பவித்ரா

நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற  மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் பெண்ணுக்கு தம்பதியரைப் பார்த்ததும் ஏதோ விசித்திரமாக பட்டது. ஆனால் அது என்னவென்று அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரைப் பார்க்க பலதரப்பட்ட மனிதர்கள் வந்துபோவதை அவள் அவதானித்திருக்கிறாள். இதுவும் அதுபோல என்று நினைத்து பேசாமலிருந்தாள். அவர்கள் முறை வந்தபோது மருத்துவர், சூடு வெளியே போகாமல் இருக்க கதவை கீறலாக திறந்து, ’அடுத்தது’ என்றார். வரவேற்பாளினி தம்பதியரை உள்ளே அனுப்பினாள்.

மருத்துவர் இவர்கள் நடந்து வருவதைக் கவனித்தார். அவருடைய தொழிலில் அது முக்கியமானது. சமயங்களில் வந்திருப்பவருக்கு என்ன பிரச்சினை என்பது புரிந்துபோய்விடும்.  கணவனுக்கு நாற்பது வயது இருக்கும். மனைவியின் வயதை ஐந்து வயது குறைத்து மதிக்கலாம். இருவரும் தாங்கள் அணிந்திருந்த ஓவர்கோட்டுகளை களையவில்லை. அவர்கள் மேலங்கிகளில் பனித்துகள்கள் அழியாமல் கிடந்தன. அந்தப் பெண் கோட்டின் மேல் பொத்தானை பூட்டாமல் இரண்டு கைகளாலும் அதை இழுத்து மூடியபடி தயங்கித் தயங்கி நடந்து வந்தார். அவர் ஓவர்கோட்டுக்குள் என்ன அணிந்திருந்தார் என்பது தெரியவில்லை. அது இரவு ஆடையாக இருக்கலாம் என்று மருத்துவர் ஊகித்தார்.

மருத்துவருக்கு முன் மூன்று வெறுமையான ஆசனங்கள் இருந்தன. அதிலே அவர்கள் எப்படி உட்காருகிறார்கள் என்பதும் முக்கியம். மருத்துவர் உன்னிப்பாக அவர்களை கவனித்துக்கொண்டிருந்தார். வலது பக்கத்தில் ஓரமாக இருந்த முதல் ஆசனத்தில் மனைவி உட்கார்ந்தார். கணவர் மனைவியை தாண்டி வந்து நடுவிலே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். மூன்றாவது இருக்கை வெறுமையாக இருந்தது. மருத்துவர் கணவரையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார். மனைவி பல்தெரியாமல் ஏதோ பெரும் மகிழ்ச்சியில் உள்ளுக்குள் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார்.

’சரி, சொல்லுங்கள்’ என்றார் மருத்துவர்.
’பவித்ராவுக்குத்தான் பிரச்சினை’ என்றார் கணவர்.
’அப்படியா, என்ன பிரச்சினை?’
கணவர் பேசுவதாக இல்லை. ’தயக்கமாக இருக்கிறது. எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை’ என்றார்.
’ஒரு டொக்டரிடம் வந்த பிறகு யோசிக்கவே கூடாது. எப்படிப்பட்ட உளச்சிக்கலாக இருந்தாலும் மனதைத் திறந்து பேசினாலே பாதி குறைந்துவிடும். எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. ஆனால் அதற்கு முதலில் நீங்கள் என்னிடம் வந்த காரணத்தை  கூறினால்தான் முடியும்.’
கணவர் நெளிந்தார். மனைவிக்கு எதிர் திசையில் திரும்பி வெறும் ஆசனத்தை உற்றுப்பார்த்தார். பின்னர் முகத்தை திருப்பாமலே ‘கூச்சமாக இருக்கிறது’ என்றார்.
’நான் எப்படி வைத்தியம் பார்ப்பது? என்னவென்று சொன்னால்தான் எனக்கு தெரியவரும். நீங்கள் ஒருவித தயக்கமும் இல்லாமல் பேசலாம்.’
’பவித்ரா படுக்கையில் மூத்திரம் போகிறார்.’
’இவ்வளவுதானா? இதற்குத்தானா இத்தனை தயக்கம்? இது மிகச் சாதாரணமான வியாதி. நிறையப் பேரை நான் குணப்படுத்தியிருக்கிறேன். ஆனால்  சிகிச்சை தொடங்குவதற்கு முன்னர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். இதை நிறுத்திவிடலாம்.’
’டொக்ரர், நீங்கள் நினைப்பதுபோல இது சாதாரணமான விசயமல்ல. நீங்கள்தான் இப்படியான வருத்தத்துக்கு ரொறொன்ரோவிலேயே ஆகத்திறமான டொக்ரர் என்று எல்லா தமிழ் ஆட்களும் சொல்கிறார்கள். அதனால் உங்களை தேடி வந்திருக்கிறோம். ஏற்கனவே இரண்டு டொக்ரர்களைப் பார்த்துவிட்டோம்.’
’எப்ப?’
’இன்றுதான்.’
’இரண்டுபேரையுமா?’
’இரண்டு டொக்ரர்மாரையும் ஒருவர் பின் ஒருவராக பார்த்துவிட்டு இப்பொழுதுதான் உங்களிடம் வருகிறோம்.’
கைவிரலை வைத்து யாரோ கதவைச் சாத்தியதுபோல மருத்துவர் கொஞ்சம் திடுக்கிட்டது தெரிந்தது. சுழலும் நாற்காலியில் பின்னால் நகர்ந்து லேசாகச் சாய்ந்து அவர் மனைவியைப் பார்த்தார். அந்தப் பெண் ஒன்றுமே நடக்காததுபோல சிரிப்புமாறாமல் மருத்துவரையே  பார்த்துக்கொண்டிருந்தார்.
’அவர்கள் என்ன சொன்னார்கள்?’
‘இந்த நோயின் பெயர் nocturnal enusesis. இதற்கு ஹார்மோன் சிகிச்சை எல்லாம் உண்டு. முக்கியமாக நோயாளிக்கு இந்த நோயினால் தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி, வெறுப்பு, மன உளைச்சல் ஆகியவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள்.’
‘சரி, நீங்கள் என்னிடம் எதற்காக வந்தீர்கள்?’
’இதை எப்படியாவது நிறுத்திவிடுங்கள் டொக்ரர். வாழ்க்கை நரகமாகிவிட்டது.’
‘எவ்வளவு காலமாக இது நடக்கிறது?
‘மூன்று மாதமாக.’
’ஒரு வழி இருக்கிறது. இலகுவான சிகிச்சை. முதலில் இரவு எட்டு மணிக்கு பின்னர் தண்ணீர் குடிப்பதை அவர் நிறுத்தவேண்டும்.’
‘ஏன்?’
‘நீங்கள்தான் சொன்னீர்களே இரவு படுக்கையில் சிறுநீர் கழிப்பதாக.’
‘நான் எங்கே இரவு என்று சொன்னேன்? படுக்கையில் சிறுநீர் கழிப்பதாக அல்லவா சொன்னேன்.’
‘அப்படியானால் பகல் நேரத்தில் தூங்குகிறாரா?’
‘தூங்குவதாக யார் சொன்னது?’
‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லை.’
‘பட்டப் பகலில் எல்லோர் முன்னிலையிலும் பவித்ரா நடுப்படுக்கையில் உட்கார்ந்து மூத்திரம் பெய்கிறார்.’
மருத்துவர் இப்பொழுது உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துவிட்டார். இப்படியான ஓர் அனுபவம் அவருக்கு புதிது. மனைவியை பார்த்தார். சுவரிலே ஒட்டிய போஸ்டர் போல அதே சிரிப்புடன் ஒருவித கூச்சமும் இல்லாமல் அந்தப் பெண் அவரையே உற்றுப் பார்த்தார்.’
மருத்துவருக்கு அடுத்து என்ன கேட்பதென்று தெரியவில்லை.
‘இந்த மூன்று மாத காலத்தில் மற்ற டொக்ரர்களால் உங்கள் மனைவியை குணப்படுத்த முடியவில்லையா?’
‘மனைவியா? மனைவியென்று யார் சொன்னது? நான் பவித்ராவைச் சொன்னேன்.’
’அது யார் பவித்ரா?’
‘எங்கள் மகள், டொக்ரர்.’
‘அவர் எங்கே?’
‘இங்கே இருக்கிறாரே!’
வெறும் நாற்காலியை சுட்டிக்காட்டினார்.

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta