இரண்டு சம்பவங்கள்

                                              இரண்டு சம்பவங்கள்

                                        அ.முத்துலிங்கம்

இன்று முக்கியமான நாள். இந்த நாளில்தான் 40 வருடங்களுக்கு முன்னர் நான் இலங்கையை விட்டுப் புறப்பட்டேன். இரவு ஒரு மணி. ஆழமான தூக்கம். வழக்கம்போல டெலிபோன் அடித்தது. வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அந்த நேரம்தான் வரும்.

நித்திரைக் கலக்கத்தில் எழும்பி ஒவ்வொரு பட்டனாக அழுத்தி ஒருவாறு தொலைபேசியை துண்டிக்காமல் ’ஹலோ’ என்றேன்.

முத்துலிங்கம் சாருடன் பேசவேண்டும்.

அது நான்தான் சொல்லுங்கள்.

கேட்கிறதா, கேட்கிறதா?               

எல்லாம் கேட்கிறது. சொல்லுங்கள்.

குரலே சரியில்லையே?

நான் ஒன்றுமே செய்யமுடியாது. அந்தக் குரலுடன்தான் பிறந்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்?

நீங்கள்தானா அது?

ஓமோம், நான்தான். நீங்கள் யார்?

சார், நாங்கள் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்துகிறோம். அதற்காக உங்களை நேர்காணல் செய்யவேண்டும்.

அதற்கென்ன? எப்போது?

இப்பதான்.

இப்பவா? இங்கே இரவு ஒரு மணி.

ஒரு மணியா?

இது கனடா.

கனடாவா? அது எந்த ஊர்?

இதன் பின்னர் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தேன். இரண்டாவது சம்பவத்துக்காக காத்திருந்தேன். நடந்தது.

நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்பொழுதுதான் விடிந்திருந்தது. வேறு தேசத்து நண்பர் அல்ல, கனடாவில் வசிப்பவர்தான். பிடிவாதமானவர். அவர் ஏதாவது சொல்லி நான் செய்யாவிட்டால் கோவிப்பார்.

படித்துவிட்டீர்களா?

என்ன? எதைப் படித்துவிட்டீர்களா?

உங்களுக்கு ஒரு புத்தகம் தந்தேனே. இரண்டு வாரமாகிவிட்டது. இன்னும் படிக்கவில்லையா?

ஒருவர் நேர்காணல் வேண்டுமென்கிறார். இவர் ஏதோ ஒரு புத்தகத்தை நான் படிக்கவேண்டும் என வற்புறுத்துகிறார்.

பெயர் என்ன?

அம்பிகைபாகன்.

உங்கள் பெயர் அல்ல. புத்தகத்தின் பெயர்.

The Man- Eater of Punanai. அதை எழுதியவர் கிறிஸ்டஃபர் ஒண்டாச்சி. புக்கர் ப்ரிசு, கில்லர் பரிசு ஆகியவற்றைப் பெற்ற மைகேல் ஒண்டாச்சியின் சகோதரர்.

ஓ, சரி சரி. ஞாபகம் இருக்கு. அது 200 பக்கத்துக்கு கூடிய புத்தகம் அல்லவா? நான் அத்தனை பெரிய புத்தகத்தை படிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியும்தானே.

அதிலே பாதிக்கு பாதி படங்கள். அது ஒரு காரணமா? சரி முழுப் புத்தகத்தையும் படிக்கவேண்டாம். வெள்ளைக் காகம் என்று ஓர் அத்தியாயம் இருக்கிறது. அதை மட்டுமாவது படியுங்கள். உங்கள் கொள்கைக்கு ஒரு பங்கமும் வராது.

அவருடைய தொல்லை தாங்காமல் படித்தேன். அதைத்தான் ஒண்டாச்சியினுடைய  வார்த்தைகளில்  சுருக்கி கீழே தந்திருக்கிறேன்.

*                                  *                                *

நான் 1993 ல் இலங்கையில் கழித்த நாட்களில் அதிவிசித்திரமானது  முன்னாள்  ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை  சந்தித்த அந்த நாள்தான். அவர் இறப்பதற்கு  மூன்று  வருடங்களுக்கு முன்னர்  அவருடைய வார்ட் பிளேஸ் வீட்டில் சந்திப்பு  நடந்தது.  தன் பழைய கதைகளால்  எனக்கு களிபூட்டினார். சில இடங்களில் வியப்பூட்டவும் தவறவில்லை.

ராணி எலிசபெத் இலங்கைக்கு வந்திருந்தபோது  ஜனாதிபதியிடம்  அவர் ஒரு கேள்வி கேட்டார். ’உங்கள் மக்கள் என்னை எப்படி பார்க்க விரும்புவார்கள்?’ ஜனாதிபதி சொன்னார் ’கிரீடத்துடன்தான்’ என்று. ராணி  சொன்னார் ’நான் கிரீடத்தை எடுத்துவரவில்லையே.’

முன்னாள் ஜனாதிபதியின் தோட்டம் அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.  நிறையக் காக்கைகள் கூட்டம் கூட்டமாக கிளைகளில் உட்கார்ந்திருந்தன.  ஆச்சரியமான விசயம் என்னவென்றால் அந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு வெள்ளைக் காக்கையும் காணப்பட்டதுதான். இளஞ்சிவப்பு கால்களுடனும்,  சாம்பல் நிற அலகுடனும் முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் அது மிக அழகாக இருந்தது.  நான் சந்திப்பை முடித்துவிட்டு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். எனினும் ஆச்சரியம் தாங்காமல் அந்த வெள்ளைக் காக்கை பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன். ’நீங்கள் மறுபடியும் உட்காரவேண்டும்’ என்றார் ஜே.ஆர். ஏதோ வருகிறது என உணர்ந்து நான் அமர்ந்தேன்.

’நீங்கள் Meredith Foster பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?’ அந்தப் பெயர் எனக்குப் பரிச்சயமானதுதான். ’அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான பத்திரிகை நிருபர். 1980 களில் கொழும்பிலே தங்கியிருந்து போர் பற்றிய செய்திகளை வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வந்தவர். அவருடைய போர்ச் செய்திகளுக்கு  நல்ல மதிப்பிருந்தது.  இந்தியாவின் அமைதிப்படையினரால்  சமாதானத்தை கொண்டுவரமுடியாத இக்கட்டான போர்ச்சுழல் நிலவிய காலம் அது. கொழும்பிலே ஆறு ஏழு வருடங்கள் தங்கி மெரிடித் தொடர்ந்து செய்திகள் அனுப்பினார். அவர் கணவர் இங்கிலாந்தில் இருந்தார். ஒருநாள் மெரிடித் திடீரென்று காணாமல் போய்விட்டார். இந்தச் சம்பவம் ராணுவ பக்கத்திலும், புலிகள் பக்கத்திலும் பீதியை கிளப்பியது. இரு சாராருக்கும்  மெரிடித் மீது  மரியாதை இருந்தது.  அவர் மறைந்தது அரசாங்கத்துக்கு பெரும் புதிராகி பிரச்சினை பெரிதானது.

’ உங்களுக்குத் தெரியும் மெரிடித்   30 – 35 வயது அழகி. பொன் தலைமுடியுடன்  யாரையும் கணத்தில் கவர்ந்துவிடுவார். என்னுடைய மந்திரி ஒருவருடன் அவர் கள்ள நட்பு வைத்திருந்தார். அவருடைய மனைவி பொறாமைப்படும் அளவுக்கு அது ஆழமானது.  நான் மந்திரியை கூப்பிட்டு எச்சரிக்கை செய்தேன். ஒருவித பயனும் இல்லை. மந்திரியின் மனைவி பெரிய குழப்பமான மனநிலையை அனுபவித்தார்.

’கத்தடியா பற்றி நீங்கள் அறிவீர்கள். மோசமான சூனியக்காரர்கள். மந்திரியின் மனைவி தன் கணவரை மீட்பதற்காக சூனியக்காரர் ஒருவரை அணுகியிருக்கிறார் என நான் யூகிக்கிறேன். கத்தடியா அந்தப் பெண்ணை எப்படியோ கடத்திச் சென்று காட்டு மரத்திலே   கொடிகளால் கட்டிவைத்து  ஏதோவிதமான சூனியச் சடங்குகளைச் செய்திருக்கிறார். அதிலே அவர் இறந்து போயிருக்கலாம். அவர் உடலை கண்டு பிடிக்கவே முடியவில்லை. காட்டிலே  சூனியக்காரனின் சடங்கு நடந்த அதே நேரம் இங்கே இந்த வெள்ளைக் காக்கை தோன்றியது.’

இதுவெல்லாவற்றையும்  ஜே.ஆர் விவரிக்க நான்  ஆச்சரியத்துடன் கேட்டேன். திகைப்பு முழுவதும் நீங்காத நிலையில்  ஜே.ஆரிடம் விடைபெற்றபோது என் கண்முன்னே இன்னொரு அதிசயம் நடந்தது. யன்னல் கண்ணாடியின் மற்றப் பக்கம் அந்த வெள்ளைக் காக்கை ஆவேசத்துடன் கொத்தத் தொடங்கியது. கம்பியில்லாத் தந்தியில் டக்டக் என்று ரகஸ்யச் செய்தி அனுப்புவது போல  காக்கை விடாமல்   கொத்தியது. முன்னாள் ஜனாதிபதி அவசரமில்லாமல் நடந்து சென்று யன்னலைத் திறந்தார். வெள்ளைக் காக்கை உள்ளே  பறந்து வட்டமடித்து அவர் தோள்மேலே நட்புடன் வந்து உட்கார்ந்தது. ஜனாதிபதி தோள்களை இறுக்கி அசையாது சிலைபோல நின்றார். அச்சமூட்டும் கண்களால் என்னை  உற்று நோக்கினார். நான் விடைபெற்றபோது அவர் தோள் மூட்டு மெல்ல அசைந்தது.

   *                                    *                                       * 

இதுதான் அந்தப் புத்தகத்தில் கிடைத்தது. நம்பலாமா விடலாமா என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கோடிக்கு மேல் மக்களைக் கொன்று குவித்த  ஹிட்லர் தன்னுடைய வளர்ப்பு நாயான ப்ளொண்டியை நஞ்சு கொடுத்து கொன்றுவிட்டு துயரம் தாங்காமல் விம்மி விம்மி அழுதாராம். கொடுங்கோலன் சதாம் உசேன் தூக்கு மரத்துக்கு போக முன்னர் சிறைக் காவலாளியிடம் தான் வளர்த்த  செடிக்கு தவறாமல்  தண்ணீர் வார்க்கச் சொல்லி வேண்டிக் கொண்டாராம்.

தமிழர்களை பட்டினி போட்டால் சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும் என்று சொன்னவரும், 150,000 தமிழர்கள் வீடிழந்து அனாதைகளாகி வீதிகளில் நிற்கக் காரணமானவரும், என்றென்றும் தமிழ் மக்கள் நினைவிலிருந்து அழியாத கறுப்பு யூலையை தோற்றுவித்தவரும் ஆன ஜே.ஆர்.  பழிபாவத்துக்கு அஞ்சாதவர்.  இவர் நெஞ்சில் எங்கேயோ கொஞ்சம் ஈரம் இருந்ததுதான் ஆகப் பெரிய அதிசயம்.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta