இரு கவிகள்

                                                  இரு கவிகள்

                                               அ.முத்துலிங்கம்

சென்ற வாரம் ரொறொன்ரோவில் இரண்டு கவிகளைச் சந்தித்தேன். தனித்தனியாக. ஒரு கவியை சந்திப்பதே சிரமமான காரியம். ஆனால் சில அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அன்று காலையே சந்தைப்படுத்தும் தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கிவிட்டன. தலைமைப் பண்பு எனத் தொடங்கும் ஓர் அழைப்பு வந்ததும் திடுக்கிட்டுவிட்டேன். பின்னர்தான் தெரிந்தது அது தலை மை விளம்பரம் என்று. மனிதக் குரல் என்றாலும் சகித்துக் கொள்ளலாம். மெசின் குரல்மீது எப்படி எரிச்சலைக் காட்டுவது.

காலை வேளைகளில் தொடர்ந்து மெசின்கள் அழைப்பது பற்றி  யோசித்துக் கொண்டிருந்தபோது வீட்டு அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்தேன். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் வாசலில் நின்றார். பக்கத்தில் சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன். அவர்தான் அவரை கூட்டி வந்திருந்தார். பெருங்கவிக்கோவின் புகைப்படங்களை பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இப்பொழுதுதான் அவரை நேரிலே பார்க்கிறேன். அவருடைய சால்வையோ, உடையோ என் கண்ணில் படவில்லை. மீசையை மட்டுமே பார்த்தேன். ஒரு நுனியில் ஆரம்பித்து மறு நுனி வரை அளந்தால் ஓர் அடி தேறும். ஆனால்  அதை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ராமாயணத்தில் ராமனுடைய அழகை வர்ணிக்கும் ஓர் இடம் வரும். அவனுடைய ஒரு தோளைப் பார்த்தால் அடுத்த தோளைப் பார்க்க முடியாது. அவ்வளவு அகலமாக இருக்குமாம். இரண்டையும் பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் நீளமான கண்கள் தேவை என்று பாடல் சொல்லும். அவருடைய முழு மீசையையும் பார்ப்பதற்கு நீளமான கண்கள் இல்லையே என்று எனக்குப் பட்டது. பெருங்கவிக்கோவின் முகத்தில் பெரும் சிரிப்பும் இருந்தது. ’வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்றேன். அவர் உடம்பு முழுக்க குதூகலம் நிறைந்திருந்ததைக் காணமுடிந்தது.

அவரிடம் ஒரேயொரு கேள்விதான் கேட்டேன். ’நீங்கள் ஏன் சினிமாவுக்கு பாட்டு எழுதுவதில்லை?’ அந்தச் சின்னக் கேள்விக்கு அவர் சொன்னதுதான் மீதி எல்லாம்.

‘ஆரம்பத்தில் என் வாழ்நாள் லட்சியம் சினிமாவுக்கு பாடல் எழுதுவதாகத்தான் இருந்தது. அவரைப் பிடித்து, இவரைப் பிடித்து பைத்தியமாக அலைந்தேன். ஸ்டூடியோ ஸ்டூடியோவாக ஏறி இறங்கினேன். இயக்குநர்களை, அவர்கள் சாப்பிடும்போது சென்று சந்தித்தேன். அவர்கள் கைகள் சோற்றைப் பிசைந்த படி இருக்கும். வாய் மேலும் கீழுமாக அசையும். அதிலே ஒரு தந்திரம் இருந்தது. அப்பொழுதுதான் அவர்கள் எழும்பி ஓடமுடியாது. ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் எனக்கு அந்த யுக்தியை சொல்லித் தந்திருந்தார்கள். தயாரிப்பாளர்கள் வீட்டு வாசல்களில் நெடுநேரம் நிற்கப் பழகிக்கொண்டேன். கால்களில் விழாத குறைதான். பாடல் எழுதும் வாய்ப்பு மட்டும் கிடைத்த பாடில்லை.  

இறுதியில் நான் எதிர்பார்க்காத சமயம் எங்கேயிருந்தோ ஓர் அழைப்பு அவசரமாக வந்தது. அவரிடம் என் பெயர் எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பது இன்றுவரை தொடரும் மர்மம்.  சாண்டோ சின்னப்ப தேவர் எடுக்கும் ’துணைவன்’ படத்துக்கு  பாடல் எழுதவேண்டும். எத்தனை பெரிய வாய்ப்பு? ஸ்ரீதேவியின் முதல் படம். அதில்தான் ஐந்து வயது ஸ்ரீதேவி முருகன் வேடத்தில் நடித்திருப்பார். கே.பி.சுந்தராம்பாள், ஏ.வி.எம்.ராஜன் ஆகியோர் நடித்தார்கள். தேவர் கதைச் சுருக்கத்தைச் சொல்லி எந்தச் சந்தர்ப்பத்தில், என்ன விதமான பாட்டு, யார் பாடுவது போன்ற விவரங்களைத் தந்தார். நான் அங்கேயே மூன்று பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். தேவருக்கு பிடித்துவிட்டது. நான் பாடலாசிரியர் ஆகிவிட்டேன்.

அடுத்தநாள் ஒரு செய்தி என்னைத் தேடி வந்தது. கெட்ட செய்திகள் மிக விரைவாகப் பரவிய காலம் அது. அந்த நாட்களில்  பிரபலமாயிருந்த ஒரு பாடலாசிரியர் தேவரைப் பார்க்கப் போயிருந்தார். தேவர் என் பாடல்களை அவருக்குக் காட்டினார். ’அவை எடுபடாது’ என்று சொல்லி அந்தப் பாடலாசிரியரே வேறு மூன்று பாடல்களை எழுதிக் கொடுத்தார். தேவரும் அவற்றை ஏற்றுக்கொண்டார் எனச் சொன்னார்கள். நான் மறுபடியும் தேவரிடம் ஓடினேன். அவர் நடந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். நான் என்ன செய்யமுடியும்? காலிலே அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றி அங்கேயே அந்த இடத்தில் விட்டேன். சிவகாமியின் சபதம், மங்கம்மா சபதம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் ஒரு சபதம் செய்தேன். ’இனிமேல் சினிமாவுக்கு பாடல் எழுதி அங்கீகாரம் கிடைத்த பின்னர்தான் மறுபடியும் செருப்பு அணிவேன்.’

அதன் பின்னர் காலிலே செருப்பு இல்லாமல் அலைந்தேன். கி.மு, கி.பி என்பதுபோல என் வாழ்க்கையும் செருப்புக்கு முன்னர், செருப்புக்கு பின்னர் என்று ஆனது. மனம் தளராமல் மகிழ்ச்சியாக வாழ்க்கையை எதிர்கொள்வது என்னுடைய பண்பு. மறுபடியும் ஒரு வாய்ப்பு வந்தது. இளையராஜா என்ற பெயர் கொண்ட இளைஞர். அப்பொழுதெல்லாம் அவர் இசைஞானி ஆகிவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக  பிரபலமாகி வந்தார். நான் பாடல் எழுத அவர் அதற்குத் தகுந்தமாதிரி மெட்டமைத்து அருமையாக பாடலை பதிவு செய்தார். அடுத்த நாள் நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். வேறு ஒரு பாடலாசிரியர் வந்து என் பாடலை தட்டிப் பறிக்கவில்லை. ஆனால் பணத் தட்டுப்பாடு காரணமாக தயாரிப்பாளர்  படத்தை தொடர்ந்து எடுக்கவில்லை. என்னுடைய பாடல் இளையராஜா இசையில் பதிவாகி எங்கேயோ இன்னமும் கிடக்கிறது. சினிமா மட்டும் வெளிவரவே இல்லை.

அப்பொழுதும் நான் முயற்சியை நிறுத்தவில்லை. வெற்றி பெறவேண்டும் என்ற வெறி குறையாமல் மேலும் வேகமாக அலைந்தேன். மறுபடியும் ஒரு வாய்ப்பு வந்தது. படத்தின் பெயர் ‘ஞாயிறு திங்கள்.’ புதுவிதமான தலைப்பு, புதுவிதமான தயாரிப்பு. என்னை ஒரு ஞாயிறு காலை வந்து தயாரிப்பாளர் பார்க்கச் சொல்லியிருந்தார். நானும் சொன்ன தேதி காலை அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே பெரிய கூட்டம் கூடியிருந்தது. எனக்குப் பயம் வந்துவிட்டது. என்னுடைய விதி எனக்கு முன்னரேயே அங்கே வந்துவிட்டதோ என அஞ்சினேன். ’என்ன கூட்டம்?’ என்று விசாரித்தேன். தயாரிப்பாளர் அன்று அதிகாலை சற்றும் எதிர்பாராமல் தூக்கத்திலேயே இறந்துவிட்டார் என்று  சொன்னார்கள். ஞாயிறு மரணம், திங்கள் இறுதிச் சடங்கு. ’ஞாயிறு, திங்கள்.’ அதுதான் என் முயற்சியின் கடைசி நாள். செருப்பு என்ன பாவம் செய்தது? எனக்காக ஐந்து வருடங்கள் காத்திருந்தது. அதன் பின்னர்தான் சினிமாவை விட்டு நான் பிரிந்தேன். ஆனால் செருப்பை விட்டுப் பிரியவே இல்லை.’

                                 *                                   *                            *

அந்த வீட்டுக்கு முன்னே அவர் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி நின்று பார்த்தார். வயது 60 – 65 இருக்கும். வெண்முடி. கோடைக் காலம் அதன் முடிவை எட்டியிருந்தது. மெல்லிய குளிராடை அணிந்திருந்தார். வீட்டின் தோட்டம் அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. இத்தனை ஆர்வமாக  தோட்டத்தைப் பார்க்கிறாரே நல்ல ரசனை உடையவர் என்று தோன்றியது. அவரை அங்கே பார்த்த ஞாபகம் இல்லை. பக்கத்து தெருவாக இருக்கலாம். பக்கத்து நகரமாகவும் இருக்க வாய்ப்புண்டு. ‘உங்கள் கண்கள் ரசிக்கும் கண்கள்’ என்றேன். தோட்டம் அப்படி கண்ணைக் கவரும்படியாகத்தான் காட்சியளித்தது. கடும் பச்சை புற்கள் அழகாக வெட்டப்பட்டு ஒரு கம்பளம் விரித்திருப்பதுபோல பசுமையாக காட்சி தந்தது. விதம் விதமான பூக்கள் செடிகளில் பூத்துக் குலுங்கின. அவசரமாக நடந்து செல்பவரும் ஒரு கணம் வேகத்தை குறைத்து காட்சியை ரசித்துவிட்டுத்தான் மேலே செல்வார். என் நினைப்பை உண்மையாக்குவதுபோல காரிலே போன ஒருத்தர் சற்று நிறுத்தி கையினால் சுற்றும் கார் கண்ணாடியை இறக்கி, தோட்டத்தை பார்த்துவிட்டு நகர்ந்தார். நான் சிரித்துவிட்டு, ’பாருங்கள் கண்ணாடியை இறக்கி ரசிக்கிறார்’ என்றேன். ’அப்பதானே ரசிப்பு பூரணமாகும். கண்ணாடி இடைஞ்சல்தானே. கவிதைக்கு இரண்டு பக்கம் இருப்பதுபோல தோட்டத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கலாம் அல்லவா?’ என்றார். ’என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன். ’கடித உறையை நக்கினால் அது ருசிப்பதற்கு என்று சிலர் நினைக்கிறார்கள்.’ அவர் வேறு எங்கோ பாய்ந்துவிட்டார். ’ஏப்ரலில் கறுப்பு ட்யூலிப், ஜூனில் ரோஜா, ஆகஸ்டில் வாள் வீச்சு கிளாடியோலஸ், அக்டோபரில் மரிகோல்ட். என்ன அழகு? மாறிக்கொண்டே இருக்கும் அற்புதம்’ என்றார்.

’நீங்கள் கவியா?’ என்று கேட்டேன். அவர் ஆச்சரியப் பட்டார். ’எப்படித் தெரியும்?’  ’பூக்களின் அழகை வர்ணிப்பதற்கு கவிதையை உதாரணம் சொன்னீர்கள். கிலாடியோலஸ் பூவை வாள் வீச்சு என்று வர்ணித்தீர்கள். உடனேயே எனக்கு புரிந்துவிட்டது. எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள்?’ அவர் சொன்னார், ‘எட்டு.’ ’கவிதை நூல்களா?’ ’ஆமாம்.’  ’எங்கே வாங்கலாம்?’ ‘ஓ, பிரசுரித்தால்தான் கவிதைகளா? எல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்னும் பதிப்பிக்கவில்லை.’ என்னுடைய முகம் மாறியதை அவர் கவனித்துவிட்டார். ‘கவிதை படைப்பதுதான் முக்கியம். எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை பதிப்பிக்கலாம்.’

’நீங்கள் கடைசியாக எழுதிய ஒரு கவிதையை சொல்லுங்கள்?’ என்றேன். ’ ஓ, அதற்கு நிறைய ஞாபகசக்தியை சேமிக்க வேண்டும். மனிதன் மகிழ்ச்சிக் கணங்களை நினைவு வைத்துக்கொள்வதில்லை. வேதனையான தருணங்கள்தான் அவன் நினைவு அடுக்குகளில் வாழ்கின்றன. இருபது வருடம் சிறையில் கழித்தவன் சிறைச்சாலையை கடக்கும்போது என்ன நினைப்பான்? மகிழ்வானா அல்லது துக்கமடைவானா?’ ‘நூறு கவிதைகள் படைத்த ஒருவர் ஒன்றையாவது நினைவில் வைத்திருக்க மாட்டாரா?’ ரோட்டிலே பார்த்த  ஒருவரிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை. ‘நான் கடைசியாக எழுதிய கவிதை அல்ல. என் ஞாபகத்தில் உள்ள ஒன்றைச் சொல்கிறேன். இளவயதில் சறுக்கு பலகை ஓட்டுவதில் நான் பெரும் திறமை பெற்றிருந்தேன். என் வயதுச் சிறுவர்களை எல்லாம் தோற்கடிப்பேன். கவிதையின் தலைப்பு ’சறுக்குப் பலகை.’

          எல்லோருமே பையன்கள்

          சிலர் உயரம்; சிலர் கட்டை

          சிலர் வயது கூட; சிலர் வயது குறைய

          புதிய தந்திரம்

          அதுதான் தேவை

          காற்று உடலை

          அறுத்துப் போகும்

          நாங்கள் பறப்போம்

          என்னுடைய தந்திரம்

          அந்தரத்திலே 180 டிகிரி

          திரும்புவது.

          எதிராளிப் பையன்கள்

          அங்கங்கள்

ஒவ்வொன்றாக உடைந்தன.

திரும்பவும் திரும்பவும்

நான்

திரும்பிக்கொண்டே இருந்தேன்.

இங்கேயும் அங்கேயும் இல்லாமல் ‘கவிதை புதிதாக இருக்கிறது’ என்று சொன்னேன்.

’நீங்கள் கவிதை எழுதுவீர்களா?’ அவர் கேட்டார்.

’அந்தக் குற்றத்தை இன்னும் செய்யவில்லை. செய்தாலும் என் மொழியில்தான் செய்வேன்’ என்றேன்.

’உங்கள் மொழி என்ன?’

’மிகப் பழமையான தமிழ் மொழி. 2000 வருடங்களுக்கு முன்னர் பாடப்பட்ட கவிதைகள் கூட இன்னும் வாழ்கின்றன.’

’பத்து வருடம் ஒரு கவிதை உயிர் வாழ்ந்தாலே அது பெரும் வெற்றி என்று எண்ணுகிறோம். 2000 வருடங்களா? நம்புவது கடினம்தான். ஒரு கவிதை சொல்ல முடியுமா?’

’நான் ஒரு கவிதையையும் மனனம் செய்தது கிடையாது. ஞாபகத்திலிருந்து பொருளை மட்டும் சொல்கிறேன்.’

          என் மகன் எங்கே

          என்று கேட்கிறாய்.

          எனக்கு என்ன தெரியும்?

          புலி இருந்து புறப்பட்ட

          குகை போன்ற

          என் வயிறு

          மட்டும் இருக்கிறது.

          மகன் எங்கே இருப்பான்?

          போர்க் களத்தில் பார்.

’சோகமான கவிதை’ என்றார். ’இந்தக் கவிதையின் சிறப்பே அதுதான். வீரத்தை சொல்லும் கவிதை என்று வாசித்தால் அது வீரத்தை சொல்கிறது. சோகத்தை சொல்லும் கவிதை என்று பார்த்தால் அதுவும் சரிதான்.’

’நீங்கள் நேற்று இந்த வீட்டைப் பார்த்தபடி நின்றீர்கள். இன்றும் நிற்கிறீர்கள். வேறு வழியில்லை. இதை வாங்கிவிடுங்கள்’ என்றேன்

’வாங்குவதா? இது என்னுடைய சொந்த வீடு. கடந்த ஆறுமாதமாக இதை விற்பதற்கு முயன்று வருகிறேன்.’

END

About the author

3 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta