நாடற்றவன்

""

 

ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள்  பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலேயே இருக்கும். அவன் பெயர் குவோர் மாரியல்.

 

குவோர் மாரியலுக்கு 28 வயது. தெற்கு சூடானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக 12 வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்தான். அவனுக்கு வசிப்பிட உரிமை கிடைத்தது, ஆனால் குடியுரிமை  கிடைக்கவில்லை. அவன் தீவிரமான மரதன் ஓட்டக்காரன்.  ஆனாலும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவன் ஓடமுடியாது என்று கூறிவிட்டார்கள். அப்படி ஓடுவதென்றால் அவனுக்கு ஒரு நாடு வேண்டும். சூடான் அதிபர் அவன் சூடான்  நாட்டுக் கொடியின் கீழ் ஓடலாம் என அழைப்பு விடுத்தார். அவனுடைய எட்டு சகோதர்களைக் கொன்றது சூடான் அரச படை. அவர்களின் அட்டூழியம் தாங்கமுடியாமல்தான் அவன் 12 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அகதியானான். சூடான் நாட்டு கொடியின் கீழ் அவன் எப்படி ஓடமுடியும்? தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அதனிடம் ஒலிம்பிக் குழு இல்லை. அதனால்தான் இப்பொழுது இந்த நாடற்ற மனிதனுக்கு ஒலிம்பிக் கொடியின் கீழ் ஓட அனுமதி கிடைத்திருக்கிறது.

 

குவோர் மாரியலுக்கு ஓட்டம் இயற்கையாக வந்தது. சமீபத்தில் மரதன் ஓட்டத்தை 2 மணி 14 நிமிடம் 32 செக்கண்டில் ஓடி முடித்து ஒலிம்பிக் மரதனுக்கு தகுதி பெற்றிருந்தான். ஆனால் நாடில்லாத அவனை  அமெரிக்கா கவனித்ததாக தெரியவில்லை. எனவே  3500 கையெழுத்தாளர்கள் குவோல் மாரியலுக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற அனுமதி கொடுக்கவேண்டும் என ஒலிம்பிக் குழுவுக்கு மனு அனுப்பினார்கள். ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருவாரம் இருந்தபோது அனுமதி கிடைத்திருக்கிறது. இதைப் பெரிய வெற்றியாக பத்திரிகைகள் கொண்டாடின. ஒரு பத்திரிகை ’தெற்கு சூடானின் குரல் ஒலிம்பிக்வரை கேட்டது’ என்று எழுதியது. இன்னொரு பத்திரிகை ’இந்த தனிமனிதனின் வெற்றியை பூமி மகனின் வெற்றி என கருதலாம்’ என எழுதியது. மாரியல் ’தெற்கு சூடான் கொடியை நான் ஏந்தவில்லை. ஆனால் என்னுள்ளத்தில் அந்தக் கொடியை ஏந்தியபடியே ஓடுவேன்’ என்று கூறுகிறான்.

 

சூடான் உள்நாட்டு போர் எனக்கு பரிச்சயமானது. நான் சூடான் நாட்டில் சில வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன். என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்த அத்தனை பேருமே அரபு மொழி பேசுபவர்கள், வடக்கு சூடானை சேர்ந்தவர்கள். ஆனால் தெற்கு சூடானில் இருந்து வந்த ஒருத்தனும் அங்கே வேலை பார்த்தான். அவன் பெயர் மாலோங். அவனுக்கு அரபு தெரியாது. கறுப்பாக உயர்ந்துபோய், கரண்டியின் பின்பக்கத்தில் தெரியும் உருவம்போல வளைந்துபோய் இருப்பான். வேலையில் கெட்டிக்காரனான இவனிடம் நான் மிகுந்த அன்பு பாராட்டினேன்.  ஆனால் இவனுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று, இவனுக்கு அரபு மொழி தெரியாது. இரண்டு, இவனும் இவனுடைய குடும்பத்தவரும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இவனுக்கு குரலை உயர்த்தவோ எதிர்த்துப் பேசவோ தெரியாது. உத்தரவுகளுக்கு அடிபணிந்து மட்டுமே பழகியவன்.

 

இவனை, தெற்கிலிருந்து வந்த ஒரே காரணத்துக்காக அலுவலகத்திலிருந்த அத்தனை பேரும் வெறுத்தார்கள், ஒதுக்கினார்கள், கொடுமைப்படுத்தினார்கள்.  சூடானுக்கும், விடுதலை கோரும் தெற்கு சூடானுக்கும் இடையில் உள்நாட்டு போர் மூண்டிருந்த காலம் அது. அதனால் அவனுடன் ஒருவரும் பேசுவதில்லை. அலுவலக பணியாளர்கள் வரும் பஸ்ஸில் அவன் ஏற முடியாது. அலுவலக உணவு மேசையில் அமர முடியாது. மற்றவர்கள் மேசையில் அமர்ந்து உணவு உண்ணும்போது  அவன் பாத்ரூம் அருகே, சுவர் பக்கமாக திரும்பி நின்றபடி தன் உணவைச் சாப்பிடுவான். ஒருநாள் காரியதரிசி என்னிடம் சொன்னாள் ‘தெற்கிலேயிருந்து இங்கே வந்து வேலை செய்பவன் மாலோங். அவனிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவன் விலங்கு வணங்கிகள் இனத்தைச் சேர்ந்தவன். இவனும் ஒரு விலங்குதான்.’

 

ஒருநாள் காலையில் அலுவலகத்துக்கு வந்த மாலோங் மாலை அங்கே இல்லை. மறைந்துவிட்டான். பின்னர் அலுவலகத்துக்கு அவன் வரவே இல்லை. அவன் மேசையில் ஒரு கடிதம் பாதி எழுதப்பட்ட நிலையில், பாதி வசனத்தில் நின்றது. எங்கே ஓடினான். யார் துரத்தினார்கள் என்பது என்றுமே அவிழ்க்க முடியாத  புதிராகிவிட்டது. எங்கே இருந்தாலும் அவன் இன்று சுதந்திர மனிதன். சூடான் அதிபர் பதவியில் இன்றைக்கும் தொடரும் அல் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றவாளி என்றும், இனப்படுகொலைக் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. அதிபர் பதவி வகிக்கும் ஒருவரின் மேல் இப்படி குற்றம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் தடவை. இனப்படுகொலையும், இன அடக்கு முறையும் அனுபவித்த, அனுபவிக்கும் அத்தனை மக்களின் பிரதிநிதியாக குவோர் மாரியல் ஒலிம்பிக்கில் ஓடுவான்.

 

உங்கள் மனைவி உங்களுக்காக சமைத்த உணவை பரிமாறும்போது நீங்கள் சுவைத்து உண்கிறீர்கள். அதே உணவை  நீங்கள் ரயிலில் நீண்ட பயணம் செய்யும்போது மனைவி உங்களுக்கு கட்டுச் சாதமாக தந்து விடுகிறார். ஓடுகின்ற ரயிலில் நீங்கள் அதை பிரிக்கும்போது நாவூறும். சாதத்தையும், கூட்டையும், பொரியலையும், பருப்பையும் பார்த்ததும் உங்கள் மனக்கண்ணில் மனைவி தெரிகிறார். அவர் சமையலறையில் நாள் முழுக்க நின்றவாறு, நெற்றி வியர்வையை முழங்கையால் துடைத்தபடி, கவனம் பிசகாமல் சமைக்கிறார். நீங்கள் உணவை ரசித்து சாப்பிடும்போது அதுவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும். ருசி இன்னும் பிரமாதமாகிவிடுகிறது. மனைவியின் அன்பை நினைந்து பார்க்காமல் உங்களால் உண்ணவே முடியாது.

 

12 ஆகஸ்டு 2012 லண்டனில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி நடைபெறும். பல்வேறு நாடுகளிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த 42.195 கி.மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்வர். அந்தக் கூட்டத்தில், ஒரு பெண்ணால் ’விலங்கு வணங்கிகள்’ என்று வர்ணிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த  குவோர் மாரியல் இருப்பான். கட்டுச் சாதத்தை பிரிக்கும்போது மனைவியை நினைப்பதுபோல இந்த மரதன் ஓட்டக்காரன் ஓடுவதை பார்க்கும்போது சுதந்திரமடைந்த தெற்கு சூடான் மக்களை நினைந்து கொள்வேன். என்னுடன் வேலைசெய்து பாதியிலே வேலையை துறந்து எனக்குச் சொல்லாமலே ஓடிப்போன மாலோங்கை நினைந்து கொள்வேன். சூடான் உள்நாட்டு போரிலே மடிந்த 1.5 மில்லியன் மக்களை நினைந்து கொள்வேன். போரிலே அநியாயமாக கொல்லப்பட்ட  மாரியலின் சகோதர்கள் எட்டு பேரையும் நினைந்து கொள்வேன். என் கண்கள் மாரியலின் ஓட்டத்தை மட்டுமே பார்க்கும். அவன் முதலாவதாக  வந்தாலும் சரி, கடைசியாக வந்தாலும் சரி, 2012 ஒலிம்பிக் மரதன் ஓட்டவீரன் அவன்தான். நாடற்றவன்.

END

 

About the author

1 comment

  • இந்த கட்டுரையை எழுதியமைக்கு நன்றி ❤️

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta