அன்றன்றைக்கு உரிய அப்பம்

                    அன்றன்றைக்கு உரிய அப்பம்

                    அ.முத்துலிங்கம்                        

2018 யூன் மாதத்து காலை நேரம். ரொறொன்ரோ விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. நான் பூச்செண்டுடன் காத்திருந்தேன். சரியாக 10 மணிக்கு விமானம் தரை இறங்கிவிட்டது என அறிவுப்புத்திரை சொன்னது. நேரம் 11ஐ தாண்டிவிட்டது. நான் பக்கத்தில் நின்ற நண்பர் செல்வத்தை பார்க்கிறேன். அவரும் பார்க்கிறார். ஒவ்வொரு வருடமும் இருவரும் விமான நிலையத்துக்கு வருவோம். இம்முறை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனை இயல் விருதினைப் பெற எழுத்தாளரும்,  கவிஞருமான வண்ணதாசன் வருகிறார். அவருக்காகக் காத்திருந்தோம்.

பத்திரிகைகளில் அடிக்கடி காணப்பட்ட அவர் முகத்தின் சாயலோடு யாராவது வருகிறார்களா என நான் வெளியே வரும் பயணிகளை உற்றுப் பார்த்தேன். எல்லோரும் வருகிறார்கள்; வண்ணதாசனை மட்டும் காணவில்லை. ஒருவேளை ஏற்கனவே வந்து வெளியே போய்விட்டாரா? ஒருவர் வருகிறார். அவர் தள்ளும் வண்டிலில் ஒரேயொரு பெட்டி இருக்கிறது. வண்ணதாசனின் சாடையான முகம். தயங்கித் தயங்கி இருபக்கமும் பார்த்தபடி வருகிறார். நான் விரைந்து சென்று அவர் முன்னே நின்றேன். அவர் கனடாவில் புழங்காத மொழியில் ஏதோ கேட்டார். பின்னர்  எரிச்சலுடன் திரும்பி மறுபக்கமாகச் சென்றார். நிச்சயம் அவர் வண்ணதாசன் இல்லை.

இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. பூச்செண்டு வாடி வேறு பூவாக மாறிவிட்டது. நிமிர்ந்து நின்ற பூ குனிந்து நின்றது. மறுபடியும் பூக்கடைக்காரியிடம் சென்று புதுப் பூச்செண்டு  வாங்கிக்கொண்டேன். நினைவில் நிற்கும் முகத்துடன் ஒவ்வொரு முகமாக ஒப்பிட்டுப் பார்க்கிறேன். கடைசியில், அத்தனை எச்சரிக்கையுடன்  நின்றும், என்னை முதலில் பார்த்தது அவர்தான். பூங்கொத்தை நீட்டி நானும் செல்வமும் அவரை வரவேற்றோம்.

வண்ணதாசன் கனடாவில் ஆறு நாட்கள் தங்கினார். எப்பொழுதும் குளிர் மீதமிருக்கும் கனடாவில் அந்த ஆறு நாட்களும் வெய்யில் எறித்தது வியப்புத்தான்.  ஒவ்வொரு நாளும் காலையில் அன்று இரவு கண்ட கனவை என்னிடம் பகிர்ந்து கொள்வார். அவருடைய கனவுகள் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் முழு உருவத்திலேயே கிடைக்கும்.  மற்ற எழுத்தாளர்கள்போல சிறுகதைகளையோ, கவிதைகளையோ, கட்டுரைகளையோ அவர் திரும்பத் திரும்ப திருத்துவது கிடையாது. எந்த உருவத்தில் அவை வெளியே வருகின்றனவோ அதுதான் அவருக்கு இறுதி வடிவம். ஒரு முறை அவர் இப்படி எழுதினார் என ஞாபகம்.  ’கனவில் வரும் யானை நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தது. பல வருடங்கள் கழிந்துவிட்டதால் என்னுடைய வயது கூடிவிட்டது. ஆச்சரியம் என்னவென்றால் கனவில் வந்த  யானையும் உருவத்தில் அதிகரித்து காணப்பட்டது.’

இயல் விருது விழா அன்றும் அவர் பேசியது இயல்பாக, அந்த நிமிடம் யோசித்துப் பேசியது போலவே அமைந்தது. அவர் நயாகரா காட்சியை விவரித்தார். அன்று சபையில் இருந்த அத்தனை பேரும் ஏற்கனவே நயாகராவைப் பலதடவை பார்த்தவர்கள்தான். ஆனாலும் அவர் விவரித்த நயாகரா வேறு. ஒரு கவிஞன் கண்ட காட்சியாகவே அது விரிந்தது. நயாகராவையும் அதன் மேல் பறந்த ஒரு பறவையையும் அவர் மாறி மாறிப் பார்க்கிறார். நயாகரா அளவுக்கு பிரம்மாண்டமானதாக அந்தச் சிறிய பறவையும் அவர் வர்ணனையில் மாறிவிடுகிறது.

நான் எழுத்தாளர் சுஜாதாவை இரண்டு தடவை சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவர் வண்ணதாசனுடைய சிறுகதையை சிலாகித்துச் சொல்லுவார். நான் வண்ணதாசனை ஏற்கனவே படித்துத்தான் இருந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் படித்த ஒரு சிறுகதை. பஸ் நிலையத்தில் ஒரு மாணவி பேருந்துக்காக  காத்து நிற்கிறாள் . அன்று அவளுக்கு பரீட்சை. அவளுடைய பஸ் வரவில்லை. ஆகவே பதற்றமாகிறாள். ஒரு பெரியவர் அவளிடம் கதை கொடுக்கிறார். அவள் குடும்பத்தை பற்றி கரிசனையுடன் விசாரிக்கிறார். பின்னர் அவருடைய பஸ் வந்ததும் அதில் ஏறிப் போய்விடுகிறார். ரோட்டுக்கு எதிர்ப்பக்கம் ஒரு கடை. அந்தக் கடைக்காரர் மாணவியிடம் வருகிறார். ‘நீ ஒரு பெரியவருடன் பேசினாயே. அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்கிறார். அவள் ’தெரியாது’ என்கிறாள். ‘அவர்தான் உன் அப்பாவை கொலை செய்தவர். இப்பொழுது ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டார்.’ கதை முடிகிறது. மறக்கமுடியாத அந்தக் கதை பற்றியும் சுஜாதாவுடன் பேசியிருக்கிறேன்.

வண்ணதாசன் நயாகராவுக்கு அடுத்தபடியாகப் பார்க்க விரும்பியது ரொறொன்ரோவின் பிரபலமான அருங்காட்சியகம்தான். ஓவியத்தில் அவருக்கு நல்ல ஈடுபாடு உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரை செய்ததால் அதைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று சொன்னார். ஒருநாள் முழுக்க அதைப் பார்த்தார். அன்றைய கூட்டத்தில் பேசும்போது ‘அருங்காட்சியகத்தில் அருமையான ஓவியங்கள் எல்லாம் பார்த்தேன். ஆனால் கனடாவில் பிரபலமான மேப்பிள் இலையை என்னால் பார்க்க முடியவில்லை. பல மணிநேரம் அண்ணாந்து மேப்பிள் மரங்களை தேடினேன். அவை என் கண்ணில் படவே இல்லை’ என துயரத்துடன் கூறினார்.

கூட்டம் முடிந்த பின்னர் அவரை நண்பர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்டார்கள். மேப்பிள் இலைபற்றி விளக்கம் சொன்னார்கள். ‘மேப்பிள் இலையின் இயற்கை நிறம் பச்சைதான். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதன் நிறம் மாறத்தொடங்கும். பழுப்பாகவும், செம்பழுப்பாகவும், சிவப்பாகவும் மாறும். தீச்சுவாலை பரவி காடு எரிவதுபோல தகதகவென்றிருக்கும். அந்த அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் உலகின் பல பாகங்களிலும் இருந்து  வந்து குவிவார்கள். நீங்கள்  அந்த இயற்கையின் மாபெரும் விளையாட்டைக் காண மறுபடியும் அக்டோபர் மாதம் வரவேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார்கள்.

அவர் பயணம் புறப்படும் நாள் வந்தது. அவரிடம் விடைபெற அவர்  தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்றேன். வண்ணதாசன்  அவருடைய கதைகளில் கடைசி பாராவில் ஒரு திருப்பம்  வைத்திருப்பார்.  அதுபோல எனக்கும் ஒரு திருப்பம் வைத்திருந்தார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயரைச் சொல்லி அதை நான் படித்திருக்கிறேனா என்று கேட்டார்.  ’சின்ன விஷயங்களின்  மனிதன்’ என்ற கட்டுரைத் தொகுப்பு அது. ‘இல்லையே’ என்று சொன்னேன். ’அதை உங்களுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறேன்’ என்றார். ’அப்படியா?’ எனக்கு வேறு வார்த்தை வரவில்லை. ’இதை 2014ம் ஆண்டு எழுதி வெளியிட்டிருந்தேன். உங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இப்பொழுதுதான் நேரிலே தருவதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது’ என சொல்லியபடியே நூலை நீட்டினார்.  நான் புத்தகத்தை திறந்து அவர் எழுதியிருந்த சமர்ப்பணத்தை நின்றபடியே வாசித்தேன்.

‘புனைவுகளாலும், அதைவிடக் கூடுதலாகத் தன்னுடைய அபுனைவுகளாலும் நவீன தமிழுக்குத் தொடர்ந்த பங்களிப்பை அளித்துவருகிற திரு அ.முத்துலிங்கம் அவர்களின் கையில் இந்த தொகுப்பைக் கனிவுடன் சேர்க்கிறேன்.’ 

நான் அவரை பல வருடங்களாக அறிந்திருந்தேன். அவருடைய கட்டுரைகளையும் சிறுகதைகளையும், கவிதைகளையும் அவ்வப்போது படித்து ரசித்திருக்கிறேன். ஒருபோதும் அவருக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று தோன்றவில்லை. தொலைபேசியில் பேசியிருக்கலாம், அதையும் செய்யவில்லை. அவராவது என்னைத் தொடர்பு கொண்டிருக்கலாம். அவரும் செய்யவில்லை. பெரிய குற்றம் செய்தவன்போல நான் நின்றேன். மனம் நெகிழ்ந்துபோய் கிடந்தது. 

’புறப்படுகிறேன்’ என்று என் கைகளைப் பற்றிக்கொண்டார். பெங்களூரில் அவர் மகள் வசிக்கும் அடுக்ககத்து புறா ஒன்று உதிர்த்த இறகை மிகக் கவனமாக  எனக்காக எடுத்து வந்திருந்தார். அவர் ஞாபகமாக அதை என் கைகளில் கொடுத்தார். இதை எழுதும்போது 13,000 கி.மீட்டர் பயணம் செய்து வந்த இறகு எனக்கு முன் இருக்கிறது. என் வீட்டு மேப்பிள் மரத்தில் நான் ஒடித்து வந்த பச்சை நிற மேப்பிள் இலை ஒன்றை என் ஞாபகமாக அவருக்கு தந்தேன். அவர் அதைப் பெற்று தன் பயணப்பெட்டியில் பத்திரப்படுத்தினார்.

அன்றன்றைக்கு உரிய அப்பம் அன்றன்றைக்கு கிடைக்கவேண்டும். 2014ம் ஆண்டு கிடைக்க வேண்டியது  2018ல் கிடைத்திருக்கிறது. நாலு வருட தாமதம். அதனால் என்ன? நாலு மடங்கு அதிக இனிப்பாக அல்லவா இருந்தது.

END

About the author

1 comment

  • மஹாகவி பாரதி ,கல்கத்தா காங்கிரஸ் மாநாடு சென்றபோது நிவேதிதா தேவியை சந்திக்கிறார். விடைபெறும் வேளையில், இமயமலை யில் கிடைக்கும் ஒரு அபூர்வமான மூலிகை இலையை தேவியார் நினைவுப்பரிசாக தர,.பலநாள் அதை பாரதி புதையல் போல் பாதுகாத்தார்…அந்த இலையை போலவே, `மேப்பிள் இலையினை, கொடுத்தவர்- பெற்றவர் இருவருமே கூட எங்களுக்கு அபூரவமானவர்கள்தான்.! .

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta