவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்செய்கிறேன். யாராவது என் நாவலை விமர்சித்தால் நான் அதை வரவேற்கிறேன்.  நாவலை மேம்படுத்துவேன். என்னையும்தான்.

பதில் பேரா. பசுபதி: கடுமையான விமர்சனங்கள் எனக்குப் புதிதல்ல.  மூன்று, நான்கு விமர்சகர்கள் சொல்லும் திருத்தங்களுக்கு ஏற்பக் கட்டுரையை மாற்றி,  அவர்களுக்கு அனுப்பி, கடைசியில் அவர்கள் ஏற்ற பின்னரே நூற்றுக்கும் மேற்பட்ட என் மின்னியல் துறைக்  கட்டுரைகள் ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. சிறுபான்மை விதிவிலக்குகள் தவிர, மற்றபடி விமர்சகர்கள் சொல்வதில் உண்மை உள்ளது என்பதே கசப்பான மெய்! அதனால், இதையே நான் என் தமிழ்ப் படைப்புகளிலும் கடைப்பிடிக்கிறேன். பொதுவாக, என் கவிதைகளில் ஓசைச் சிறப்பின்மையோ, பொருள் மயக்கமோ, இலக்கணப் பிழைகளோ இருப்பதைச் சுட்டிக் காட்டுவார்கள் விமர்சகர்கள். இணையத்தில் நான் எழுதிய யாப்பிலக்கணக் கட்டுரைகளை நூலாய் எழுதும் போது,  என் இணைய மாணவர்களின் கேள்விகளையே விமர்சனங்களாய் ஏற்று, முடிந்தவரை மாற்றி எழுதினேன்.   ஏனெனில் ஆக்கபூர்வமான திறனாய்வு படைப்பைச் செம்மைப் படுத்துகிறது என்பதே என் அனுபவம்.

 

  1. உங்களுக்கு 5 வயதில் தெரிந்து இப்பொழுது மறந்தது என்ன? இப்பொழுது உங்களுக்கு தெரிந்த ஒன்று உங்கள் 5 வயதில் தெரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நினைத்ததுண்டா?

பதில் அஞ்சலி: ஐந்து வயதாயிருந்தபோது எனக்கு உலகம் புதிது. ஆகவே பிழை விடுவதற்கு பயமே கிடையாது. ஏதாவது புதிதாகக் கண்டால் துணிச்சலாக ஆராய்வேன். இப்பொழுதெல்லாம் ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என புது விசயங்களை முயற்சி செய்வது குறைந்துபோனது.  அது ஓர் இழப்புத்தான். ஒன்றிரண்டு பிழை விடுவது அப்படியொன்றும் பெரிய விசயமில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

இப்பொழுது தெரியும் ஒன்று ஐந்து வயதில் தெரிந்திருந்தால் நல்லாயிருக்குமே என நான் நினைப்பது பொறுமைதான். சிறுவயதில் எனக்கு பொறுமை கிடையாது. நல்ல விடயங்கள் நடக்கவேண்டுமானால் பொறுமை அவசியம். அது இல்லாததால் நான் முயற்சியை பாதியிலேயே விட்டிருக்கிறேன். இப்பொழுது எனக்கு பொறுமையாக காத்திருக்கத் தெரிகிறது. சிறுவயதில் இந்தக் குணம் இருந்திருந்தால் இன்னும் நல்லாக இருந்திருக்குமே என இப்போது தோன்றுகிறது.

பதில் பேரா. பசுபதி: எனக்கு ஒரு தங்கை இருந்தாள். தொண்டை அயற்சி நோய் – டிப்தீரியா- வந்து சிறுவயதிலேயே இறந்து விட்டாள். அவள் மறைந்த நாள், தாய்தந்தையரின் துக்கம் இவை யாவும் எனக்கு மங்கலாய் நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவளுடன் விளையாடிய நினைவுகள்    இன்று துளியும் இல்லை; இது எனக்குப் பெரிய வருத்தம் ..இன்றும்.

 

இன்று எனக்குப் பொதுவான தமிழிலக்கணம், யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும் என்று நம்புகிறேன். சிறுவயதில் இந்தப் பொக்கிடங்கள் என் கையில் கிட்டியிருந்தால், கவிதையில் ஆர்வம் பெருகி, பழந்தமிழ் இலக்கியங்களை முறையாய்ப் படித்திருப்பேனோ?  என் வாழ்வின் திசையே மாறியிருக்குமோ, என்னவோ?

 

  1. நீங்கள் வாசித்த கடைசிப் புத்தகம் எது? எப்படி உங்கள் புத்தகங்களை தெரிவுசெய்கிறீர்கள்.

பதில் அஞ்சலி: நான் கடைசியாகப் படித்தது டான் பிரவுண் என்ற நாவலாசிரியர் எழுதிய The Davinci  Code. இதன் ஆசிரியர் என்ன கச்சிதமாக வரலாற்று செய்திகளையும் புனைவையும் பின்னிப் பிணைத்து இப்படி ஒரு நாவலை எழுதியிருக்கிறார் என்பது பெரும் வியப்பைத் தரும். ஆரம்பத்திலிருந்து நாவலில் ஏற்பட்ட திருப்பங்களும் மர்மங்களும் ஒருவருடைய மூச்சை அடைக்கும். நான் என் புத்தகங்களை, என்னைப்போல வாசிப்பு ரசனை உடைய சிநேகிதிகளின் பரிந்துரையில் தெரிவு செய்கிறேன்.  பெரிய அதிர்ஷ்டம் என்னவென்றால் என்னுடைய அப்பாவின் ரசனையும் ஏறக்குறைய ஒன்றுதான். டாவின்சிகோட் புத்தகத்தை அவர்தான் படிக்கச் சொன்னார். இதிலே உள்ள அனுகூலம்,  நாவலை வாசித்து முடித்துவிட்டு அதைப் பரிந்துரை செய்தவரிடமே விவாதிக்கலாம். அப்படிச் செய்யும்போது கூடுதல் புரிதல் கிடைக்கிறது.

பதில் பேரா. பசுபதி;  2016 ‘கலைமகள்’ தீபாவளி மலர். ஒவ்வொரு வருடமும் நான்கைந்து தீபாவளி மலர்கள் வாங்கிப் படிப்பது தான் என் தீபாவளிக் கொண்டாட்டம்! இந்த வருடம் வாங்கின மலர்களில் கடைசியாய்  இதைப் படிக்க இத்தனை நாள்கள் ஆயின!.  ஆர்.வெங்கடேஷ் எழுதிய  ’ராஜாஜி’  படிக்கவேண்டும். அத்துடன் அ.கி.வரதராசன் எழுதிய ’அரிய மாமனிதர் அழகப்பர்’ படிக்கலாம்.   கலித்தொகையைப் படிக்கலாம், படித்தபின் ”ஏதேனும்” எழுதலாம் என்று திட்டம் போட்டுள்ளேன். சங்கச் சுரங்கம் தோண்டத் தோண்டப்  பிரமிப்பையும், படைப்பிலக்கியச் சவாலையும்,  கொடுக்கும் ஒரு தங்கப் பொக்கிஷம் அல்லவா?

END

 

 

 

 

 

 

 

 

About the author

511 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta