உள்ளே வராதே
அ.முத்துலிங்கம்
சிறுவயது ஞாபகங்கள் என்றும் மனதிலிருந்து அழிவதில்லை. இன்று காலை என்ன உணவு சாப்பிட்டேன்? ஞாபகமில்லை. நேற்று பத்திரிகை தலைப்பு செய்தி என்ன? ஞாபகம் இல்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் நடந்தவை இன்னும் நினைவில் அப்படியே நிற்கின்றன. அதுமட்டுமல்ல, அப்போ நடந்தவற்றையும், படித்தவற்றையும் இப்போ நடக்கும் சம்பவங்களுடன் தொடர்பு படுத்த முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கையில் நாம் படிக்க வேண்டிய பாடங்கள் எல்லாவற்றையும் 12 வயதுக்குள்ளேயே நாம் கற்றுக்கொண்டு விடுகிறோம் என்றுதான் தோன்றுகிறது.
சிறுவயதில் எங்கள் கிராமத்துக் கோயிலில் கதாப்பிரசங்கம் நடைபெறும். இரவு நேரம் நடப்பதால் என்னை அங்கே லேசில் போக விடமாட்டார்கள். கெஞ்சி மன்றாடி போவேன். கிருபானந்தவாரியார் பத்து நாட்கள் தொடர்ந்து பேசுவார். எனக்கு இரண்டு மூன்று நாட்கள் போக அனுமதி கிடைக்கும். அவர் தங்கியிருந்த வீடு என் நண்பன் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தது. ஒருநாள் பகல் அந்த வீட்டுக்கு போனேன். வீட்டு வாசலில் நின்ற வேலைக்காரன் என்னைக் கண்டதும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ’உள்ளே வராதே’ என்று கத்தினான். கிருபானந்தவாரியார் வெளித் திண்ணையில் சப்பணக்கால் போட்டு ஓர் எழுத்து மேசையின் முன் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். வெற்று உடம்பு. நெற்றி முழுக்க விபூதி. கழுத்திலே ருத்திராட்ச மாலைகள்.
வாரியார், வேலைக்காரனை நிமிர்ந்து பார்க்க அவன் ‘யாரோ சின்னப் பெடியன். நான் துரத்திவிடுகிறேன்’ என்றான். வாரியார் ’சின்னவர், பெரியவர் என்று ஒரு வித்தியாசமும் கிடையாது. பையனை உள்ளே அனுப்பு’ என்றார். தலைமையாசிரியர் அறைக்கு போவதுபோல நடுக்கத்துடன் நுழைந்தேன். புன்னகையுடன் ’என்ன வேணும்?’ என்றார். ‘சும்மா பார்க்க வந்தேன்.’ ‘பின்னேரம் பிரசங்கம் கேட்க வருவியா?’ என்றார். தலையாட்டினேன். ‘இன்றைக்கு வர மறக்காதே’ என்றார். நான் வீடு திரும்பி எப்படியோ அனுமதி பெற்று அவருடைய பிரசங்கத்துக்கு போய் முன் வரிசையில் அவர் பார்க்கக்கூடிய தூரத்தில் உட்கார்ந்தேன்.
அன்று, ராமர் குகனை சந்தித்த இடத்தைப் பற்றி வாரியார் விளக்கமாகப் பேசினார். ராமர் அரசகுமாரன். குகனோ வேடுவன். அவன் கொண்டுபோன தேனையும் மீனையும் ’அமிழ்தினும் இனியது’ என ராமர் பாராட்டுகிறார். சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பின்னர் சுக்ரீவனுக்கு உதவுகிறார். போரின் தொடக்கத்தில் விபீடணன் அடைக்கலம் கேட்டுவர அவனையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். சுக்கிரீவன் குரங்கு இனம். குகன் வேடுவன். விபீடணன் பாதி அசுரன், பாதி முனிவர். ராமரோ அரசகுமாரன். அவர்கள் எல்லோருமே ராமருக்கு சகோதரர்கள் ஆகிறார்கள். ஒரு வேறுபாடும் கிடையாது. சின்னவர் பெரியவர் இல்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது. அன்று அதை வாரியார் எனக்குச் சொன்னது போலவே உணர்ந்தேன்.
’குகனொடும் ஐவரானோம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம், எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம்’
சமீபத்தில் நான் படித்த சம்பவம் ஒன்று சிறுவயதில் நான் கற்றுக் கொண்டதை நினைவு படுத்தியது. சாள்ஸ் பிளம் என்பவர் போர் விமானி. அமெரிக்க வியட்நாம் யுத்தத்தின்போது மிகத் திறமையாக விமானம் ஓட்டி இலக்கு தவறாமல் குண்டுகள் போட்டு பெயரெடுத்தவர். கப்பலில் இருந்து விமானம் புறப்படும் முன்னர் பலருடைய உதவி அவசியம். விமானம் பழுதுபார்ப்பவர், எரிபொருள் நிரப்புபவர், காலநிலை கணிப்பவர், பாரசூட் பொறுப்பாளர் என அனைவரும் உதவுவார்கள். ஆனால் விமான ஓட்டிகள் இவர்களை பொருட்படுத்துவதில்லை. பேசமாட்டார்கள். அவர்கள் பகுதி கதவில் ’உள்ளே வராதே’ என எழுதியிருக்கும்.
போர் முடிந்த பின்னர் ஒருநாள் பிளம் தன் மனைவியுடன் உணவகம் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்தார். அப்பொழுது முன்பின் அறியாத ஒருவர் வந்து கைகொடுத்து ’நீங்கள் பிளமா?’ என்றார். ’ஆமாம்.’ ’விமான ஓட்டிதானே?’ ’ஆமாம்.’ ’உங்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தி நீங்கள் 4 வருடம் வியட்நாம் சிறையில் இருந்தீர்கள் அல்லவா?’ ’ஆமாம். நீங்கள் யார்?’ ’நான்தான் உங்கள் பாரசூட்டை மடித்து வைத்தவன்.’
பிளம் ஒன்றுமே பேசாமல் அப்படியே நின்றார். அவர் மனதில் ’நான் பெரிது, நீ பெரிது என ஒன்றுமே இல்லை’ என்ற சிந்தனை ஓடியிருக்கும். இதுதான் எட்டு வயதில் என் மனதிலும் ஓடியது.
END
