யானையின் சம்பளம்

யானையின் சம்பளம்

அ.முத்துலிங்கம்

வேறு வழியில்லை. யானையை கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? ‘நான் கொண்டு வருகிறேன். இது கூடச் செய்ய முடியாதா?’ என்றான். எல்லா பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு இருந்தது. அநேக சமயங்களில் பிரச்சினையை உண்டாக்குவதும் அவனாகவே இருக்கும்.

லாம்ரெட்டா கம்பனி ஆரம்பித்தபோது இளம்வயது பயிற்சியர் தேவைப்பட்டார்கள். கடைநிலை வேலை; சம்பளம் குறைவு.  200 பேருக்கு மேலே நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.  நேர்முகத் தேர்வு நடந்த அன்று காலை ஜெயவர்த்தனாவின் செயலரிடமிருந்து ஒருவரைப் பரிந்துரைத்து   தொலைபேசி வந்தது.  பெயர் லலித் ஜெயவர்த்தனா என்றான். பார்த்தவுடன் கவரும் தோரணையில் இருந்தான், இவனாகத்தான் இருக்கும். அப்போதெல்லாம் இலங்கையில் ஜெயவர்த்தனா வெகு பிரபலமான பெயர். இரண்டு வருடம் கழித்து இவர் நாட்டுக்கு பிரதமர் ஆவார். மேலும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி ஆவார். இதுவெல்லாம் எப்படி ஊகிக்கமுடியும் . எதற்கும்  இருக்கட்டும் என்று அவனைத் தேர்வு செய்தேன். அதைவிட சிறப்பான மடத்தனம் இருக்க முடியாது.

 அவன் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரி சமமான அளவில் உண்மையையும் பொய்யையும் கலந்து பேசுவதால் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. ஆர்க்கிமெடிஸ் தேற்றம் பற்றி பேசினால் ஏதோ அவன்தான் அதைக் கண்டுபிடித்ததுபோல அத்தனை உறுதியுடன் பேசுவான். அவனுடைய முடிதான் விநோதமாக இருக்கும்.  நடுவிலே உச்சி பிரித்து இரண்டு பக்கமும்  சரிசமமாக காதுக்கு கீழே தொங்கும். வசீகரமான முகம். அவன் துள்ளலுடன் நடக்கும்போது முடி பறந்து பறந்து நெற்றியில் வந்து அடிக்கும்.

தொழில்சாலையை பெரிதாக்கவேண்டும் என்பதால் பக்கத்து காட்டு மரங்களை வெட்டி இடமுண்டாக்க வேண்டும் என்ற கட்டளை இத்தாலியில் இருந்து வந்தது. காட்டை அழிப்பது என்பது பிரம்மாண்டமான வேலை. குறிப்பிட்ட தேதிக்குள் வேலை முடியாது போலவே தோன்றியது. யானையுடன் வருகிறேன் என்று புறப்பட்ட லலித்  உண்மையில் எதிர்பாராத வேகத்தில்   யானையுடன் வந்தான். யானை வந்ததும் நாங்கள் எல்லாம் சிறிய உருவம் எடுத்ததுபோல ஆகிவிட்டோம். தும்பிக்கையின் நடுவிலும் காதுகளின் ஓரத்திலும் யானைக்கு செம்மஞ்சள் பரவிவிட்டது. சேவகம் செய்வதற்கு  தயார் என்பதுபோல  யானை தும்பிக்கையை அசைத்தபடி பாவமாக நின்றது.  பத்து ஆள் வேலையை தனியே செய்தது. மரங்களை வெட்ட வெட்ட தூக்கித்  தூக்கிப் போட்டது. காலக்கெடுவுக்குள் வேலை முடிக்காவிட்டால் பெரிய சங்கடமாகிவிடும். அதை உணர்ந்ததுபோல அது ஓர் அடிமையைப் போலவே வேலை செய்தது. .

 தேநீர் இடைவேளையின் போது யானையிடம் லலித் வந்துவிடுவான். ’நீ ஸ்கூட்டர் பயிற்சியரா அல்லது யானை பயிற்சியரா?’ என்று கேட்டேன். ’சேர் யானைப்பாகன் ஆவது என் கனவு’ என்றான். ’ஒரு நல்ல ஸ்கூட்டர் எஞ்சினியராவதை  விட்டு மோசமான யானைப்பாகன் ஆக விரும்புகிறாயா?’ என்றேன். ’ஸ்கூட்டருக்கு உயிர் கிடையாது. அதை பழக்குவது சுலபம். யானை அப்படியா. உயிருள்ளது. அது சிந்திக்கும். என்னை எசமானாக ஏற்குமோ தெரியாது. யானைக்கு தேநீர் இடைவேளை இல்லையா?’ என்றான். ’நீ அதற்கு தேநீர் கொடுக்கலாமே’ என்றேன். சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். ’சேர் பாவம், வாழைப்பழம் கொடுப்போம்’ என்றான். நானும் சரி என்றேன். உடனேயே போய் ரோட்டுக்கடையில் பெரிய வாழைக்குலை ஒன்றை வாங்கி தோளில் சுமந்து வந்தான். ’வாழைக்குலையா? நான் வாழைப்பழம் என்றல்லவா நினைத்தேன்.’ ’உங்கள் தாராள மனசு எனக்கு தெரியும் சேர். பாருங்கள் எப்படி அது சாப்பிடுகிறது.’ அதன் பின்னர் தினமும் அதற்கு ஒரு குலை வாழைப்பழம் கம்பனி கணக்கில் கொடுக்கப்பட்டது. 

யானைப்பாகன் பெயர் ஊணம்புவே.  பச்சை கோடு போட்ட சாரம் கட்டி, மேலே UCLA என்று எழுதிய பழைய டீசேர்ட் அணிந்து தொப்பியையும் கோணலாக வைத்திருந்தான். யானையின் கண்கள்போல சிறிய கண்கள் ஆனால் தடிப்பான உதடுகள். அகலமான கறுப்பு பெல்ட்டிலே  அங்குசம்  இருக்கும். அதை பாவிக்க வேண்டிய சந்தர்ப்பமே அவனுக்கு அமையவில்லை. சம்பள நாள் அன்று வேலையாட்கள்  நிரையாக  வந்து சம்பளத்தை  பெற்றுக் கொண்டார்கள். காசாளர் கொடுக்க அவர்கள் கையெழுத்து வைத்தார்கள். ஊணம்புவே சம்பளத்தை பெற்றபின்னர்  அப்படியே அசையாமல் நின்றான். ’யானையின் சம்பளம்?’ என்றான். ’அதுதான் கொடுத்தாகிவிட்டதே.’ ’அது என்னுடைய சம்பளம். யானையின் சம்பளம் எங்கே?’ காசாளர் திகைத்துவிட்டான். இதற்கிடையில் லலித் அங்கே எப்படியோ வந்து சேர்ந்து யானையின் சம்பளத்தை கொடு என்று வாதாடினான்.. பெரிய சண்டையாகிவிட்டது.

எல்லோரும் சத்தம் போட்டார்கள். யானை மாத்திரம் அமைதியாக காதுகளை விசிறியபடி கூர்மையாகப் பார்த்துக்கொண்டு நின்றது. காசாளர் குரலை உயர்த்திப் பேசினான். டிராக்டர்  சாரதிக்கு சம்பளம் கொடுக்கிறோம். டிராக்டருக்கும் கொடுக்கிறோமா? லலித்துக்கு கோபம் வந்துவிட்டது. யானையும் டிராக்டரும் ஒன்றா? யானை காடு காடாகத் திரிந்து தின்னும், மூச்சு விடும், நடக்கும், பிளிறும், கோபம் வந்தால் ஆட்களை தூக்கி அடிக்கும். அது உயிர் உள்ளது. அதற்கும் சம்பளம் வேண்டும். ஏமாற்றக்கூடாது. சரி ஏட்டிலே எழுதுவதற்கு யானைக்கு என்ன பேர் என்றேன். கஜபாகு என்றான். கஜபாகுவா? ஓம் சேர் இலங்கை அரசன் ஒருவரின் பெயர். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் என்ற சிலப்பதிகார வரிகள் நினைவுக்கு வந்தன. லலித் என்ன சம்பளம் போடலாம் என்றேன். சேர் நீங்கள் தாராளமானவர். ஒரு யானையின் வயிற்றில் அடிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் என்றான். அன்று இரவு கயவாகு என்று எழுதி அவனுக்கு கொடுத்த சம்பளக் கணக்கை இத்தாலிக்கு அறிவித்தேன். கயவாகு என்பது யானையின் பெயர் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்.  

மரங்களை யானை தூக்கிக் கொண்டு வெளியே வருவதை மட்டுமே நான் பார்த்தேன். ஒருநாள் காட்டுக்குள்ளே சென்றேன். சின்னச் சின்ன மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் தாண்டி உள்ளே நுழைந்தபோது காடு என்னைச் சூழ்ந்தது. சூரியன் தெரியவில்லை ,ஆகாயத்தை தொடும் நெடுமரங்கள். நாலுபேர் கைகளை விரித்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அகலம் கொண்ட  ராட்சத மரத்தின் பெயர் பெருக்கா என்றான் மரம்வெட்டி. அதன் வயது 400இருக்கலாம் என்று சொன்னார்கள். ஓர் அடி பின்னே வைத்து கழுத்தை நிமிர்த்தி ’இதையும் வெட்டுவீர்களா?’ என்றேன். அவர்கள் சிரித்துக்கொண்டு ’நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

லலித் ஜெயவர்த்தனாவுடைய  வேலைத் திறனை மறைக்க முடியாது. என்னதான் அவன் பொய் சொன்னாலும், ஏமாற்றினாலும், பயிற்சியர்கள் எல்லோருமே அவனை ஒரு தலைவன் போலவே பார்த்தார்கள். எப்படி உனக்கு ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள்  தெரியும் என்று கேட்டபோது தபால் மூலம் படித்தேன் என்று சொன்னான். அப்பொழுது எல்லாம் இப்போது போல இணைய வசதிகள் கிடையாது. அவனுடைய வசீகரமும் வேலைத்திறனும் யாரையுமே மயக்கிவிடும். கம்பனியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வேலையில் படிப்படியாக உயர்ந்து ஸ்கூட்டர்களை ஓட்டிச் சோதனை செய்யும் குழுவில் இணைந்துவிட்டான். ’சேர்  பறவை செட்டை அடிப்பதுபோல எஞ்சின் சத்தம் சீராகக் கேட்கவேண்டும்’ என்று என்னிடம் ஒருநாள் சொன்னான். ஸ்கூட்டரில் எதையாவது பூட்டவேண்டுமென்றால் வலது பக்கம் திருப்பவேண்டும். திறப்பதற்கு இடது பக்கம் திருப்பவேண்டும். ஆனால் flywheelஐ  திறக்க மாத்திரம் வலது பக்கம் திருப்பவேண்டும் என்று திரும்பத் திரும்ப சொல்வான்.  அங்கே வேலை செய்த பெரிய மெக்கானிக்குகள் கூட அவன் சொல்வதற்கு மறுவார்த்தை பேசுவதில்லை.

 அவன் யாருக்கும் எதுக்கும் பயப்படமாட்டான்.  யாராவது வாளை உருவிக்கொண்டு வந்தால் அதன் நுனியை பிடித்து இழுத்து வாளைப் பறிக்கக்கூடிய துணிச்சல்காரன். பயிற்சியர் சிலரை இத்தாலிக்கு மேல் பயிற்சிக்காக அடுத்த வருடம் அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டபோது அதை எப்படியோ அறிந்து கொண்டு என்னிடம் வந்தான்.  ’என்னை அனுப்புங்கள் சேர்’ என்றான். ’நீ அற்புதமாக வேலை செய்கிறாய். உனக்கு பயிற்சி தேவையில்லை’ என்றேன். ’பயிற்சி வேண்டாம் சேர்.  நான் இத்தாலியில் நகரும் மாடிப்படிகளை பார்க்கவேண்டும்.’ ’மாடிப்படிகளா? உனக்குப் பைத்தியமா?’ ’இல்லை சேர். பிரமாதமாக நகரும் மாடிப்படிகளை நான் கனவுகளில்தான் பார்க்கிறேன். என் வாழ்நாள் ஆசை, பிளீஸ் சேர்.’ அவன் மன்றாட ஆரம்பித்தான். ’ நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. சும்மா நிற்கலாம். படிக்கட்டுகள் உங்களை மேலே மேலே தூக்கிச் செல்லும்.’

பொது ரோட்டில் முப்பது மைல் தூரத்தை ஸ்கூட்டர்களை ஓட்டி சோதனை பார்க்க கம்பனி அனுமதி வாங்கியிருந்தது. தினம் ஐந்தாறு சோதனைக்காரர்கள் ஸ்கூட்டர்களை  ரோட்டிலே ஓட்டி சோதனை செய்து  சான்று வழங்குவர்கள். அதன் பின்னரே அவை  விற்பனைக்கு அனுப்பப்படும். லலித் மற்றவர்கள்போல ஸ்கூட்டரை நேராக உட்கார்ந்து ஓட்டுவதில்லை. ஒருபக்கம் சாய்ந்து கால்களை பக்கவாட்டாக வைத்து ஸ்டைலாக, அதி வேகமாக செலுத்துவான். அது ஒரு கண்கொள்ளாக காட்சி. ஏன் இப்படி கண்மண் தெரியாமல் ஓட்டுகிறாய் என்றால் சோதிக்கும்போது அவற்றின் எல்லாத் தன்மைகளையும் ஆராயவேண்டும் என்பான். ஒருநாள் வீதியிலே அவனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. ’ஸ்கூட்டர் போனால் பரவாயில்லை, உனக்கு ஏதாவது காயமா?’ என்று கேட்டேன். ’இல்லை சேர், முழங்கையில் ஒரு சின்னக் கீறல்’ என்று சிரித்துக் கொண்டே அதைக் காட்டினான்.

இரண்டு நாள் கழிந்தது. இவன் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு வர,  இவனது இடது பக்கத்தில் ஓர் இளம்பெண் கையில் கட்டுப்போட்டு அதை ஒரு துணியிலே கட்டி மாலையாக அணிந்துகொண்டு நொண்டி நொண்டி வந்தாள். அவனையும் அந்தப் பெண்ணையும் பார்த்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் பிடித்தது. என்ன வில்லங்கம் வருகிறதோ என மனம் பதைபதைத்தது. ஆனால் வெளியே காட்டாமல் ’என்ன லலித்?’ என்றேன். ’சேர் உங்கள் அலுவலக அறைக்கு போவோம்’  என்று முன்னே நடக்க, அவள் பின்னே நொண்டிப் போனாள். நான் வெளியே நிற்க, என்னுடைய அலுவலக அறையைத் தட்டிவிட்டு அவன் நுழைய அவளும் தயங்கியபடி பின்னே போனாள். நான் என் இருக்கையில் அமர்ந்தேன். அவள் உட்கார்ந்தபோது கதிரையில் மீதி இடம் நிறைய இருந்தது.

’சரி, விசயத்தை சொல்லு.’ ’அதுதான் சேர். ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. விபத்துக்கு பின்னர் இந்தப் பெண் நிறைய சிரமப்படுகிறார். காலிலும் அடி. அவருக்கு வேலையும் இல்லை. மருத்துவருக்கும், மருந்துக்கும் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அதுதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். ’நீ இந்தப் பெண்ணை இடித்தாயா? சொல்லவே இல்லை. முழங்கையில் ஒரு சின்னக் கீறல் என்று காட்டினாயே?’ ’சொன்னேனே சேர். விபத்து என்றால் எங்கேயோ இடித்தேன் என்றுதானே அர்த்தம். காற்றிலே இடிக்க முடியுமா?’ ’திடீரென்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய். நீதானே இடித்தாய். ஏதாவது குடுத்து அனுப்பு.’ ’சேர் என்ன சேர் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். நான் எப்படி பொறுப்பாக முடியும். நான் பணியிலிருந்தபோதுதானே விபத்து நடந்தது.’ எனக்கு கோபம் வந்தது. ‘நீ ஏதாவது கொடுத்து சமாளித்துவிட்டு வேலைக்கு வா. அல்லாவிட்டால் நீயும் வெளியேறு. ஆனால் ஸ்கூட்டர் சேதத்துக்கு பணத்தை கட்டிவிடு.’

’சேர் இது ஏழைப் பெண் சேர். இந்தக் கிராமத்து  மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக கேள்விப்பட்டேன். நான் கெஞ்சிக் கேட்டு ஒரு தீர்வுக்காக இவளை அழைத்து வந்திருக்கிறேன். பெரிய தொகை இல்லை. ரூ 20,000 தான் கேட்கிறார்கள்.’ ’இருபதாயிரமா? உனக்குப் பைத்தியமா?’ ’உங்கள் தாராள குணம் எல்லோருக்கும் தெரியும் சேர். பார்த்துச் செய்யுங்கள். தொழில்சாலையை ஒரு நாளைக்கு மூடினால் எவ்வளவு நட்டம் சேர்.’

‘நீ பேசாமல் இரு.’ நான் பெண்ணைப் பார்த்து ’நீ சொல்லம்மா’ என்றேன். அவள் குனிந்தபடி சிங்களத்தில் பேச லலித் அருவருப்பான வார்த்தைகளில் அதை  மொழிபெயர்த்தான். கைகளை நீட்டி அவள் தாடையை என் பக்கம் திருப்பிவிட்டான். அவளுடைய பல் வரிசை ஒழுங்காக பளிச்சென்று இருந்தது. எலும்புகளால் ஆன பெண், நெட்டையாக முன்வளைந்து இருந்தாள். பேசும் போது கண்கள் என்னை பார்க்கவில்லை. ’சரியா? சரியா?’ என்பதுபோல அவனையே பார்த்தன. அவள் வீதியில் தன் பாட்டுக்கு தையல் வேலை செய்வதற்கு நடந்து போனாளாம். இவன் எங்கேயோவிருந்து திடீரென்று வெளிப்பட்டு வந்து இடித்தானாம். நாரியை தொட்டுக் காட்டினாள். அங்கே எலும்புகள் இருந்தன.

ஒரு மாதிரியாக ரூ 15,000 இழப்பீடு கொடுப்பதாக முடிவானது. இனி இத்தாலிக்கு நீண்டகடிதம் எழுதி அதற்கு  கணக்கு காட்டவேண்டும். இந்த லலித் யாருக்காக வேலை செய்கிறான்? கம்பனிக்காகவா அல்லது அந்த எலும்புக்காரிக்கா?

கம்பனி விதிகளில் எங்கேயெங்கே  ஓட்டை இருக்கிறதோ அங்கேயெல்லாம் புகுந்து லலித் புதுவிதமான வில்லங்கங்களைஉண்டாக்குவான். தொழில்சாலை நீட்டிப்பு வேலை முடிந்ததும்  கயவாகுவுக்கும், வாழைக்குலைகளுக்கும் விடை கொடுத்தோம். ஆனால் லலித் சிந்தித்து உண்டாக்கும் புதுவிதமான வில்லங்களுக்கு மாத்திரம் விடை கொடுக்க முடியவில்லை. இரண்டு வருடங்களில் அவன் ஏறக்குறைய ஒரு லீடர் ஆகிவிட்டான். கடைநிலை ஊழியன்தான் ஆனால் அங்கே வேலைசெய்த எஞ்சினியர்கள்கூட அவன் சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. புதுக்கட்டிடத்தை  பிரித் ஓதி துதி செய்து முறையாகக் கொண்டாடவேண்டும் என்பது அவன் கோரிக்கை.  அப்பொழுதுதான் எதிர்காலம் சிறப்பாக  அமையும் என்றான். யாருடைய எதிர்காலம் என்பதை சொல்லவில்லை. பிரித் ஓதுவதென்றால் இருபது பிக்குகள் இரவிரவாக ஓதுவதற்கு ஒழுங்கு செய்யவேண்டும்.  அடுத்தநாள் முழுக்க கொண்டாட்டம் என்பது ஏற்பாடு.  இதை நான் எதிர்பார்க்கவில்லை. எங்கள் நிதித்திட்டத்தில் கொண்டாட்டச் செலவு  இல்லை. அது பற்றி யாருக்கு  என்ன கவலை.

ஒப்புவமையில்லாத பிரகாசமான நீலத்துடன் ஆகாயம் ஒளிவீசிய  ஒரு சனிக்கிழமை காலை அந்த ஆச்சரியம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு முழுக்க புத்தபிக்குமார் பிரித் ஓதினார்கள். கொண்டாட்டத்தில் பங்குபற்ற நான் தொழிற்சாலைக்குள்  மாலை நுழைந்தபோது வான்கோழிகள் அங்குமிங்கும் களக் களக் என்று சத்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தன. 24 வான்கோழிகள் என்று சொன்னார்கள். ஒருவருக்கும் என்ன விசயம் என்று தெரியவில்லை. லலித் ஜெயவர்த்தனா தையல் போடாத  நீண்ட வெள்ளை  துணியால் உடம்பை சுற்றிக்கொண்டு என்னை வரவேற்க வந்தான். அவன் பேசிய வார்த்தைகள் என்னிடம் வருமுன் வான்கோழிகளின் சத்தம் அவற்றை விழுங்கியது. ’இன்று வான்கோழி விருந்து. எனக்குத் தெரியும் நீங்கள் பெருமகிழ்ச்சியடைவீர்கள் என்று.’ ’24 வான்கோழிகளா?’ ’உங்கள் தாராள மனது எல்லோருக்கும் தெரியும் சேர். 40 வான்கோழிகள் என்றுதான் திட்டமிட்டோம். நான்தான் செலவைக் குறைப்பதற்காக 24 ஆகக் குறைத்துவிட்டேன். இன்னும் சில மணி நேரங்களில் விருந்து தயாராகிவிடும்’ என்றான்.

அன்றும் அதற்கு பின்னர் வந்த ஒரு வாரமும் என்னைக் காணும்போது அங்கே வேலை செய்த எஞ்சினியர்கள், தொழிலாளர்கள், கடைநிலை ஊழியர்கள் எல்லோரும் தலைகுனிந்து வாயை மூடி சிரித்தார்கள். இந்தப் பெரிய தொழிற்சாலையில் எனக்கு விசுவாசமான ஒரு தொழிலாளிகூட இல்லையா என்று மனம் விசனப்பட்டது. மர்மங்கள் கூடினவே ஒழிய குறைவதாகத் தெரியவில்லை. ஒருநாள் இரவு வெகுநேரம் தனியாக அலுவலக அறையில் உட்கார்ந்து இத்தாலிக்கு அனுப்புவதற்கு மாதாந்த அறிக்கையை தயாரித்தேன். தொழிற்சாலை காவற்காரர்கள் மூன்று பேர். தலைமைக் காவல்காரன் எட்டிப் பார்த்து ’சேர் ஒரு விசயம்’ என்று கூறியபடி நுழைந்து சல்யூட் அடித்தான். ’என்ன?’ என்றேன். ’சேர் லலித் ஜெயவர்த்தனாவை நம்பவேண்டாம். அவன் உடம்பில் ஒரு பாகம் பொய், மற்றப் பாகம் ஏமாற்று.’ நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ’ஸ்கூட்டரில் விபத்து என்பதெல்லாம் பொய். அந்தப் பெண்ணை அவன் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு உல்லாசமாகப் போனபோது வான்கோழி ஒன்று குறுக்கே போனதால் விபத்து நடந்தது. பெண்ணுக்கு சின்னக் காயம். அவன் உங்களிடம்  பெரிய நட்ட ஈடு வாங்கி அவளுக்கு  கொடுத்துவிட்டான். வான்கோழி சொந்தக்காரரைத் திருப்திப்படுத்த அவர் பண்ணையிலிருந்து 24 வான்கோழிகளை இரட்டிப்பு விலைக்கு வாங்கினான். இவன் மிகவும் ஆபத்தானவன்.’ காவல்காரன் சொன்ன மீதி விசயங்கள் எனக்கு கேட்கவில்லை. என் உடம்பில் ரத்தம் சுழல ஆரம்பித்த சத்தம் மட்டும்தான் கேட்டது.

தேர்தலுக்கு வேலை செய்வதற்காக ஒரு வாரம் விடுப்பு எடுத்தான். இவன் ஜே.ஆருக்கு சொந்தக்காரனா அல்லது அதுவும் புளுகாக இருக்குமோ என்பது தெரியாது. சாதாரண ஸ்கூட்டர் பயிற்சியராக வந்த இவன் எப்படி கம்பனி ஆட்சியை பிடித்தான். இவன் என்ன பேசினாலும் அதில் சுவாரஸ்யம் இருக்கும்; கேட்டுக்கொண்டே இருக்கலாம், அதில் மறைந்திருக்கும் வலை தெரியாது.  அடிக்கடி என்னை தாராளமானவர் என்று பாராட்டித் தள்ளுவான்.  உண்மையையும் புளுகையும் சரி சமமாகக் கலந்து பேசுவான். அதேபோல சரிசமமாகப் பிரிந்திருக்கும் அவன் முடியை காற்று அடித்து நெற்றியில் வசீகரமாகப் புரளவைக்கும். அவனை வெறுக்க முடியாது, ஆனாலும் எச்சரிக்கை தேவை.  இப்படி நான் யோசித்திக்கொண்டு இருக்கும்போதே ஆபத்து தன் பயணத்தை தொடங்கிவிட்டது.

வான்கோழித் திருவிழா நடந்து சரியாக மூன்று மாதங்கள் கழிந்து ஒரு நாள் இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்தன. தடித்த உறையில் ஒரு கடிதம் விசேட தபாலில் எனக்கு இத்தாலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதை உடைக்கும்போதே கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாக இருந்தது. இத்தாலிய ஜனாதிபதி ஜியோவானி லியோன் எனக்கு விருது வழங்கப்போவதாக கடிதம் அனுப்பவில்லை.  என்னுடைய வேலையை திரும்ப எடுத்துவிட்டார்கள். ஆனால் கடிதத்தில் இரண்டு இடங்களில் எனக்கு நன்றி சொல்லியிருந்தது ஏன் என்று புரியவில்லை.

அன்று நடந்த இன்னொரு சம்பவம் ஜே.ஆர். ஜெயவர்த்தனா பிரதமராகப் பதவியேற்றது. எந்த பத்திரிகையை திறந்தாலும் அதுதான் செய்தி. அன்றிலிருந்து என் வீட்டுக்கு எல்லாவகையான செய்தித் தாள்களையும் எடுப்பித்தேன். தமிழ்,  ஆங்கிலம், சிங்களத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. காலையில் விளம்பரங்களைப் படித்து சிவப்பு மையால் வட்டமிட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வுகளுக்குப் போய் சரியான பதில்கள் அளித்தேன், ஆனால் வேலை கிடைக்கவில்லை.

லலித் வேலையை விட்டுவிட்டு முழுநேரக் கட்சிப் பணியாளராக மாறிவிட்டான். அவனுடைய திருமணப் படம் பேப்பரில் வந்திருந்தது. கையை உடைத்துவிட்டு துணியால் கட்டி மாலையாக அணிந்துவந்த எலும்புப் பெண்தான் மணமகள். தசைகள் வேகமாக நிரம்பி இப்போது எலும்புகள் மறைந்துவிட்டன. ஒருநாள்  ஒரு வருடம்  பூர்த்தியானதை அரசு கொண்டாடும்  வெற்றிப் படம் சிங்களப் பத்திரிகையில் முதல் பக்கத்தி;ல் வெளியானது. இளைஞர் அணி தலைவனான லலித் யானை மேல் அமர்ந்து ஊர்வலம் போக அவனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் சென்றார்கள்.  யானையை உற்றுப் பார்த்தேன் கஜபாகுதான். தும்பிக்கையிலும் காதுகளிலும் செம்மஞ்சள் பரவியிருந்தது. மரங்களைத்  தூக்குவதும் இளைஞர் அணி தலைவரை சுமப்பதும் அதற்கு ஒன்றுதான், ஊர்வலம் முடிந்ததும் யானைக்கு சம்பளம் வாங்கிக் கொடுப்பான். யானைப் பாகனுக்கும், அதன்மேல் சவாரி செய்தவனுக்கும், பக்கத்தில் நடந்தவர்களுக்கும் பெரிய பெரிய ஊதியம் கிடைக்கும்.

ஒருநாள் காலை அன்றைய பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு மனைவி எழுதிவைத்த வேலைக் குறிப்புகளைப் படித்தேன். ஒரு மணிக்கு குழந்தையை போய் காப்பகத்திலிருந்து அழைத்துவரவேண்டும். தினசரியை இன்னும் பார்க்கவில்லை. நேற்று ஒரு நண்பன் தொலைபேசியில் அழைத்து வேலை விசயமாக லலித்தை போய் பார்க்கும்படி சொன்னது நினைவில் வந்தது. மனைவி வேலைக்கு போகும் அவசரத்தில் செய்திப் பத்திரிகை தாள்களை குலைத்து ஒழுங்கில்லாமல்  படித்து அப்படியே போட்டுவிட்டு போயிருந்தார். நான் அவற்றை ஒழுங்காக அடுக்கி மடித்து வைத்து விளம்பரம் தேடவேண்டும். அதற்கு முன் வாசலைக் கூட்டும் வேலை இருந்தது.

முதல்நாள் இரவு அடித்த காற்றில் மாவிலை, பலாவிலை, இலுப்பை இலை எல்லாமே சருகாக மாறிக் குவிந்து கிடந்தன. அவற்றை கூட்டி அள்ளினேன். வீதியை பார்த்தபோது அத்தனை அமைதியாக இருந்தது. எல்லோரும் வேலைக்கோ அல்லது பள்ளிக்கூடத்திற்கோ போய்விட்டார்கள். அந்த வீதி முழுவதுக்கும் நான்தான் அதிபதி. நிமிர்ந்து பார்த்தேன். பதினொரு மணி சூரியன் கனலைக் கொட்டி எரித்தான்.  வீதியில் நின்ற கம்ப விளக்கை அணைக்க மறந்துவிட்டார்கள். அதன் ஒளி சூரியனின்  அட்டகாசத்தில் எங்கே மறைந்தது என்று தெரியவில்லை. முதல் முதலாக தெருவிளக்கு வந்தபோது அந்த தெரு முழுக்க வெளிச்சக் கம்பத்தை சுற்றி  கொண்டாடியது நினைவுக்கு வந்தது.

பத்திரிகையில் அன்று விளம்பரம் இல்லை. மடித்து வைக்கப் போனபோது நாலாம் பக்கத்தில் காணப்பட்ட ஒரு பெட்டிச் செய்தியில், இத்தாலிக்கு இலங்கை அரசு அனுப்பும் வர்த்தகக் குழுவில் லலித்தின் பெயரும் இருந்தது. ஸ்கூட்டர் சோதனையாளன்,  இயந்திர வல்லுநர், யானைப்பாகன், வான்கோழி விருந்துபசாரி ஆகிய பணிகளை திறம்படச் செய்தவனுக்கு  வர்த்தகக் குழுவில் பணியாற்றுவது ஒன்றும் பெரிய சிரமமாக இராது. அவன் நகரும் படிக்கட்டுகளைப்  பார்க்க ஆசைப்பட்டு தன்னை இத்தாலிக்கு அனுப்பும்படி என்னிடம் மன்றாடியதை நினைத்துப் பார்த்தேன். அவன் அப்பொழுது சொன்னது மீண்டும் ஞாபகத்தில் வந்தது. ‘நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. சும்மா நிற்கலாம். படிக்கட்டுகள் உங்களை மேலே மேலே தூக்கிச் செல்லும்.’

END

About the author

2 comments

  • இந்த பதிவை படிக்கும் போது இது சிறுகதையா? இல்லை உங்களுக்கு உண்மையில் நடந்த நிகழ்வா? என என்னால் யூகிக்க முடியவில்லை.. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிஜம்.. நம் வாழ்வில் நம்மை சுற்றி பல லலித்துகள் இருந்து கொண்டிருப்பது என்னவோ உண்மை!!! இனி லலித் என்றாலே என் நினைவுக்கு வருவது இது தான். (‘நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. சும்மா நிற்கலாம். படிக்கட்டுகள் உங்களை மேலே மேலே தூக்கிச் செல்லும்.’) மொத்த சிறுகதையின் சாராம்சத்தை கடைசி பத்தியில் கூறி, சுவைக்கு மேல் சுவையை கூட்டி விட்டீர்கள். உங்கள் எழுத்துக்களில் இந்த இடம் தான் உங்களின் தனித்திறன் (படிப்பவர்களை கட்டி போடும் எழுத்தாற்றல்) என்று நினைக்கிறேன்.
    ============================================================
    அந்தப் பெண்ணை அவன் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு உல்லாசமாகப் போனபோது வான்கோழி ஒன்று குறுக்கே போனதால் விபத்து நடந்தது. பெண்ணுக்கு சின்னக் காயம். அவன் உங்களிடம் பெரிய நட்ட ஈடு வாங்கி அவளுக்கு கொடுத்துவிட்டான். வான்கோழி சொந்தக்காரரைத் திருப்திப்படுத்த அவர் பண்ணையிலிருந்து 24 வான்கோழிகளை இரட்டிப்பு விலைக்கு வாங்கினான். இவன் மிகவும் ஆபத்தானவன்.’
    ============================================================
    லலித்தின் மொத்த உருவத்தை மேலே உள்ள ஒரு பத்தியை படித்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. கஜபாகு, பெண், விபத்து, வான்கோழி என சின்ன,சின்ன பாத்திரங்களை கொண்டு ஒரு திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை, லலித் இந்த சிறுகதை படிக்கும் போது எனக்கு கொடுத்து விட்டார். மிகவும் ரசித்து படித்தேன்..
    நன்றி ஐயா.
    முகமது யாசின்

  • வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை ,இத்தாலியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் நகரும் படிக்கட்டுகள் இருக்கலாம், என்று எதிர்பார்க்க வைத்து, நம் மனதை விட்டு நகராமல் நிற்கின்ற இந்த கதையை படைத்தமைக்கு நன்றி ஐயா.

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta