மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளைமுடி ஆடுகள்

 அந்த வெள்ளைச் சுவரில் கறுப்பு அம்புக்குறிகள் நிறைய இருந்தன. அந்த அம்புக்குறிகளைத் தீட்டியவன் அதிலேயே லயித்திருந்தவனாக இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமாகவே வரைந்திருந்தான். அவற்றைப் பார்த்தபடியே அவள் நடந்தாள். இப்படியே பக்கவாட்டாக வழி காட்டிக்கொண்டு வந்த அம்புக்குறி திடீரென்று ஓர் இடத்தில் வளைந்து நேர்க்குத்தாக மேலுக்குப் போனது. இவள் முகட்டைப் பார்த்தாள். அங்கே ஒரு வார்டோ, போவதற்கு வசதியோ இருக்கவில்லை. பின்பு வளைவில் திரும்ப வேண்டும் என்பதை ஊகித்து  அப்படியே திரும்பினாள்.

 

 அந்த மரப் படிக்கட்டுகள் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. இவள் அதில் தொற்றி கால் வைத்து மொட்டாக்கை ஒரு கையால் பற்றி மறுகையால் அஹமத்தை பிடித்துக்கொண்டு ஏறினாள். அப்படியும் அவை பக்கவாட்டில் ஆடின. அப்பொழுதெல்லாம் அவளுடைய இரண்டு கண்களும் வலைப் பின்னல்களுக்குப் பின்னால் வண்டுகளைப்போல சுழன்றன. மருத்துவருடைய அறை சுத்தமாக இருந்தது. வெள்ளைக் கல்பதிக்கப்பட்ட தரை திருப்பித் திருப்பி அழுத்தித் துடைக்கப்பட்டு தூசி இல்லாமல் மினுங்கியது. திரைச்சீலைகள் வெள்ளையாகத் துவைக்கப் பட்டுத் தொங்கின. பாத்திமா அவ்வளவு வெண்மையையும், சுத்தத்தையும் தாங்க முடியாதவளாக அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். இன்னும் அங்கே அவளுக்கு முன்பாக ஏழு எட்டுப் பெண்கள் காத்திருந்தார்கள்.

 அஹமத் அசௌகரியமாக நாற்காலியில் தொங்கி உட்கார்ந்து கால்களை ஆட்டியபடி சுவரிலே இருந்த படங்களைப் பார்த்தான். அதன் கீழே இருந்த வாசகங்கள் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அந்த படத்தில் இருந்த புழுக்கள் பயங்கரமாக இருந்தன. அவை ஊசி போல மெலிந்தும், நீண்டும், கொக்கி போல வளைந்தும் காணப்பட்டன. அவை எல்லாம் வயிற்றிலே வசிக்கும் புழுக்கள் என்பது அவனுக்குத் தெரியாது. அது தெரிந்திருந்தால் இன்னும் கூடிய ஆச்சரியமடைந்திருப்பான்.

 அந்தப் படத்திற்கு எதிர்த் திசையில் ஆப்கானிஸ்தானின் சர்வாதிகாரி நஜிபுல்லாவின் விறைப்பான படம் ஒன்று மாட்டியிருந்தது. ரஸ்ய துருப்புகள் விரட்டியடிக்கப்பட்டு ஐந்து வருடங்களாகிவிட்டன. ஒரு செப்டம்பர் மாதத்து அதிகாலையில் ஒருவருக்கும் தெரியாமல் இந்த நஜிபுல்லாவை தலிபான்கள் தூக்கிலே தொங்கவிடுவார்கள். அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. பாமியான் பிரதேசத்தின் உலகப் புகழ் பெற்ற, 2000 ஆண்டுகள் வயதாகிய, உலகிலேயே உயரமான, நின்ற கோலத்து புத்தர் சிலைகள் பீரங்கிகளால் அழிக்கப்படும். அதற்கு இன்னும் சரியாக ஏழு ஆண்டுகள் இருந்தன. இது ஒன்றும் தெரிந்திருக்க முடியாதவனாக அஹமத் அந்த படத்தினால் கவரப்பட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 அந்தப் பெண் மருத்துவர் வெளிநாட்டுக்காரி, வெள்ளைத் தோலுடன் யௌவனமாக இருந்தாள். கூந்தலை மடித்துத் தலையிலே சொருகியிருந்தாள். அவள் முகத்தின் இரண்டு பாதிகளையும் அவளுடைய அழகை எவ்விதத்திலும் குறைக்காதவாறு சிறிய செம்பருக்கள் நிறைத்திருந்தன. சிவப்புக் கூந்தல் தேனீக் கூட்டம்போல பின்னால் பறக்க ரோட்டில் அவள் ஸ்கூட்டர் ஓட்டிப்போகும்போது அடிக்கடி பார்த்திருக்கிறாள்.

 அவள் முதலில் அஹமத்துடன்தான் பேசினாள். அவன் என்ன படிக்கிறான் என்று கேட்டாள். அவன் கூச்சத்துடன் ரகஸ்யம் பேசுவது போல பதில் சொன்னான். கண்களைத் தாழ்த்தி வெட்கமாகச் சிரித்தான். அவள் குரல் இனிமையானது. ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலிகளின் உராய்வுக்கும், பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லு வைத்த கட்டிலின் கரகர ஓசைக்கும் நடுவில் அது பொருத்தமில்லாமல் ஒலித்தது.

 இவ்வளவு நேரமும் பாத்திமாவுடைய கறுப்பு அங்கிக்குள் ஒருவித சலனமும் காட்டாமல் ஒளித்திருந்த ஒருவயதுகூட நிறையாத மகவை வெளியே எடுத்து மருத்துவரிடம் காட்டினாள். காற்றையும் வெளிச்சத்தையும் கண்டு அந்தக் குழந்தை அதிருப்தியாக முனகியது. ஓர் அணிலின் வாயைப்போல சிவந்த வாயைத் திறந்து கொட்டாவி விட்டது. இந்த மருத்துவரை பாத்திமாவுக்கு பிடித்துக்கொண்டது. தன் கணவரை இவளிடம் காட்ட வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டாள். அதற்கு கணவர் இடம் கொடுப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் அவள் தீர்மானமாக இருந்தாள்.

 அவர் ஒரு நல்ல கணவராகத்தான் ஆரம்பித்தார். ஆற்றின் ஓட்டத்தில் இணைக்கப்பட்ட ஒரு மாவு மில்லில் அவருக்கு வேலை. ஒழுங்காக வேலைக்குப் போய்வந்தார். முதலில் அஹமத் பிறந்தான். ஒரு வருடம் கழித்து ஹனியா. அதற்கும் பிறகு மற்றவர்கள். இப்படி எட்டு வருடங்கள் ஓடிவிட்டன.

 மாலையானால் அவர் வேலையில் இருந்து திரும்பும் வேளையை குழந்தைகள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவள் சமையலில் மூழ்கி இருப்பாள். குழந்தைகள் பாடத் தொடங்குவார்கள்.

   மழை பெய்கிறது

   பாபா வருகிறார்

   ஆடு கட்டிலின் கீழே

   ஆடே, ஆடே ஓடு, ஓடு

   பாபா வாருங்கள்.

 பாபா வரும்போது அவருடைய முகமும், மயிரும் வெள்ளை நிறமாகக் காட்சியளிக்கும். பிள்ளைகள் இருவரும் பயந்ததுபோல கூச்சலிடுவார்கள். அவரும் கோமாளியாகி சில நிமிடங்கள் விளையாடுவார். கழுத்து நரம்புகள் புடைக்க அஹமத்தை ஒரு கையால் தூக்கி ஆகாயத்தில் எறிவார். இவள் துப்பட்டாவை வாயில் அடைத்துப் பார்த்தபடி இருப்பாள். அந்த மகிழ்ச்சியான காலம் இப்போது வெகு தூரத்தில் இருந்தது.

 ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வரும்போது அவர்கள் பர்வீனைச் சந்தித்தார்கள். அவள் ஆறு ஆடுகளை ஓட்டிக்கொண்டு போனாள். அதிலே இரண்டு குட்டிகள் வெள்ளையாக சடைத்துப்போய் இருந்தன. ‘என்ன அழகான குட்டிகள்’ என்றான் அஹமத். ஏதோ களியாட்டு விழாவுக்கு அவற்றை மட்டும் கூட்டிப் போவதாக ரகஸ்யமாகச் சொன்னது போல அவை துள்ளித் துள்ளிப் போயின. சாதாரணமாக  நடக்கும் தூரத்தையும் பாய்ந்து கடந்தன. நீண்ட கால்கள், முகத்துக்கு பொருந்தாத பெரிய கண்கள், வெள்ளை வெளேரென்று மொசுமொசுவென்று சடை வைத்த மென்மயிர் ஆடுகள். பாத்திமாவுக்கு கண்களை எடுக்க முடியவில்லை.

 சிறு வயதில் அவளிடம் அப்படி ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அவள் போகும் இடம் எல்லாம் அதுவும் வந்தது. இரவு நேரத்தில் அவள் குடிசையில் அவளுடனேயே படுத்தது. அந்த சருமத்தின் மென்மை அவளுக்கு இப்போதும் ஞாபத்தில் வந்தது.

 பர்வீன் ஒரு குடும்பம் கிடைத்துவிட்டதுபோல மிகுந்த சந்தோசத்தோடு இருந்தாள். ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனம் அவளுக்கு இலவசமாக அந்த ஆடுகளைக் கொடுத்திருந்தது. அவளைப் பார்த்தபோது பாத்திமாவுக்கு கொஞ்சம் பொறாமையாகக்கூட வந்தது.

 அஹமத் நச்சரித்துக்கொண்டே இருந்தான். இலவசமான ஆடுகளை உடனேயே போய் எடுத்து வரவேண்டும் என்றான். அவனுக்கும் அந்த வெள்ளை ஆட்டுக்குட்டிகள் பிடித்துக்கொண்டன. பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போதெல்லாம் ஏதோ மாயத்தால் அவை வந்திருக்கும் என்பதுபோல குடிசையின் உள்ளேயும் வெளியேயும் தேடினான். பிறகு முகத்தைத் தொங்கப் போட்டான்.

 அப்படியான சந்தர்ப்பங்களில் பாத்திமா ஒரு தந்திரம் செய்வாள். தோட்டத்தில் சிவப்பு வத்தகப்பழம் இருக்கும். அவற்றை பிறைச்சந்திர வடிவத்தில் வெட்டி வைத்துக் கொடுப்பாள். எல்லாப் பற்களும் சிவக்க அவன் சாப்பிடுவான். அப்போது அவனுக்கு சந்தோசம் தாங்க முடியாமல் போகும். அடுத்த நாள் மாலைவரை மறதி மூடிவிடும்.

 அன்று பாத்திமா சீக்கிரம் வந்திராவிட்டால் அந்தக் காட்சியைக் கண்டிருக்க முடியாது. ஒரு பெரிய விலங்கு வழி தவறிப் புகுந்ததுபோல சமையல் பகுதியில் அவளுடைய கணவர் தவழ்ந்து கொண்டிருந்தார். இரவும் பகலும் தொப்பிகள் பின்னி அவள் சேகரித்த சிறு காசுகள் போட்டு அடைத்த நிடோ டின்னை அவர் கூர்மையாகப் பார்த்தார். பிறகு ஒரு கள்ளனைப்போல மெதுவாகத் தனது இடது கையை அதற்குள் விட்டுத் துழாவினார். திடீரென்று அவளைக் கண்டதும் திகைத்துப்போய் ஒரு வார்த்தை பேசாமல் பாம்பு நழுவுவதுபோல முழங்காலில் நடந்து போனார். அப்பொழுது அவருடைய சருமம் அவளுடைய நீண்ட துப்பட்டாவில் தொட்டது. அவளுக்கு அருவருப்பாயிருந்தது.

 போதைப் பழக்கம் மிஞ்சிவிட்டது அப்பொமுதுதான் அவளுக்குத் தெரிந்தது. நல்லமாதிரி சமயங்களில் தனியாக இருந்தபோது அவரிடம் கெஞ்சிப் பார்த்தாள். ஒரு குழந்தையைப்போல அவர் அழுதார். வாக்குக் கொடுத்தார். ஆனால் அடுத்தநாள் காலை அவருக்கு எல்லாம் மறந்து போனது.

 வரவர அவர் வேலைக்குப் போவதே அரிதாகிக்கொண்டு வந்தது. தனிமையை விரும்பினார். வெறித்த பார்வையோடு வெகுநேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஒருநாள் இரவு எல்லாம் மிகவும் மோசமாகிவிட்டது. அவர் இருமிக்கொண்டே இருந்தார். நிறுத்தமுடியாத இருமல், இவள் எழும்பி அவர் நெஞ்சைக் தடவிக் கொடுத்தாள். அவர் ஏதோ சொல்ல விரும்பி வாயைத் திறந்தார். மூச்சுக் காற்றுடன் இருமல் வெளியே வந்தது. அப்பொழுதுதான் கவனித்தாள். அவருடைய மார்புக்கூடு தசைகளைக் குத்திக்கொண்டு வெளியே தெரிந்தது. கைகள் எல்லாம் மெலிந்துபோய் இருந்தன. உடை தொளதொளவென்று தொங்கியது.

 அவள் கணமும் தாமதிக்காமல் மொட்டாக்கை எடுத்து தலையை மூடிக்கொண்டாள். ஒருவித சைகை உத்தரவுமின்றி அஹமத் லாந்தரை தூக்கினான். தூக்கிவிட்டு தன் செய்கையை தாய் மெச்சவேண்டும் என்ற பாவனையில் அவளைப் பார்த்தான். பிறகு ஒரு வார்த்தை பேசாமல் அந்த இருட்டிலே இருவரும் கிளம்பிப்போய் அந்தப் பெண் டொக்டரை அழைத்து வந்தார்கள். அவர் ஊசி போட்டுவிட்டு “போதைப் பழக்கம் முற்றிவிட்டது உடனேயே சிகிச்சை ஆரம்பிக்கவேண்டும். நாளைக்கே இவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வாருங்கள்” என்றார். ஆனால் மறுநாள் பாத்திமா எவ்வளவு கெஞ்சியும் அவர் மறுத்துவிட்டார்.

 பாத்திமா தைரியமான பெண். தன் வறுமையை அவள் ரகஸ்யமாக அனுபவிக்கவே விரும்பினாள். என்றாலும் இறுதியில் ஒருநாள் அஹமத் கொடுத்த துணிச்சலில் அவள் சம்மதிக்க வேண்டியிருந்தது. அந்த தொண்டு நிறுவனத்திற்குள் அஹமத்தை பிடித்தபடி அவள் மெதுவாக உள்ளே நுழைந்தாள் அவளுடைய நல்ல காலம் அங்கே இருந்தது ஒரு பெண் அதிகாரிதன்.

 “என்ன வேண்டும்?” என்றாள்.

 “அம்மா, நான் ஆடுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்காக வந்திருக்கிறேன். என் பிள்ளைகள் பட்டினி கிடப்பதை என்னால் பார்க்கமுடியவில்லை.” இதற்கு மேலும் அவளால் பேசமுடியவில்லை. ஆனால் அந்தப் பெண் சொன்ன பதிலில் இவள் கண்கள் விரிந்தன. பிறகு கலங்கின, இவளால் நம்பமுடியவில்லை.

 “அம்மா, இந்த நிறுவனம் உங்களைப் போன்ற பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டது தான். இதில் உதவி பெற கூச்சமே தேவையில்லை. நாங்கள் ஆறு ஆடுகளைத் தருவோம். அவை உங்களுக்கே உங்களுக்குத் தான். நீங்கள் பணம் ஒன்றும் கட்டத் தேவையில்லை. அந்த ஆடுகளைப் பராமரித்து அதில் வரும் வருமானத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அவை பெருகும்போது இரண்டே இரண்டு குட்டிகளை நீங்கள் நிறுவனத்துக்கு திருப்பித் தரவேண்டும். உங்களைப்போல வசதி குறைந்த இன்னொரு பெண்ணுக்கு அவை கொடுக்கப்படும்.”

 அவள் நல்லவளாகத் தெரிந்தாள். ஒரு தடித்த கறுப்பு நாளோடு போலிருக்கும் ஒன்றைப் பிரித்து வைத்து அவளுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தாள்.

 “பெயர் என்ன?”

 சொன்னாள்.

 “தகப்பன் பெயர்?”

 சொன்னாள்.

 “கணவன் பெயர்?”

 சொன்னாள்.

 “முகவரி”

 சொன்னாள்.

 “கணவர் எப்போது இறந்தார்?”

 “இறந்தாரா? அம்மா, என் கணவர் இறக்கவில்லை. நோயாளியாக இருக்கிறார். வேலை இல்லை, வைத்தியச் செலவுக்கு பணமும் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம்.”

 அந்த பெண் அதிகாரியின் முகம் கறுத்தது. “அம்மா, தவறான இடத்துக்கு வந்துவிட்டீர்கள். இது விதவைகள் மையம். போரிலே கணவனை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக முதன்மையாகத் தொடங்கப்பட்டது. அதோ பொயர்ப்பலகையைப் பாருங்கள். மன்னிக்கவேண்டும்.”

 இப்பொழுது பாத்திமா மன்றாடத் தொடங்கினாள். அஹமத் தன் தாய் கெஞ்சுவதை இதற்குமுன் பார்த்ததில்லை. அவனுக்குக் கூச்சமாக இருந்தது. நாளேட்டை மூடிவிட்டு அந்தப் பெண் பெரிய அதிகாரியைப் பார்ப்பதற்காக உள்ளே போனாள். பாத்திமாவுக்கு நடுக்கம் பிடித்தது. சுவரைப் பார்த்தாள். அதிலே ஒரு படத்தில் சிறுமி ஒருத்தி ஆட்டுக்குட்டி ஒன்றை 45 பாகை கோணத்தில் சரிந்து நின்று இழுத்து வருகிறாள். பின்னாலே சூரிய உதயம் தெரிகிறது. அதன் கீழே இப்படி எழுதியிருந்தது.

 ஒவ்வொரு நாளும்

 சூரியன் உதிக்கும்போது

 நம்பிக்கையும் உதிக்கிறது.

 

 பெண் அதிகாரி நிலத்தைப் பார்த்தபடி திரும்பி வந்தாள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. வீணாக அவள் அமைதியைக் கெடுத்துவிட்டதுபோல பாத்திமாவுக்கு குற்றமாக இருந்தது. அவள் பேசுமுன் பாத்திமா ‘மன்னியுங்கள்’ என்றாள். பிறகு கதவைத்த திறந்து வெள்ளைச் சூரிய வெளிச்சத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

 சாம்பல் மழை துளியாகப் போட்டது. கால் பெருவிரலை நிலத்துக்கு எதிர்ப்பக்கமாக வளைத்தபடி அஹமத் நடந்தான். பர்வீனின் ஆடுகளை மறுபடியும் கண்டார்கள். அவை இப்போது பொன்னிறமாக மாறிவிட்டன. அதிலே ஒரு குட்டி நீளமான கால்களுடன் இருந்தது. தன்னுடைய உயரத்தை விடவும் கூடுதலாகத் துள்ளிப் பாய்ந்தது. தான் ஜீவித்திருப்பதன் ஒரே காரணத்துக்காக அது அவ்வளவு சந்தோஷித்தது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

 பாத்திமா வேகமாக தொப்பிகளைப் பின்னிக்கொண்டிருந்தாள். அவற்றை அவள் அன்றே முடிக்கவேண்டும். காசு கிடைத்தால் ரொட்டியும், பாலக்கீரையும், சிறிது சீனியும் வாங்கலாம். அஹமத் நீண்ட நாட்களாகக் கேட்ட எண்பது பக்க கொப்பிக்கும் ஒரு வாய்ப்பிருந்தது.

 ஒரு செட்டை விரித்த நிழல் முதலில் வந்தது. பிறகு வேறு நிழல்களும் சேர்ந்தன. செத்துப்போன கழுதையை அவை ஒவ்வொன்றாகக் கொத்தத் தொடங்கின. அந்தக் கொத்தல்கள் கண்ணில் இருந்து ஆரம்பித்தன. இன்னும் சில கழுகுகள் மரத்தில் இருந்து பார்த்தன. பக்கத்தில் ஒருத்தன் உருளைக் கிழங்குகளை குவித்து வைத்து விற்றான். மற்றவன் வரிக்குதிரைப் பைகளை அடுக்கிக்கொண்டிருந்தான். பலர் கால்பட்டு வயதேறுவதற்காக ‘புக்காரா’ கம்பளங்கள் அங்கங்கே ரோட்டிலே விரிக்கப்பட்டிருந்தன.

 சில இலையான்கள் பஸ்ஸில் வந்து இறங்கின. இன்னும் சில ஏறின. பஸ்ஸில் இருந்த ஒருவர் உதட்டை நாக்கினால் சுழற்றி நக்கிக் கொண்டே அவளுடைய ஆறு தொப்பிகளையும் வாங்கிவிட்டார். இது பூர்வமானது. அந்தக் காசில் அவள் உப்புக்கண்டம் போட்ட இறைச்சியை வாங்கினாள். அந்த இறைச்சி எந்த விலங்குக்கு சொந்தமானது என்று அவளுக்கு நிச்சயமாகவில்லை. ஒட்டகமாயிருக்கலாம், எருமையாகவுமிருக்கலாம். அல்லாவின் கருணையினால் ஆடாகவும் இருக்கக்கூடும்.

 நோட்டுப் புத்தகத்தை அஹமத் ஆசையாகத் தடவிப் பார்த்தான். அதை மறுபடியும் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு வந்தான். ஓர் இடத்தில் ஒற்றை இரண்டு பக்கமும் ஒட்டிக்கொண்டு கிடந்தது. பாத்திமா பல் ஒடிந்த சீப்பினால் அதை லாகவமாகப் பிரித்துக் கொடுத்தாள். அந்தச் சிறு செய்கையில் அஹமத்தின் கண்கள் வெயிலைப்போல பிரகாசித்தன. பல் தெரிய அவளைப் பார்த்துச் சிரித்தான். அவன் இதற்கு முன்பு அப்படிச் சிரித்தது கிடையாது.

 குழந்தைகள் தூங்கிவிட்டார்கள். தட்டிலே உப்புக்கண்டத்தை வைத்தபடி வெகுநேரம் தகப்பனுக்காக படிகள் இல்லாத வாசலில் குந்தியபடி காத்திருந்தான் அஹமத். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கழுத்துக்குள் தலையை இடுக்கிக்கொண்டு வெளியே போனவர் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. பிறகு அஹமத் சாப்பிட்டான்.  எழுதினால் ஊறி மறுபக்கத்திற்கு போகாத வழுவழுப்பான ஒற்றைகள் கொண்ட, தடித்த அட்டை எண்பது பக்க கொப்பியை நடு நெஞ்சில் திறந்து வைத்து, பறித்துக்கொண்டு போய்விடும் என்பது போல பிடித்துக்கொண்டு தூங்கினான். பாத்திமா குழந்தைக்கு பாலைக் கொடுத்து படுக்க வைத்தாள். பிறகு லாந்தரை அணைக்காமல், முன் தலைமயிர் மூக்கிலே இரு பக்கமும் விழுந்து கிடக்க, கைகளால் தோளைப் பற்றிக் கொண்டு சுவரில் சாய்ந்தபடி காத்திருந்தாள். அவளுடைய உலகத்து உடைமைகள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அவளைச் சுற்றிக்கிடந்தன.

 ஏதோ சத்தம் கேட்டபோது அவளுக்கு முழிப்பு வந்தது ‘வ்ராக், வ்ராக்’ என்று அவள் கணவரிடம் இருந்து மூச்சு வந்துகொண்டிருந்தது. சதுரமான தோள்கள் தொங்கிவிட்டன. உடம்பு, சதை எல்லாம் வற்றி ஓர் எலும்புக்கூடாக மாறி அந்தக் கயிற்றுக் கட்டிலில் கவனிப்பாரின்றித் தொங்கியது. அவருடைய தலை மட்டும் சற்று நிமிர்ந்து மண் சுவரில் சாய்ந்திருந்தது.

 அந்தக் கண்கள் அவளையே உற்றுப் பார்த்தன. திடீரென்று அப்படியே சுழன்று எழும்பின. முழி பிதுங்கி வெள்ளையாகத் தெரிய ஆரம்பித்தது. வாய் நூதனமான ஒரு ஒலியை எழுப்பியது. பச்சைத் திரவம் நூலாகக் கடவாயில் இருந்து வடிந்தது. மெல்லிய சந்திர ஒளி பாதித் கீற்றுகளாக அவர் உடம்பில் விழுந்து வரித்தன்மையை உண்டு பண்ணின. அந்த இடத்தில் வியாபித்த துர்நெடி அவளைப் பயத்தில் ஆழ்த்தியது.

 அவசரமாக அஹமத்தை எழுப்பினாள். அவன் முகத்தில் நித்திரை கலக்கம் போகவில்லை, ஆனாலும் லாந்தரைக் கையிலே தூக்கிக் கொண்டு டொக்டரிடம் போவதற்குத் தயாராக நின்றான். பாத்திமாவின் முகத்தில் மாறுதல் தென்பட்டது. அஹமத்தின் கைகளை இறுக்கிப் பற்றியபடி எட்டத்திலே நின்றாள். அசையாத கண்களுடன் கணவனையே குறிவைத்துப் பார்த்தாள். அவருடைய கண்கள் இவளைவிட்டு நகரவில்லை. அந்தக் கண்களில் என்றுமில்லாத குரோதம் தெரிந்தது.

                  *                        *                      *  

 அந்தக் குடில் பொதுவானதாக இருந்தது. பிளாஸ்டிக் விரிப்புகளால் வேயப்பட்ட கூரை காற்றிலே படபடவென்று அடித்தது. கண் மடல்கள் நித்திரையில் துடிக்க அஹமத் மடிந்து படுத்திருந்தான். பாத்திமாவுக்கு தூக்கம் வரவில்லை. மூச்சுக் காற்றும், முனகலும், இலைகளின் அசைவும் இன்னும் இயற்கையின் சத்தங்களும் அவளுக்கு ஆறுதலைத் தந்தன.

 ஆறு ஆடுகளில் இரண்டு குட்டிகள் மிக வெள்ளையாக இருந்தன. முற்றா மயிர் கொண்ட சிறிய ஆடுகள். அவள் விரும்பிய வெண்மை, பசுமையான ஆட்டின் சருமம் அவள் உடலைத் தொட்டது. ஆட்டின் சிறிய கால்கள் கவனிக்கப்படாத அவள் மார்புகளில் மெல்ல உதைத்தன. வலி தெரியாமல் சீண்டின. மெத்து மெத்தென்று உரசின. உலகம் தவறி தூரம் கடந்தது. அவள் தேகமே அதற்குள் மயங்கி உறக்க நிலையை அடைந்தது. ஸ்பரிசித்து கண்ணை மூடியது.

 அது அப்படியே ஆயிற்று.

END


 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta