தடங்கல்

                                             தடங்கல்

                                         அ.முத்துலிங்கம்

நாற்பது வருடங்களுக்கு முன்னராக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு நீல நிற வான்கடிதம் இந்தியாவிலிருந்து எனக்கு வந்தது. அதுவே எனக்கு  முதல் வந்த ஒரு வான்கடிதம்.  அப்படி எழுத எனக்கு யாருமே இல்லை. அந்தக் கடிதம்  எழுதியது கி.ரா என்பதை அறிய ஆச்சரியமாக இருந்தது. மூன்று மாதத்துக்கு முன்னர் நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அத்துடன் என்னுடைய ஒரு சிறுகதையையும் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதில்தான் இது. ஞாபகத்திலிருந்து அவர் எழுதிய கடிதத்தின் சாராம்சம் இதுதான்.

‘வெளிநாட்டுக்கு கடிதம் எழுதுவது என்றால் முதல் பிரச்சினை கடித உறைதான். எங்கேயெல்லாமோ அலைந்து இதைப்பெற்று எழுதுகிறேன். உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் நல்லாய் எழுதுகிறீர்கள். ’வையன்னா கானாவின்’ ரசனையும் டிகே சியின் ரசனையும் ஒரே மாதிரித்தான்.’ இப்படியெல்லாம் எழுதியிருந்தார். என் எழுத்துக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் என இதை எடுத்துக்கொண்டேன்.

நான் ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்துப் போன பின்னர் எழுதுவதோ, படிப்பதுவோ நின்றுவிட்டது. அவ்வப்போது விடுமுறையை கழித்துவிட்டு  வீட்டுக்கு திரும்பும்போது தமிழ் புத்தகங்கள் வாங்கிச் செல்வேன். கி.ராவினுடைய புத்தகங்களை தொடர்ந்து வாசித்தேன். ஒருமுறையாவது அவரை சந்திக்கவேண்டும் என நினைப்பேன். அது நிறைவேறவேயில்லை.

ஒரு தடவை இந்தியா போயிருந்தபோது வாடகைக் கார் பிடித்தோம். மனைவி சிதம்பரம் கோயிலுக்கு போகவேண்டும் என்றார். காரை ஓட்டி வந்தவர் சிதம்பரத்துக்கு போகும் வழியில் கி.ராவை பார்க்கலாம் என்று சொன்னார். நல்ல யோசனையாகப் பட்டது. கி.ராவுக்கு அறிவித்துவிட்டு போவதுதான் முறை, ஆனால் தொலைபேசி எண் தெரியாது. கையிலே முகவரி இருந்ததால் ஒருவித பிரச்சினையும் இல்லாமல் கி.ரா வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம். அவர் வீட்டிலே இருந்தார். ஒல்லியாக, சட்டை இல்லாமல் படங்களில் இருப்பது போலவே காட்சியளித்தார். என்னை அவருக்கு தெரியவில்லை. என் பெயரை சொல்லி நான் கடிதம் எழுதியதையும் அவர் பதில் போட்டதையும் சொன்னேன். உடனேயே புரிந்துகொண்டார்.

அவருடன் பேசுவது இயல்பாகவே வந்தது. அவருக்கு புதிய விசயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தது. பேச்சு எங்கேயெல்லாமோ போனது. ஆப்பிரிக்காவில் மரங்கள் பொதுவுடமை. யாருடைய மரத்திலும் யாரும் பழம் பறிக்கலாம் என்றேன். உடனேயே உற்சாகமாகிவிட்டார். ஒரு முறை எங்கள் வீட்டு பப்பாளி மரத்தில் பழங்கள் தயாரானவுடன் இன்னொருவர் வந்து பறித்துப் போனதை சொன்னேன். ‘அது உண்மைதானே. நிலங்களும், மரங்களும் பொதுவானவை. மனுசன் வேலி போட்டு தனக்கென பிரித்துக்கொள்கிறான்’ என்றார்.

இன்னொரு விசயம் சொன்னதும் திடுக்கிடுவார் என நினைத்தேன், ஆனால் மனம் மகிழ்ந்தார். ஆப்பிரிக்காவில் பெண் மணமுடிக்கும்போது ஆண் அவளுக்கு விலை கொடுப்பதை சொன்னேன். ஒரு பெண்னுக்கு 10, 20 ஆடுகள் கொடுத்து ஆண் மணமுடிப்பான். பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தால் அவளுக்கு மதிப்பு அதிகம் என்றேன். அவருக்கு பெரும் மகிழ்ச்சி. ‘அப்படியா, ஏன்?’ என்றார். பெண்ணின் வேலை அதிக பிள்ளைகளை பெற்றுக் கொடுப்பது. அதிக பிள்ளை என்றால் அதிக வருமானம். மணமுடித்தபின் பெண் கருவுறுவது நிச்சயமில்லை. ஏற்கனவே குழந்தை இருந்தால் கருவுறும் சாத்தியம் அதிகம்.’ இப்படி எங்கள் சம்பாசணை சுவாரஸ்யமாகப் போனது.

மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்றார். கணவதி அம்மாவும் வந்து சமையல் ஆகிவிட்டது என்றார். ஆனால் கணவனும் மனைவியும் ஒரு வார்த்தை பேசியதை நாங்கள் பார்க்கவில்லை. சைகை காட்டவில்லை. ஆனால் எப்படியோ கணவனின் நினைப்பை அறிந்து எங்களுக்கும் சேர்த்து சமையல் செய்துவிட்டார். நாங்கள் ஹொட்டலிலும், உணவகங்களிலும் சாப்பிட்டு வந்தோம். முதன் முதலாக ஒரு வீட்டிலே எங்களுக்கு உணவு கிடைத்தது. கணவதி அம்மா பரிமாறினார். சோறும், கத்தரிக்காய் கூட்டும், ரசமும் என்று ஞாபகம். சுவைத்து சாப்பிட்டோம்.

’கார் சாரதி வந்துவிட்டார், புறப்படுகிறோம். உங்கள் அன்பை மறக்க மாட்டோம்’ என்று கூறினோம். சாரதியா? என்றார். ஆமாம், ஓட்டுநர் என்றும் அழைப்போம் என்றேன். ’இலங்கையில் எப்படியெல்லாமோ அழைக்கிறீர்கள், நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே டிரைவர் என்றே பழகிவிட்டது’ என்றார். இருவருடமும் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டோம்.

அதன் பின்னர் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. 2016ம் ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்  வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்கு அறிவிப்பதற்காக  அவரை தொலைபேசியில்  அழைத்தேன். அவரால் கனடா வரமுடியவில்லை என்பதால் விழாவை தமிழ்நாட்டிலேயே ஒழுங்குசெய்து  விருதையும் பணப்பரிசையும் அனுப்பி வைத்தோம்.

சமீபத்தில் கொரோனா பேரிடர் வந்து உலகம் முழுவதையும் மூடிவிட்டபோது திடீரென்று சூம் கூட்டங்கள் அதிகரித்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வாசகர்  வட்டம் கி.ராவுடனான ஒரு நேர்காணலை மெய்நிகர் கூட்டமாக ஒழுங்கு செய்தது. ஜெயமோகனுடன் பல நண்பர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் உலகம் எங்குமிருந்து கலந்துகொண்டு கி.ராவுடன் உரையாடினார்கள். இந்தக் கூட்டம்  2020 டிசெம்பரில் நடந்தது. இருநூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கனடாவில் இருந்து நானும் பங்குபற்றினேன். என்னுடைய  கேள்வி முறை வந்ததும் நான் கேட்டது இதுதான்.

ஐயா என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நான் இலங்கையை சேர்ந்தவன். பல வருடங்களுக்கு முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதி நீங்களும் பதில்  போட்டீர்கள். உங்கள் வீட்டுக்கு நான் மனைவியுடன் வந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறோம். என்னுடைய கேள்வி இதுதான். எழுத்தாளர் எழுதிக்கொண்டு போகும்போது சில சமயம் தடங்கல் ஏற்படும். உங்களுக்கு அப்படி ஏற்பட்டிருக்கிறதா? அந்த தடங்கலில் இருந்து மீண்டு எப்படி எழுதினீர்கள்?

இந்தக் கேள்விக்கு ஏறக்குறைய 19 நிமிடத்தில் பதில் தந்தார். மறக்கமுடியாத வரலாற்றுப் பதில். அதை சுருக்கி என் மொழியில் தருகிறேன்.

நாட்டுப்புறக் கதைகளை சேகரிக்கும் போது பால் கதைகள் என்ற வகையில் ஒரு கதையில் ஒரு சம்பவம் சொல்லப்பட்டது. அந்த ஊரிலே பெண்கள்  சாயந்திரமானால் ஒரு செம்பிலே தண்ணீர் பிடித்துக்கொண்டு வெளிக்குப் போவார்கள். ராசாவின் மனைவியும் அவர்களுடன் வெளிக்குப் போவார். ராசாவின் மனைவி எப்படி அவர்களுடன் போகக்கூடும் என்று கேட்கக்கூடாது. நாட்டுப்புறக் கதைகளில் அப்படி நடக்கும்.

அந்தப் பெண்கள் பார்த்தார்கள் ராசாவின் மனைவி தங்கத்தால் ஆன அரை முடி அணிந்திருந்தார், அது இருட்டிலே மின்னியது. வைரங்களும், ரத்தினக்கல்களும் பதித்திருந்தபடியால் அப்படி ஜொலித்தது. அதன் அழகில் பெண்கள் மனதைப் பறிகொடுத்தார்கள். அதிலே ஒரு பெண் கணவனிடம் தனக்கும் அப்படி ஒன்று வேண்டும் என அடம்பிடித்தார். புருசனும் சரியென்று பொற்கொல்லரை வரவழைத்தார். அவர் அளவு எடுக்கவேண்டும் என்று தந்திரம் செய்து பெண்னை கணக்குப்பண்ணிவிட்டார். இந்தக்கதையில் ஓர் இடத்தில் ’ஆசாரிப்பயல்’ என்ற வார்த்தை வந்து விழுந்துவிடுகிறது. பொற்கொல்லர்கள் ஆட்சேபித்தார்கள். பத்திரிகை மன்னிப்பு கேட்டது.  கதையை திரட்டியவர் கழனியூரான். அதை செம்மைப் படுத்தியபோது நான் அந்தச் சொல்லை நீக்கியிருக்கவேண்டும். தவறுதான்.  பொற்கொல்லர்கள் புரட்சியாக கோசம் எழுப்பியபடி  ஊர்வலம் போனார்கள். ’அவனை தொலைக்கணும், ஒழிக்கணும்’ என்றபடி என்னைக் கடந்து போனார்கள். நான்தான் அவன் என்று அவர்களுக்கு தெரியவில்லை. உணமையில் அந்த வார்த்தை அப்படி ஒன்றும் மோசமில்லை. முஸ்லிம்களும் ஆசாரிகளும் பேசும்போது கெட்டவார்த்தைகள் பறக்கும். குட்மார்னிங் சொல்வது போலத்தான்.

இந்தக் கலவரத்தை கேள்விப்பட்டு சுந்தர ராமசாமி என்னைப் பார்க்க வந்தார். அவர் படி ஏறி வந்ததும் நான் கதவை திறந்தேன். ’உங்களைப் பார்க்க பயப்படுகிறவர் மாதிரி தெரியலையே’ என்றார். இப்படியான சம்பவங்கள் எழுத்தாளர் வாழ்வில் நடப்பதுதான் என்று பேச்சை முடித்தார்.

நான் கேட்டது எழுத்து தடங்கல் பற்றி. அவர் சொன்னது எழுத்தாளருக்கு ஏற்படும் தடங்கல்பற்றி. பூ வேண்டும் என்று கேட்டவனுக்கு பூமாலை கிடைத்ததுபோல ஆகிவிட்டது.

ஆன் செக்ஸ்டன் என்ற அமெரிக்க கவிஞர் சொல்வார் ஒரு வார்த்தையையும் விரயம் செய்யக்கூடாது என்று. ஆலமரத்தைப் பற்றி கவிதை எழுத வேண்டும். சரிவரவில்லை என்றால் ஆலமரத்தை வெட்டி அந்த மரத்தில் ஒரு கதவு செய்யலாம். அதுவும் சரிப்படவில்லை என்றால் ஒரு நாற்காலி செய்யமுடியும்.  அதுவும் பிழைத்தால் ஒரு குழந்தைப் பொம்மையாவது மிஞ்சவேண்டும் என்பார். கி.ராவும் அதையேதான் செய்வார். வார்த்தைகளை வீணாக்கக் கூடாது, அவற்றை  பயன்படுத்த வேண்டும் என்பார். நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்று இல்லை. எல்லாமே நல்ல வார்த்தைதான்.

ஒரு முறை அவர் ஒரு கதை சொன்ன போது வாசகர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி கேட்டார். இதே கதையை வேறு மாதிரி சொல்லியிருக்கிறீர்கள், எது சரியான கதை? இன்று சொன்னதா அல்லது முன்னர் சொன்னதா?  கி.ரா சொன்னார் எழுத்து என்பது வாய்ப்பாடு அல்ல. அது கற்பனை சார்ந்த விசயம். அது மாறிக்கொண்டேதான் இருக்கும். அது வாய்ப்பாடு போல இருந்தால் படைப்பாளிக்கு அங்கே என்ன வேலை.

கி.ராவின் இன்னொரு சிறப்பு சுருக்கமாகச் சொல்லி சிக்கலான ஒன்றை துல்லியமாக விளக்குவது. கதையிலே இரிசி என்ற வார்த்தை வருகிறது. குழந்தைக்கும் புரியும் படி விரசம் இல்லாமல் எப்படி சொல்வது. ‘நொங்கை வெட்டினால் மூன்று குழிகளிலும் நொங்கு இருக்கும். குழிகளே இல்லை என்றால்? குழியில்லாத நொங்கு இரிசி.’

பலருக்குத் தெரியாத இன்னொரு ஆச்சரியமான விசயம் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து புத்தகம் ஒன்று வெளியாகியிருக்கிறது. டில்லியிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து தரும்படி. இவர் எழுதினார் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று. அவர்கள் விடவில்லை. தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள். ’ஆங்கிலம் படித்த  ஒருவர் புத்தகத்தை வாசித்து உங்களுக்கு பொருளை சொல்லட்டும். நீங்கள் அதை உங்கள் மொழியில் எழுதி தாருங்கள். அது இலகுவாக மக்களுக்குப் போய்ச் சேரும்’ என்றார்கள்.  

அப்படியே அவர் செய்து புத்தகம் வெளிவந்துவிட்டது. இது மிகச் சிறப்பான ஏற்பாடாகத் தெரிகிறது. வரிக்கு வரி மொழிபெயர்ப்பது என்பது சரிவராது. கு.அழகிரிசாமி அதைத்தான் விரும்புவார். வசனங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த இடத்தில் நிற்கும், ஆனால் பொருள் மாறிவிடும். சேக்ஸ்பியருடைய ஹாம்லெட்டில் வரும் புகழ்பெற்ற வசனம் ‘there’s the rub’, ’அதுதான் தேய்ப்பு’ என்று மோசமாக மொழிபெயர்க்கப்படும். கி.ராவின் புதிய மொழிபெயர்ப்பு உத்தி நல்லாய்த்தான் இருக்கிறது.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு கம்பளத்தின் பின்பக்கத்தை பார்ப்பது போல. அளவு சரி; அதே நிறங்கள். நூல்களின் எண்ணிக்கை மிகச் சரியாக இருக்கும். ஆனாலும் பின்பக்கம் முன்பக்கம்போல இருப்பதில்லை. கி.ரா செய்தது போல  மொழிபெயர்ப்பு இருந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்றே  படுகிறது.  

கி.ராவின் கதைகளில் எனக்கு ’நிலைநிறுத்தல்’ மிகவும் பிடிக்கும். அவர் தன்னுடைய கதையைத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. மாசாணம் என்று ஒரு பையன் பஞ்சம் பிழைக்க ஒரு சின்ன ஊருக்கு வருகிறான். வெகுளி. எல்லோருக்கும் அவன் கேலிப்பொருள். கடுமையாக உழைப்பான். மற்றவர்களுடைய கேளிக்கைக்கு கடவுளால் படைக்கப்பட்டவன். அவன் மணமுடித்து பெண்ணை கூட்டிக்கொண்டு ஊருக்கு வருகிறான். பெண்சாதி  கூட சில நாட்களில் அவனை மதிப்பதில்லை. ஒருமுறை மழை பொய்த்துவிட்டது. ஊரிலே தண்ணீர் இல்லை. உணவு இல்லை. கொடிய பஞ்சம். மாசாணம் ஒரு சங்கல்பம் செய்கிறான். கோயில் வாசலில் போய் உட்கார்ந்து மழை வரும்வரை உண்ணாவிரதம் என்றான். மூன்று நாள் . அவன் அசையவில்லை. இறுதியில் மழை கொட்டுகிறது,  ஊராருக்கு அவனில் பெருமதிப்பு ஏற்படுகிறது. அப்படி கதை முடிகிறது.

கி.ரா தன் கதையைத்தான் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்திலிருந்து அவர் நோயுடன்தான் வாழ்ந்தார். ‘உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது. அதைக் கண்டுபிடி. உன்னை நிலை நிறுத்திக்கொள்’ என்பது சேதி.  நாங்கள் கலந்துகொண்ட   மெய்நிகர் சந்திப்பில் கி.ரா அதைத்தான்  சொன்னார். ’சிறுவயதிலேயே நான் நோய் காரணமாக ஆஸ்பத்திரிகளில் கிடந்தேன். இதோ இப்போதும் நான் ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன்.’ இதை அவர் சொன்னது 6 டிசெம்பர் 2020 அன்று. ஐந்து மாதங்கள் கழித்து இறந்துபோனார். கி.ராவின் எழுத்துகளுக்கு தடையாக இருந்தது அவருடைய உடல்நிலைதான். இந்த தடங்கலில் இருந்து அவர் மீண்டு வருவார் என நினைத்தோம். இதுவே கடைசியாக அமைந்துவிட்டது.

END

About the author

3 comments

  • ஐயா, கிராவை பற்றி முழுமையாக தெரியவிடினும் அவரை குறித்து சில தகவல்களை படித்துள்ளேன்.. கிரா பற்றி குறிப்பிடும் போது ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என மிகவும் சாதரணமாக சொல்லி இருப்பவர்.. கவிக்கோ அப்துல் ரகுமானின் ஒரே ஒரு வரி.. என் வாழ்நாளில் மறக்க முடியாதது. “புத்தகங்களே சமர்த்தாக இருங்கள்… குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்!!! எப்படி இவ்வாறு கவிஞர்களால் மட்டும் வித்தியாசமாக சிந்திக்க முடிகிறது என எப்போதும் வியப்புடன் பார்ப்பவன் நான்.

    நான் படிக்கின்ற, எழுதுகின்ற, பேசுகின்ற அதே தமிழை தான் கவிஞர்களும் பயன்படுத்துகின்றார். பின் அவர்களின் சிந்தனை மட்டும் எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.. நாமும் தனிமையில் யோசித்தாலும் பதில் புலப்படவே இல்லை. பத்து வருடங்களுக்கு முன் உங்களை நான் முதன்முதலில் இணையத்தில் படித்தது, நீங்கள் ஆப்ரிக்காவை குறித்து எழுதிய பதிவுகள் தான்.. நான் தற்போதும் அந்த பதிவுகளை படிக்க தவறுவதே இல்லை.. உங்கள் அனுபவங்கள் எல்லாம் பொக்கிஷங்கள்.. கிராவுடன் உங்கள் அனுவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  • மொழிபெயர்ப்புகளை படிக்கும் பொழுது தமிழில் தேன் என்று எழுதிய காகிதம் போல இனிப்பாக இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்று மிக உன்னதமாக, கம்பளத்தை திருப்பிப் போட்டு காரணத்தை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்றி ஐயா.

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta