திரும்பத் திரும்ப 18 தொலைபேசி அழைப்புகள் வந்தன. ’ஐயா, பிரபலமானவர்களின் புத்தகம் ஒன்று தயாரிக்கிறோம். அதில் அவர்கள் பெயர், புகைப்படம், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களை தருவோம். உங்களைப் பற்றிய தகவல்களை இந்தப் புத்தகத்தில் சேர்ப்பது முக்கியம் என்று நினைக்கிறோம். நீங்கள் 20 டொலர் கட்டினால் உங்கள் பெயரையும் இணைத்து புத்தகத்தை சீக்கிரமாக வெளியிட்டு விடுவோம்’ என்று குரல் சொல்லும். நான் வேண்டாம் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவேன்.
19வது தடவையாக தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் தயங்கினேன். பேசலாம் என்று தீர்மானித்தேன். காரணம் பெண்ணின் குரல் வசீகரமானதாகவும், வாய்க்குள் சிறிய கூழாங்கல்லை வைத்துக்கொண்டு பேசுவது போன்று வழுவழுப்பான உச்சரிப்பை கொண்டதாகவும் இருந்தது. ஒரு டிவி தொகுப்பாளினியாக இருக்கவேண்டியவர் இப்படி நாளுக்கு 50 டொலர் காசுக்கு தன் குரலை வீணடிக்கிறாரே என்று நினைத்தபோது ஆழ்ந்த வருத்தம் உண்டானது. ‘நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன். அவர் மறுபடியும் படு வேகத்தில் முதலில் இருந்து சொன்னதையே திரும்பவும் ஒப்பித்தார்.
’உங்கள் குரல் இவ்வளவு இனிமையாக இருக்கிறதே. இது இயற்கையானதா, செயற்கையானதா?’
‘இதற்கு பதில் பின்னால் சொல்லுகிறேன் ஐயா. தயவுசெய்து கட்டணம் செலுத்தமுடியுமா என்று சொல்லுங்கள்?’
‘முழு 20 டொலர் தரவேண்டுமா?’
‘முழு 20 டொலர்.’
திருவிளையாடல் படத்தில் தருமி நாகேஷ் கேட்டதுபோல ‘எனக்கு இன்னும் முழுப் புகழும் வந்துசேரவில்லை. பத்து டொலர் கட்டினால் என் பெயரை போடுவீர்களா?’ என்று வினவினேன்.
‘கம்பனி விதிகளை மாற்ற எனக்கு அதிகாரமில்லை, ஐயா.’
‘சரி, 10 டொலருக்கு என் பெயரை பாதியாக சுருக்கி போடமுடியாதா?’
‘அப்படித்தான் நினைக்கிறேன். நீங்கள் பிரபலமானவர் இல்லையா?’
‘அதற்காகத்தான் இருபது வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன். ஒரு சின்னக் கேள்விக்கு விடை தந்தால் என் முடிவை உங்களுக்கு சொல்கிறேன்.’
‘கேளுங்கள், ஐயா?’
‘உங்கள் காதுகள் எங்கே?’
‘இது என்ன கேள்வி? கையெட்டும் தூரம்தான்.’
‘அதுவல்ல. உங்கள் காதுகளை தலைமுடி மறைத்திருக்கிறதா அல்லது அவை வெளியே தெரிகின்றனவா?’
‘காதுகளை முடி முழுவதுமாக மறைத்திருக்கிறது, ஐயா?’
‘நான் அப்படித்தான் நினைத்தேன். உங்களுக்கு நிறைய அழகுணர்ச்சி உண்டு.’
‘நன்றி ஐயா. உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன்.’
‘என் முடிவைச் சொல்கிறேன். பிரபலமானவர்களின் புத்தகத்தில் என் பெயரும் இருக்கவேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை. தயவுசெய்து என்னையும் சேர்த்துவிடுங்கள். நான் பிரபலமானதும் எப்படியாவது உழைத்து உங்கள் 20 டொலர் கட்டணத்தை கட்டிவிடுவேன்.’
மறுபக்கம் டெலிபோன் வைக்கப்பட்டது.
கடித உறை ஒட்டிய பிறகுதான் நினைவுக்கு வருவதுபோல அவர் குரல் இனிமைக்கான காரணத்தை தெரிந்துகொள்ள நான் மறந்துவிட்டேன்.
அதற்கு பிறகு தொலைபேசி அழைப்பு வரவில்லை. கூழாங்கல் குரலும் கேட்கவில்லை.
அவர் வேறு ஒரு பிரபலமானவரைத் தேடி போய்விட்டார் என நினைக்கிறேன்.
