காலத்தை முந்தியவர்

""நான் படித்த அவருடைய சிறுகதையின் பெயர் ’மைசூர் ராசா.’ அதுதான் அவர் எழுதிய முதல் சிறுகதையோ தெரியாது. ஆனால் நான் முதலில் படித்தது அதைத்தான். பத்து வருடத்திற்கு முன்னர் என்று நினைக்கிறேன். அசிரத்தையாகத்தான் படிக்கத் தொடங்கினேன். அதை எழுதியவரின் பெயரை நான் வேறு எங்கேயும் கண்டதில்லை. ஒரு காலத்தில் இலங்கையில் பருப்பு தட்டுப்பாடு இருந்தது. செல்வந்தர் வீட்டில் மட்டுமே அது அகப்படும். பள்ளிக்கூடத்திலே ஒரு பையன் தான் முதல்நாள் இரவு வீட்டிலே மைசூர் பருப்பு சாப்பிட்டதை வர்ணித்தான். அதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு மாணவன் மெதுவாகக் கேட்டான் ‘அது பாணை விட அபூர்வமானதா?’ என்று. இந்த வரி வந்ததும் மீண்டும் எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். ஷோபா சக்தி. ஈழத்து எழுத்தாளர். உடனேயே காலத்தை முந்திய எழுத்தாளர் இவர் என்று எனக்குப் பட்டது.

 

அதன் பின்னர் அவருடைய பெயரில் வந்த கதைகளை அவ்வப்போது படித்து வந்தேன். ஒரு கதையில் எழுதுவார் ‘அம்பதுசேம் மாட்டுத்தாள்’ என்று. இன்னொரு கதையில் ‘பத்து ரூபாய் கதிரவேலு’ என்று. தலைப்பு மறந்துவிட்ட வேறொரு கதை, கள்ள பாஸ்போட் தயாரிப்பது பற்றி. அதில் இப்படி வரும். ‘வலு பக்குவமாய் அயன் பொக்ஸ் தேய்ச்சு புகைப்படத்துக்கு மேல் இருக்கும் மின்னிப் பேப்பரை கழற்ற வேணும். வாய்ச்சாலும் வாய்க்கும். தேய்ச்சாலும் தேய்க்கும்.’ இதைப் படித்து நான் அசந்துவிட்டேன். எப்படியாவது இவரை சந்திக்கவேணும் என்று தீர்மானித்தேன். ஆனால் நான் தீர்மானித்தால் போதுமா? அவர் பாரிஸில் இருந்தார். நான் ரொறொன்ரோவில் இருந்தேன்.

 

2003ம் வருடம் நான் நடிகை பத்மினியை சந்தித்தது பற்றி எழுதிய ஒரு கட்டுரை ஆனந்த விகடனில் வந்திருந்தது. அதைப் படித்துவிட்டு பாரிஸிலிருந்து தொலைபேசி எடுத்து ஷோபா சக்தி என்னுடன் பேசினார். அப்பொழுது அவருக்கு தமிழ் சினிமாவின்மேல் இருந்த மோகம் தெரிந்தது. எம்.ஜி.ஆர் ரசிகர் அவர். சினிமா பற்றிய விவரங்கள் அவர் கைவிரல் நுனியில் இருந்தன. ‘நீங்கள் அபூர்வமாக எங்களுக்கு கிடைத்த எழுத்தாளர். தொடர்ந்து எழுதுங்கள்’ என்றேன். உடனேயே குரல் மாறியது. அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சி தந்தது. ‘நான் மீண்டும் உங்களுடன் பேசுவேனோ தெரியாது. என்னைக் கொல்வதற்கு ஒரு கும்பல் காத்திருக்கிறது’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். பின்னர் நீண்ட காலம் தொடர்பு விட்டுப் போயிற்று. மறுபடியும் சில வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் முகவரி கிடைத்து, வருடத்திற்கு இரண்டு மூன்று தடவையாவது தொடர்பில் இருந்தோம்.

 

இப்படி அறிமுகமான ஷோபா சக்தி சமீபத்தில் மொன்றியல் திரைப்பட விழாவிற்கு ’செங்கடல்’ படத்தை திரையிடுவதற்காக அதை இயக்கியவரும் கதாசிரியருமான லீனா மணிமேகலையுடன் கனடா வந்திருந்தார். ஷோபா சக்தி இந்தப் படத்தின் வசனங்களை எழுதி அதில் நடித்தும் இருந்தார். இவர்களை ரொறொன்ரோவில் ஓர் உணவகத்தில் சந்தித்தேன். சூரியன் அவசரப்பட்டு உதித்த அருமையான காலை. ஷோபா சக்தி புகைப்படத்தில் நான் பார்த்ததைவிடவும் இளமையாகக் காட்சியளித்தார். சாயம்போன நீலநிற நீளக்கை சேர்ட்டை முழங்கை மட்டும் மடித்து விட்டிருந்தார். நெஞ்சுமயிர் தெரிகிறமாதி மூன்று பொத்தான்கள் திறந்துவிடப்பட்டிருந்தன. வாராமல் கவனமாகக் கலைக்கப்பட்ட அடர்த்தியான முடி. நடிகர் தனுஷ்போல வில்லாக வளையும் உடல்வாகு, அத்துடன் அழகாக கத்தரிக்கப்பட்ட தாடி, மீசை. காதிலே தோடு, கழுத்திலே தட்டையான சங்கிலி, முகத்திலே புன்னகையுடன் காட்சியளித்தார். அவர் எழுத்தைப் போலதான் பேச்சும் நகைச்சுவையுடன் இருக்கும். பேச ஆரம்பித்ததும் இன்னும் வசீகரமாகத் தெரிந்தார்.

 

உடல்நல விசாரிப்புகளுக்கு பின்னர் ’செங்கடல்’ திரைப்படம் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார். ‘ ஒரு ஷோபா சக்தி வசனம் எழுதி அதை திரைப்பட தணிக்கை குழு அப்படியே ஏற்றுக்கொண்டால் எனக்கு என்ன மரியாதை. ஒவ்வொரு வசனமும் தணிக்கை குழுவின் ஆட்சேபணையை கிளப்பும் விதமாகவே எழுதப்பட்டிருக்கிறது. லீனாவின் உச்சமான இயக்கத்தை படத்தில் பார்ப்பீர்கள். நடிகர்களை தயாரிக்கவில்லை. மேக்கப் இல்லை. அகதி அகதியாகவே நடித்தார். மீனவர் மீனவராகவே நடித்தார். படம் எடுக்கப்பட்டபோது பதிவுசெய்த ஒலிதான், டப்பிங் இல்லை. ஒரே பிரச்சினை என்னவென்றால் இலங்கை அகதிகள் காமிரா முன்னுக்கு நின்றவுடன் இந்தியத் தமிழ் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதை மாத்திரம் திருப்பி திருப்பி எடுக்கவேண்டி வந்தது. ஆனால் இப்படியான ஒரு படத்தை நீங்கள் ஆயுளில் பார்த்திருக்கமாட்டீர்கள். இரண்டு வருடமாக இழுத்தடித்த பின்னர் தணிக்கை குழு படத்தை ஒருவித மாற்றமும் இல்லாமல் அப்படியே அங்கீகரித்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி முன்னர் நடந்தது கிடையாது.’

 

’புதிரானவராக இருக்கிறீர்களே. எப்படி எழுத்து துறைக்கு வந்தீர்கள்?’ என்றேன். ’நான் பத்து வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். சுவரிலே வாசகங்கள் எழுதியதுதான் என் முதல் எழுத்து. எல்லாம் அரசியல் சுலோகங்கள். இரண்டாவதாக எழுதியது அரசியல் துண்டறிக்கைகள். கு.அழகிரிசாமி என்னுடைய முதல் ஆதர்சம். என்னுடைய 13,14 வயதிலேயே நான் அவரால் முற்றாகக் கவரப்பட்டுவிட்டேன். மொழிபெயர்ப்பில் பிடித்தது மாக்சிம் கார்க்கி. ஏன் என்றால் இவர்கள் தங்கள் எழுத்துக்களால் சமுதாயப் புரட்சி கொண்டுவர முயன்றார்கள். இலக்கியம் கட்சிக் கோட்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்பது எனக்கு முக்கியம். நான் 19 வயதில் இலங்கையைவிட்டு புறப்பட்டு தாய்லந்தில் நாலு வருடம் முடங்கிக் கிடந்தேன். நான் கையில் எடுத்துக் கொண்டுபோனது பாரதியின் கவிதைகளும் பைபிளும்தான். இவை இரண்டையுமே திருப்பி திருப்பி படித்தேன். என் தமிழ் நடை அப்படித்தான் உருவானது. அரசியல்தான் என் மூச்சு. புனைகதை இரண்டாம் பட்சம்தான். என் மூளை நிறைய எழுதுவதற்கு விசயங்கள் இருக்கின்றன. ஆனால் எழுதாமல் தள்ளிப்போட்டபடியே இருந்து, இனி ஏலாதென்ற கடைசி நிமிடத்தில் எழுதுவேன்.’

 

‘நீங்கள் முழுநேர எழுத்தாளரா அல்லது வேறு வேலை பார்க்கிறீர்களா?’ ‘என்னைப்போல ஓர் அதிர்ஷ்டக்காரன் இருக்க முடியாது. நான் என் சகோதரியுடன் பாரிஸில் வசிக்கிறேன். இருப்பிடமும் உணவும் இலவசம். எனக்கு ஆகக் குறைந்தது பத்து தொழில்கள் தெரியும்; கோப்பை கழுவுவது, ஹொட்டல் பராமரிப்பு, சுப்பர்மார்க்கட் வேலை, வர்ணம் அடிப்பது, தச்சுத் தொழில் இப்படி பழகிவைத்திருக்கிறேன். எந்த நேரமும் என்னால் ஒரு வேலை எடுக்கமுடியும். எந்த நேரமும் அதை விடலாம். போதிய காசு சேர்ந்தவுடன் பயணம் புறப்படுவேன். எனக்கு தேசம் சுற்றுவதில் ஆர்வம் அதிகம். காசு முடிந்ததும் பழையபடி ஏதாவது வேலை செய்வேன். அல்லது எழுதுவேன்.’

 

மறுபடியும் அவரை இரவு உணவுக்குச் சந்தித்தபோது நேரம் பிந்தி  வந்தார். ’ஏன் லேட்டாக வந்தீர்கள்?’ என்று கேட்டேன். இந்தக் கேள்வி அவரிடம் இருந்த உற்சாகமான கதை சொல்லியை வெளியே கொண்டுவந்தது. ‘எங்கள் ஊரில் இரண்டு சண்டைக் குழுக்கள் இருந்தன. அதிலே ஒரு குழுவின் தலைவர் உயரமாக வாட்டசாட்டமாக இருப்பார். அவர் என்னுடைய சொந்தக்காரர். இங்கே ரொறொன்ரோவில் அவர் பெந்தேகொஸ்தே மதகுருவாக இருக்கிறார். என்னிடம் உள்ள கெட்ட ஆவிகளைப் போக்கி நல்வழிப் படுத்துவதற்காக இரண்டு மணி நேரம் பிரார்த்தித்தார். அது இரண்டு நாள் தொடர்ந்தாலு,ம் நடக்கக்கூடிய காரியம் அல்ல. நான் தவறிப்போன ஆட்டுக்குட்டி என்று சொன்னார். நாங்கள் பரலோகம் செல்லும்போது இரண்டு கையிலும் புண்ணியத்தை சுமந்துகொண்டு செல்லவேண்டும். பாவத்தை சுமந்துகொண்டு எப்படிப் போவது என்று புத்திமதிகளால் என்னை நிரப்பினார். எனக்கு பயமாயிருந்தது. எப்படியோ தப்பி ஓடிவந்துவிட்டேன்’ என்றார்.

 

கனடா உணவு அவருக்கு நல்லாய் பிடித்துக்கொண்டது. பிரான்சிலும் இந்தியாவிலும் கிடைக்கும் உணவிலும் பார்க்க ருசியில் மேலானது என்றார். பிரியாணிக்கு ஆணை கொடுத்தோம். மேலும் இரண்டு நண்பர்கள் சேர்ந்துகொண்டார்கள்.  விஸ்கிக்கும் ஆணை கொடுத்தோம். ஒவ்வொரு 15 நிமிடமும் வெளியேபோய் சிகரெட் பிடித்தார். உணவு வந்தது. ஆளுக்கு நாலு கிளாஸ் விஸ்கி அருந்திவிட்டோம். இரவு பத்து மணிக்கு கடையில் பியர் இருக்கோ என்று விசாரித்தார். அவர்கள் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். சாப்பாடு மிகக் குறைவாகவே சாப்பிட்டார். ஏன் என்று கேட்டதற்கு உடம்பை கட்டுக் கோப்பாக வைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு மறுபடியும் வெளியே சிகரெட் புகைக்க போனார்.

 

‘புதிதாக ஏதாவது எழுதுவதற்கு திட்டம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ஒரு நாவல் எழுத வேணும். யாழ்ப்பாணம் சென்று மூன்று மாதம் என் மண்மேல் தங்கி எழுதுவதாக திட்டம். நாவலின் உட்பொருள் உருவம் எல்லாம் தீர்மானமாகிவிட்டது. எஞ்சி இருப்பது உடல் உழைப்புத்தான். கம்புயூட்டரில் பதிவுசெய்ய வேணும்’ என்றார். ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டார். சில வருடங்களுக்கு முன்னர் ஷோபா சக்தி என்னை வைத்து ’மூடுலிங்க’ என்று ஒரு சிறுகதை புனைந்திருந்தார். அவர் அப்படி எழுதியது எனக்கு தெரியாது. நண்பர்கள் சொல்லிய பின்னர்தான் படித்தேன். நான் அவரை வைத்து ’ஷோபு’ என்று ஒரு சிறுகதை எழுதுவதை அவருக்கு சொல்லவில்லை. ஒரு பாதைக்கு இரண்டு திசைகள் இருக்கின்றன அல்லவா? வரும்போது படித்து ஆச்சரியப்பட்டுக் கொள்ளட்டும் என்று பேசாமல் விட்டுவிட்டேன்.

 

விடை பெறும் நேரம் வந்தது. எனக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் இப்பொழுது இல்லை. அவரை நினைத்தேன். கட்டிப் பிடித்து விடை கொடுத்தேன். ‘ஈழத்து இலக்கியத்தின் எதிர்காலம் நீங்கள். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றேன். ’சரி, நீங்களும் அப்படியே’ என்று சொன்னார். அவர் சென்ற பிறகு அவர் கையெழுத்திட்டு தந்த புத்தகத்தை திறந்து பார்த்தேன். உருண்டையான அழகான கையெழுத்து. நாங்கள் சந்தித்த தேதி 30 ஆகஸ்ட் மாதம் 2011. ‘மிக்க அன்புடன் – ஷோபா’ என்று எழுதி 30 செப்டம்பர் 2011 தேதியை போட்டிருந்தார். வரலாற்றாசிரியர்கள் இந்தத் தேதியைத்தான் நாங்கள் சந்தித்த தேதி என்று குறிப்பிடப் போகிறார்கள். காலத்தை முந்திய எழுத்தாளர்தான். அதிலென்ன சந்தேகம்.

 

END

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta