விஷ்ணுபுரம் இலக்கிய விருது

ஆ.மாதவனின் படைப்புகளில் நான் முதலில் படித்தது 'கிருஷ்ணப் பருந்து' நாவலைத்தான். அது இருபது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். நான் அப்பொழுது பாகிஸ்தானின் பெஷவார் நகரத்தில் வேலையாக இருந்தேன். இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் நான் கேட்டதன் பேரில் இந்த நாவலை வாங்கி எனக்காக அனுப்பியிருந்தார். அது நீண்டநாட்களுக்கு பிறகு நனைந்து மெலிந்து உருமாறி என்னிடம் வந்திருந்தது. இந்தியாவில் இருந்து வரும் பார்சல்கள் சோதிக்கப்படுவதால் அது திறந்து மறுபடியும் ஒட்டப்பட்டு வந்த விசயம் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது.

புத்தகத்தை பிரித்து வாசிக்கத் தொடங்கியவுடன் இது பெரிய சவால் என்பதை உணர்ந்தேன். மோசமான அட்டை, மோசமான தாள்கள். எழுத்துக்கள் எல்லாம் அரைவாசி மறைந்துபோய் இருக்கும். பல வார்த்தைகளை ஊகித்துப் பூர்த்தி செய்து படிக்கவேண்டும். அப்படியிருந்தும் விடாப்பிடியாகப் படித்தேன். நான் மாடியில் இருந்து புத்தகத்தை படித்தபோது தெருவில் சிறுவர்கள் எருமை மாட்டின்மீது சவாரி செய்தார்கள். சாலையில் போவோர் உரத்த குரலில் புஸ்துவிலும், உருதுவிலும், பஞ்சாபியிலும் பேசிக்கொண்டே நடந்தார்கள். நான் மிக முக்கியமான ஒரு தமிழ் நாவலை படித்துக்கொண்டிருந்தேன்.

நாவலில் நாலேநாலு பாத்திரங்கள்தான். அந்தப் பாத்திரங்கள் அப்படியே வாசகரைப் பிடித்துவைத்து கடைசிவரை இழுத்துச் செல்லும். நாவல் அரைவாசி பேச்சுவழக்கில் எழுதப்பட்டிருந்தது. பல வார்த்தைகள் அந்நியமானவை, இருந்தாலும் வாசிப்பு சுவாரஸ்யம் என்பது பக்கங்கள் முடிய முடிய கூடிக்கொண்டே போனது. நாவல் முடிவுக்கு வந்தபோது பிரமிப்புத்தான் எஞ்சியது. உடனேயே ஆ.மாதவனின் மற்ற நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

கிருஷ்ணப் பருந்து நாவலில் ஓர் இடம். 'ஆரம்பப் பாட மாணவன் 100,99,98 என்று தலைகீழாக எண்ணுவதுபோல' என்று வரும். இன்று தமிழில் வருடாவருடம் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிடப்படுகின்றன. கண்கவரும் அட்டைகளும், நல்ல தாள்களும், அழகான எழுத்துருக்களும் தமிழ் வாசிப்பை இனிய அனுபவமாக மாற்றிவிடுகின்றன. நிறைய இளம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இந்தச் சந்தடியில் மூத்த எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடைய உன்னதமான  படைப்புகள்  100,99,98 என்று  பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

இந்த நேரத்தில் 'விஷ்ணுபுரம் இலக்கிய விருது' ஆ. மாதவனுக்கு இந்த வருடம் வழங்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. விருது விழா டிசம்பர் மாதம் 19ம் தேதி மாலை நடைபெறும். இதே விழாவில் ஜெயமோகனுடைய 'கடைத்தெருவின் கலைஞன்' நூலும் வெளியாக இருக்கிறது. மிகத் தரமான ஒருவருக்கு வழங்கப்படும் தரமான விருது. ஆ.மாதவனை நான் பார்த்தது கிடையாது. அவருக்கு கடிதம் எழுதியதும் இல்லை. அவரோடு பேசியதும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மனநிறைவு பெறுகிறேன்.

விழா விவரங்கள் கீழே:
http://www.jeyamohan.in/?p=9302

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta