வெள்ளிக்கிழமை இரவுகள்

 

                 வெள்ளிக்கிழமை இரவுகள்

                          அ.முத்துலிங்கம்

ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல  உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையை கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

தாயார் சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியிலிருந்து வரும்போதே சண்டை பிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது நாலு மாதம் கர்ப்பம். ஐந்து மாதம் கழித்து ஆகவி பிறந்தாள். தாயாரின் ஒரே செல்லம். அவர் மடியில் தலைவைத்து படுக்க அகிலா முடியை கோதிவிட்டார். ‘கோதாதே. என் தலையை இறுக்கி அழுத்து’ என்று கத்தினாள். தாயார் மகளின் தலையை இரண்டு கைகளாலும் அமத்தி பிடித்தார். ’சரி, உன் பொய்களால் என் மண்டையை நிரப்பு’ என்றாள்  இவ்வளவு ஆவேசமாகவும் கோபமாகவும் ஆகவி பேசியதே இல்லை.

அகிலாவுக்கு மகளை எப்படி சமாளிப்பது என்று தெரியும். ‘நீ முதலில் சாப்பிடு. பின்னர் யார் உனக்கு நான் பொய் பேசியதாகச் சொன்னார்கள்? அதைச் சொல்லு.’’ ‘ஒல்லிப்பிச்சான் மைக்தான் சொன்னான்.’ ‘அவனுக்கு எப்படி தெரியும்?’ ‘அவனுக்கு எல்லாம் தெரியும். அவனுக்கு இரண்டு அப்பாக்கள். இருவருமே விமானங்கள் திருத்துவார்கள்.’ ‘’விமானம் திருத்தினால் அவர்களுக்கு எல்லாம் தெரியுமா? வேறு என்ன சொன்னான்.’ ‘என்னுடைய அப்பா ஓடிவிட்டாராம்,.’  ‘அதற்கு நீ என்ன  சொன்னாய்?’ ‘கழுதைப் பல், சதுரப் பல்’  என்று திட்டினேன். ‘எதற்கு அப்படித் திட்டினாய்?’ ‘எனக்கு அதனிலும் மோசமான வசவு தெரியாதே.’ ’ அவன் என்ன சொன்னான்?’  ‘உன்னுடைய அம்மா உன்னை வீசிவிட்டு தொப்புள்கொடியை வைத்திருந்திருக்கலாம்’ என்றான்.  ’அப்படியா? நீ என்ன சொன்னாய்?’ ‘நீயே பார்வைக்கு ஒரு தொப்புள்கொடி போலத்தானே இருக்கிறாய்’ என்றேன். அப்போது மணி அடித்துவிட்டது.

வெள்ளிக்கிழமை இரவுகளை ஆகவியால் தாங்கமுடியாது; அகிலாவும் வெறுத்தாள். அவள் வேலை செய்யும் கம்பனியில் வாரத்தில் நான்கு நாட்கள் பகல் வேலை. வெள்ளிக்கிழமை மாத்திரம் இரவு வேலை. இரவிரவாக ஏற்றுமதிக்கு வேண்டிய பொருட்களை பெட்டிகளில் அடைத்து தயாராக்கவேண்டும். சனிக்கிழமை காலை அவற்றை ஏற்றிப்போக கனரக வண்டிகள் வந்துவிடும். வெள்ளிக்கிழமை இரவுகளில் ஆகவிக்கு உணவு கொடுத்து அவளை படுக்கவைத்துவிட்டு  வேலைக்கு புறப்படுவாள்.  படுக்கையில் இருந்து டிவி பார்த்தவாறு ஆகவி தூங்கிவிடுவாள். அடுத்தநாள் காலை அவள் எழும்பும்போது அம்மா பக்கத்தில் இருப்பார்.

ஆகவியின் பள்ளிக்கூடத்தில் ஐந்து விதமான குடும்ப பிள்ளைகள் படித்தார்கள். இரண்டு அம்மா உள்ள பிள்ளைகள். இரண்டு அப்பா உள்ள பிள்ளைகள். அப்பா, அம்மா இருவருமே உள்ள பிள்ளைகள். தனி அப்பா பிள்ளை; தனி அம்மா பிள்ளை. இரண்டு அப்பா அல்லது இரண்டு அம்மா அல்லது அம்மா, அப்பா  உள்ள பிள்ளைகள் பெருமை அடித்துக் கொள்வார்கள். தனி அம்மா பிள்ளைகளை அவர்கள் கேலி செய்வார்கள். ’உன் அப்பா எங்கே? ஓடிவிட்டாரா?’ என்று இவளை சீண்டுவதே அவர்கள் வேலை. .

’எங்கே என் அப்பா?’ என்று ஆகவி பலதடவைகள் தாயாரிடம் சீறியிருக்கிறாள்.   சிலகாலமாகவே அவள். தாயாரை மதிப்பது கிடையாது. என்ன சொன்னாலும் அதற்கு ஒரு பதில் இருக்கும். அந்த வருடத்தில் மட்டும் அவள் பள்ளிக்கூடத்தில் 100 பென்சில்களைத் தொலைத்திருந்தாள். கேட்டால் ’தொலைந்துவிட்டது’ என்று கத்துகிறாள்.  அவளுடன் படிக்கும் மற்றப் பிள்ளைகளும் இப்படித்தான் தொலைக்கிறார்களா? யாராவது பெரியவர்கள் ‘நீ எப்படியம்மா இருக்கிறாய்?’ என்று கேட்டால் இவள் ’நல்லாயிருக்கிறேன்’ என்று பதில் சொல்வதில்லை. ‘முழுதாயிருக்கிறேன்’ என்கிறாள். ’சாப்பிட்டாயா?’ என்று விசாரித்தால் ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதும். ஆனால் இவள் பல்லை இளித்துக் காட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல் நிற்பாள்.

‘எங்கே உன் பென்சில்?’ என்றார் அகிலா.

‘தொலைந்துவிட்டது.’

‘எங்கே தொலைந்தது?’

‘பென்சில் என்னிடம் சொல்லிவிட்டா போகும்?  எப்படியோ தொலைந்துவிட்டது.’

‘அது எப்படி ஒவ்வொரு நாளும் தொலைந்து போகும். உனக்கு பென்சில் வாங்கிக் கொடுத்தே நான் ஏழையாகி விடுவேன்போல இருக்கிறதே?’

‘இப்ப நாங்கள் பணக்காரர்களா?’

’இடக்காகப் பேசாதே. நான் ஒருத்தி உனக்காக இரவு பகலாக உழைக்கிறேன். சமைத்து போடுகிறேன். உன் உடுப்பை தோய்க்கிறேன். கொஞ்சம் பொறுப்பாக இரு மகள். புரிகிறதா?’

‘நீ சொன்னதில் எந்த வார்த்தையை நான் அகராதியை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்?’.

இடியப்பத்துக்கு குழைத்த மாவில் சின்ன உருண்டை செய்து அதைக் கையிலே உருட்டிக்கொண்டே ஆகவி மேசைக்கு அடியில் உட்கார்ந்து  கதைப்புத்தகம் படித்தாள். அந்த ஓர் இடத்தில்தான் அவளுக்கு தாயாரின் தொந்தரவு இல்லை. நீண்டநேரமாக  தயாரித்த புதுவிதமான சிற்றுண்டியை மேசைக்கு கீழே குனிந்து மகளுக்கு நீட்டினாள் அகிலா. அதன் நிறத்தையும் வடிவத்தையும் பார்த்துவிட்டு ஆகவி வேண்டாம் என்றாள்  ’சாப்பிட்டுப் பார். நல்லாயிருக்கும்’. ’நீ செய்வது ஒன்றுமே நல்லாயிராது.’ ’இப்ப நீ ஆக மோசம். குழந்தையாய் இருந்தபோது பிரச்சினையே இல்லை.’ ’என்ன சாப்பிட்டேன்?’ ’என்னைத்தான்.’ ஆகவி அதைக்  கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். மேசைக்கு வெளியே வந்து தாயை சுற்றி சுற்றி ஓடினாள். ’நான் விட்ட மிச்ச உணவு, அம்மா, நான் விட்ட மிச்ச உணவு, அம்மா’  அகிலாவுக்கும் சிரிப்பு வந்தது. ஆகவியுடன் தர்க்கம் செய்யவே முடியாது. அவள் யோசிப்பதே இல்லை. வாயை திறந்ததும் உள்ளேயிருந்து சொற்கள் வெளியே வந்து விழும்.

இத்தனை புத்திசாலியான பெண் தினமும் பென்சில்களை எப்படி தொலைக்கிறாள்? அகிலாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவளுடைய பள்ளிக்கூட ஆசிரியர் அவள் வேண்டுமென்றே தொலைக்கிறாள் என்றார். அவளுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு கூட அந்த மர்மம் புரியவில்லை.  மகளை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனாள் அகிலா. மருத்துவர் இருவரிடமும் கேள்விகள் கேட்டார். பின்னர் சிறுமியிடம் தனியாகப் பேசினார். ’ஆகவியின் உள்ளத்திலே அடி ஆழத்தில் ஏதோ இழப்பு இருக்கிறது. அதை சரிக்கட்ட முயலுங்கள்’ என்றார்.  அப்போதுதான் அவளுக்கு அப்பா இல்லாத குறையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அகிலாவுக்கு ஏற்பட்டது..

சில்வியாவைத் தொலைபேசியில் அழைத்தாள். அகிலாவுடன் படித்த சிநேகிதி அவள்.  பத்திரிகைத்துறையில் புலனாய்வுக் கட்டுரைகள் எழுதி கொழும்பில் பிரபலமாக இருந்தாள்.  அகிலாவின் அம்மா மாங்குளத்தில் இறந்தபோது போர்ச்சூழல் காரணமாக அகிலாவால் போக முடியவில்லை. சில்வியாதான் அகிலாவுக்காக இறுதிக் காரியங்களை செய்தாள். அவளுக்கு நடந்த சம்பவம் முழுக்க தெரியும்.  இரவிரவாக தப்பி வந்த அகிலா கொழும்பிலே அவளுடன் தங்குவதற்கும், பின்னர் கள்ள கடவுச்சீட்டில் கனடா போவதற்கும் உதவிசெய்தது  சில்வியாதான்.  அவளிடம் விசயத்தை சொன்னபோது. ’பெயர் தெரியுமா?’ என்றாள் அகிலா சொன்னாள். ’எப்படித் தெரியும்?” ’அவர்கள் பேசிக்கொண்டார்கள்.’ ‘வேறு ஏதாவது தகவல் உண்டா?” ‘ கொமாண்டோ படைப்பிரிவு மேஜர் ஜெயநாத்தின் தலைமையில்தான் தாக்குதல் தொடங்கியது.’ ‘இது போதும்,  கவலையை விடு,’ என்றார் சில்வியா

இரண்டு மாதம் கழித்து  நடு இரவில் சில்வியாவிடமிருந்து  தொலைபேசி வந்தது.  ’உடனே புறப்படு. கண்டுபிடித்துவிட்டேன்’ என்றார். முகவரியை அவர் சொல்லச்சொல்ல  அகிலா தினப்பத்திரிகையின் மூலையில் எழுதிக்கொண்டாள். இரண்டே நாளில் புறப்படுவதாக அகிலா சொன்னாள்.  ’விரைவுதான் முக்கியம். பல மாதங்களாகச் செய்த ஆராய்ச்சி கடைசியில் பலன் தந்திருக்கிறது. இதை தவறவிட்டால் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது. உடனே வா.’

ஜூலை 9,  2010 வெள்ளிக்கிழமை அகிலாவும் மகளும் கொழும்புபோய் இறங்கினார்கள்.  மினுவாங்கொட கொழும்பிலிருந்து 35 கிலோமீட்டர் தூரம். அங்கிருந்து பல கி.மீட்டர்கள் உள்ளே உடுகம்பொல என்ற கிராமத்துக்கு போகவேண்டும். முழுக்க முழுக்க சிங்களவர்கள் வாழும் பிரதேசம் என்றபடியால் அகிலாவுக்கு சிறிது தயக்கம் இருந்தது. சில்வியா சிரித்தாள். ’ஞாபகம் இருக்கா? நீ கனடாவுக்கு புறப்பட்டபோது இப்படித்தான் பயந்து செத்தாய். நான் சொன்னேன் ’2000 வருடங்களுக்கு முன்னர் யேசுவை பெற்றெடுக்க  மேரி  பத்து நாட்கள் கழுதை மேல் பயணம் செய்யவில்லையா?  நீ விமானத்தில்தானே பறக்கிறாய். உனக்கு என்ன பிரச்சினை?’ இப்பொழுது பார். போர் முடிந்துவிட்டது. ஒரு மணி நேரப் பயணம்தானே.  பயமில்லாமல் போ. எனக்குத் தெரிந்த ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறேன்’ என்றார் சில்வியா.

ஆகவியால் பரவசத்தை  தாளமுடியவில்லை.  அவள் ஆட்டோவை கண்டது கிடையாது. தலையையும் பாதி உடம்பையும் வெளியே நீட்டி துடைத்து வைத்தது போன்ற வானத்தை அண்ணாந்து பார்த்தாள். வெளிச்சம் அலைஅலையாக வந்தது. மினுவாங்கொட தாண்டியதும் தார் ரோட்டு முடிந்து ஆட்டோ துள்ளத் தொடங்கியபோது ஆகவியும் சேர்ந்து துள்ளினாள்.  வீதியிலே கிடந்த பிளாஸ்டிக் பைகள் ஆட்டோவை  துரத்தி வந்தன. ரோட்டோரத்தில் முளைத்த வாழைமரங்களில் முழு வாழைக்குலைகள்  தொங்கின. ஆகவியால் நம்பவே முடியவில்லை.  மாமரத்தில் போத்தல்கள் கயிறுகளில் ஆடின. கழுத்து மெலிந்த போத்தல்களுக்குள் பெரிய மாங்காய்கள் தொங்கின. ’இது எப்படி?’ என்றாள் ஆகவி மேலும் வியப்புடன். ’உனக்குத்தான் எல்லாம் தெரியுமே. யோசி’ என்றார் தாய். வான்கோழிகளை ஆகவி மேசையில் பார்த்திருந்தாள். ரோட்டோரத்தில் கண்டதில்லை. சின்னத் தலையும் பெரிய உடலுமாக அவை வீதிகளில் அசைந்து அசைந்து உலாவின. அவளுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. அவள் சின்ன மூளைக்குள் அத்தனை ஆச்சரியங்களை அடக்க முடியவில்லை.  திடீரென்று ’எங்கே அம்மா போகிறோம்?. பாட்டியின் சொந்தக்காரர்  வீட்டுக்கா?’ என்றாள்.

‘கொஞ்சம் பொறு, என்ன அவசரம்? சொல்கிறேன். உன்னிடமிருந்து நான் நல்ல நடத்தை எதிர்பார்க்கிறேன். துப்புவதுபோல கதைக்காதே.  உன் மூளையை பாவிப்பதை நிறுத்து. உன்னுடைய பெயர் என்ன என்று யாராவது கேட்டால்  ஒரு நல்ல  அடக்கமான  கனடிய சிறுமிபோல  ஆகவி என்று  சொல்.. பல்லை இளித்துக்கொண்டு நிற்காதே.’ ’அது எல்லாம் சரி. நான் நல்ல பிள்ளையாக நடந்தால் எனக்கு என்ன தருவாய்?’ ‘என்ன தரவேண்டும்? நீ வகுப்பில் முதலாவதாக வந்தால் பரிசு கேட்கலாம். அல்லது நூறு மீட்டர் ஓட்டப் போட்டியில்  திறமாகச் செய்தால் ஏதாவது தரலாம்.  நல்ல நடத்தைக்கு யாராவது பரிசு கொடுப்பார்களா?’   ’ஓ, கடவுளே! என் வாழ்நாளே முடிந்தது. பத்தாயிரம் மைல்கள் பறந்து வந்தது என்னுடைய நல்ல பழக்கத்தை காட்டவா?’ ’சரி, சரி. புலம்பாதே. இன்னும் சில நிமிடங்கள்தான். நீ என்றென்றைக்கும் மறக்கமுடியாத ஒரு நாளாக  இது இருக்கும்.’

’நம்பமாட்டேன்.’

’கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறும் நாள். ஒருமுறை மாறியபின் அது மறுபடியும் கம்பளிப் புழுவாக  முடியுமா?’. 

’அது எப்படி? வண்ணத்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சிதான்.’

’அதேதான். உன்னுடைய வாழ்விலும் அப்படியான ஒரு தருணம் இது.’.

’நான் உரு மாறப் போகிறேனா?’

’மக்கு, மக்கு’ என்று அகிலா அவன் தலையில் செல்லமாகக் குட்டினாள்.

அகிலாவுக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும். என்ன பேசவேண்டும் என்பதை மனதுக்குள் அடுக்கிக் கொண்டாள். அந்த வீதியில் எல்லாமே மூன்று, நான்கு அறை கொண்ட வீடுகள்.  அஸ்பெஸ்டஸ் கூரைகள்.  பூக்கன்றுகள் நிரையாக நடப்பட்டிருந்தன. நல்ல பராமரிப்பு இருந்ததால் அந்தூரியம், கார்னேசன், ரோஜா, போர்கன்வில்லா போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கின.

சாரதி வழியில் போன ஒருவரிடம் சிறீபாலா என்று விசாரித்தார். அவர் ஒரு வீட்டை சுட்டிக்காட்டிவிட்டு சென்றார். ’ஒரு சாதாரண ராணுவச் சிப்பாயின் வீடு இத்தனை பெரிதா?’ என்று அகிலா நினைத்தார். சாரதியை காத்திருக்கச் சொல்லிவிட்டு ஆகவியை கையிலே பிடித்துக் கொண்டு முன்னேறினார். அழைப்பு மணியை அடித்ததும் ஒரு பெண் வந்து கதவை திறந்தார். வீட்டு உடையில் இருந்தார். 14 சைஸ் உடம்பை 12 சைஸ் உடைக்குள் நுழைத்திருந்ததால். சதை கொஞ்சம் பிதுங்கியது. ஆனால் மலர்ந்த முகம். கழுத்திலே தடித்த சங்கிலிகள். இரண்டு கைகளிலும் முழங்கைவரை காப்புகள். முப்பது வயதுக்குள்தான் இருக்கும். ’யார் வேண்டும்?’ என்று தயக்கத்துடன் கேட்டார். ’சிறீபாலா’ என்று அகிலா சொல்ல ’ஆ! வாருங்கள் உள்ளே’ என்று அரைப் புன்னகையுடன் வரவேற்றார்.  அவர் வாய் அப்படிச் சொன்னாலும் முகத்திலே கொஞ்சம் கலவரம்  கிடந்தது. ’

’என் பெயர் அகிலா. நான் கனடாவிலிருந்து வருகிறேன். இது என் மகள் ஆகவி’ என்றார். அந்தப் பெண் ஒன்றுமே புரியாமல் மிரள மிரளப் பார்த்தார். சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ஒரு சிறுமி ஓடிவந்தாள். அவளைக் கண்டதும் அகிலாவுக்கும் ஆகவிக்கும் ஒரே அதிர்ச்சி.  கண்ணாடி உருவம் போல அந்தச் சிறுமி ஆகவியைபோலவே  அச்சாக இருந்தாள். அதே உயரம், அதே சுருட்டை முடி, அதே நீட்டு கண்கள். ’இவள் என் மகள், அசுந்தா. ஏதாவது குடிக்கிறீர்களா?’ என்றார் .’தண்ணீர் மாத்திரம்’ என்றார் அகிலா. ’அவர் லீவிலே வந்து நிற்கிறார். இன்னும் இரண்டு நாளில் திரும்ப வேண்டும். சந்தையிலிருந்து இதோ இப்போது வந்துவிடுவார்’’ என்று கூறியபடியே சமையலறையை  நோக்கி நடந்தார். ஆகவியும் சிறுமியும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்தபடி  நின்றனர். சிறீபாலாவின் மனைவி சமையலறையிலிருந்து தண்ணீருடன் திரும்பிய அதே நேரத்தில் சைக்கிளில் வந்து சாவதானமாக குதித்தான் சிறீபாலா.  மீன், மரக்கறி ஆகிய சாமான்களைப் பையிலே காவிக்கொண்டு. வீட்டுக்குள் சிரித்தபடி காலடி வைத்தான். அந்தக் கணத்திலிருந்து அவனுடைய வாழ்க்கை மாறப்போகிறது அவனுக்கு தெரியாது.

அகிலா எழுந்து நின்றாள். அகிலாவையும் ஆகவியையும் கண்டு திடுக்கிட்டுப்போய்  ஓர் அடி பின்வாங்கினான். ஆகவியை பார்த்து பின் தன் மகளைப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுடைய மனைவி பிரமை பிடித்துப்போய் நின்றாள்.  ஏதோ கெட்ட  ஆவி நுழைந்துவிட்டது என்ற  எண்ணம்  அவனுக்குள் எழுந்தது.

அகிலா சிறீபாலாவைப் பார்த்தாள். அதே முகம்; அதே உடைந்த பல்.  அவன் சிரிப்பு தலைகீழாக வந்தது. எதை சொல்வது, எதை உள்ளே வைப்பது என்பதை தீர்மானித்துக்கொண்டு  துண்டு துண்டாகப் பேசினாள். ’ஜெயசிக்குறு போர் நடவடிக்கை. 21 நவம்பர் 1997. வெள்ளிக்கிழமை. மாங்குளம். இரவு ஒரு மணி. ராணுவ வாகனத்தில் உன் கூட்டாளியுடன் வந்திறங்கி என் வீட்டுக் கதவை உடைத்தாய். என் அம்மாவின் தலையில்  உன் சிநேகிதன்  துப்பாக்கி கட்டையால் இடித்தான். . இது உன் மகள்.  பெயர் ஆகவி. இவளுடைய அப்பாவை காட்ட கனடாவில் இருந்து வந்திருக்கிறேன்.’ சிறீபாலாவின் மனைவி  ஈரச் சேலை கொடியறுந்து  விழுந்ததுபோல சத்தமாக நிலத்தை அறைந்து விழுந்தாள்.  தண்ணீர் சிதறியது. சிறீபாலா சற்று வாயை திறந்தபடி வெலவெலத்துப்போய் அப்படியே நின்றான்.

ஆகவியின் கையை பிடித்து இழுத்தபடி அகிலா ஓடிப்போய் காத்திருந்த ஆட்டோவில் ஏறினாள். சாரதி சீப்பினால் தலையை வாரிக்கொண்டு நின்றான். ’சீக்கிரம், சீக்கிரம்’ என்றாள். ஆகவிக்கு அவர்கள் பேசியது ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்பதை அவளுடைய சின்ன மூளை கிரகிக்கவில்லை. ஆட்டோ நகரத் தொடங்கியதும் ஏதோ பெரிய இக்கட்டிலிருந்து அவர்கள் தப்பி ஓடுவது அவளுக்கு தெரிந்தது. அம்மாவின் முகத்தை பார்த்தாள். உணர்ச்சிப் பெருக்கில் அது நனைந்து வேறு யாருடைய முகமாகவோ மாறிவிட்டது. ’நான் நல்ல பிள்ளையாக நடந்தேனா? அது யார்? என் பெயரை ஏன் சிங்களத்தில்  சொல்லவில்லை?’ என்றாள் ஆகவி.

அகிலா அவளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட. பின்னர் சொன்னார். ’அவனுடைய பெயர் சிறீபாலா. அவன்தான் உன்னுடைய அப்பா. அவன் முகத்தை உன் நினைவில் அழுத்தமாகப் பதிவு செய். இதுதான் கடைசி. இனிமேல் நீ அவனை பார்க்கவே போவதில்லை.’

’அப்ப அசுந்தா? அவளுக்கு அம்மா, அப்பா யார்?’

’இன்றிலிருந்து அசுந்தா தனி அம்மா பிள்ளை.’

‘என்னைப்போலவா?’

‘உன்னைப்போலவேதான்.’

END

 

 

 

 

 

About the author

2 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta