மழலையர் மகிமை

மழலையர் மகிமை

அ.முத்துலிங்கம்

வாசிங்டனில் அப்படித்தான் செய்தி. மிகச் சிறந்த மழலையர் பள்ளி என்றார்கள். இரண்டு மழலையருக்கு ஓர் ஆசிரியை வீதம் பொறுப்பு. முழுக்கவனம் கிடைப்பது உத்தரவாதம். வீட்டிலிருந்து பள்ளி ஐந்தே நிமிட தூரம்தான். குட்டிக்குட்டி மேசைகள். குட்டிக்குட்டி நாற்காலிகள். கதவு திறப்பதற்கு குட்டி கைப்பிடிகள். சகானாவுக்கு இரண்டே வயது. கடந்த ஒருவாரமாக மழலையர் பள்ளிக்கு அனுப்புவதற்கு வேண்டிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியைகளை குழந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல்நாள் குழந்தை செல்லும்போது ஆசிரியைகளின் முகத்தைக் கண்டுஅழக்கூடாதல்லவா? அவை ஒன்றும் அப்படி மோசமான முகங்கள் அல்ல. 

இரவு படுக்க முன்னர் அடுத்தநாள் பள்ளி பற்றி நினைவூட்டப்பட்டது. காலை எழுந்தவுடன் குழந்தை ’ஒ பள்ளி,பள்ளி’ என்று துள்ளியது. அது என்ன மனதில் நினைத்து துள்ளியதோ தெரியாது. அவசரமாக காலை உணவு உண்டு, புதிய ஆடை புனைந்து, முதுகுப் பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டது. அந்தப் பயணம்  20 வருடம் தொடரும் என்பது குழந்தைக்கு தெரியாது.

முதல் நாள்

தயாராக நிற்கும் பந்தயக் குதிரையின் ஞாபகத்தை வரவழைப்பவர் ஜெனி. ஒன்று – பத்து  அளவுகோலில் அழகு எண் 7. அவர் வாசலில் இரண்டு கைகளையும் நீட்டியபடி நின்றார்.  குழந்தைகள் ஒவ்வொன்றாக அவரை நோக்கி ஓடின. முகக்கவசம் அணிந்த சகானா முகக் கவசம் அணிந்த ஜெனியின் கைகளுக்குள் ஓடினாள். சற்று நேரத்தில் முகக்கவசம் அணிந்த பல்வேறு வகைக் குழந்தைகள் மத்தியில் சகானா இரண்டறக் கலந்தாள். அவள் முகக் கவசத்தில் ’சகானா’ என பெயர் எழுதியிருந்தது. ஆகவே தொலைவதற்கு சாத்தியமில்லை. எல்லாம் திட்டமிட்டபடி சுமுகமாக நடந்து முடிந்தது.

ஆசிரியர்களுக்கு பெற்றோர் அடிக்கடி கடிதம் எழுதுவார்கள். அதில் சரித்திர முக்கியத்துவம் எதுவும் கிடையாது. ஆசிரியரிடமிருந்து பெற்றோருக்கு கடிதம் வருவது அபூர்வமாக நடக்கும் ஒன்று. அப்படி கடிதம் வந்தால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து விடுவார்கள். ’உங்கள் பிள்ளையை வேறு பள்ளிக்கு மாற்றுங்கள்’ அல்லது ’உங்கள் பிள்ளை மூன்று நாள் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு தடை’ இப்படி ஏதாவது கெட்ட செய்தியாக இருக்கும்.

அன்று காலை 11  மணிக்கு சகானாவை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். குழந்தையின் உடையில் ஒருகடிதம் குத்தப்பட்டிருந்தது. டைப் செய்யப்பட்டு, கடிதஉறையில் இட்டு, கையொப்பம் வைத்த கடிதம். இப்படி ஒரு கடிதத்தை கண்டால் பெற்றோருக்கு எப்படி கிலி பிடிக்காமல் இருக்கும். வேறு என்ன, முறைப்பாட்டுக் கடிதமாகத்தான் இருக்கும். ஜனாதிபதி உங்கள் பிள்ளைக்கு பரிசு கொடுக்க வருகிறார் என்றா இருக்கப் போகிறது? ஓர் இரண்டுவயது குழந்தை பற்றி முதல் நாளே அதன் ஆசிரியை பெற்றோருக்கு முறைப்பாட்டுக் கடிதம் எழுதுவது உலகவரலாற்றில் இதுவே முதலாவதாக இருக்கும். கடிதம் ஒருபக்கம் நீளம் கொண்டது. கடவுள் சொல்லச் சொல்ல எழுதியது போல அத்தனை நேர்த்தியாகவிருந்தது. அதைச் சுருக்கி கீழே தந்திருக்கிறேன்.

அன்புள்ள பெற்றோருக்கு

சகானா இனிமையான சுபாவம் கொண்டவள்.  அவள் தனியாக இல்லை. அவளுடைய பிரச்சினை கொண்ட இன்னும் பல குழந்தைகளும் இங்கே படிக்கின்றனர். சகானா எல்லோருடனும் எளிதாக அணைந்துவிடுகிறாள்.  அத்துடன் சொன்னதைக் கேட்கும் குணம் உள்ளவள். ஆனால் அவளுடைய உடல் கடிகாரமும், பள்ளிக்கூடக் கடிகாரமும் இணைய மறுத்துவிட்டன. சரியாக காலை 10.45க்கு சகானாவின் உடல்கடிகாரம் அவளுக்குள் அடிக்கத் தொடங்கியது.  ’மம்மி’ என்ற அலறல் அவளுடைய சின்னத் தொண்டையிலிருந்து கிளம்பியது. அது வகுப்பறையை நிறைத்தது. பள்ளிக்கூடத்தை நிறைத்தது. பள்ளியை பார்வையிட வந்த புதிய பெற்றோர் சத்தம் கேட்டு திடுக்கிட்டு பின்பக்கமாக அடிவைத்து, திரும்பி தங்கள் காரை நோக்கி ஓடினர்.  இந்த அலறல் பலநிமிடங்கள் தொடர்ந்தது. மூன்று ஆசிரியைகள் கூட்டுச் சேர்ந்து ஆற்றியும் அழுகையை நிறுத்த முடியவில்லை.

மழலையர் மகிமையானவர்கள். பெற்றோராகிய நீங்கள் குழந்தைக்கு காப்பகத்தில் எப்படி ஒழுகுவது என்பதை சொல்லித் தரவேண்டும். மூச்சுப்பயிற்சி கற்பிப்பதும் நல்லது. பள்ளியின் நடைமுறைகளைக் கற்றுக் கொடுப்பது அவசியம். குழந்தை எடுத்து வைக்கும் இந்தச் சின்னஅடி பெரிய மாற்றத்துக்கு சமம். உங்களுடன் சேர்ந்து நாங்கள் குழந்தை எதிர்பார்ப்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுத்த முயல்வோம். இனிமேல் குழந்தையை 10.45க்கு வீட்டுக்கு அழைத்துச் செல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். யார் கண்டது? இன்னும் ஒருவாரத்தில் சகானா 11.00 மணிவரை பள்ளிக்கூடத்தில் நிற்க ஆசைப்படலாம். சகானாவின் முதல் வெற்றிகரமான வாரத்தை நாம் எல்லோரும் கொண்டாடுவோம்.

தங்கள் உண்மையான,

ஜெனி கொன்சிடீன்

குழந்தைக்கும் ஒரு தரப்பு இருக்கிறதுதானே. ‘ஏன் அழுதாய்’ என்று கேட்டபோது, அது  ‘காலைச் சாப்பாடு வயிற்றினுள் முடிந்துவிட்டது’ என்றது.

இரண்டாவது நாள்

பெற்றோர் குழந்தைக்கு மூச்சுப் பயிற்சி அளித்தனர். ’இழு’என்று சொன்னதும் குழந்தை தலையை மேலே மேலே தூக்கியது. மூச்சை இழுக்க அதற்கு தெரியவில்லை. குழந்தை சாப்பிடுவதற்கு மூன்று விதமான உணவுப் பொருள்களை பெட்டியில் அடைத்து பெற்றோர் அனுப்பினார்கள். ஆசிரியை அப்படித்தான் செய்யவேண்டும் என கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார். உலர் உணவு ஒன்று; ஈரமான உணவு ஒன்று; பழம் ஒன்று. குழந்தை இதில் ஏதாவது ஒன்றை இடைவேளையில் சாப்பிடும் என்பது எதிர்பார்ப்பு. அன்று குழந்தை ஒருவித பிரச்சினையும் இல்லாமல் மற்றக் குழந்தைகளுடன் அணைந்த்து.

பெற்றோர் சொல்லிக் கொடுத்ததுபோல அவ்வப்போது மூச்சுபயிற்சி செய்யவும் மறக்கவில்லை.  மணிக்கூட்டில் 10.45 வந்தது. மூன்று ஆசிரியைகளும் எதையோ எதிர்பார்த்து ஓர்இடத்தில் குவிந்து நின்றார்கள். ஆனால் அதைக் கடந்து குழந்தை போனது.

விளையாட்டுகளில் கலந்துகொள்ள அதற்கு நேரம் இருக்கவில்லை. இசை நாற்காலி விளையாட்டில் யாரோ கடைசி நாற்காலியை இழுத்துவிட்டது போல தனியாக  நின்று யோசித்தது.  எல்லாக் குழந்தைகளும் 11 மணிக்கு வீட்டுக்குப் போனபோது அந்தக் குழந்தையும் போனது. அன்று கடிதம் வரவில்லை. ஆனால் பெற்றோரின் செல்பேசியில் குரல் அஞ்சல் ஒன்று எப்பவோ வந்து உட்கார்ந்திருந்தது.

’இன்று வெற்றிகரமான நாள். 10.45க்கு தயாராக இருந்தோம். சகானா. (sound barrier) ஒலித்தடையை வெற்றிகரமாகத் தாண்டினாள். ஒரேயொரு சின்னப் பிரச்சினை. இடைவேளையின் போது ஏதாவது ஓர் உணவுவகை சாப்பிடவேண்டும். அதுதான் காப்பகத்தின் விதி. சகானா மூன்று உணவையும் சாப்பிட்டு முடிப்பதற்கு 45 நிமிடம் எடுத்துக்கொண்டாள். ஒருமணி நேரத்தில் 45 நிமிடம் உணவுக்குப் போனது. மற்றக் குழந்தைகள் 15 நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு விளையாட்டுகளில் கலந்து கொண்டார்கள். மூன்றுவகை உணவு குழந்தைக்கு அதிகம். இனிமேல் ஒன்று போதும்.’

மூன்றாவது நாள்

காலையில் சகானா இருளான வீட்டு மூலையில் போய்  குந்தியிருந்து கொண்டு அன்றைய திட்டம்பற்றி யோசித்தாள். பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல அவள் முகத்தில் உற்சாகம் வடிந்திருந்தது. பாடசாலை  உடுப்பணிந்து, முதுகுப்பை மாட்டி,  எல்லாமே தயார் நிலையில் காணப்பட்டது. அவள் தலை முழங்காலுக்கு கீழே தொங்கியது. அது நல்ல சகுனமில்லை. வீட்டுமூலையில் இருந்து அவள் அசைவதாகத் தெரியவில்லை.

’பள்ளிக்கு செல்லலாம் சகானா. அங்கே ஜெனி உனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்.’

தொங்கிய தலை தெற்கு வடக்காக ஆடியது.

’உன்னுடைய சிநேகிதி லூலூ உன்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்.’

தலை ஆடியது.

’உனக்கு  கேக்  கிடைக்கும்.’

’வேண்டாம்.’

’உனக்கு குக்கி கிடைக்கும்.’

’எனக்குப் பிடிக்காது. அவர்கள் மழைக் காலத்தை திருப்பிக் கேட்கிறார்கள்.’

‘யார்?’

‘அவர்கள்தான்.’

’சரி, உனக்குத் தெரியுமா? பள்ளியிலே குட்டி குட்டி ரொய்லெட் இருக்கு. அதில் நீ வேண்டிய மட்டும் உட்காரலாம்.’

விர்ரென்று கிளம்பிய சகானா துள்ளிக் குதித்து புறப்பட்டாள். நாரை ஒன்று தண்ணீரிலிருந்து எம்பிப் பறந்து போனது. அதையே பார்த்தபடி நடந்தாள். இதனிலும் பார்க்க அழகான ஒன்றை பள்ளியிலே கற்கமுடியுமா?

இருபது பொம்மைகளில் ஒன்று தொலைந்தாலும் அதைப் பெயர்  சொல்லி சரியாக  கண்டுபிடிப்பது; தமிழில் கேள்வி கேட்டால் ஸ்பானிஷ் மொழியில் பதில் சொல்வது; யாருடைய பிறந்தநாள் என்றாலும் பாடலில் தன்பெயரைச் சேர்த்துப் பாடுவது; இப்படியான திறமைகளையெல்லாம் ஒருங்கே பெற்றிருந்த சகானா அன்று 11 மணியாகியும் ஒவ்வொரு குட்டி நாற்காலியாக மாறிமாறி உட்கார்ந்து விளையாடினாள்.

இன்னும் வீடு திரும்பவில்லை. இன்றைக்கு ஆசிரியை அறிக்கை எப்படி வரும்? ஜெனி மதியூகி; தர்க்கவியல் படித்தவர். எழுத்தாகவா அல்லது குரல் அஞ்சலாகவா? ஒரு வேளை முறைப்பாட்டை ஜெனி நேரே கொண்டு வந்தாலும் வரலாம்.

END

About the author

3 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta