படித்ததை எப்படி மறப்பது?

 

 நான் அடிக்கடி ஆலோசனை கேட்கும் நண்பர் என்னிடம் சொல்வார் 'அந்த எழுத்தாளர் புத்தகத்தை படிக்கவேண்டாம். அவர் மோசடிக்காரர். ஏமாற்றும் பேர்வழி' என்று. நான் ஏற்கனவே புத்தகத்தை காசு கொடுத்து வாங்கியிருப்பேன். இவர் சொன்னதற்காக படிக்காமல் இருக்கவேண்டுமா? ஒரு புத்தகத்தை படிக்காமல் அதன் தரத்தை எப்படி தீர்மானிப்பது. நண்பர் சொல்கிறார் ஆசிரியர் கெட்டவர் என்றால் அவருடைய புத்தகமும் அப்படித்தான் இருக்கும். நான் என்ன செய்யவேண்டும்? புத்தகத்தை படித்துவிட்டு அந்த எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்பை ஆராய்வதா? அல்லது எழுத்தாளரின் சுயசரிதையை முதலில் படித்து அவருடைய தகுதியை நிர்ணயித்துவிட்டு அவருடைய புத்தகங்களை படிப்பதா?

 

சேக்ஸ்பியர் அவருடைய 19வது வயதில் இன்னொருவருக்கு சொந்தமான வேட்டைப் பூமியில் மான் திருடி பிடிபட்டு சவுக்கடி வாங்கியிருக்கிறார். சிறைத்தண்டனையும் அனுபவித்தவர். அவருடைய நூல்களை நான் தள்ளிவைக்கவேண்டுமா? பாரதியார் கஞ்சா அடித்துவிட்டு ஒரு தியான நிலையில்தான் உச்சமான கவிதைகளை படைத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியானால் நான் இவ்வளவு நாளும் அவருடைய கவிதைகளை படித்து இன்புற்றது தவறான காரியமா?

வில்லியம் தோமஸ் என்ற ஆங்கில எழுத்தாளர் ஒரு 13 வயதுச் சிறுமியிடம் பத்து பவுண்டை கொடுத்து அவளை ஒரு விபச்சார விடுதியில் வேலை செய்யச்சொன்னார். அவளுடைய அனுபவங்களை அவள் அவருக்கு சொல்லவேண்டும். அப்பொழுதுதான் அவர் அந்த தகவல்களை தன்னுடைய நூலில் பயன்படுத்தமுடியும். நல்ல காலமாக  டைடானிக் கப்பல் மூழ்கியபோது அந்த எழுத்தாளரும் மூழ்கிவிட்டார். ஆகையால் அவருடைய புத்தகத்தை வாசிப்பதா விடுவதா என்று தீர்மானிக்கும் சங்கடத்திலிருந்து நாங்கள் தப்ப முடிந்தது.

என்னுடைய பதின் வயதில் நான் ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய Dubliners நூலைப் படித்து அந்த எழுத்தில் மயங்கியிருந்தேன். என்னுடைய ஆங்கில வாசிப்பு ஆர்வத்துக்கு அந்த நூலே வாசலாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் நான் படித்த தகவல் எனக்கு அதிர்ச்சி அளித்தது. யூலிசிஸ் நாவலை ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய கால கட்டத்தில் ஒரு மனைவி இன்னொருவனுடன் கள்ளத் தொடர்பு வைக்கும்போது அவள் கணவன் அடையும் பொறாமை உணர்ச்சியை அவர் அனுபவிக்கவேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது தான் அந்த வர்ணனைகள் நாவலில் உண்மைபூர்வமாக அமையும் என்பது அவர் அபிப்பிராயம். அவர் தன் மனைவி நோராவை வேறு ஆண்களிடம் நெருங்கிப் பழகும்படி வற்புறுத்தினார். ஆனால் நோரா மறுத்துவிட்டாராம். இந்த தகவல் நல்லகாலமாக என் நண்பருக்கு தெரியாது. தெரிய வந்தால் அவர் நிச்சயமாக என்னை ஜேம்ஸ் ஜோய்ஸ் நூல்களை படிக்க அனுமதிக்க மாட்டார்.

ஒரு கவி சொல்கிறார் 'இரவு திரும்பி படுத்தது' என்று. 'நான் திரும்பி படுத்தேன்' என்று சொல்வதும் 'இரவு திரும்பி படுத்தது' என்று சொல்வதும் ஒன்றுதான். அது கவியின் மொழி. எஸ்ரா பவுண்ட் ஒரு இடத்தில் காற்று கோதுமையின் மேல் விசுகிறது என்பார். காற்றை யார் காணமுடியும். அவர் கோதுமைப்பயிர் அசைவதைத்தான் அப்படிச் சொல்கிறார்.

எஸ்ரா பவுண்டின் The Tea Shop என்ற ஒரு கவிதை:
 தேநீர்க் கடைச் சிறுமி
 முன்புபோல் இப்பொழுது அழகாயில்லை
 ஆவணி மாதம் அவளைத் தேய்த்துவிட்டது
 படிகளில் ஏறும்போது பெரிய ஆர்வமில்லை
 ஆம், அவளும் ஒரு நடுவயதுக்காரியாக மாறுவாள்.

இவர்தான் முதன்முதல் கவிதையில் எதுகை மோனை முக்கியமில்லை, கருத்துத்தான் முக்கியம் என்று சொன்னவர்.

ஆனால் சமீபத்தில் நான் ஒரு பத்திரிகையில் சோல் பெல்லோ என்ற அமெரிக்க எழுத்தாளர் கூறியதை படித்தேன். சோல் பெல்லோ இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற யூத எழுத்தாளர். அவர் எஸ்ரா பவுண்டை வெறுத்தார். எஸ்ரா பவுண்ட் யுத்த காலத்தில் இத்தாலிய ரேடியோவில் யூத ஒழிப்புக்கு ஆதரவாகப் பேசியவர் என்ற குற்றச்சாட்டு அவரிடம் உள்ளது. இந்தக் காரணத்துக்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஆங்கிலேய எழுத்தாளர். நேருவுக்கு அவருடைய எழுத்து நிரம்பப் பிடிக்கும். அவருடைய 'If' கவிதை உலகப் புகழ் பெற்றது. எத்தனையோ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதை அது. நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது மிகப் பின்தங்கிய கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடத்துக்கு போயிருந்தேன். அங்கே வகுப்பறையில் If கவிதையை சீலையில் பெரிய எழுத்தில் எழுதி தொங்கவிட்டிருந்தார்கள். அத்தனை மாணவர்களும் அதை பாடமாக்கியிருந்தார்கள் என்றார் ஆசிரியர்.

அவருடைய கவிதை 'The Whiteman's Burden' ஐ ஒருவரும் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அவர் வெள்ளையராகப் பிறந்தவர்களுக்கு உலகத்தில் ஒரு கடமை உள்ளது என்று நம்பினார். அது வெள்ளையர் அல்லாதோரை ஆண்டு அவர்களை உய்விப்பது.
 'உங்கள் (வெள்ளை) மகன்களை
 வெளிநாடுகளுக்கு அனுப்புங்கள்
 கைப்பற்றப்பட்டவர்களின் தேவைகளை
 அவர்கள் கவனிக்கவேண்டும்.'

ருட்யார்ட் கிப்ளிங் சார்ள்ஸ் டிக்கின்ஸின் வாரிசாகக் கருதப்பட்டவர். சாள்ஸ் டிக்கின்ஸ் எழுதிய 'The Great Expectations' அவர் காலத்திலேயே பெரும் பிரபலத்தை அடைந்தது. வாழ்ந்த காலத்தில் அதிக புகழுடன் வாழ்ந்தவர் சாள்ஸ் டிக்கின்ஸ். The Old Curiosity Shop தொடர்நாவலை அவர் எழுதியபோது அவரின் புகழ் உச்சத்தில் இருந்தது. வாராவாரம் அவர் பத்திரிகைக்காக ஆயிரக்கணக்கான வாசகர்கள் காத்திருப்பார்கள். கடைசி அத்தியாயம் வெளியானபோது கதை வெளிவந்த பத்திரிகையை காவிவந்த கப்பலுக்காக 6000 மக்கள் நியூ யோர்க் துறைமுகத்தில் காத்துக்கொண்டிருந்தார்களாம். கப்பலின் காப்டனை மேல்தளத்தில் கண்டதும் அத்தனை சனங்களும் ஒரே குரலில் கத்தினார்கள். 'நெல் இருக்கிறாளா, இறந்துபோனாளா?'

டிக்கின்ஸ் காதரின் என்ற பெண்ணை மணமுடித்து 22 வருடங்களில் அவர்கள் 10 பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்னர் காதரினின் தங்கை மேரி அவர்களுடன் வந்து தங்கினாள். உடனேயே அவளுடன் அவருக்கு காதல் பிறந்துவிட்டது. அந்தப் பெண் ஒரு வருடத்திலேயே இறந்துபோனாலும் தான் இறக்கும்போது தன்னை மேரியின் கல்லறைக்கு பக்கத்தில் புதைக்கச் சொல்லி கேட்டுக்கொண்டார்.  இன்னொரு தங்கை வந்து சேர்ந்தாள், பெயர் ஜோர்ஜியானா. அப்படியே தங்கை தங்கையாக வந்தார்கள். இவரும் வஞ்சகம் வைக்காமல் அவளையும் அவர் இறக்குமட்டும் காதலித்தார்.

இதையெல்லாம் மன்னித்துவிடலாம். ஓர் ஏழைப்பெண் வீதியிலே வசை பேசினாள் என்பதற்காக அவளைக் கைதுசெய்ய வைத்தார். அடிமை விடுதலை பிரகடனம் செய்த ஆப்பிரஹாம் லிங்கனை எதிர்த்தார். லிங்கனுக்கு எதிராகப் போராடியவர்களுக்கு தன் ஆதரவைக் கொடுத்தார். இவருடைய நூல்கள் ரஸ்ய எழுத்தாளர்களான ரோல்ஸ்ரோய், டோஸ்ரோவ்ஸ்கி ஆகியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் பிடிக்குமா என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஸ்பானிய மொழியில் படைக்கும் பாப்லோ நெருடாவின் கவிதைகளை உலகின் லட்சக்கணக்கான மக்கள் விரும்பிப் படிப்பார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த உலகக்கவி என்று அவரை வர்ணிப்பதுண்டு. இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு 1971 ல் கிடைத்தது. அவருடைய கவிதை வாசிப்பு ஒன்றுக்கு ஒருமுறை லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். இந்த உலகில் ஒரு கவிதை வாசிப்புக்கு கூடிய சனங்களின் ஆகக்கூடிய எண்ணிக்கை அதுதான். ஒரு காலத்தில் அவருடைய கவிதை வரிகள் சிலதை நான் மனப்பாடம் செய்துவைத்திருக்கிறேன்.
 நீ ஒவ்வொரு கதவாக திறக்கவேண்டும்.
 நீ எனக்கு கீழ்ப்படியவேண்டும்.
 நீ உன் கண்களை திறக்கவேண்டும்.
 அப்படியானால்தான் என்னால் அவற்றினுள்ளே தேடமுடியும்.

பாப்லோ நெருடா 1930 களில் இலங்கையில் சிலி தூதரகத்தில் வேலை பார்த்தார். அப்பொழுது ஒரு சம்பவம் நடந்தது. கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில்தான் தமிழர்கள் வசிப்பார்கள். அங்கேதான் அவரும் கடற்கரைக்கு அண்மையில் இருந்த ஒரு வீட்டில் வசித்தார். அவர் வீட்டுக்கு தினமும் ஓர் இளம் தமிழ் பெண் காலையில் அவருடைய மலத்தை அள்ளிப்போக வருவாள். அவள் நல்ல வனப்புடன் கவர்ச்சியாக இருந்தாள். என்னதான் வெறுக்கப்படும் ஒரு தொழிலை அவள் செய்தாலும் அவரால் அவளை தன் மனத்திலிருந்து விரட்ட முடியவில்லை. ஒரு வெட்கப்படும் வனமிருகம்போல அவள் வேறொரு உலகத்தை சேர்ந்தவளாக இருந்தாள். இனி அவரே அந்த சம்பவத்தை வர்ணிக்கிறார்.

'ஒருநாள் காலை அவளை முழுமையாக அனுபவித்துவிடத் தீர்மானித்தேன். அவள் மணிக்கட்டை இறுக்கமாகப் பற்றி அவள் கண்களை உற்று நோக்கினேன். அவளுடன் ஒரு மொழியிலும் என்னால் பேசமுடியாது. என் வழிகாட்டலில் சிரிப்பின்றி, மறுப்பு காட்டாமல் பின்னால் வந்து படுக்கையில் நிர்வாணமாக சாய்ந்தாள். அகலமான இடுப்பும் மெலிந்த இடையுமாக அவள் கொடிபோல கிடந்தாள். அவளுடைய தளும்பும் கிண்ண முலைகள் தென்னிந்தியாவின் ஆயிரம் வருடத்து சிலைபோல அவளை ஆக்கின. ஓர் ஆணுக்கும் சிலைக்குமான உறவு அது. உறவு முடியும்வரை அவள் ஒருவித உணர்ச்சியையும் காட்டாது கண்களை திறந்தபடி வைத்திருந்தாள். அவள் என்னை வெறுப்பது சரிதான். அந்த அனுபவம் மீண்டும் ஒருமுறை நிகழவில்லை.'

இதுதான் நான் பாப்லோ நெருடாவைப் பற்றி படித்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கொழும்பில் பல வருடங்கள் நான் வசித்ததும் வெள்ளவத்தையில் கடற்கரைக்கு கிட்டிய ஒரு வீட்டில்தான். இப்பொழுது நான் என்ன செய்தால் சரியாக இருக்கும். பாப்லோ நெருடாவை படிப்பதை நிறுத்த வேண்டுமா? அல்லது மனனம் செய்த அவருடைய கவிதை வரிகளை மறந்தால் போதுமானதா? எல்லாம் தெரிந்த என் நண்பரிடம்தான் ஆலோசனை கேட்கவேண்டும்.

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta