ஆறாம் திணை

ஆறாம் திணை

அ.முத்துலிங்கம்

நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்குச் சொந்தக்காரர் பெயர் பிரீஸ். அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது.

1958ம் ஆண்டு மே மாதம் ஓர் இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உணர்ந்து  அண்ணர் எங்கள் உயிரையும் உடைமைகளையும் பிரீஸ்தான் பாதுகாக்கவேண்டும் என்று அவரிடம் வேண்டினார். பிரீஸ் அப்போதுதான் தன் நினைவுக்கு வந்ததுபோல ஒரு புது மனிதராக மாறினார். எங்கள் பாதுகாப்புக்கு தான் உத்திரவாதம் என்றார். ஒரு நாற்காலியை எடுத்து வீட்டுக்கு வெளியே போட்டு அன்றிரவு முழுக்க அங்கேயே தங்கினார். தூங்கவே இல்லை. உள்ளே நாங்களும் தூங்காமல் விடிவதற்காகக் காத்திருந்தோம். அடுத்தநாள் காலை அங்கிருந்த மூன்று தமிழ் குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் வீடு உடைந்து சிலமாகிவிட்டது என்றார்கள். ஒரு குடும்பத்து ஆட்கள் இரவோடு இரவாக மறைந்துவிட்டார்கள். எஞ்சியது நாங்கள் மட்டும்தான்.

ஒரு போலீஸ் வாகனத்தில் எங்களையும் இன்னும் சில தமிழ்க் குடும்பங்களையும் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரேயொரு பெட்டிதான் எடுத்துவரலாம் என்று கட்டளை. என் பங்குக்கு டேனியல் டிஃபோ எழுதிய ’ராபின்சன் குரூசோ’ என்ற நாவலை கையில் எடுத்துக்கொண்டேன். எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்பது நிச்சயமில்லை. அடுத்த வேளை உணவு எப்போது எங்கேயிருந்து வரும் என்பதும் தெரியாது.

முகாமில் ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக உடைகள் வழங்கியது. ஏதோவொரு வெளிநாட்டில் யாரோ போட்டு முடித்த உடைகள்தாம் அவை. அதற்காக ஆட்கள் சண்டை போட்டு ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்று பெற்றுக்கொண்டார்கள்.  எனக்குப் பெரிசான இரவு ஆடையின் மேல்சட்டை மட்டுமே அகப்பட்டது. கீழ்க் கால்சட்டை யாருக்குப் போனதோ தெரியாது. அந்த மேல்சட்டையின் கடைசி பட்டன் என் கைகளுக்கு எட்டாது. முழங்காலைத் தாண்டி தூரத்தில் இருந்தது. ஆனால் மிகச் சந்தோசமாக அதை நான் பகலிலும் இரவிலும் அணிந்துகொண்டேன்.

அகதி முகாமில் 2000 பேர்வரை இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் பல முகாம்கள் இருந்தன என்று பின்னர் கேள்விப்பட்டேன். ஒரு மத்தியான நேரத்தின் போது அகதிகளாகிய நாங்கள் மறியல் கைதிகள் போல வரிசையில் தட்டையேந்தி உணவுக்காக நின்றோம். இரண்டு கரண்டி எண்ணி என் தட்டில் விழுந்தது. அது மஞ்சள் நிறத்தில் சோறுபோலவே இருந்தது. பருப்பு முடிந்துவிட்டது. யாரோ ஒருவர் போட்டு முடித்த நீளமான  இரவுச் சட்டையோடு நான் நடுப்பகலில் நெடுநேரம்  அங்கே  நின்றேன். அப்பொழுது நான் எனக்குச் சொல்லிக்கொண்டேன். ‘இந்த நாளை நன்றாக ஞாபகம் வை. இதுவே உன் வாழ்நாளில் ஆகக் கீழேயான கணம். இனிமேல் இப்படி ஒரு தருணம் உன் வாழ்க்கையில் வராமல் பார்த்துக்கொள்.’

எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று நான் என் சின்ன மூளையால் யோசித்தேன். ராபின்சன் குரூசோ நாவலில் ஓர் இடம் வரும். அவன் தனியாக ஒரு தீவில் பல வருடங்கள் வாழ்ந்தான். ஒருநாள் கடற்கரையில் மனிதக் காலடியைக் கண்டு பெரும் பீதி அடைந்தான். நான் நினைத்தேன் மனிதனுடைய உண்மையான எதிரி இன்னொரு மனிதன்தான்.

யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டையை நான் பல வருடங்களாகப் பல தேசங்களுக்கும் ஒரு ஞாபகத்துக்காக காவித் திரிந்தேன். ஒரு காலத்தில் நான் வளர்ந்து பெரியவனாகி அந்த உடையை நிரப்புவேன் என நினைத்தேன். அது நடக்கவே இல்லை. அந்த உடையும் ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு நான் அலைந்தபோது ஏதோ ஒரு தருணத்தில் என்னை விட்டு தப்பியது..

சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் நான் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன்.  முப்பது வயதிருக்கும், உற்சாகமாக இருந்தார். இவருடையது வித்தியாசமான கதை. இலங்கையிலும்,  பாங்கொக்கிலும் சிறையில் இருந்திருக்கிறார். ரஸ்யாவில் பனிப்புதைவில் மயிரிழையில் உயிர் தப்பியவர். சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்கள், ஒன்பது நாள் விசா கெடுவை மீறி தங்கியதற்காக. கழுத்திலே மரப்பூட்டைப் போட்டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடிந்த பிறகு அதே இடத்தில் ஒரு சீனக் கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள். இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது.

அமெரிக்கா போய்ச் சேர்ந்தபோது அவருடைய கள்ள பாஸ்போர்ட்டை கண்டுபிடித்துவிட்டார்கள். கையிலும் காலிலும் சங்கிலி மாட்டி, கையிலே 8 றாத்தல் கனமான இரும்புக் குண்டை காவக் கொடுத்து, நடத்தி சிறைக்கு கூட்டிச் சென்றார்கள்.  சிறைவாசம் முடிந்து,  மூன்று வருட பயணத்துக்குப் பின்னர் கனடாவுக்கு வந்து சேர்ந்தார். அகதியாக இருந்தபோது  வேலை தேடி 17 கம்பனிகளில் நேர்முகத் தேர்விற்குப் போனார். எல்லோரும் அவரிடம், ‘உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?’ என்றே கேள்விகள் கேட்டார்கள். 18ஆவது இடத்தில் அவர் இப்படி பதில் சொன்னார். ‘ஐயா, எனக்கு கனடா அனுபவம் கிடையாது; ஆனால், என்னிடம் நிறைய திறமை உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது. இன்றுவரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என்னுடைய திறமை.’  அப்போதும் வேலை கிடைக்கவில்லை. இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய வருமானம் சராசரி கனடியரின் வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம். இது ஓர் உதாரணம்தான். ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோசம் அவருடைய முகத்தில் நிரந்தரமாக  இருக்கிறது. கூடவே அகதியாக வந்த ஒருவரின் வாழ்வும் வலியும்.  

புலம் பெயர்வது ஒன்றும் புதிதல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதன் புலம்பெயர்ந்தபடியே இருக்கிறான். சங்க இலக்கியம் ஐந்து நிலங்கள் பற்றிப் பேசும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. பல பாடல்கள் தலைவன் தலைவியை பிரிந்து போவதை சொல்லும். பொருள்வயின் பிரிவு என்று சொல்வார்கள். பொருள் தேடிப்போவதால் புலம்பெயர நேரிடுகிறது. நற்றிணை 153ல் தனிமகனார் பாடிய பாடல் ‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்’ என்கிறது. சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்கமுடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதை. 2000 வருடங்களுக்கு முன்னர் அரசனின் கொலைச் சீற்றத்துக்கு பயந்து வெளியேறியவர்கள் போலத்தான் சமீப காலங்களில் புகலிடம் தேடி அலைந்து கரை சேர்ந்தவர்களையும் சொல்லலாம். 

கனடாவுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ போப் பாதிரியார் கனடாவில் பிறந்தவர். தமிழ் அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கியது 1983ம் ஆண்டு இலங்கை இனக்கலவரத்துக்கு பின்னர்தான். அவர்கள் குடியேறி சில வருடங்களிலேயே பத்திரிகைகள் ஆரம்பித்துவிட்டார்கள். அகதிக் கோரிக்கை இன்னும் வெற்றி பெறவில்லை. நிரந்தர வேலை கிடையாது. அடுத்தவேளை உணவு பற்றி நிச்சயமில்லை. ஆனால் பத்திரிகைகளும் இலக்கிய சஞ்சிகைகளும் தொடங்க அவர்கள் தயங்கவில்லை. புதுநாட்டுக்கு வந்தவுடன் அவர்கள் செய்தது புது வாழ்க்கையை பதிவு செய்ததுதான். ஈழத்துக் கவிஞரான வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதுகிறார்:
”யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்து விட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்” 

கவிதைகள் எழுத முடியாதவர்கள், அவர்கள் சேர்த்துவைத்த நூல்களை சுமந்துகொண்டுவர மறக்கவில்லை. ஒருவர் சாண்டில்யனின் கடல் புறாவை 10 வருடகாலமாக தூக்கிக்கொண்டு நாடு நாடாக அலைந்ததாகச் சொன்னார். இதற்கெல்லாம் காரணம் இருந்தது. 1991ம் ஆண்டு மே 31ம் தேதியை ஒரு தமிழராலும் மறக்க முடியாது. அன்றுதான் யாழ்நூலகம் ஒரு லட்சம் நூல்களுடன்  எரிக்கப்பட்டது. ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும். அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும். Farenheit 451 நூல் அதைத்தான் சொல்கிறது. அறிவைச் சாகடித்துவிட்டால் மனிதன் செத்துவிடுவான். 

புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை தமிழை கைவிட்டுவிடும் என்ற பொதுவான குற்றச் சாட்டு இருக்கிறது. இன்றைய கணிணி யுகத்தில் தமிழ் கற்பது இலகுவாகிவிட்டது. புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை. இவர்களில் சிலராவது உயர்ந்த இலக்கியங்கள் படைத்து தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.  

தமிழர்கள் எட்டு கோடி பேர் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். நியூசீலாந்தில் இருந்து அலாஸ்கா வரை பரந்துபோய் புலம்பெயர் தமிழர்கள் பத்து  லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ்  ராச்சியத்தை சூரியன் மறையாத ராச்சியம் என்று அழைத்தார்கள். இப்போதோ சூரியன் மறையாத தமிழ்ப் புலம் என்று சொல்கிறார்கள்.

கனடாவில்  தமிழர் மரபுரிமை மாதமாக சனவரி பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் உலகத்தில் இரண்டாவது பெரிய தேசமான கனடாவில் முதல்முறையாக ஒரு புதிய சாலைக்கு ’வன்னி வீதி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. வன்னி வீதி, தமிழர்களுக்குச் சொந்தமான வீதி. இந்த வீதியை ஒன்றும் இலகுவாகச் சிதைக்க முடியாது. நூலகத்தை எரித்ததுபோல இதை அழிக்க முடியாது. என்றென்றைக்குமாக கனடாவில் ஈழத்தமிழரின் புலம்பெயர் வரலாற்றை நினைவு படுத்தியபடியே இந்த வீதி நிற்கும்.

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு. ஐந்து நூறு பாடல்கள் கொண்டது. குறிஞ்சி நிலத்துக்கு நூறு பாடலும், நெய்தல் நிலத்துக்கு நூறு பாடலும், மருதம் நிலத்துக்கு நூறு பாடலும், முல்லை நிலத்துக்கு நூறு பாடலும் பாலை நிலத்துக்கு நூறு பாடலுமாக ஐந்நூறு பாடல்கள். பனியும் பனிசார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை. புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப்பிரதேசங்களுக்குத்தான்.

என்னுடைய கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருக்கிறது. அதற்கு இரண்டு செட்டை. ஆறுமணிக்குருவியும் (Indian Pitta) இருக்கிறது. அதற்கும் இரண்டு செட்டை. சரியாக காலை ஆறுமணிக்கு இந்தக் குருவி ’கீஈஈஈய்க், கீஈஈஈய்க்’ என்று சத்தமிடும். காகத்துக்கு பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்கு பறந்துபோய் மீண்டும் திரும்பும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவிபோல. அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர்கள் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும். ஆறாம் திணை.

(குறிப்பு: தமிழ்நாடு 11ம் வகுப்பு பாடநூலில் மேற்கண்ட ‘ஆறாம் திணை’ கட்டுரை இடம் பெற்றுள்ளது.)

About the author

8 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta