A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. பிரபலங்கள் ...
. மஸாஜ் மருத்த ...
. ஒன்றைக் கடன் ...
. அஞ்சலி - செல ...
. இலையுதிர் கா ...
. ஜெயமோகனுக்கு ...
. வார்த்தைச் ச ...
. கோப்பைகள் ...
. நான்தான் அட ...
. Times of Ind ...
. எமது மொழிபெய ...
. Tamil Litera ...
. முன்னுரை ...
. இன்னொரு வாரம ...
. ஒரு வாரம் ...
. சின்னச் சம்ப ...
. கடவுச்சொல் ...
. இந்த வாரத்தி ...
. 78 ஆணிகள் ...
. சிவாஜியின் க ...
சமீபத்திய ஆக்கம்:  பிரபலங்கள் (நாட்குறிப்புகள்)
2015-02-13

                    பிரபலங்கள்

                         அ.முத்துலிங்கம் 

இரண்டு பிரபலங்களை ஒரே நேரத்தில் ஒருபோதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அந்த விழாவில் பிரபலம் இல்லாத ஒருவர் இருந்தார் என்றால் அது நான்தான். என்னுடன் ஒரு பெண்மணியும் இருந்தார். உலகப் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் அவர். National Geographic, Time, Newsweek, போன்ற பத்திரிகைகளுக்கு படங்கள் எடுப்பவர். அத்துடன் நைக்கோன் நிறுவனம் அவரை அம்பாஸிடர் ஆக நியமித்திருந்தது. அவர் கழுத்திலே தொங்கிய நைக்கோன் காமிரா அவரைவிட பிரபலமானது. அதன் விலை 10,000 டொலர் என்று சொன்னார். அவர் கழுத்தை விட்டு அதைக் கழற்றுவதே இல்லை. அவர் மும்முரமாகப் படம் பிடித்து தள்ளிக்கொண்டே இருந்தார்.

Forest Whitaker சபையினுள் நுழைந்ததும் பரபரப்பு அதிகமானது. இவர்தான் The Last King of Scotland படத்தில் இடி அமீனாக நடித்தவர். அப்படி நடிப்பதற்காக தன் உடல் எடையை 50 கிலோ அதிகரித்தவர் என்று படித்திருக்கிறேன். 2006ல் அந்தப் படம் வெளியானபோது இரண்டு தடவை பார்த்தேன். 2007ல் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் பரிசு கிடைத்தது.

அவர் வந்ததும் எப்படியோ ஒரு வரிசை உண்டாகிவிட்டது. நிரையாக நின்று ஒவ்வொரும் விட்டேக்கரின் கைகளைக் குலுக்கி வாழ்த்தினார்கள்.  இப்படியான பிரபலங்களைச் சந்திக்கும்போது உங்களுக்கு ஒரு நிமிடம் கிடைத்தாலே அதிசயம். பின்னுக்கு நின்று ஒருவர் நெருக்கித் தள்ளுவர். ஆகவே வரிசை முன்னேறியபடியே இருக்கும். கைகொடுத்துவிட்டு நீங்கள் சொல்வதைச் சொல்லிவிட்டு விடைபெற்றுவிட வேண்டும். நீண்ட உரையாடலுக்கு அங்கே இடமில்லை.

காமிரா பெண்ணிடம் நான் விட்டேக்கரிடம் கைகொடுக்கும்போது ஒரு படம் எடுத்துவிடவேண்டும் என்று சொன்னேன். ஒரு பிரபலத்துடன் கைகொடுக்கும்போது இன்னொரு பிரபலம் எடுக்கும் படம். அதன் மதிப்பு இரண்டு மடங்கானதாக இருக்கும். அவர் சரி என்று சொன்னார். அவருடைய காமிராவில் ஒரு சிறப்பு இருந்தது. ஒரு கிளிக்கில் அது இரண்டு படம் எடுத்துவிடும். சிலவேளை முக்கியமான படம் எடுக்கும்போது ஒருவர் கண்ணை மூடிவிடுவார். அப்படியான விபத்துகளை தவிர்க்கும் ஏற்பாடு இது என்று விளக்கினார்.

நான் வரிசையில் நின்றேன். காமிரா பெண்ணும் தயாராக நின்றார். விட்டேக்கரிடம் என்ன பேசுவது என்பதை மனதுக்குள் தயாரித்தேன். நான் ஆப்பிரிக்காவில் பல வருடங்கள் பணி புரிந்தவன் என்பதால் அவர்களுடைய பேச்சுமுறை, உடல் மொழி, கலாச்சாரம், உணவுப்ப் பழக்கம் ஆகியவற்றில் எனக்கு போதிய பரிச்சயம் இருந்தது. இந்தப் படத்திற்காக விட்டேக்கர் உகண்டாவுக்கு பயணம் செய்து அந்த மக்களுடன் பேசி, அவர்கள் கலாச்சாரத்தை புரிந்து தன்னை தயார் படுத்தியிருந்தார். முக்கியமாக அவர்கள் உச்சரிப்பு. இரண்டாவது, ஏதாவது தவறு நேர்ந்தால் அதை அடுத்தவர் தலையில் கட்டும் அவர்களது பண்பு. இதையெல்லாம் பற்றி அவர் தெரிந்துகொண்டார்.

திரைப்படத்திலே இடி அமீனுக்கு ஒரு வெள்ளைக்கார மருத்துவர் நெருக்கமானவராக இருக்கிறார். அவரிடம் அமீனுக்கு நம்பிக்கை அதிகம். அடிக்கடி அவரிடம் ஆலோசனை கேட்பதுண்டு. ஓர் இடத்தில் அமீன் சொல்வார். ’நீதான் என் ஆலோசகர். உன்னைத்தான் நான் பெரிதாக நம்புகிறேன். நீ இந்தியர்களை நான் வெளியேற்றக்கூடாது என்று எனக்கு ஆலோசனை வழங்கியிருக்கவேண்டும்’ என்பார். அதற்கு மருத்துவர் ’நான் சொன்னேனே. ஆலோசனை வழங்கினேனே நீங்கள் கேட்கவில்லை’ என்று கூறுவார். அப்போது அமீன் ’சொன்னாய். சொன்னாய். ஆனால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமே’ என்பார். எப்படியோ தான் விட்ட பிழையை மருத்துவர் மேல் போட்டுவிடும் அந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது. ஆப்பிரிக்கப் பண்பை அரை நிமிடக் காட்சியில் வெளிப்படுத்துவது.

கைகுலுக்கும்போது விட்டேக்கரிடம் நான் மிகவும் ரசித்த இந்த இடத்தைப் பற்றி சொல்லிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் என் கையை பற்றியவுடன்  எல்லாமே மறந்துவிட்டது. ‘படத்துக்காக 50 கிலோ எடை போட்டதாகப் படித்தேன். மறுபடியும் அதை குறைத்துவிட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர் ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று அதே கேள்வியை திருப்பி பதிலாகத் தந்தார். அவ்வளவுதான், பின்னுக்கு நின்றவர் தள்ளியதும் வெளியே வந்தேன். புகைப்படப் பெண்ணை ஆர்வமாகப் பார்த்து ’படம் எடுத்தீர்களா?’ என்றேன். ’நீங்கள் காமிராவை பார்ப்பீர்கள் என்று நினைத்தேன். பார்க்கவே இல்லை. எப்படி எடுப்பது?’ என்றார். நியாயமான கேள்வி.

மறுபடியும் வரிசையில் போய் நின்றேன். இம்முறை அவருடன் ஒன்றுமே பேசுவதில்லை என்று தீர்மானித்தேன். ’நீங்கள் திறமாக நடித்திருக்கிறீர்கள்’ என்று சொல்வதில் என்ன பொருள். சிறந்த நடிப்புக்குத்தானே அவருக்கு ஒஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. ’உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று மட்டும் சொல்வோம் என நினைத்துக்கொண்டேன். அப்படியே சொல்லி கைகுலுக்கினேன். ஆனால் காமிராவை திரும்பி பார்த்து சிரிக்க மறக்கவில்லை. வெளியே வந்ததும் எடுத்தீர்களா? என்று கேட்டேன். விலை உயர்ந்த காமிராவை மாலையாக அணிந்து ஒரு கிளிக்கில் இரண்டு படம் எடுக்கும் பெண் சொன்னார். ’சிரித்தீர்கள். ஆனால் கோணம் சரியாக இல்லை. நிழல்கள் மேல் வெளிச்சம் வேறு இருந்தது.’

நீங்கள் பார்ப்பது 10,000 டொலர் காமிராவில் எடுத்த படம் இல்லை. 100 டொலர் செல்பேசியில் எடுத்தது. யாரை குறை சொல்ல முடியும்? காசுக்கு ஏற்ற வேலையை காமிரா செய்திருக்கிறது.

 

END 


உங்கள் பெயர்: 
உங்கள் மின்னஞ்சல்: 
உங்கள் கருத்து: 
என்னைப்பற்றி - About Me

A.Muttu இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.


அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.


இதுவரை வெளிவந்த நூல்கள் :


     1. அக்கா - 1964
     2. திகடசக்கரம் - 1995
     3. வம்சவிருத்தி - 1996
     4. வடக்கு வீதி - 1998
     5. மகாராஜாவின் ரயில் வண்டி - 2001
     6. அ.முத்துலிங்கம் கதைகள் - 2004
     7. அங்கே இப்ப என்ன நேரம்? - 2005
     8. வியத்தலும் இலமே - 2006
     9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - 2006
     10. பூமியின் பாதி வயது - 2007
     11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - 2008
     12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் - 2008
     13. Inauspicious Times - 2008
     14. அமெரிக்கக்காரி - 2009
     15. அமெரிக்க உளவாளி - 2010
     16. ஒன்றுக்கும் உதவாதவன் - 2011

Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media