பூமத்திய ரேகை

என்னுடைய அம்மாக்களுக்கு என்னை பிடித்தது கிடையாது. ஒரு அம்மா என்றால் சமாளித்திருக்கலாம். மூன்று அம்மாக்களிடமும் சரிசமமாக, வஞ்சகம் வைக்காமல் பேச்சு வாங்குவது எவ்வளவு கடினம். ஆனாலும் நான் மிகச் சாமர்த்தியமாக பன்னிரண்டு வயதுவரை சமாளித்து வந்தேன். அந்த வருடம்தான் நான் வீட்டைவிட்டு ஓடினேன்.

 

 என் தகப்பனார் பேச்சு வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை வைக்காதவர். அவர் என்னுடன் பேசிய மிக நீண்ட வசனம் ‘டேய்’ என்பதுதான். அப்பாவிற்கு அடிப்பதற்கும், உதைப்பதற்கும் வசதியான ஒரு வயதில் நான் இருந்தேன். மின்னல்போல பிடரியில் அடி விழும்போது அதைத் தடுப்பதற்கு நான் வெகு சிரமப்படுவேன். அதிலும் அப்பா இரண்டு கைப்பழக்கமுள்ளவர். எந்தப் பக்கம் இருந்து அடி வரும் என்பதை முன்கூட்டியே ஊகிக்க முடியாது. வலது பக்கத்தை தடுக்க தயார் நிலையில் இருக்கும்போது இடது பக்கமிருந்து அடி இறங்கும். என் வித்தைகள் ஒன்றும் பயன் தராது.

 அண்ணன், அக்கா, தம்பிமார் என்று வீட்டை நிறைத்து நாங்கள் இருந்தோம். என் தம்பி சிசுபாலன் வடிவாக இருப்பான். பென்சில் சுருள்போலமுடி, மழலை குறையாத பருவம். என்னுடன் சாவதானமாக விளையாடிக்கொண்டு இருப்பான், ஆனால் அப்பாவின் கோபம் என் பக்கம் திரும்பும்போது மாயமாக மறைந்துவிடுவான்.

 அக்கா என்று சொன்னால் என்னுடைய அம்மா அவளுக்கு அம்மா இல்லை, என்னுடைய அப்பாவும் அவளுக்கு அப்பா இல்லை. மூன்றாவது அம்மா வரும்போது அவளையும் கூட்டி வந்திருந்தாள். பெரியவளானதும் பள்ளிக்கூடத்தில் இருந்து நிறுத்தியதில் அவளுக்கு பரம சந்தோஷம். ஒயாது பின்னல் வேலையில் ஈடுபடுவாள். பரம சாது. செத்த எலியை எடுத்து பக்கத்து வீட்டு வளவில் எறிவதற்குகூட தயங்குவாள். ஆனாலும் அப்பா கோபமாக என்மேல் பாயும்போது குறுக்காக விழுந்து தடுப்பது அவள் ஒருத்திதான்.

 என் அப்பாவுக்கு உயிர்களிடத்தில் அன்பு உண்டு. விசேஷமாக புறா, முயல், அணில் இவற்றில் விருப்பம் அதிகம், அதுவும் சமைத்த பிறகு. இப்படித்தான் ஒருமுறை நான் வளர்த்த புறாவை கறி வைத்து சாப்பிட்டுவிட்டார். அதற்கு நான் அழுதேனென்று கூட அடித்தார். அவர் இதற்குத்தான் அடிப்பார் என்று ஊகிக்க முடியாது. என்னுடைய முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிடும்போதே எனக்கு தொடைகள் நடுங்கத் தொடங்கும். ஏதாவது ஓர் அபூர்வமான தவறை அப்போது கண்டுபிடித்திருப்பார்.

 வெளியூர் பயணங்களையும், திருவிழாக்களையும் நான் வெறுத்தேன். இந்தப் பயணங்களில் அப்பா சாமான்களையும், ஆட்களையும் மாறி மாறி எண்ணுவார். கைக்குழந்தைகளை சில வேளைகளில் சாமான்கள் கணக்கில் சேர்ப்பார். சில வேளைகளில் ஆட்கள் கணக்கில் சேர்ப்பார். இங்கேதான் இடைஞ்சல். நான் கணக்கை சரியாக வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுவேன். என் பிரார்த்தனைகளின் பலத்தை நான் இந்த சந்தர்ப்பங்களில் பலமுறை பரிசோதித்ததுண்டு.

 நாங்கள் வீதியில் நடக்கும்போது தரைப்படையின் பத்தாவது பிரிவு போர்முனைக்கு கிளம்புவதுபோல சத்தமும், புழுதியும் எழும்பும். அப்பா முன்னுக்கு அங்கவஸ்திரத்தை விசிறி மாலையாகப் போட்டுக் கொண்டு கைவீசி நடப்பார். அம்மாமார் மூன்றுபேரும் முந்தானைகளை இறுக்கி, கொய்யகத்தை சரிசெய்துகொண்டு, பின்னால் நடப்பார்கள். நடுவிலே அண்ணனும், அக்காவும், கடைசிப்படையாக வேலைக்காரி பூரணத்தின் தலைமையில் நாங்கள் அணிவகுப்போம். முன்னால் போனாலோ, பின்தங்கினாலோ அடி விழுவது நிச்சயம். இந்த நகர்வில் நான் பல போர்த் தந்திரங்களைக் கையாண்டு என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

 கிணற்றடியில் தினம் நடத்தும் அப்பாவின் காலை அனுட்டானங்கள் முக்கியமானவை. வலக்கையின் இரண்டு விரல்களை வாய்க்குள் விட்டு ஓவென்று ஓங்களிப்பார். நாலு அங்குலம் நீளமான தொண்டைக்குள் இவரால் ஆறு அங்குலம் நீளமான விரல்களை நுழைக்க முடியும். பச்சையும், மஞ்சளுமாய் திரவங்கள் வெளிப்படும். அதற்குப் பிறகு வடலிப்பனை ஓலையில் கிழித்து தயார் செய்த ஈக்கிலினால் நாக்கை வழிப்பார். ஒன்பது முறை இப்படி வழிப்பார். பிறகு வாயை அலம்பி கொளகொளவென்று கொப்பளிப்பார். திரும்பவும் இன்னொரு ஒன்பது தடவை வழிப்பு நடக்கும். அது என்னவோ பதினெண்கீழ் நெடுங்கணக்கு போல ஒரு கணக்கு. இந்த நியமத்தில் இருந்து அவர் தவறியதே கிடையாது.

 நான் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் இரவு நேரங்களில் பாயை நனைத்துவிடுவேன். இதைப் பல காலமாக தந்திரமாக மறைந்து வந்தேன். என் தம்பி சிசுபாலன் தலையில் (கால்களுக்கிடையில்) இந்தப் பழியைச் சுமத்தி விடுவேன். அவனுக்கு விவரம் தெரியவந்தபோது அவன் இதனை பலமாக ஆட்சேபித்தான். வீட்டிலே எல்லோரும் விழித்துக்கொண்டு என் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினர்.

 என் அப்பா இந்த விஷயத்தில் அளவுக்கு மீறிய உற்சாகம் காட்டினார். எத்தனை நாளைக்கு தப்ப முடியும். ஒருநாள் அதிகாலை சுகமான ஒரு தூக்கத்தில் என் கவனத்தை சிதற விட்டு அப்பாவிடம் கையும், காற்சட்டையுமாகப் பிடிபட்டேன். அப்பா எனக்கு மிகக் கொடூரமான ஒரு தண்டனை வழங்கினார். முள் முருங்கை மரத்தில் என்னை கட்டி வைத்து அடித்தார். வெய்யில் ஏறும்வரை அடித்தார். அக்கா அழுது மன்றாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தாள். இந்த நேரங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தது அக்கா ஒருத்திதான். ஆனால் அவளும் விரைவிலேயே இறந்துவிடுவாள் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

 அக்கா மூக்குத்தி போட்டிருப்பாள்; முகப்பருவும் போட்டிருப்பாள். இரண்டுமே அவள் முகத்தை இன்னம் அழகுபடுத்தும். புருவ மத்தியிலே சிவப்புப் பொட்டு பிரகாசிக்கும். எப்பவும் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு, முற்றின பலாப்பழம் காக்கையின் வரவுக்காக காத்திருப்பது போல காத்திருப்பாள். அடிக்கடி என் தலைமுடியைக் கோதியெடுத்து மயிலிறகு தடவுவதுபோல விரைந்த முத்தம் தருவாள்.

 முதல் நாள் என்னுடன் சிரித்து விளையாடியவள் ஒருநாள் இரவுக்குள் படுக்கையில் விழுந்தாள். மூளைக்காய்ச்சல் என்று சொன்னார்கள். வைத்தியர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சோதித்து மருந்து கொடுத்தார். அக்கா பாயுடன் சேர்ந்து வதங்கியபடியே வந்தாள். உடல் நிறம் மாறியது. மயில்தோகை போல விரிந்த கூந்தல் ஒளியிழந்து போய் துர்வாடையொன்று மெல்ல பரவியது. ஒருநாள் இரவு தொடங்கும் நேரத்தில் கடவாயில் நீர் ஒழுக இறந்து போனாள்.

 அக்காவின் சாவு என்னைப் பெரிதும் பாதித்தது. ஆறுதலுக்கு அவள் இல்லையென்ற போது என் மனதைப் பெரும் பயம் பிடித்து உலுக்கியது. அப்பாவிடமிருந்து என்னை அவள் காப்பாற்றுவாள் என்று நம்பியிருந்தேன். மாறாக அவள் போனபின்  என் மீதிலிருந்த கெடுபிடிகள் இன்னும் இறுக்கப்பட்டன. இருட்டில் பெரும்பகுதியைத் தூங்காமலே கழித்தேன். இரவு நேர ஓசைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். அப்பாவின் கயிற்றுக் கட்டில் பலவிதமான சப்தங்களை உண்டாக்கும். முனகல்களும், திமிறல்களும் எழும். அவற்றிலே சில சத்தம் வரக்கூடாதென்று நினைக்கும் ஒருவரின் சத்தங்கள்போல எனக்கு படும்.

 ஒருநாள் இரவு. கோதுமை மாவில் உருட்டி உருட்டி செய்து, மூங்கில் குழலில் வைத்து முறியாது தள்ளிய புட்டு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, தண்ணீரும் குடித்தேன். அன்றிவு என் பாயிலிருந்து ஓடிய வெள்ளம் தம்பியின் பிரதேசத்தையும் தாண்டி அம்மா வரைக்கும் போய்விட்டது. பூமியில் இருந்து ஒழிந்துபோன ஒரு தொல் விலங்கின் மூர்க்கத்தோடு அப்பா அன்று என்னைத் தாக்கினார்.

 எல்லாம் ஓய்ந்த பிறகு இரண்டாவது அம்மா என் வியாதிக்கு ஓர் அபூர்வமான யோசனையை சொன்னாள். அவள் சொன்னால் போதும், அப்பா கேட்பார்; தட்டமாட்டார். அதுதான் நானும் அப்பாவும் அந்த சனிக்கிழமை காலை நேரம் கோயிலுக்கு வந்திருந்தோம். கோயில் பலிபீடத்தில் வைத்து பூஜை செய்து காகத்திற்கு எறியும் தளிசையை வாங்கி நான் உண்டால் என் வியாதி மாயமாய் மறைந்துவிடும். இது கைகண்ட மருந்தாம்.

 ஐயர் பலிபீடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். ஒரு கையிலே மணி அடித்துக் கொண்டிருந்தது. அடுத்த கையில் தீபமும், தளிசைத் தட்டும். இன்னும் சில நிமிடங்களில் பலிபீட பூஜை ஆரம்பமாகிவிடும். அப்பொழுது பார்த்து அவள் வந்தாள். விசாலட்சி, விசாலமான கண்களைக் கொண்டவள். என்னோடு படிப்பவள். உப்பு என்று சொல்வதுபோல அவள் உதடுகள் எப்பவும் குவிந்துபோய் இருக்கும். நான்தான் வியாதி பிடித்து அலைகிறேன். இவளுக்கென்ன கேடு! பச்சைப் பாவாடையும், பட்டு ரிப்பனுமாக அந்த நேரம் பார்த்து வந்து விட்டாளே. அவள் என் பக்கம் திரும்பினாள். அதரங்களில் அரை முறுவல். சூரியனைப்போல அவள் கண்கள் பிரகாசித்ததால் அவள் என்னைப் பார்த்தாளா, உலகத்தைப் பார்த்தாளா என்பது தெரியவில்லை.

 பூஜை முடிந்ததும் கணகணவென்று ஒலித்த மணியை நிறுத்திவிட்டு, ஐயர் தளிசையைக் கையிலெடுத்தார். காகங்கள் ஆவலுடன் நாலாபக்கமும் பறந்து அமளி செய்தன. அந்த நேரம் பார்த்து அப்பா, ஐயருடைய மணி பேசிய அதே ஸ்தாயியில் குரலை எடுத்துச் சொன்னார். 'ஐயா, அந்த தளிசையை எறியவேண்டாம். என்னுடைய மகன் பாயோடு ஒன்றுக்கு போகிறான். அதை இவனிட்டை குடுங்கோ ஐயா.' அப்பா வந்து என்னைத் தூணிலிருந்து இடுங்கிக்கொண்டு போனார். என் கால்கள் தரையில் அரைபட்டன, கண்கள் விசாலாட்சியைத்தேடின.

 தளிசை வைத்தியம் வேலை செய்ததா என்பதை அறியும் வாய்ப்பு யாருக்கும் கிட்டவில்லை. அதற்கிடையில் மழைக்காலம் வந்துவிட்டது. அதிலே ஒரு வசதி. இரவிலே மழை கொட்டும்போது கூரை ஒழுகி பாத்திரங்கள் நிரம்பும். பாய்கள் இடம் மாறும். இதமான நித்திரை உண்டாகும். இந்தக் கலவரத்தில் நான் என் சிறுநீர் விவகாரத்தை சௌகரியமாக யாரும் அறியாதவாறு நடத்திவந்தேன்.

 அப்பாவின் செருப்பு சத்தம் வாசலில் கேட்கும் போதெல்லாம் தட்டி மறைவில் ஓடி ஒளிந்துகொள்வேன். வாசலில் செம்பும் தண்ணீரும் மறக்காமல் வைத்திருப்பேன். விளக்கு பளபளவென்று துடைத்து அப்பா கண்படும் இடத்தில் தொங்கும். அப்பாவின் சத்தங்கள் நின்று, ஆபத்து சின்னங்கள் விலகியதும் என் மறைவிடத்தில் இருந்து படிப்பைத் தொடருவேன்.

 என்னுடைய கடைசிப் பரீட்சை நெருங்கிக்கொண்டு வந்தது. இதிலே முதலாவதாகத் தேறினால் பெரிய பள்ளிக்கூடம் போவதற்கு எனக்கு உதவிப் பணம் கிடைக்கும். என்னுடைய அப்பாவுக்கு என் படிப்பைப் பற்றி ஒருவித அக்கறையும் கிடையாது. வருட முடிவில் தேர்ச்சிப் பத்திரத்தில் அவருடைய கட்டை விரல் அடையாளத்தைப் பெறுவதே என்னுடைய உச்சபட்ச சாதனை. படிப்பை நிறுத்த அவருக்கு ஒரு காரணம் தேவையாக இருந்தது.

 அன்று காலை நாலு மணிக்கே எழுந்துவிட்டேன். பாயைத் தொட்டுப் பார்த்து உறுதி செய்தபிறகு மண்ணெண்ணை விளக்கை கொளுத்தி வைத்து படிக்கத் தொடங்கினேன். தட்டியிலே பழைய துணிகளை விரித்து அப்பாவின் கண்ணுக்கு வெளிச்சம் தெரியாமல் பார்த்துக்கொண்டேன்.

 அன்று பூமி சாஸ்திரப் பரீட்சை. எப்படியும் அதில் வழக்கம்போல நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிவிடவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு. எட்டு மணிவரை இருந்த இடத்தில் இருந்தபடியே மனனம் பண்ணினேன். அட்சரேகைகள், தீர்க்கரேகைகள் எல்லாம் என் மண்டைக்குள் தாறுமாறாக ஓடின. செங்கடலும், கருங்கடலும், அரபிக்கடலும் பொங்கி அலை மோதின. என் மூளை நிறைந்துபோய் இருந்தது.

 அவசர அவசரமாக புத்தகங்களை அடுக்கினேன். விளக்கை எடுத்து மாடாவில் வைத்தேன். பென்சிலை சீவினேன். கால் சட்டை மேற்சட்டைகளை எடுத்து தயாராக வைத்துவிட்டு கிணற்றடிக்கு ஒடினேன். வாளியில் தண்ணீர் பிடித்து, ஒரு மூலையில் நின்று சத்தம் செய்யாமல் கை, கால் முகம் என்று கழுவினேன். அப்படியே மெதுவாக நகர முயன்றேன்.

 உலகிலேயே மிகவும் குளிரான பிரதேசம் தென் துருவத்திலிருக்கும் அண்டார்டிக்கா கண்டம். உலகிலேயே மிகவும் குளிரான பிரதேசம் தென் துருவத்திலிருக்கும் அண்டார்டிக்கா கண்டம்.

 “இஞ்ச வாடா.”

 “இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம்.”

 “பல்லு தேச்சியா?”

 “கிழக்கு மேற்காக ஓடும் ரேகை அட்சரேகை.”

 “தேச்சியாடா.”

 “தேச்சேன், அப்பா.”

 “நாக்கு வழிச்சியா?”

 “வடதென்துருவங்களை இணைக்கும் ரேகை தீர்க்கரேகை.”

 “வழிச்சியாடா, சொல்?”

 “ஒரு பாகை தீர்க்கரேகை நாலு நிமிடங்களுக்கு சமம். ஒரு பாகை தீர்க்கரேகை நாலு நிமிடங்களுக்கு சமம்.”

 “வழிச்சியா?”

 “இல்லையப்பா, வழிக்கேல்லை.”

 “ஏண்டா?”

 “நாலு நிமிடங்களுக்கு சமம்?”

 “ஏண்டா?”

 அப்போதுதான் முதல் அடி விழுந்தது. கிடைக்கு பதினைந்து பாகை கோணத்தில், பிடரியில். அட்சரேகையும், தீர்க்கரேகையும் வாய் வழியாக வெளியே ஓடின.

 “நான் வழிக்கமாட்டன்.”

 “என்னடா சொல்றாய், றாங்கியைப் பார்.”

 இன்னொரு அடி.

 “இரண்டு விரலை தொண்டைக்குள் விடுறதும், ஈக்கினால் நாக்கை போட்டு வழிக்கிறதும் பிழை. நீங்கள் வாத்தியாரை கேட்டுப் பாருங்கோ, நான் வழிக்கமாட்டன்.”

 இதற்கிடையில் கிணற்றடியில் சனம் சேர்ந்துவிட்டது. மூன்று அம்மாக்கள், தம்பிமார், பக்கத்து வீட்டுக்காரர்கள். என் பேச்சைக் கேட்க ஆட்கள் வந்ததும் எனக்கு உசார் வந்துவிட்டது.

 “இண்டைக்கு சோதனை எழுதப்போறன். பள்ளிக்கூடத்துக்கு லேட், இந்த நேரம் பார்த்து அடிக்கிறீங்களே. இது என்ன ஞாயம்?”

 “என்னடா ஞாயம்? நான் அடிக்காமல் வேறை யாரடா அடிப்பாங்கள்?”

 மறுபடியும் பிடரியிலும், முதுகிலும் அடி விழுந்தது.

 “அக்கா!, அக்கா!”

 மூன்று அம்மாக்களும் அப்படியே அசையாமல் நின்றனர். ஒருவர்கூடவாய் திறக்கவில்லை. ஒருவித வெட்க ரோசமில்லாமல் அந்தப் பெரிய உருவம் என்னைப்போய் அடித்துக்கொண்டிருந்தது.

 “நிறுத்துங்கோ, காணும், நிறுத்துங்கோ.”

 என் குரலில் இருந்த பயங்கரம் என்னையே திடுக்கிட வைத்தது. என் வாயிலிருந்து முன்பின் யோசித்திராத வார்த்தைகள் புறப்படுவதை என் காதுகள் கேட்டன.

 “கட்டைவிரல் அடையாளம் வைக்கவும், தொண்டைக்குள் கையை விட்டு ஓங்களிக்கவும், என்னை அடிக்கவும்தான் உங்கள் கை வரும். உங்களுக்கு ஒரு பெயர் இருக்க. அதை எழுத வருமா?  கடைசிவரைக்கும் வராது.”

 அப்பாவின் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டும். அம்மாக்கள் வாய் எல்லாம் திறந்துவிட்டது. அதற்கு பிறகு அங்கே நிற்க இயலாது. கடைசிக் கல்லும் கையை விட்டு போய்விட்டது. மாவடி ஒழுங்கையால் விழுந்து எடுத்தேன் ஓட்டம்.

 அன்று நான் பூமி சாஸ்திரம் சோதனை எழுதவில்லை. அதற்கு பிறகு என் வாழ்க்கையில் எந்த சோதனையையும் எடுக்கவில்லை.

END
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta