ரயில் வண்டிகளின் மகாராஜா

ரயில் வண்டிகளின் மகாராஜா – November 21st, 2008

பா.ராகவன்
                      

வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம். எப்படி விட்டேன், எப்படி விட்டேன் என்று இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் பல காரணங்கள் தோன்றுகின்றன. எல்லாமே அந்தந்தத் தருணங்களுக்குப் பொருத்தமானதாகவும் சரியானதாகவுமே இருந்திருக்கின்றன.

அடக்கடவுளே, சரியான அபத்தம் என்று ஒன்று உண்டா!

உண்டுதான் போலிருக்கிறது. சென்ற மாதம் ஒருநாள் என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. ஒரு பெரிய ஹால் நிறையக் கட்டில்கள், குழந்தைகள், கவலை கவிந்த பெற்றோர்கள், அழுகுரல்கள், விளையாட்டுச் சாமான்களின் வினோத சத்தங்கள், ஃப்ளாஸ்க் கழுவும் வினாடிகளுக்குள்ளாக என்னவாவது சண்டை உற்பத்தி செய்துவிடும் பெண்கள், அதட்டும் நர்ஸ்கள், ஆரஞ்சுப் பழங்களுடன் ஆறுதல் சொல்ல வரும் சொந்தபந்தங்கள்.

மூன்று தினங்கள். ‘இந்த டாக்டர், நர்ஸ் எல்லாம் ரொம்ப கெட்டவங்கப்பா’ என்று அது நிமிடத்துக்கொரு தரம் புகார் சொல்லிக்கொண்டிருந்தது. புறங்கையில் ஊசி ஏற்றி சலைன் ஏறிக்கொண்டிருந்தது. கையில் லேசாக வீக்கம் கண்டிருந்தது. ஊசி குத்தும் டாக்டர்கள் அனைவரும் கெட்டவர்கள். அதுவும் கை வீங்குமளவுக்கு மாட்டு ஊசி குத்துகிறவர் ராட்சசன் அல்லாமல் வேறு யார்?

‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா கண்ணு. சரியாயிடும். டாக்டர் உனக்கு உடம்பு சரியாகணும்னுதானே செய்யறார்?’ என்று ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தபடிக்கு, கைவசம் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

தொடங்கிய கணத்திலிருந்து சராசரியாக மூன்று நிமிடங்களுக்கொரு முறை நான் சிரித்துக்கொண்டிருந்தது என் குழந்தைக்கே வினோதமாகத்தான் பட்டிருக்கவேண்டும். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை அத்தனை கௌரவமாக இல்லை. யாரும் அப்படி மனம் விட்டுச் சிரிக்கக்கூடிய இடம் இல்லை அது. விடிந்தால் தீபாவளி. இந்த தீபாவளிக்கு நாம் வீட்டில் இருக்கப் போவதில்லை என்கிற வருத்தம் எல்லா பெற்றோருக்கும் இருந்தது. எல்லா குழந்தைகளும் பட்டாசு வெடிக்க முடியாமல் போவது பற்றிய கவலையில்தான் இருந்தார்கள்.

எனக்கும் கவலைதான். குழந்தையைச் சாக்கிட்டு நானும் நாலு கம்பி மத்தாப்பு கொளுத்தலாம். புஸ்வாணம் விடலாம். பாம்பு மாத்திரை கொளுத்துவது எனக்கு ஏக ஆனந்தம் தரும் விஷயமாகும். அந்தப் புகையின் நெடி உடனடியாகத் தும்மல் வரவழைக்கும். ஆனாலும் இஷ்டம். வெடி ஒன்றுதான் ஆகாது. காதுக்குக் கேடு.

இப்படியா ஒரு தகப்பன் இருப்பான்? கழட்டி, சுருட்டி எறிந்த லுங்கி மாதிரி கட்டிலில் குழந்தை கிடக்கிறது. உள்ளுக்குள் என்ன செய்கிறதோ, எத்தனை வலிக்கிறதோ, என்ன வேதனையோ? இப்படிச் சிரித்துக்கொண்டிருக்கிறானே கட்டையில் போகிறவன்?

புரியாமல் இல்லை. ஆனாலும் என்னைமீறி வரும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. புத்தகத்தை மூடி வைக்கவும் இயலவில்லை. முத்துலிங்கத்தை வாசிக்காமல் விட்ட அபத்தத் தருணங்களைத் தாண்டி, இப்போது வாசிக்கத் தேர்ந்தெடுத்த தருணமும் மாபெரும் அபத்தமாகவே அமைந்துவிட்டது.

நல்லது. வேறு வழியில்லை. நான் ஒரு நல்ல தகப்பன்தான் நண்பர்களே. அவ்வண்ணமே ஒரு சிறந்த வாசகனும் கூட. இரண்டையும் உங்களுக்கு நிரூபித்துக்கொண்டிருப்பது இப்போதைக்குச் சிரமம். என்னைச் சற்று நிம்மதியாக வாசிக்க விடுவீர்களா? நன்றி.

மருத்துவமனைச் சூழலில் என்னால் விட்டுவிட்டுத்தான் வாசிக்க முடிந்தது. சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் என்னால் படித்து முடித்துவிடக்கூடிய அளவு பக்கங்கள்தான். ஆனாலும் மூன்று நாள்களாயின. இந்தத் தினங்களில் மருத்துவமனையில் என்னைக் கொலைகாரப் படுபாவியாகப் பார்த்த சக பெற்றோர்களுக்கு எனது நடவடிக்கைகள் ஓரளவு பழகிவிட்டிருந்தன. ஒரு பெண்மணி, ‘யார் புஸ்தகம் சார்? கிரேசி மோகனா?’ என்று வந்து கேட்டுவிட்டுச் சென்றார்.

அடடே, இப்படியொரு அபாயம் இருக்கிறதா? மறந்தே போனேன். இன்னும் பாக்கியம் ராமசாமி, கடுகு, எஸ்.வி. சேகர், ஜே.எஸ். ராகவன் என்று யார் யார் பெயர்கள் வந்து மோதப்போகிறதோ என்று அச்சம்கொண்டு, என்னை கவனித்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் வலியச் சென்று, ‘இது கதைப் புத்தகமல்ல. கட்டுரைத் தொகுப்பு. அங்கே இப்ப என்ன நேரம் என்று தலைப்பு. எழுதியவர் முத்துலிங்கம். கனடாவில் இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

‘அந்த ஊர் காமெடி ரைட்டரா?’ என்று ஒருவர் கேட்டார். மீண்டும் அபத்தம். முத்துலிங்கம் என்னை மன்னிக்கவே போவதில்லை.

*

பத்து, பன்னிரண்டு வருடங்கள் இருக்குமா? பதினைந்தேகூட இருக்கலாம். அ. முத்துலிங்கம் முதல்முறை சென்னை வந்திருந்த சமயம் ஓர் உணவு விடுதியின் புல்வெளியில் அவருக்கொரு வரவேற்பு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. எஸ்.பொவும் இந்திரா பார்த்தசாரதியும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

எனக்கு இ.பாவைத் தெரியும். எஸ்.பொவைத் தெரியும். முத்துலிங்கத்தைத் தெரியாது. மணிமேகலைப் பிரசுரத்தில் அவரது புத்தகம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். ஆகவே அன்றைய குலவழக்கப்படி அவரைப் பற்றி அறிந்துகொள்ளவோ, படித்துப் பார்க்கவோ ஆர்வம் கொண்டிருக்கவில்லை. நான் மதிக்கும் இரு பெரும் எழுத்தாளர்கள் என்னை அழைத்தபடியால் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நிகழ்ச்சி முடிந்து, நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியதோடு முத்துலிங்கத்தை மறந்தும் போனேன்.

மணிமேகலை பிரசுரத்தில் அப்போது புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரது புத்தகங்களை அடுத்தடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். எழுத்தாளரே முதலீடு செய்து புத்தகம் வெளியிடும் திட்டம் அறிமுகமாகியிருந்த காலகட்டம். வாசிக்கக் கிடைத்த பெரும்பாலான அந்த ரக நூல்கள் என்னை மிகவும் இம்சித்திருந்தபடியால் மேற்கொண்டு விஷப்பரீட்சைகள் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன்.

முத்துலிங்கம் விஷயத்தில் நான் மேற்கொண்ட முதல் அபத்த முடிவு அது.

பிறகு ஆர். வெங்கடேஷ் ஓரிருமுறை அவரைப் பற்றித் தற்செயலாகப் பேசினான். படித்துப்பார், தவறவிட்டால் பின்னால் வருத்தப்படுவாய் என்று சொன்னான். அலட்சியமாக இருந்துவிட்டேன். காரணம், அவன் சுட்டிக்காட்டிய வேறு சில எழுத்தாளர்கள் எனக்கு முன்னதாக அத்தனை பிடிக்காது போனதுதான்.

குமுதம் தீராநதி தொடங்கப்பட்டபோது அதில் மதிப்புரை எழுதவென முத்துலிங்கத்தின் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ புத்தகம் வந்திருந்தது. தளவாய் சுந்தரம் அதை என்னிடம் கொடுத்து, எழுதித்தருகிறீர்களா என்று கேட்டார்.

என்னடா இந்த மனுஷன் அடிக்கடி நம் வழியில் குறுக்கிடுகிறாரே, சரி படித்துத்தான் பார்ப்போம் என்று வாங்கிக்கொண்டேன். ஆனால் படிக்கவில்லை. படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஜங்ஷன் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. உதவிக்கு யாரும் கிடையாது. நானே ஆசிரியர். நானே உதவி ஆசிரியர். நானே ப்ரூஃப் ரீடர். நானே வாட்ச்மேன். நானே ப்யூன்.

நான் மட்டுமே வாசகராகவும் இருந்துவிடக் கூடாது என்பதனால் என் முழுச் சக்தியையும் செலவிட்டு அந்தப் பத்திரிகைக்காக மிகக் கடுமையாக உழைக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு நாளில் இருபது மணிநேரம் உழைத்தேன். என் தனிப்பட்ட வாசிப்பு, எழுத்து எல்லாம் தாற்காலிகமாக விடைபெற்றிருந்தன. வீடே பகுதிநேரமாகி, அலுவலகம் முழுநேரம் என்னைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. எனவே முத்துலிங்கத்தின் புத்தகத்தை வாங்கி வைத்ததோடு மறந்து போனேன்.

அந்தப் புத்தகத்தைத்தான் இப்போது மருத்துவமனையில் வைத்துப் படித்து முடித்தேன்.

ஆனால் இடையில் அவ்வப்போது அவருடைய சில சிறுகதைகளையும் ஒன்றிரண்டு கட்டுரைகளையும் வாசித்திருந்தேன். அவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஒரு கட்டுரை, ஜெயமோகன் எழுதிய ஒரு பெரிய  கட்டுரை – இம்மாதிரி வேறு சில குறிப்புகளையும் வாசித்திருந்தேன். நண்பர் தமிழினி வசந்தகுமாருடன் ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்தபோதும் ஒரு மிக முக்கியமான எழுத்தாளரை நாம் தொடர்ந்து தவற விட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.

வேண்டுமென்று செய்வதில்லை. என்ன காரணத்தினாலோ இவ்வாறு நேர்ந்துவிடுகிறது. பதினைந்து வயதில் எனக்கு தி. ஜானகிராமன் கிடைத்துவிட்டார். ஏனோ முப்பதுக்குப் பிறகுதான் புதுமைப்பித்தன் அகப்பட்டார். கல்கியை முழுக்கப் படிக்கவேண்டும் என்று இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். அமையவில்லை. ஒரே நாளில் பிச்சமூர்த்தியின் முழுப் படைப்புகளைப் படித்துத் தீர்க்க முடிந்த எனக்கு, புளிய மரத்தின் கதையைப் படித்து முடிக்க ஆறு வருடங்கள் பிடித்தன. ஆனால் ஜேஜே ஒரே நாள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் இரண்டு நாள். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை சுமார் பத்து வருஷங்கள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். வாசிக்கத் தொடங்கிய காலத்தில் புரிந்த விஷயங்கள் எல்லாம், முடித்த வயதில் முற்றிலும் வேறாக அர்த்தம் கொடுத்த அனுபவம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

இன்றுவரை எனக்கு இதற்கான காரணம் தெரிந்ததில்லை. எழுத்தாளர்கள் மீதோ, புத்தகங்களின்மீதோ, எனது ஆர்வத்தின்மீதோ பழுதில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியும். ஆனாலும் சமயத்தில் இப்படி நேர்ந்துவிடுகிறது. படிக்கலாம் என்று வாங்கிச் சேர்க்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மலைப்பேற்படுத்துகிறது. அனைத்தையும் முடிக்காமல் இனி வாங்கவே கூடாது என்று ஒவ்வொரு ஜனவரியிலும் சபதம் செய்துகொள்வேன்.

சபதங்கள் என்பவை மீறுவதற்கு மட்டுமே. ஸ்டேஷன்களில் வந்து நிற்கும் ரயில் வண்டிகளின் பெட்டியைக் குறிபார்த்து  தபால் மூட்டைகள் வீசப்படுவதுபோல் எனக்கான புத்தகங்கள் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தபடியேதான் இருக்கின்றன. சமயத்தில், பிரிக்கத்தான் தாமதமாகிவிடுகிறது.

*

முத்துலிங்கத்தைப் பற்றிச் சொல்ல வந்தேன். நான் எழுதித் தராத மதிப்புரைக்காக ஒரு புத்தகத்தை என்னிடம் இழந்த தளவாய் மனத்துக்குள் எத்தனை திட்டித் தீர்த்திருப்பாரோ தெரியவில்லை. முத்துலிங்கத்துடன் சேர்த்து அவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும் நான் செய்த முதல் காரியம் தமிழினி வெளியிட்ட அவரது சிறுகதைகளின் முழுத்தொகுப்பைத் தேடிப்பிடித்து வாங்கியதுதான்.

தினம் கொஞ்சமாக ஒரு மாதத்தில் படித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது, தமிழில் யாருடனும் ஒப்பிட இயலாத அபூர்வமான தனித்துவம் பொருந்திய எழுத்து அவருடையது. திருவிழாவில் வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவனின் மனோபாவத்துடன் வாழ்க்கையை அணுகி, தேர்வுத்தாள் திருத்தும் ஒரு கணக்கு வாத்தியாரின் கறார்த்தனத்துடன் சொற்களில் அதனைப் படம் பிடிக்கிறார். கட்டுரையானாலும் சரி, சிறுகதையானாலும் சரி. ஒரு வரி, ஒரு சொல் அநாவசியம் என்று நினைக்க முடிவதில்லை. ஓரிடத்திலும் குரல் உயர்த்தாத மிகப்பெரிய பக்குவம் முத்துலிங்கத்தின் ஒவ்வொரு படைப்பிலும் காணக்கிடைக்கிறது.

அவர் பேசவே பேசாத கதைகளிலும் சரி, அவர் மட்டுமே பேசும் கட்டுரைகளிலும் சரி. விவரிக்கப்படும் வாழ்க்கை அல்லது அதன் ஓர் அத்தியாயம் அதன் முழுப்பூரணத் தன்மையை வெகு இயல்பாக எய்திவிடுகின்றது. பாசாங்கில்லை, போலித்தனங்கள் இல்லை, தத்துவ தரிசனங்களை நோக்கிய தகிடுதத்தப் பயணங்கள் இல்லை. கடுமையான அனுபவங்களைத் தந்தாலும் வாழ்க்கை நேரடியானது. சரியாக உடைத்த தேங்காய் போன்றது. எனவே எழுத்தும் அவ்வண்ணமேதான் இருந்தாக வேண்டும். முத்துலிங்கத்தின் எழுத்தில் தொடர்புச் சிக்கல் என்ற ஒன்று எந்த இடத்திலும் இல்லை.

அப்புறம் அவரது நகைச்சுவை உணர்வு. பிறகொரு சமயம் தனியே விரிவாக இதுபற்றி எழுதுகிறேன். முத்துலிங்கத்தை வாசிப்பதற்கு முன்னால், தமிழின் ஆகச் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட கொண்ட நாவல் என்று ஜேஜே சில குறிப்புகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். பல கட்டங்களில் அந்நாவலின் நகைச்சுவை அம்சம் தடம் பெயர்ந்து அங்கதமாகிவிடுகிறது என்றாலும் வாய்விட்டுச் சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களை அந்தளவு வழங்கிய வேறொரு நாவலை நான் வாசித்ததில்லை. நாகூர் ரூமியின் குட்டியாப்பா இந்த வகையில் முக்கியமானது. ஆனால் அது நாவல் இல்லை.

அசோகமித்திரனும் சிரிக்க வைப்பார். ஆனால் மனத்துக்குள் மட்டும். என்ன பிரச்னை என்றால் சிரிக்கும் கணத்திலேயே நமக்குள் அச்சிரிப்பு உறைந்துவிடும் – அவரது எழுத்தில். மிகத் தீவிரமான விஷயத்தைச் சொல்ல வரும்போது நகைச்சுவையை அதற்கான வெளிப்பாட்டுக் கருவியாக அவர் பயன்படுத்துவார். எனவே, நாம் நகைச்சுவையில் மூழ்கிவிட்டால் விஷயத்தை விட்டுவிடவேண்டிய அபாயம் நேரிடும்.

முத்துலிங்கத்தின் நகைச்சுவையை உள்ளர்த்தங்கள் தேடாமல், நகைச்சுவைக்காகவே ரசிக்க முடிகிறது என்பது எனக்கு மிக முக்கியமான விஷயமாகப் படுகிறது. கார் ஓட்டக் கற்றுக்கொண்டது பற்றிய அவரது ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு ஒருவாரம் பைத்தியம் மாதிரி போகிற வருகிற வழியிலெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தேன். நானும் கூட ஒன்றிரண்டு முறை அந்த விபரீத முயற்சியில் இறங்கியிருக்கிறேன். எனக்குச் சற்று மனிதாபிமான உணர்வு அதிகம் என்பதால் தொடரவில்லை.

முத்துலிங்கத்தின் சிறுகதைகள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் தனித்தனியே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்னை மாதிரி அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டிருக்கக்கூடிய வாசகர்கள் யாராவது இருப்பார்களானால், அவர்களைத் தூண்டி விடுவதற்காகவே இந்த முன்சொல்.

*

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே நான் வசிக்கும் சென்னையில், கைக்கெட்டும் தொலைவில், மிக எளிதாக அறிமுகம் செய்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தும் முத்துலிங்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேனே என்று இப்போது ஏக்கமாக இருக்கிறது. எங்கோ வட துருவத்துக்குப் பக்கத்தில் இப்போது அவர் இருக்கிறார். கனடாவுக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தால், பத்மினி மாதிரி அவர் வீட்டுக்குப் போயோ, அல்லது அந்த லாட்விய எழுத்தாளர் மாதிரி ரெஸ்டரண்டில் வைத்தோ சந்தித்து அளவளாவலாம். மைக்கல் ஷுமாக்கரின் தோல்வியை அவரைப்போலவே என்னாலும் ஒப்புக்கொள்ள முடியாததைப் பகிர்ந்துகொள்ளலாம். ஷேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதும் தமிழ் நாடகக்காரர்களைப் பற்றிப் பேசிச் சிரிக்கலாம். சூடானில் அவர் ஒசாமா பின்லாடனையோ, முஹம்மத் அடஃபையோ ஏன் சந்திக்க முயற்சி செய்யவில்லை என்று கேட்கலாம்.

ஆனால் எப்போது போவேன்?

தெரியவில்லை. மேலும் சில சரியான அபத்தங்களுக்குப் பிறகு அப்படியும் ஒரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்?

Tags: அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம், எழுத்தாளர், எழுத்தாளர்கள், சிறுகதைகள், தமிழினி, புத்தகம், மகாராஜாவின் ரயில் வண்டி, மணிமேகலை பிரசுரம்

நன்றி http://www.writerpara.com/paper/ – பா.ராகவன்
  

About the author

29 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta