பிறர்க்கென முயலுநர்

 

 இரண்டு நாட்களுக்கு முன் என் இணையப் பக்கத்தில் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்று தொடங்கும் புறநானூறு பாடல் பற்றி எழுதியிருந்தேன். நல்லவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது பாடலின் பொருள். அதிலே எனக்கு பிடித்தது 'பிறர்க்கென முயலுநர்' என்று வரும் இடம். இந்தப் பாடலை பேராசிரியர் க.கைலாசபதி தன் மேசையிலே வைத்திருப்பார். ஏனென்றால் தினமும் படித்து மனதில் இருத்தவேண்டிய பாடல் அது.

 

இன்று மிக நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. பேராசிரியருடைய மகள் சுமங்களா என்ற சுமி, மிக்சிகன் மாநிலத்தின் ஆன்ஆபர்  நகரசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் செய்தி அவருக்கு ஏற்கனவே வெற்றி கிட்டிவிட்டதுபோன்ற நிறைவையும் மகிழ்ச்சியையும் எனக்கு தருகிறது.

கிட்டத்தட்ட சுமி தன் வாழ்வில் பாதியை அமெரிக்க மண்ணில் கழித்துவிட்டார். இளவயது தொடங்கி இன்றுவரை பொது வாழ்விலும் சேவையிலும் தன்னை அர்ப்பணித்தவர் என்று அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள். இலங்கையில் அவர் மாணவராக இருந்த காலத்தில் தொடங்கி மனித உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார். மனிதநேயமிக்கவர். கடந்து சென்ற அமெரிக்க தேர்தல்களில் அயராது நின்று உழைத்தவர். அவர் தேர்தலில் பங்கெடுக்க முடிவு செய்தது மிகச் சரியானது.

தொலைபேசியில் சுமியை உடனே தொடர்புகொண்டேன். வாழ்த்து சொல்லிவிட்டு எப்படி திடீரென்று இப்படி முடிவெடுத்தீர்கள் என்று கேட்டேன். அப்பொழுது அவர் பிரசாரத்துக்காக புறப்பட்டுக்கொண்டிருந்தார். எனினும் அவசரமில்லாமல், வழக்கமான அமைதியுடன் அன்பாகப் பதிலளித்தார். 'ஒவ்வொரு தேர்தலிலும் தகுதியான ஒருவர் மக்களுக்காக உழைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் வேட்பாளர்களுக்காக பாடுபடுவேன். அவர்கள் கேட்பார்கள் எப்போது நீங்கள் நிற்கப்போகிறீர்கள் என்று. நான் அழைப்பு வரும்போது என்று பதில் கூறுவேன். இம்முறை அவர்களே தொலைபேசியில் அழைத்து நிற்கச்சொல்லி கேட்டார்கள். நான் என் கணவர் கிரியைகூட கலந்து அலோசிக்க அவகாசமின்றி உடனேயே சரி என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டேன். மக்களுக்காக உழைப்பதற்கு கிடைத்த நல்வாய்ப்பாக நான் இதை கருதுகிறேன்.'

நான் சுமியை ஆதரிப்பது அவர் தமிழர் என்பதால் அல்ல. அவர் பேராசிரியருடைய மகள் என்பதால் அல்ல. அவர் பெண் என்பதால் அல்ல. அவர் தகுதியானவர். அவருடைய கல்வித் தகைமைகளான M.A, M.Phil பட்டங்களையோ, தொழில் தகைமையான கணக்கியல்துறை பட்டத்தையோ நான் குறிப்பிடவில்லை. சுமி நல்லவர். நல்லவர்களால்தான் இந்த உலகம் வாழ்கிறது. ஆகவே எல்லாம் சேமமாக அமையும்.
என் வாழ்த்துக்கள். 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta