மாவோவுக்காக ஆடை களைவது
தைலா ராமானுஜம்
மொழிபெயர்ப்பு: அ.முத்துலிங்கம்
‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும் நியோன் விளக்கு அம்புக்குறி இருந்தால்தான் உன்னால் கழிவறையை கண்டுபிடிக்கமுடியும்.’
‘மகளே, இதற்கு முன்னர் நான் வெளிநாட்டுக்கு பயணமே செய்ததில்லையா?’
‘அம்மா, ஆசியா புடாபெஸ்ட் இல்லை; அங்காரா இல்லை. மன்னிக்க வேண்டும், டாக்டர் விபிக்கா அவர்களே, சியோல் விமான நிலையத்தில் சில மணிநேரம் தங்கியதை ஆசியப் பயணத்தில் சேர்க்க முடியாது.’
விபிக்காவுக்கு தன்னுடைய மகளின் அதிகாரமான குரலை தொலைபேசியில் கேட்கப் பிடிக்கும். எல்லாம் அறிந்தவள். வாஷிங்டன் தெருக்களில் உலக நடப்பை மெத்தத் தெரிந்துகொண்ட ஒருவரின் இளங்குரல். குழந்தையாக இருந்தபோது பட்டாணிக் களியை அவள் சின்ன வாய்க்குள் ஊட்டியது இன்னும் நினைவிலிருந்தது. எப்பொழுது இந்தக் குழந்தை தாய்க்கு புத்திசொல்லும் அளவுக்கு வளர்ந்தது என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருந்தது.
தொலைபேசியை கையில் பிடித்துக்கொண்டு விபிக்கா நாற்காலியிலிருந்து இறங்கி தன் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனைக்காக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரவு விலங்குகளின் முன் நிமிர்ந்து நின்றார். திரும்பி சுவரில் பதித்திருந்த ஆள் உயரக் கண்ணாடியை பார்த்தார். பழைய தளபாடங்களும், மருத்துவ இதழ்களும், மேசையில் கட்டுகட்டாக பேப்பர்களும் பீசா கோபுரம்போல சரிந்து கிடந்தன. அந்தப் பின்புலத்தில் அவருடைய ஒல்லியான தேகமும், ஒட்ட வெட்டிய தலைமுடியும், பிரத்தியேகமான சிவப்பு காலணியும் பிரதிபலிப்பதை கண்டார்.
ஒரு பறவை கிளையில் உட்காருவதுபோல மெதுவாக தன் நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய கழுத்தை சுற்றிக் கிடந்த டெலிபோனில் மகளின் மிருதுவான குரல் அவர் காதுகளில் ஒலித்தது. ஏதோ நினைப்பில் கணினியில் வந்த மின்னஞ்சல்களை கீழே உருட்டி மேலோட்டமாகப் பார்த்தவரை ஒரு செய்தி ஓவென்று அழைத்தது.
’மகளே, நீ நம்பமாட்டாய். என் சக பேராசிரியை, விஞ்ஞானி, மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். கொஞ்சம் நில். இதனை நான் உனக்கு வாசித்துக் காட்ட வேண்டும். இவர்தான் எங்களுக்கு எதிரான கென்டக்கி ஆய்வுக்குழுவின் தலைவர். அவர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? நீ தயாரா? ‘ஆண்கள் ஆளும் இந்த உலகில் கவனம் பெறுவதற்கு நான் புதிரான கவர்ச்சி காட்டும் சிவப்பு உடையில் மருட்டும் பெண்மணியாக மாறத் தேவையில்லை.’
மகளுடைய அதிர்ச்சியான எதிர்வினைக்கு விபிக்கா காத்திருந்தார். ஒரு பதிலும் வராததால் தொடர்ந்தார். ‘அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடுதான். நீ என்ன சொல்கிறாய்? ஒருவர் அணியும் உடையில் என்ன இருக்கிறது? அவருக்குள்ளே என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம்.’
‘அம்மா, உன்னுடைய பிறாண்டும் நகங்கள் கொண்ட எதிரி பற்றி எனக்கு கேட்க விருப்பம்தான். நான் இப்ப போகவேண்டும். பின்னர் அழைக்கிறேன்.’
தொலைபேசியை வைத்துவிட்டு மின்னஞ்சலை திரையிலிருந்து அகற்றியபோது அது ஒளிவீசிக்கொண்டு அழிந்தது. இழுப்பறையிலிருந்து உடைகள் பட்டியல் புத்தகத்தை எடுத்து இரண்டு சோடி சிவப்பு காலணிகளுக்கும், ஒரு முதல்தரமான சிவப்பு விருந்து ஆடைக்கும் மின்னஞ்சல் மூலம் ஆணை கொடுத்தார். அந்த ஆடை மாடல் அழகியின் கால்களை மூடுவதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. ஐம்பதுகளை தொடப்போகும் அவருடைய கால்களை அது என்ன செய்யும் என்ற கற்பனையில் அவர் மூழ்கினார். ‘சிவப்போ இல்லையோ என்னுடைய ஆய்வுக் கட்டுரையை மதிப்புமிக்க The American Bone and Joint Journal பத்திரிகை ஏற்றுக்கொண்டு விட்டது. உன்னுடையதை நிராகரித்தது. அவ்வளவுதான்.’
சமீபத்தில் அட்லாண்டாவில் நடந்த மருத்துவ விஞ்ஞானிகளின் மாநாட்டில் டாக்டர் விபிக்கா விக்டர் ஓர் அறையில் தன் ஆராய்ச்சி உரையை முடித்துவிட்டு இன்னொரு அறைக்கு வேறு கட்டுரை படிப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தார். அவர் இடது கையில் மடிக்கணினியும், வலது கையில் கட்டுக் கட்டாக பேப்பர்களும், வாயில் அன்றைய நிகழ்ச்சிநிரலும் இருந்தன. சிலருக்கு தலையாட்டியும், சிலரைக் காணாததுபோல தவிர்த்தும், இங்கேயும் அங்கேயும் அவசரமாக நடந்தபோது அவருடைய குதி உயர் சிவப்புக் காலணி எழுப்பிய ’கிளிக், கிளிக்’ ஒலியில் எல்லோரும் சட்சட்டென்று விலகினர். அவர் மின்தூக்கியில் ஏறியபோது ஒரு மனித அலை நகர்ந்து இடம் விட்டது.
மின்னொளிப் பிரகாசத்தில் எத்தனைதான் விறைப்பாகவும், கூச்சமாகவும் அவர் உணர்ந்தாலும் விளக்குகளின் ஒளியை குறைத்து இருள் சூழ்ந்ததும், அவர் உரையாற்றியபடியே மிளிரத் தொடங்குவார். அரங்கிலே உள்ள பெரிய திரையில் அவருடைய முழு உருவமும் தெரியும். இரண்டாயிரம் சோடி காதுகள் அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கக் காத்திருக்கும்போது அவரை அறியாமல் அவர் குரலில் நுணுக்கமான உணர்வுகளும், அற்புதமான தொனியும் வெளிப்படும்.
நாள் முடிவில் இரு ஆண்கள் அவரை அணுகி சீனாவுக்கு செல்லும் நோய் எதிர்ப்பியல் ஆய்வுக் குழுவுக்கு அவர் தலைமை தாங்கமுடியுமா என்று கேட்டனர். அவர்கள் வாஷிங்டனிலிருந்து வந்திருந்தார்கள். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும், தொழில்முறையில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் சிநேகமான உறவு பரிமளிக்கவேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். மூட்டு முடக்கு வாதத்துறை குழுவும் அவர் சீனா வரவேண்டும் என விரும்பியிருந்தது. சீனக் குடியேற்றவாசிகளுக்கு ஏற்படும் முழங்கால் வாதம், மற்றும் குருத்தெலும்பு தேய்வுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆய்வு உலகத்தின் கவனத்துக்கு வந்திருக்கிறது.
விபிக்கா இந்த அழைப்பு பற்றி யோசித்தார். சிவப்பு, சீனாவின் மங்கலமான நிறம். ஆகவே அவர் புது ஆடைகள் வாங்கத் தேவை இல்லை. பல வருடங்களாக அவர் சிவப்பு ஆடைகளையே அணிந்து வந்தார். இப்படியொரு தற்செயலான லாபம் கிடைப்பதை அவர் எண்ணிப் பார்க்கவில்லை.
அவர் வளர்த்த பூனை சமீபத்தில் சிறுநீரகம் பழுதுபட்டு இறந்துவிட்டது. ஆய்வுக்கூட சுண்டெலிகளுக்கு அது பெரிய இழப்பு அல்ல. கலிஃபோர்னியா வாழ் எதிர்பால் விரும்பும் ஆண்களுக்கு அவர் இருப்பதே தெரியாது. பெய்ஜிங்குக்கு 12 நாள் விஞ்ஞான, கலாச்சார புரிந்துணர்வு பரிமாற்றத்துக்கான பயணம் கொஞ்சம் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
’அம்மா, நீ பறவைபோல சிந்திக்கப் பழகு. பறவைபோல நட. பறவைபோல உன் இனத்துடன் கூட்டமாக இரு.’ அவர் மகள், சிலநாட்களுக்கு பின்னர் அழைத்து அமெரிக்காவின் கிழக்கு கரையோர உச்சரிப்பில் சொன்னாள்.
‘பறவையைப்போல கூட்டமாக இருப்பதா? சரி, வேறு என்ன புத்திமதி, மகளே.’
‘அம்மா, சீனாவின் நீண்ட பயணம் பற்றிய வரலாறு உனக்குத் தெரியவேண்டும். அது தெரியாமல் போகக்கூடாது. முக்கியம்.’
‘ஓ, நான் மாவோ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.’
‘அம்மா, அது போதாது. ஒவ்வொரு சீனக் குழந்தைக்கும் கூட மாவோ யாரென்பது தெரியும். இன்னும் கொஞ்சம் அறிவைக் கூட்டவேண்டும்.’
‘என்ன மாதிரி?’
‘உதாரணம், நீண்ட பயணம்.’
‘என்ன நீண்ட பயணம்?’
டாக்டர் விபிக்கா விக்டர் அவரது பணியிடமான பேலோ அல்டாவிலிருந்து சில மைல் தூரத்தில் தனியாக வசித்தார். சீனாவுக்கு போகமுன்னர் அவர் ஒருமாதம் மருத்துவமனையில் நோய் எதிர்ப்பியல் மருத்துவராக கட்டாய பணியாற்றவேண்டும். ஒவ்வொரு தடவையும் கட்டாய மாதம் வரும்போது அவருக்கு நடுக்கம் பிடித்துவிடும். இந்தப் பயம் நீண்ட நேரம் நோயாளிகளுக்கு சேவை செய்யவேண்டுமே என்பதனால் அல்ல. 12 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்த பின்னர் அவருக்கு வியாழக்கிழமைகளில் அரை நாள் ஓய்வு கிடைக்கும். மனித உடம்பில் ஏற்படும் நோய்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் அவர் திறனில் ஒரு குறையும் இல்லை. நோயாளிகளில் காணப்படும் அறிகுறிகளை வைத்து 15 விதமான நோயின் சாத்தியக்கூறுகளை அவரால், அவரைச் சுற்றி நிற்கும் மருத்துவ மாணவ மாணவிகளை மயக்கும் விதமாக விவரிக்க முடியும். அவரிடம் நீங்கள் ஹரிஸன் மருத்துவ புத்தகத்தின் 481வது பக்கத்தை ஒப்பிக்கச் சொன்னால் ’எந்தப் பதிப்பு?’ என்று கேட்டு உங்களை திகைக்க வைப்பார்.
உன்மையில் விபிக்காவின் பிரச்சினை என்னவென்றால் நோயாளிகளின் கைகளைப் பிடிப்பது, கண்களைப் பார்ப்பது, மேலும் அவர்கள் உணர்வுகளுக்கு அனுசரணையாகப் போவது. அவை அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது.
ஆனால் ஆய்வுக்கூடத்தில் சுண்டெலிகளுடன் நாட்களைக் கழிப்பது அவருக்கு பிரியமானது. அவற்றின் செல்களிலிருந்து புரதச்சத்து மூலக்கூறுகளை ஊசியால் உறிஞ்சியெடுக்கும்போது அவருக்கு ஏற்படக்கூடிய உணர்ச்சிப் பரவசத்தை விவரிக்க முடியாது. அவருடன் மனதுக்கு நெருக்கமாக இருந்த ஆண் அவருடைய மகளின் அப்பாதான். ஆனால் அவர் விபிக்காவுக்கு மறக்க முடியாத இரண்டு அடையாளங்களைக் கொடுத்துவிட்டு பிரிந்து போனார். ஒன்று அவர் பெயர், மற்றது மகள். கடைசியாக தொடர்பு கொண்டபோது அவர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அதன் பின்னர் 15 வருடங்கள் எவரெஸ்ட் சிகரம் ஏறும் குழுக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.
சனிக்கிழமை ஆய்வுக்கூடத்தில் விபிக்கா வசதியாக அமர்ந்து சுண்டெலிகள் கீச்சிட, மெசின்கள் சத்தம்போட, குளிர்சாதனப்பெட்டி விட்டுவிட்டு உயிர்பெற்று முனங்க, தன் மகள் அனுப்பிய ’சிவப்பு ராணுவம்’ புத்தகத்தை வெளியே எடுத்தார். கால்களை மேசைமேல் போட்டு, அவ்வப்போது விற்பனை மெசினில் வேண்டிய உணவை வருவித்து உண்டபடி, முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடித்தார்.
கைக்கடிகாரத்தை பார்த்தபோது நாள் முடிவுக்கு வந்ததை உணர்ந்தார். இருட்டிலே கடிகாரம் ஒளிர்ந்தது, மார்ச் 2004 , இரவு 9.05. மேசை நாள்காட்டி தாளை கிழித்தார். அவருடைய மகள் வாஷிங்டனில் புத்தம் புது நாள் ஒன்றை தொடங்கியிருப்பாள். விபிக்கா, தான் வாசித்து முடித்த புத்தகம் பற்றி சிந்தித்தார். தன் தோழர்களுடன் தலைவர் மாவோ மேற்கொண்ட அந்த நெடும்பயணம் எத்தனை ஆச்சரியகரமானது. ஆண்களும், பெண்களும் கைகோர்த்து, மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், வயல்கள் என்று பயணம் செல்கின்றனர். வழியில் பிறக்கும் பிள்ளைகள் கைவிடப்படுகின்றனர். போராட்டம் உந்துதல் பெறுகிறது. வரலாறு பிறக்கிறது.
அவர் உடம்பில் திடீரென்று சக்தி அதிகமாகிறது. மின்விளக்கை அணைத்துவிட்டு உடல் பயிற்சி ஆடையை அணிந்துகொண்டு வீடு நோக்கி ஓடத் தொடங்கினார்.எட்டு கலிஃபோர்னியா மைல்கள்.
பெய்ஜிங் குன்லுன் ஹொட்டல் அறையினுள் நுழைந்தபோது ஒரு வரவேற்புக் கூடை அவர் படுக்கை மேல் இருந்தது. அதற்குள் பண்டாக்கரடி வடிவமைப்பில் கொலர் வைத்த டீ சேர்ட்டும், சீனச் சப்பாத்தும், நறுமணத் தைலமும் காணப்பட்டன. ’அமெரிக்காவில் செய்தது’ என நறுமணத் தைலத்தில் எழுதியிருந்தது. ‘அப்படியா’ என நகைப்புடன் நினைத்துக்கொண்டார்.
பெய்ஜிங்கில் இரண்டாவது நாள், சீன நேரம் காலை இரண்டு மணிக்கு முழிப்பு வந்துவிட்டது. எந்த டிவி சானலை திருப்பினாலும் மோனிக்கா லுயின்ஸ்கியும், நிக்கோல் கிட்மனும் மாறி மாறி வந்தனர். அவர்கள் ஆங்கிலம் பேசினாலே அலுப்பாக இருக்கும். இங்கே மாண்டரின் மொழியில் இன்னும் மோசமாக வதைத்தனர். தூக்கம் வரும் அறிகுறியில்லை. டிவியை அணைத்துவிட்டு ஒரு நாற்காலியில் நிமிர்ந்து நெடுநேரம் உட்கார்ந்தார். பின்னர் பயணப் பெட்டியில் இருந்து சில முக்கியமான மருத்துவ இதழ்களையும், போலரோய்ட் காமிராவையும், மெல்லிய நீளக் காலுறையையும் மற்றும் சிவப்பு உதட்டுச் சாயத்தையும் எடுத்து தோள்பையில் அடைத்தார். நறுமணக் குளியலுக்குப் பிறகு உடம்பில் கொஞ்சம் தென்பு பிறந்தது. தன் தொழில் உடைகளையும், சிவப்புக் காலணிகளையும் அணிந்து, அடர்த்தியான மாசுக்காற்றினால் சூழப்பட்ட சயோங் நகரின் வீதிக்கு வந்து தன்னை அழைத்துப் போகவரும் வாகனத்துக்காக காத்து நின்றார்.
பீக்கிங் மருத்துவமனை சார்ந்த இளம் மருத்துவ மாணவ மாணவிகள் நடைபாதை ஓரங்களில் நின்று ரகஸ்யக் குரலில் பேசினர். முட்டிமோதியபடி, திருகுசுருள்போல அவர்கள் சுறுசுறுப்புடன் இயங்கினார்கள். அவர்களுடைய வயதுகளை கணிக்கவே முடியவில்லை, பறவைகளைப்போல. நடுத்தரவயது மைனாவையும் இளம் மைனாவையும் எப்படி பிரித்தறிவது? ஆனால் முதுமை அப்படியொன்றும் சூட்சுமமானதில்லை. அது வரும்போது உலகத்துக்கு தெரிந்துவிடும்.
இளம் மாணவ மாணவிகள் புடைசூழ ஒரு முதியவர் வேகமாக நடந்து வந்தார். கருத்தரங்கு கூடத்துக்குள் அவர் நுழைந்ததும் மாணவ மாணவிகள் மௌனமாகினர். அமெரிக்க ஆய்வுக் குழுவை அவர் இனிய மெல்லிய குரலில் வரவேற்றார். அடிக்கடி குனிந்து ஒரு சின்னச் சிரிப்புகூட வெளிப்படாமல் வணங்கினார். அவர் பேசியபோது மாணவ மாணவியர் அவருக்கு உயர் மரியாதை அளித்தனர். அவருடைய ஒவ்வொரு சொல்லையும், கடற்கரையில் அபூர்வ கிளிஞ்சல்களை சேகரிப்பதுபோல, ஆர்வத்துடன் பொறுக்கிக் கொண்டனர்.
விபிக்காவை பேச அழைத்தபோது அவர் அரங்கிலிருந்தவர்கள் மீது மழை கொட்டுவதுபோல மருத்துவ தகவல்களை பொழிந்தார். ஒளிப்படங்கள் திரையில் தொடர்ந்து மாறிமாறி ஓட, அவர் அவற்றை விளக்கினார். மிகவும் சிக்கலான மருத்துவ கோட்பாடுகளை நுட்பமான விளக்கங்களுடன் நீளமாகப் பேசியபோது அதை மொழிபெயர்த்தவர் சுலபமான சொற்தொடர்களில் சுருக்கமாகச் சொன்னார். ஆனால் விபிக்கா சிறிய வசனங்களில் சொன்னபோது, மாண்டரின் மொழியில் நீட்டி முழக்கினார். கேள்வி நேரத்தில் வந்த கேள்விகள் ஆழமாக இருந்ததால் அவர்களின் மொழிப் பரிமாற்றம் திருப்திகரமாக இருந்ததை ஊகிக்கமுடிந்தது.
நிகழ்ச்சி அமைப்பின்படி ஒரு நோயாளியை சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வந்தனர். அந்த மனிதரின் கடினமான நோய்க்குணங்களை ஆராய்ந்து சபையிலே விவாதித்து விபிக்கா அவர் கருத்துக்களை பகிரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அவர் தன் முடிவுகளை தர்க்கரீதியில் விளக்க முன்னரே மொழிபெயர்ப்பாளர் இன்னொரு பணிக்காக பாதியிலேயே குனிந்து வணங்கி விடைபெற்று போய்விட்டார். ஒரு சில சீன மாணவர்கள், மற்றும் மொழிக் கூச்சம் அற்றவர்கள் ஒரு மாதிரி விவாதத்தை தொடர முயன்றனர்.
இது ஓர் அருமையான கலாச்சார பரிமாற்றம் என விபிக்கா நினைத்தார். பலவிதமான தகவல்களை அகழ்ந்தெடுத்த புது அனுபவம் அவருக்கு உற்சாகத்தை தந்தது. நோயாளி பாவம், அதே சக்கர நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். சந்திரன் போன்ற அவருடைய முகத்துக்கு கீழே கழுத்தைச் சுற்றி சிவப்புச் சால்வை கிடந்தது. ஒட்டிக்கிடந்த புருவங்களுக்கு மேல், மறையும் சூரியன் போன்ற அம்மைத் தழும்பு. நாற்காலியில் அமர்ந்திருந்தவருக்கு அதிசயமாக அங்கிருந்தவர்களிலும் பார்க்க அதிகமாக ஆங்கிலம் தெரியும்போல பட்டது. ஒரு செப்படி வித்தைக்காரர்போல அவர் மெதுவான குரலில் சபையோரின் கேள்விகளையும், விபிக்காவின் பதில்களையும் பரிமாற உதவினார். சம்பிரதாயமான பல கைகுலுக்கல்களுக்குப் பிறகு கூட்டம் முடிவுக்கு வந்தது.
அமெரிக்கக் குழு அதன் பின்னர் சக்கர நாற்காலி கிழவரை, சிவப்பு கழுத்துச் சால்வையுடன், ஒரு மரத்தின் கீழ் கண்டது. அருகாமையில், மருத்துவ மனையின் வடக்கில், பித்தளை கோபுரம் காட்சியளித்தது. அவர் பக்கத்திலே நின்ற பிரம்மாண்டமான டிராகன் உருவச் சிலையை பிரமிப்புடன் பார்த்தனர். மேலே விதானத்தில் பறந்த கொடிகளின் கீழ் குழுவினர் ஒன்று சேர்ந்தனர். விபிக்கா அவர்களை தன்னுடைய போலரோய்ட் காமிராவில், மிகச் சிரமப்பட்டு, டிராகனை காமிரா சதுரத்துக்குள் அடக்கியும், கிழவரை வெளியே தள்ளியும், படம் எடுத்தார்.
அடுத்த நாள், கடுமையாக உழைத்த குழு அங்கத்தினர்களுக்கு விடுமுறை என அறிவித்தார்கள். ஜனாதிபதி கிளிண்டனுக்கு பிரியமான பீக்கிங் வாத்தை அண்மையிலுள்ள உணவகத்தில் ருசிபார்ப்பதற்கு பலர் முடிவெடுத்தனர். விபிக்கா தன்னுடைய உடல் பயிற்சி கட்டை கால்சட்டையையும், பரிசாகக் கிடைத்த டீசேர்ட்டையும் அணிந்து, இம்பீரியல் யுவான் தோட்டத்தை பார்க்கப் போவதற்கு முடிவு செய்தார். அவருடைய முதுகுப் பையில் தொலைபேசி எண்கள், மாண்டரின் எழுத்தில் அவர் தங்கிய ஹொட்டல் முகவரி, முக்கியமான பயணப் பொருட்கள் அடைக்கப்பட்டிருந்தன. அவர் தன் கல்லீரலை எப்படி விட்டுவிட்டு போகமாட்டாரோ அப்படியே அந்தக் கைப்பையையும் அவர் எங்கே போனாலும் தன்னுடனே எடுத்துப் போவார்.
வாடகைக்கார் அவரை செதுக்கிய பச்சைக்கல் உருவங்கள் விற்கும் அங்காடிக்கு பக்கத்தில் இறக்கிவிட்டது. எல்லாச் சந்தைகளைப்போல அது சத்தமாக இருந்ததுடன் கடலின் ஓசையும் சேர்ந்துகொண்டது. சினிமாக்களில் வருவதுபோல இறைச்சிப் பகுதி கொலைக்களம் போல காட்சியளித்தது. விபிக்கா மறுபக்கம் திரும்பிக் கொண்டார். சிறிய மலிவான உணவகங்களின் முன்னால் காட்சிக்கு வைக்கப்பட்ட கண்ணாடித் தொட்டிகளில் பலவிதமான நீர்வாழ் ஜந்துகள் நீந்தின. வெவ்வேறு விதமான மனிதர்களின் ருசியை திருப்திப்படுத்த அவை தங்கள் தசையை பழுதுபடாமல் வைத்திருப்பதற்கு கடுமையாக உழைத்தன
நிற்காமல் சத்தமிடும் போக்குவரத்து வாகனங்கள், மனிதக் குரல்கள் ஆகியவை அவர் காதுகளை நிரப்பி இது அந்நிய மண் என்பதை அவருக்கு தொடர்ந்து நினைவூட்டின. அவர் தோட்டத்தை அண்மியபோது சில சிட்டுக்குருவிகளும் அவருடன் சேர்ந்து கொண்டன. அவை உணவை புற்களில் குதித்து குதித்து தேடின. விபிக்காவின் காலடிகள் விழும்போது மிகச்சரியாக அவற்றின் இடைவெளியில் புகுந்து உணவை கொத்திக்கொண்டு நகர்ந்தன. இத்தனை அதிகம் மனிதர்களைப் பார்க்கும்போது சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது ஆச்சரியத்தை தந்தது. பழங்கதையில் வரும் ஹாம்லின் நகரத்து ஊதுகுழல்காரன் மாயமாக சிறுவர் சிறுமிகள கவர்ந்து சென்றுவிட்டானோ என்று நினைக்கத் தோன்றியது. திரும்பிய இடமெல்லாம் செயற்கை நீரூற்றுக்கள் தண்ணீரை விசிறியடித்து மகிழ்ச்சியை தந்தன. எங்கே தண்ணீரைக் கண்டாலும் சீனர்கள் அதை நடனமாடச் செய்துவிடுவார்கள்.
சனத்திரளுடன் ஒட்டிக்கொண்டு ஒடுக்கமான பாதையில் விபிக்கா தோட்டத்தை நோக்கி நடந்தபோது தனக்கு சொந்தமான வெளிக்கு என்ன ஆனது என்று யோசித்தார். எது எல்லை என்று தீர்மானிக்கிறாரோ அது மாறியபடியே இருந்தது. சனத்திரள் அலையில் அசைக்கமுடியாத அங்கமாகிவிட்டதை உணர்ந்தார். களிப்புணர்ச்சி பிரவாகமும், பயமும் மாறிமாறி மனதில் பின்னிக்கொண்டன. புதிய நிலக்காட்சி; புதிய முகங்கள். சிறிது நேரம் விபிக்கா உணர்ச்சியின் உச்சத்துக்கு கடத்தப்பட்டார். இந்தக் கனவு நிலை அழிந்து இயல்பு நிலைக்கு திரும்பியபோது அவர் முதுகுப் பை காணாமல் போய்விட்டது. மந்திரவாதியின் தொப்பிக்குள் முயல் மறைவதுபோல.
விபிக்கா நின்று பார்த்த திசை கிழக்காகவோ அல்லது தென்மேற்காகவோகூட இருக்கலாம். பீதியில் அவர் முகத்து தசைநார்கள் திருகி அதை உருத்தெரியாமல் செய்தன. தொண்டை வறண்டது; நாக்கினில் முள்ளுப்பந்து ஒன்று உருண்டது. தட்டித்தடவி சனத்திரளிலிருந்து வெளியேவர முயன்றபோது அணிவரிசை, நெடுவரிசை என மாறி மாறி அள்ளுப்பட்டு மீளமுடியாமல் தத்தளித்தார்.
இலக்கில்லாமல் ஓடி ஒரு நடைபாதை விற்பனைக்காரனின் கவனத்தை ஈர்க்கப் பார்த்தார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. கேள்வியை சரியாக புரியவைக்க வேண்டும் என நினைத்தார். அவருக்கு இப்போது தேவை இந்தப் பிரபஞ்சத்தில், சூரியக் குடும்பத்தில், அவர் தங்கியிருக்கும் ஹொட்டலின் பெயர். விபிக்காவால் அந்தப் பெயரை எவ்வளவு முயன்றும் ஞாபகத்துக்கு கொண்டுவர முடியவில்லை. அவருடைய அப்போதைய எதிர்காலம் ஒரு சின்னச் சமாச்சாரத்தில் தொங்கியது. ஒரு சில சீன எழுத்துக்கள் சேர்ந்த வார்த்தை. எந்த மனித மொழியிலும் ஒரு சில அசைகளில் சொல்லக்கூடிய பெயர். அவருடைய 300 ஆய்வுப் பதிப்புகள், 15 கருத்துருக்கள் அனைத்தும் ஒரு பொருட்டே இல்லை. அவர் யாராகவும் இருக்கலாம். ஒரு வித்தியாசமும் இல்லை. மாயமான அவர் தங்கும் ஹொட்டலின் பெயரை ஞாபகத்துக்கு கொண்டு வருவதுதான் இப்பொழுது முக்கியம்.
கையில் ரோசா மலர்களை ஏந்தியபடி வேகமாக நடந்த ஒரு சின்னப் பெண்னை விபிக்கா கண்டார். கண்மடல்கள் பாதி மூடியிருந்தாலும், அந்தப் பெண்ணின் ஒலிவ் கண்கள் அவர் எச்சரிக்கையானவர் என்று கூறின. விபிக்காவின் உள்மனம் சொல்லியபடி அவரைத் தொடர்ந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவருக்கு அவரைத் தொடர்வது ஆறுதலாகவிருந்தது. அந்தப் பெண் ஒரு கட்டடத்துக்குள் நுழைந்து மறைந்துவிட்டார். அது ஒரு புத்தகக் கடை. நிச்சயம் அங்கே யாருக்காவது ஆங்கிலம் தெரியக்கூடும். பலர் நின்ற நிலையில் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தனர். விபிக்கா மேல் தளத்துக்கு சென்று அங்கே வேலை செய்யும் ஒருவரை தேடினார். புத்தகம் விற்பவர், அடுக்குபவர், சுத்தம் செய்பவர் என யாராக இருந்தாலும் பரவாயில்லை.
கட்டடத்தின் உச்சியிலிருந்து யன்னல் வழியாக அவர் பார்த்தபோது தூரத்தில் ஒரு கட்டடத்தின் மேல் பித்தளையால் அமைக்கப்பட்ட கோபுரம் தெரிந்தது. பலவிதமான கொடிகள் காற்றிலே சிறகடிப்பதுபோல பகட்டாக பறந்தன. அதன் படபடப்பு சத்தம் காற்றிலே மிதந்து அவருக்கு கேட்டதுபோல இருந்தது. கொடிகளுக்கு கீழே அதே டிராகன் உருவச்சிலை. பிசகே இல்லாமல் முதல்நாள் போலரோய்ட் காமிராவில் படம் பிடித்தது இதைத்தான். புத்தகக் கடையைவிட்டு பாய்ந்து வெளியே வந்தார். அந்தக் கட்டடத்திலிருந்து கண்களை எடுக்காமல் விபிக்கா அதை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
’மத்திய உடல்நல அமைச்சகத்திலிருந்து வெளியேறும் வதந்திகளை நிறுத்தும் வேலையில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம்’ என்று அலுவலக சீருடை அணிந்து மேசையில் இருந்த மனிதர் சொன்னார். இளம் பெண் அதிகாரி, மருத்துவ வளாகத்தில் விபிக்கா இங்கும் அங்கும் அலைவதைக் கண்டு அவரை நிர்வாகப் பகுதி மூத்த அதிகாரியின் அறைக்கு அழைத்து வந்திருந்தார். அந்த அதிகாரி தங்கு தடையில்லாத ஆங்கிலம் பேசினார். ‘சமீப காலங்களில் அந்நியர்கள் எங்கள் மருத்துவமனைகளில் புகுந்து தகவல்களைத் திருடுவது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.’ மதிப்பாக சிகரெட் புகைத்தபடி அவர் விபிக்காவை உன்னிப்பாக அவதானித்தார். பின்னர் அவரை ஒரு மடிப்பு கதிரை மேல் அமரச் சொல்லி சைகை காட்டினார்.
‘நீங்கள் என்னை தவறாக எண்ணிவிட்டீர்கள். நான் டாக்டர் சேங் அவர்களால் இங்கே அழைக்கப்பட்ட கௌரவ விருந்தாளி. ஓ, கடவுளே அவர் பெயர் டாக்டர் வாங் ஆகவும் இருக்கலாம். அல்லது டாக்டர் லீ என்பதுகூட பொருத்தம்தான். அவருடைய பெயர் தற்சமயம் என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் நேற்று நான் இங்கே நோய் எதிர்ப்பியல் துறைக்கு வந்திருந்தேன். நான் டாக்டர் விக்டர்; டாக்டர் விபிக்கா விக்டர்.’
அதிகாரி நம்பவில்லை. சிகரெட்டை வாயிலிருந்து எடுக்காமல் முணுமுணுத்தார். ‘அப்படியா? இருக்கலாம். நான் மா சேதுங்.’ அவருடைய ஏளனப் பேச்சு விபிக்காவுக்கு புரிந்தது. சமீபத்தில் சீன வரலாறு படித்தது அவருக்கு உதவியது. இப்பொழுது விபிக்காவுக்கு ஒரு விசயம் துலக்கமானது. சாதாரணமான ’யாரோ ஒருவர்’ என்பதிலிருந்து அவர் இப்போது உளவாளி ஆகியிருந்தார்.
‘எங்கள் பிரச்சினை இதுதான். கெட்ட வதந்திகள். போலியான பால் பவுடர், விலங்குகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் வைரஸ்; எங்கள் ரத்த வங்கிகள் மூலம் பரவும் ஹெச் ஐ வி. முடிவே இல்லாமல் கிளப்பிவிடப்படும் இப்படியான வதந்திகள்.’
விபிக்கா ஒன்றைக் கவனித்தார். ஒவ்வொரு முறை பேசமுன்னரும் அதிகாரி ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைப்பார். பேசும்போது அவர் வார்த்தைகள் சிகரெட்டை சுற்றி வெளியே வரும். சிகரெட் அவர் உதட்டில், சுட்டு விரலால் குற்றம் சாட்டுவதுபோல, ஆடிக்கொண்டே இருக்கும். ‘உலகப் பத்திரிகைகள் இந்த வதந்திகளைப் பிரசுரித்து, அவை வரலாற்றுப் புத்தகங்களில் அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு பாடமாக அமைந்து விடுகின்றன. தேர்வுகளில் இந்தவிதமான கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுதுகிறார்கள். நாங்கள் ஏதாவது செய்ய முன்னரே வதந்திகள் பேருண்மை ஆகிவிடுகின்றன.’ ஏதோ அவர் தன் வேலையைத்தான் செய்கிறார் என்பதுபோல மிரட்டல் இல்லாத தொனியில் பேசினார்.
அளவற்ற சோர்வு விபிக்காவை மூடியதால் அவர் அதிகாரியின் பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டார். அவர் ஒரு விதியையும் மீறவில்லை. அன்றைய சூரியன் மறைவதற்குள் அவர் குற்றவாளியல்ல என்ற உண்மை புரிந்து அவரை விடுவித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதிகாரிக்கு பின்னால் இருந்த யன்னல் வழியாக விபிக்கா வெளியே பார்த்தார். காட்டுப் புறாக்கள் சூரிய வெளிச்சத்தில் ஒவ்வொரு நிமிடமும் முகடு வரைக்கும் பறந்து பின்னர் கீழிறங்கி மீண்டும் மேலே பறந்தன.
செல்பேசியில் யாருடனோ நீண்ட நேரம் பேசியபின்னர் மூத்த அதிகாரி, கட்டளைக்காக எதிரில் காத்திருந்த பெண் அதிகாரிக்கு என்னவோ சைகை காட்டினார். அவர் விபிக்காவை நடைவழிக்கு மற்றப்பக்கத்தில் உள்ள ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். எந்த திசையில் எதற்காகப் போகிறோம் என்பதை ஊகிப்பதற்கு போதிய ஆற்றல் விபிக்காவிடம் இல்லாவிட்டாலும் நடப்பதே பெரும் ஆறுதலாக இருந்தது. அந்தப் பெண் வட்டமாக சிகையை முடிந்து அதன்மேலே அலங்கார முடியை ஏற்றியிருந்தார். ஒரு வண்ணமடித்த நாரையைப் போலவே அவர் தோற்றமளித்தார். அவருடைய ஒய்யார நடையினால்கூட அந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை.
அறைக்குள் நுழைந்ததும் பெண் கதவைச் சாத்தினார். ‘உடையை களையுங்கள்.’ மூன்று வயதுக் குழந்தையிடம் சாதாரணமாக ‘வாழைப்பழத்தை உரி’ என்று சொல்வதுபோல இருந்தது. பின்னர் உறுதியாக தலையை ஆட்டிச் சொன்னார் ‘உள்ளாடைகளையும் சேர்த்துத்தான்.’ ‘ஓ, என்னுடைய உள்ளாடைகளையுமா? கடவுளே, இன்று மாற்றினேனா? காலையில் குளித்த பின்னர் புதியதை அணிந்தது ஒருவாறு நினைவுக்கு வந்தது. ‘பிராவையும் கழற்றவேண்டுமா?’ அவர் திகைப்புடன் கேட்டார். அந்தப் பெண் ஆமென்பதுபோல தலையை அசைத்தார்.
கவனத்துடன் மடிக்கப்பட்ட கழிவறை காகிதச் சுருள் அவருடைய வலது பிராவிலிருந்து கீழே விழுந்தது. வார்த்தைகள் உருவாகுமென்றால், வாய் திறக்குமென்றால், அவர் இப்படிச் சொல்லியிருப்பார். ‘ஒரு பாதுகாப்புக்காகத்தான். என்னுடைய மகள் எப்பவும் தயாராயிருக்கும்படி சொன்னாள். இங்கே சில கழிவறைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பது உங்களுக்குத் தெரியும்தானே. அடிப்படை தேவைப் பொருட்களை நான் வழக்கமாக என்னுடன் எடுத்துச் செல்வேன். ஒரு மார்பு கொள்ளக் கூடியதைத்தான் நான் எடுத்து வந்தேன். கூடவும் இல்லை; குறையவும் இல்லை. இது பெரும் குற்றமா?’
பெண் அதிகாரி குனிந்து உடைகளையும், கழிவறைப் பேப்பரையும் எடுத்துக் கொண்டார். ‘இங்கே காத்திருக்கவும். நான் வருகிறேன்’ என்று கூறிவிட்டு கதவை மெதுவாக சாத்தியபடி வெளியே போனார். விபிக்கா அசையாது நின்றார். உறைந்துபோய். நிர்வாணம் தாங்கக் கூடியதுதான். ஒரு சின்ன அசைவும் நிர்வாணத்தை கூட்டியது. யாரையாவது உடனே தொடர்புகொள்ளவேண்டும் என்ற பெரும் ஆவல் அவரை உந்தியது.
’மனித பரிணாம வளர்ச்சியில் உடை எப்படி இடம்பிடித்தது? உடலுக்கு உண்மையில் அது தேவையான ஒன்று அல்ல. இது அழகுணர்வு சம்பந்தமானது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ அறையில் இருந்த ஒரேயொரு மனிதரிடம் அவர் கேட்டார். வெள்ளைச் சுவரில் பதித்துக் கிடந்த மாவோவின் சட்டமிட்ட புகைப்படம் அது. மாவோவின் உருண்டையான முகம், செந்நிறமாக அலுப்புடன் காணப்பட்டது. எதிர் சுவரில் ஈரவர்ணம் காற்றில் உலருவதை ஆர்வமாக கவனிப்பவர் போல இருந்தார். விபிக்காவுடைய சிந்தனை உள்ளடுக்குகளில் மாவோவுக்கு சிரத்தை இல்லாத போதும் அவர் கவலைப்படாமல் பேசத் தொடங்கினார்.
’மனிதகுலம் முழுக்க ஒரு புள்ளியை நோக்கித்தான் நகர்கிறது. விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் ஒருவரோடு ஒருவர் பின்னப்பட்டிருக்கிறோம். மொழியில்லாமல் பேசினோம். தடை வேலிகள் இல்லாமல் அணிவகுத்துச் சென்றோம். உங்களுடைய நீண்ட பயணம் போல. நான் யார் என்பதோ, எப்படி நான் அழைக்கப்படுகிறேன் என்பதோ பொருட்டல்ல. லிசா, அலெக்சா, அண்டார்ட்டிக்கா எல்லாமே ஒன்றுதான்.’
கதவை தட்டாமல் சட்டென்று உள்ளே நுழைந்த பெண் அதிகாரி ’நட’ என்றார். விபிக்காவின் அதிர்ச்சியான முகத்தை கண்டபோதும் அதிகாரியின் முகத்தில் மாற்றமில்லை. ‘மன்னிக்கவும் உடுப்பை போட்டுக்கொண்டு வெளியே வரவும்’ என்று சொல்லிவிட்டு ஆடைக் குவியலைக் கொடுத்தார். விபிக்கா ஆடைகளை அணிந்தார். ’தோழரே, நான் சொன்னதை செவிமடுத்ததற்கு நன்றி.’ மாவோவிடம் விடை பெற்றார்.
விபிக்கா வெளியே வந்தவுடன் அந்தப் பெண் அவருடைய மணிக்கட்டை இறுகப் பற்றினார். அந்தப் பிடி அவருடைய ரத்தத்தை வற்றச் செய்துவிடும்போல பட்டது. பெண் அதிகாரியும் விபிக்காவும் கிருமிநாசினி தெளித்த மருத்துவமனை நடைவழியில் நடந்தார்கள். அது எழுப்பிய நாற்றம் மருத்துவமனைகளுக்கே உரியது. பக்கத்து தோட்டத்தில், நோயாளிகளைப் பார்க்க வந்த குடும்பங்கள் உட்கார்ந்திருந்தன. நன்றாகப் பராமரிக்கப்பட்ட புல்தரையும், செவ்வந்திப் பூக்களும் விபிக்காவுக்கு சிறிய ஆறுதலைக் கொடுத்தன. இளந்தென்றல் அவர் கன்னத்தை வருடி தலை முடியையும் கலைத்தது.
சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த நோயாளியின் உறவினர்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவு கிளப்பிய மணம் அமெரிக்காவில் அனுபவித்த சீன உணவு போலவே இல்லை. கடைக் கண்ணால், கழுத்துச் சால்வை சுற்றிய, ஒட்டிப்போன புருவம் கொண்ட கிழவரை, விபிக்கா அடையாளம் கண்டார். அவர்தான், அந்த நோயாளி, உடல் வற்றியவர், ரத்த சோகைக்காரர்.
‘ஓ, கடவுளே எனக்கு அந்த மனிதரைத் தெரியும்.’ பெண் அதிகாரியை தரதரவென்று பலமாக இழுத்துக்கொண்டு விபிக்கா கிழவரின் பக்கம் ஓடினார். ’அவர் பாட்டனார் விவசாயி. காசநோயாளர். மூன்று சகோதரர்கள். வலது கால் மூன்றாவது விரல் அழுக ஆரம்பித்துவிட்டது.’ ஒரு ட்ரக்டர் கிளம்பும்போது எழுப்பும் ஒலி போல, பதற்றத்துடன் விட்டுவிட்டு சத்தம் போட்டு, முன்னாலே பாய்ந்தார்.
ஒட்டிய புருவ மனிதர் பாராட்டுணர்வோடு அவரைப் பார்த்தார். விபிக்காவின் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்திருந்த கை கொஞ்சம் தளர்ந்தது. கிழவருடைய வாயிலிருந்து புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகள் வெளியே வந்தன.
END
குறிப்பு; இந்தச் சிறுகதை ஆசிரியரை 2004ல் நான் தொடர்புகொண்டு மேற்படி கதையை மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். மறுத்துவிட்டார். ஒவ்வொரு புது ஆண்டு பிறக்கும்போதும் அனுமதி கோருவேன். கிடைக்காது. இந்த வருடம் பிறந்தபோது ’சரி’ என்று சம்மதம் சொல்லிவிட்டார்.
தைலா ராமானுஜம் கலிஃபோர்னியாவில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றும் பிரபலமான (Rheumatologist) கீல்வாத மருத்துவர். அத்துடன், அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் (MFA in literature and writing) பெற்றவர். நான் அறிந்தவரை தமிழ் மருத்துவர் ஒருவர் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என நினைக்கிறேன். இவருடைய சிறுகதைகள் பல அமெரிக்க இலக்கியப் பத்திரிகைகளில் வெளியாகி விருதுகள் பெற்றிருக்கின்றன. இவர் எழுதிய Recycling சிறுகதை மிகச் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவர் வேறு யாருமல்ல; தலைசிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் இரண்டாவது மகள்.
Connect the following three points in this story.
1) “அவருக்கு இப்போது தேவை இந்தப் பிரபஞ்சத்தில், சூரியக் குடும்பத்தில், அவர் தங்கியிருக்கும் ஹொட்டலின் பெயர். ”
2) “அதே சக்கர நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருந்தார்”.
3) “கிழவருடைய வாயிலிருந்து புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகள் வெளியே வந்தன.”
“A famous Doctor , who published many research papers, was saved by an immovable patient”.