தங்கத் தாம்பாளம்

                                           தங்கத் தாம்பாளம்

                                               அ.  முத்துலிங்கம்

ஐம்பதுகள் என் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். இந்த வருடங்கள்தான் என்னை உருவாக்கின. நான் பிற்காலத்தில் என்ன ஆவேன் என்பதை தீர்மானித்த வருடங்கள். அப்போதெல்லாம் அது தெரியவில்லை. இப்பொழுது திரும்பிப்  பார்க்கும்போதுதான் அவை துல்லியமாகத் தெரியத் தொடங்குகின்றன.

என் அண்ணர் எங்கள் கிராமமான கொக்குவிலுக்கு கொழும்பிலிருந்து வந்தார். அவர் வந்தால் கொண்டாட்டம்தான். ஆனால் கோபம் வந்தால் கடுமையாக நடந்துகொள்வார். ஐந்து சதத்துக்கு வாங்கிய பராசக்தி வசனப் புத்தகத்தை கொடுத்து பாடமாக்கச் சொன்னார். பாடப் புத்தகங்களை தள்ளி வைத்துவிட்டு மனனம் செய்யத் தொடங்கினேன். நாலு நாட்கள் கழித்து தன் நண்பர்களுடன் வந்து அமர்ந்துகொண்டு வசனத்தை பேசிக்காட்டச் சொன்னார். அவர்கள் கைதட்டி உற்சாகப் படுத்தினார்கள். சில இடங்களில் சிரித்தார்கள். எனக்கு சிவாஜியையும் தெரியாது; கலைஞரையும் தெரியாது. பராசக்தி படம் பார்த்ததும் இல்லை. அந்த வசனங்களில் மயங்கி என்னை பறிகொடுத்தது நினைவிலிருக்கிறது. அதுதான் எனக்கு கலைஞரைப் பற்றிய முதல் அறிமுகம். சில மாதங்கள் கழித்து பராசக்தி படத்தை நான் பார்த்தபோது அதன் கதையோ, இசையோ என்னை ஈர்க்கவில்லை. அந்த வசனங்கள்தான் எனக்கு முக்கியமாகப் பட்டன.

அதிலே ஓர் இடத்தில் ’தங்கத் தாம்பாளம், வைர வைடூரியம்’  என்று வரும். அது எங்கே என்பது இப்போது நினைவில் இல்லை. அதை நான் உச்சரித்தபோது வீட்டிலே சிரித்தார்கள். வகுப்பிலும் நண்பர்கள் கேலி செய்தார்கள்.   என்னை ’தங்கத் தாம்பாளம்’ என்று கூப்பிட ஆரம்பித்தனர். அது நெடுநாட்கள் நீடித்தது. கால ஓட்டத்தில் அதுவும் ஒருநாள் நின்றுவிட்டது. இன்றைக்கும் யாராவது தங்கத் தாம்பாளம் என்றால் எனக்கு கலைஞரின் ஞாபகம் வரும்.

பராசக்தி திரைப்படம் வருவதற்கு ஒரு வருடம் முன்னர் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரம்மாண்டமான தமிழ் விழா நடந்தது. இந்தியாவில் இருந்து சிறந்த பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். ரா.பி. சேதுப்பிள்ளை, கல்கி, பெ.தூரன், கி.ஆ.பெ விசுவநாதம்,  கி.வா.ஜ இவர்களுடன் தனிநாயக அடிகளும் கலந்துகொண்டதாக ஞாபகம். அறிஞர் அண்ணா வருவதாக பேச்சு அடிபட்டது, ஆனால் அவர் வரவில்லை. அவருடைய புகழ் வேகமாகப் பரவிய காலம் அது. மேடையில் பேசியவர்கள் எல்லாம் ’தாய்நாடு – சேய்நாடு’ என்று முழங்கினார்கள். தாய்நாடு என்றால் இந்தியா, சேய்நாடு என்றால் இலங்கை. அந்த வயதில் நான் அதை முற்றிலுமாக நம்பினேன். இந்தியா முழுக்க தமிழர்களால் நிரம்பியிருக்கிறது என நான் மட்டுமல்ல மற்றவர்களும் நினைத்தார்கள். இந்தியா மிகப் பெரிய சனத்தொகை கொண்ட தேசம். அதில் 6 விழுக்காடுதான் தமிழர்கள் என்பது பின்னாளில்  தெரிய வந்தபோது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

1953ம் வருடம் மறுபடியும் அண்ணர் கொழும்பில் இருந்து அவசரமாக கிராமத்துக்கு வந்தார். எங்கள் வீட்டுச் சுவரில் நிரையாக மாட்டியிருந்த சாமி படங்களுக்குப் பக்கத்தில் அறிஞர் அண்ணாவின் படத்தையும்,  கலைஞர் கருணாநிதியின் படத்தையும் மாட்டினார். கல்லக்குடி போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்திருந்தது. கருணாநிதி தலைமையில் டால்மியாபுரம் என்ற பெயரை திரும்பவும் கல்லக்குடி என மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து நடந்த போராட்டம் அது. அப்பொழுது கருணாநிதிக்கு வயது 29 மட்டுமே. கருணாநிதி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து ரயிலை நிறுத்தினார். தமிழ்நாடு முழுக்க போராட்டம் பரவியது. இருவர் கொல்லப்பட்டனர். 5000 பேர் கைதாகினர். கருணாநிதி 6 மாதம் சிறையில் கழித்தார். 

கருணாநிதியின் புகழ் உச்சத்தை எட்டியது அப்போதுதான். ஓர் இடத்தில் கருணாநிதியிடம் கேட்டார்கள் ‘இந்தப் போராட்டத்தில் நீங்கள் ரத்தம் சிந்தி உயிர் இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?’ அவர் பதில் கூறினார், ‘அறிஞர் அண்ணா என் ரத்தத்தை எடுத்து பெயர்ப் பலகையில் ‘கல்லக்குடி’ என்று எழுதியிருப்பார்.’ இந்த வாசகம் தமிழ் உலகம் எங்கும் பரவியது. எங்கள் வீட்டில் நடந்ததுபோல இன்னும் பல வீடுகளிலும் கருணாநிதியின் படம் சுவர்களில் ஏறியது. இலங்கை தமிழ் பத்திரிகைகள் அவரை ’தமிழ் காவலர்’ என்று அழைத்தன. எல்லோர் உதடுகளிலும் கருணாநிதியின்  பெயர் இருந்த அந்தச் சமயம் அவர் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நின்று வென்றிருக்கலாம்.

பராசக்தியின் வெற்றியை தொடர்ந்து கலைஞரின் வசனத்தில் மனோகராவும், அதன் பின்னர் வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படமும் வெளியாகின.  இந்தப் பட வசனங்கள் எனக்கு மட்டுமல்ல எங்கள் கிராமத்தில் உள்ள பலருக்கும் மனப்பாடம். கோயில் திருவிழாக்களிலும், திருமண வீடுகளிலும் சினிமாப் பாடல்களை ஒலிபெருக்கியில் இரவு பகலாக ஒலிபரப்புவார்கள். முழுக்கிராமமும் அவற்றைக் கேட்டுக் களிக்கும். கலைஞர் வருகைக்குப் பின்னர்தான் வசனங்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார்கள். கலைஞர் ஒரு புது சகாப்தத்தை உண்டு பண்ணினார். பின்னாட்களில் ஹாம்லெட், ரிச்சார்ட் 3 போன்ற ஆங்கிலப் படங்களில் லோரன்ஸ் ஒலிவியருடைய வசனத்தை கேட்பதற்காக சனங்கள் அவர் படங்களை அடித்துப் பிடித்துப் பார்த்தனர். ஆனால் கலைஞரின் வசனங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த நாட்டிலும் காணமுடியாது. இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது உலகத்திலேயே எந்த மொழியிலும் சினிமா மூலம் இப்படியான ஓர் எழுச்சி உண்டாகியிருக்கவில்லை என்பது தெரியவரும்.

கலைஞரின் அடுக்குமொழி அனைவரையும் வெறிகொள்ள வைத்தது. ஒருமுறை பள்ளிக்கூடத்தில் அடுக்குமொழியில் ஒரு கட்டுரை எழுதி ஆசிரியரிடம் சமர்ப்பித்தேன். வாத்தியார் சொன்னார். ‘அடுக்குமொழி உனக்கு நல்லாய்த்தான் வருகிறது. ஆனால் சில வார்த்தைகளை நீ அடுக்கு மொழிக்காக தேர்வு செய்வதால் அவை உன் சிந்தனையை திருப்பிவிடுகிறது. வார்த்தைகள் உன் சிந்தனையை சொல்ல பயன்படவேண்டும். அவை உன் சிந்தனையை தீர்மானிக்கக்கூடாது. நீ அடுக்கு மொழிக்கு இன்னும் தயாராகவில்லை.’ அப்பொழுதுதான் எனக்கு கலைஞரின் சிந்தனைத் தெளிவும், தமிழ் ஆற்றலும் சற்று புரிய ஆரம்பித்தது.

அதன் பின்னர் கலைஞரின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக இருந்தது. 33 வயதில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். பத்து வருடம் கழித்து மந்திரிப் பதவி கிடைத்தது. 45வது வயதில் முதலமைச்சர் ஆகிறார். 60 வருடங்கள் சட்ட மன்ற உறுப்பினர்; 50 வருட தி.மு.க தலைவர்; 14 வயதில் தொடங்கி  94வது வயது வரைக்கும்,  80 வருடங்களாக  தொடர்ந்த பொதுவாழ்க்கை. எத்தனை மகத்தான சாதனை.

கலைஞரின் வாழ்க்கையை தொடர்ந்து அவதானிப்பது நான் வெளிநாடு போன பின்னர் கடினமாகிவிட்டது. பல வருடங்களுக்குப் பிறகு நான் மறுபடியும் எழுதத் தொடங்கினேன். 20 வருடங்கள் ஒன்றுமே எழுதவில்லை. என்னுடைய சிறுகதைத் தொகுதியான ’வம்சவிருத்தி’ 1996ல் வெளியாகி  அதற்கு  தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது. நான் வேலை விசயமாக அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. பதிப்பாளர் எழுதினார், ’நிச்சயம் வாருங்கள். முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் கையால் விருது பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.’ நான் ஆப்கானிஸ்தானில் எங்கோ இருந்தேன். கலைஞரின் எழுத்தாலும், பேச்சாலும் மொழியாலும் கவரப்பட்ட நான் அவரிடம் இருந்து பரிசு பெறும் வாய்ப்பை இழந்தது துயரமானது.

ஈழப் போரின்போது அவர் ஆதரவு ஈழமக்கள் மீதுதான் இருந்தது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார். ஆனால் அவை ஈழப் பிரச்சினையை தீர்க்கப் போதுமானதாக இல்லை.  சென்னையில் தோழர் பத்மநாபா கொலைக்குப் பின்னர் கலைஞரின் ஆட்சி கலைக்கப் பட்டது. அவருக்கு அது தண்டனை என்றுதான் கொள்ளவேண்டும். அவர் மறுபடியும் ஆட்சிக்கு வர 13 வருடங்கள் பிடித்தன. ஈழ மக்களின் அவலத்துக்கு கரிசனை காட்டியதற்கு அவர் கொடுத்த விலை அது. இந்திய அமைதிப் படை இலங்கை சென்றதை தொடர்ந்து எதிர்த்தார். ராணுவம் சென்னைக்கு திரும்பியபோது அவர் வரவேற்கவில்லை என நிறைய கண்டனங்களை அவர் சந்திக்க வேண்டி நேர்ந்தது. அவர் பொருட்படுத்தவில்லை. கல்லக்குடியில் ஆரம்பித்த அவருடைய போராட்ட குணம்  இறுதிவரை தொடர்ந்தது.

அவர் எழுதி வெளிவந்த ’உளியின் ஓசை’ திரைப்படத்தை நான் இருமுறை பார்த்தேன். முதலாவது அவருடைய வசனத்தை ரசிப்பதற்காக. இரண்டாவது, இந்த திரைப்படத்தில் ஈழத்துப் பெண்ணான தான்யா  முதல் முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் ‘ கல்லாய் இருந்தேன், சிலையாய் ஏன் வடித்தாய்’ என்ற பாடலைப் பாடியிருந்தார். அருமையான இசை, அருமையான பாடல். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த படம் அது. அந்தப் பெண்ணை நான் நேர்காணல் செய்து எழுதினேன். கலைஞர் கடைசியாக கதை வசனம் எழுதிய திரைப்படம் ’பொன்னர் சங்கர்’.  இந்தப் படத்திலும் எனக்கொரு தொடர்பு இருந்தது. பிரெண்டா பெக் என்ற ரொறொன்ரோ பெண்மணி 50 வருடங்களுக்கு முன்னர் அவருடைய 19வது  வயதில்  தமிழ்நாட்டில் ஓலைப்பாளையம்  கிராமத்துக்குச் சென்று 500  வருடங்கள் பழமையான ’அண்ணன்மார் கதை’ பற்றி ஆராய்ச்சி செய்து மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். கிராமத்தில் 19 நாட்கள் அந்தக் கதை சொல்லப்பட்டது. அதைச் சொன்னவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. 500 வருடங்கள் வாய் வார்த்தையாக வந்த சரிதத்தை பிரெண்டா முதல் முறையாக ஒலிப் பதிவு செய்தார். கிராம மக்கள் முதன்முதல்  பார்த்த ரேப் ரிக்கார்டர் அது. அதற்கு பொட்டு வைத்து, சூடம் காட்டி, பூஜை செய்தனராம். அந்தப் பதிவுதான் ’அண்ணன்மார் கதைக்கு’ இன்று இருக்கும் ஒரே சாட்சி. கலைஞர் பிரெண்டாவை பாராட்டி அவரை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைத்திருந்தார். பிரெண்டாவை  நான் நேர்காணல் செய்து உயிர்மை பத்திரிகையில் எழுதியிருந்தேன். அண்ணன்மார் கதை ‘பொன்னர் சங்கர்’ தலைப்பில் கலைஞரின் கதை வசனத்தில் வெளிவந்தது எனக்கு அதி மகிழ்ச்சியை கொடுத்தது. பலதடவை  ’பொன்னர் சங்கர்’ படத்தை பிரெண்டா பார்த்தார். நானும் பார்த்து மகிழ்ந்தேன்.

சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா  போன கனடியர் ஒருவர் சுற்றுலா ஏற்பாடு செய்தவரை திட்டினார். தஞ்சை பெரிய கோயில், மகாபலிபுரம், மெரீனா, வேளாங்கண்ணி என்று பல இடங்களுக்கு கூட்டிப் போனவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தன்னை அழைத்துப் போகாமல் ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்பட்டார். அமெரிக்காவில் சுதந்திரச் சிலைபோல, கனடாவில் சி.என் கோபுரம் போல, பிரான்ஸில் ஈஃபல் கோபுரம் போல தமிழ்நாட்டின் அடையாளமாக வள்ளுவர் சிலை மாறிவிட்டது. வள்ளுவர் சிலை நிறுவவேண்டும் என்ற தீர்மானம் 1975ல் கருணாநிதி அரசால் நிறைவேற்றப்பட்டது. 25 வருடங்களுக்குப் பின்னர்தான் அது கைகூடியது. புத்தாயிரம் தொடக்கத்தில் அய்யன் வள்ளுவர் சிலையை அன்றைய முதல்வரான கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார்.  திருக்குறளின் 133 அதிகாரத்தை நினைவூட்ட 133 அடி உயரத்தில் சிலை வடிக்கப்பட்டிருந்தது அதன் பெருமை. கலைஞருடைய  இலக்கிய வாழ்க்கையில் இது முக்கியமான நிகழ்வு. பல நூற்றாண்டுகள் கழித்தும் தமிழின் பெருமையை  சொல்வதோடு அந்தச் சிலை கருணாநிதியின் புகழையும் பறைசாற்றும். தமிழ் நாட்டின் அடையாளமாக நிலைத்து நிற்கும்.

கலைஞரிடம் எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம் அவரது சிலேடை, சாதுர்யமான பதிலடி மற்றும் நகைச்சுவை. இவற்றை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து அவதானித்து வருகிறேன். ஒரு முறை கூட்டமொன்றில் இவருக்கு ஆளுயர மாலை அணிவித்தார்கள். கலைஞர் சொன்னார். ‘ஆள் உயர மாலை; ஆளுயர மாலை.’ ஈழப்போர் சமயம் புலமைப்பித்தன் உணர்ச்சி வசப்பட்டு ‘கலைஞரே, எனக்கொரு துப்பாக்கி கொடுங்கள்’ என்று கேட்டார். கலைஞர் ‘வேறு ஏதாவது பாக்கி இருந்தால் கேளுங்கள். துப்பாக்கி மட்டும் வேண்டாம்’ என்று பதிலிறுத்தார்.  இன்னொரு சமயம் சட்டமன்றத்தில் ஒருவர் ‘கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன’ என்றார். கலைஞர் ‘ஏற்கனவே ஒரு கோடிக்கு மேலான முதலை அல்லவா ஆற்றிலே போட்டிருக்கிறோம்’ என்று சபையின் ஆரவாரத்துக்கிடையே பதில் கூறினார் என்று சொல்வார்கள்.

கலைஞர் காலை ஐந்து மணிக்கே எழும்பி அன்றன்றைய பத்திரிகைகள் படித்துவிடுவார். ஒரு முறை அதிகாலை ஆனந்த விகடனைப் படித்துவிட்டு கலைஞர் விவேக்கை பாராட்டியிருந்ததை  விவேக் ஓர் இடத்தில் சொல்லியிருப்பார். அதுபோல ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றி நான் ஒருமுறை விகடனில் எழுதியிருந்தேன். அடுத்தநாள் காலையில் சன் தொலைக்காட்சியில் செய்தி வந்தது. ஹார்வார்ட் தமிழ் இருக்கையை கலைஞர் ஆதரிப்பதாக. பின்னர் கட்சி சார்பாக பெரு நிதி வழங்கப்பட்டதும் சரித்திரம்.

கலைஞரின் பெருமைகளை நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் மொழிக்கு  செம்மொழி தகுதி கிடைக்கவேண்டுமென  பலர் போராடினார்கள். இறுதியின் கலைஞரின் பெருமுயற்சியால் அது 2004ம் ஆண்டு சாத்தியமானது. அதைத் தொடர்ந்து முதன்முறையா 9வது தமிழ் செம்மொழி மாநாட்டை அறிவித்து அதை கோவையில் 2010 ல் சிறப்பாக நடத்தினார். அத்துடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்த உதவினார். இதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. எனினினும்  49 நாடுகளில் இருந்து 536 தமிழறிஞர்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள். மாநாட்டின் இலச்சினை ‘பிறப்போக்கும் எல்லா உயிரும்’ என்று இருந்தது உலக மக்களை கவர்ந்தது.

பல சாதனைகளைப் பட்டியலிடலாம். மெட்ராஸ் என்ற பெயரை நீக்கி சென்னை என மாற்றியது. 1942ல் துண்டறிக்கையாகத் தொடங்கி பின்னர் அதை முரசொலி பத்திரிகையாக மாற்றி 75 வருடம் நடத்தி பவளவிழா கொண்டாடியது. மனோன்மணியம் சுந்தரனார் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரித்தது. திருநங்கை எனப் பெயர்சூட்டி அவர்களுக்கு சமுதாயத்தில் கௌரவம் வழங்கியது. சர்வதேச தரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது. இன்றும் எங்கள் கிராமத்துக்குச் சென்றால் தனசேகரன் , ஞானசேகரன், குணசேகரன் என்ற பெயர்களைக் காணலாம். பராசக்தியில் ஆரம்பித்து வைத்த விசை 60 வருடமாகத் தொடர்கிறது. இப்படியான தகைமை சாதாரணமான ஒருவருக்கு கிடைப்பதில்லை. இன்றைக்கும் தங்கத் தாம்பாளம் என்று யாராவது சொன்னால் என் மனதில் முதல் தெரிவது கலைஞரின் உருவமே. அவர் புகழ் மங்காது என்றென்றும் ஒளிவீசும்.

END

About the author

7 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta