இமயமலை சும்மாதானே இருக்கிறது

இமயமலை சும்மாதானே இருக்கிறது

அ.முத்துலிங்கம்

கனடாவுக்கு அகதிகளாக வந்த எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு என் நண்பர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  நாலே நாலு வசனங்களைப் பாடமாக்கிவிட்டார். இயக்குநர், ’காமிராவைப் பார்த்து பேசவேண்டும். நான் அக்சன் என்றதும் ஆரம்பித்து, கட் என்றதும் நிறுத்தவேண்டும்’ என்றார். எப்பவும் வயிற்றுவலி வந்ததுபோல  வளைந்து நிற்பவர் நிமிர்ந்தார். தன் ஆடையை சரி பார்த்தார். ’ அக்சன்.’ நண்பர் காமிராவைப் பார்த்து பேசத் தொடங்கினார். வசனம் முடிந்தது, ஆனால் கட் சொல்லவில்லை. எனவே காமிராவைப் பார்த்து முழுசிக்கொண்டே நின்றார். படம் வெளிவந்தபோது அவர் முழுசிக்கொண்டு நிற்பதுதான் இடம்பெற்றிருந்தது, வசனம் இல்லை. எடிட்டர் சொன்னார், ’காட்சிக்கு அதுதான் மிகவும் பொருத்தமாக அமைந்தது.’

பட்டிமன்றம் ராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ’சிவாஜி’ படப்பிடிப்பின்போது சில அருமையான காட்சிகள் இப்படித்தான் வெட்டப்பட்டன’ என்றார். விவேக் கை விரலிலே வடையைக் குத்தி வைத்துக்கொண்டு ராஜாவிடம் கேட்பார். ’கெட்டிச் சட்னி இல்லையா, கெட்டிச் சட்டினி.’ அந்த இடத்தில் எல்லோரும் சிரிப்பார்கள். படம் வெளிவந்தபோது அந்தக் காட்சியை  வெட்டிவிட்டர்கள். ஒருபடத்தின் அதிகார ஆளுமை இயக்குநரிடம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் அது எடிட்டரிடம்தான் இருக்கிறது.

’சிவாஜி படத்தில் நடிப்பதற்கு உங்களை எப்படி தெரிவு செய்தார்கள்? உங்களுக்கு ஏற்கனவே நடிப்பு பயிற்சி இருந்ததா?’ என்று ராஜாவிடம் கேட்டேன்.

ஒரு நாள் ஏ.வி.எம் தியேட்டரிலிருந்து தொலைபேசி. ஐந்து நிமிடத்தில் ரெடியாக இருக்க முடியுமா? என்றார்கள். எதற்கு, ஏன் என்ற கேள்வி எல்லாம் கிடையாது. சொன்ன மாதிரி கார் வந்து என்னை ஏற்றிக்கொண்டு சென்றது. ஒரு வேட்டியை தந்து கட்டச் சொன்னார்கள். ஒரு பழைய பனியனைப் போடச் சொன்னார்கள். நிற்க, நடக்க, இருக்க வைத்து படம் எடுத்தார்கள். ஒரு மரத்தின் கீழே என்னை நிறுத்தி பேசச் சொன்னார்கள். எல்லவற்றையும் பதிவு செய்தார்கள்.ஒருவரும் விவரம் தருவதாக இல்லை. ஏதோ படத்தில் நடிப்பதற்குத்தான் இந்தச் சோதனை எல்லாம் என்று எனக்குத் தெரிந்தது. எப்படியும் தோல்விதான் ரிசல்ட்டாக வரும் என்பதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

சில நாட்கள் கழித்து என்னைத் தேர்வு செய்திருப்பதாக ஏ.வி. எம் நிறுவனம் அறிவித்தது. என்ன படம்?  யார் யார் நடிப்பது? எனக்கு என்ன வேடம்? ஒன்றுமே தெரியாது. என்னுடைய ஒல்லி உடம்பில் six pack ஏற்றவேண்டுமா? யார் என்னுடன் கதாநாயகியாக நடிப்பது? நடனம் பழகவேண்டுமா  என்றெல்லாம் மனது அடித்தது. நாற்பது நாள் படப்பிடிப்பு என்பதால் நான் விடுப்பு எடுக்க வேண்டும். வீட்டிலே கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. பட்டிமன்றம் நல்லாய்த்தானே போகிறது, இது எதற்கு என்ற கேள்வி வேறு.

பின்னர் விவரங்கள் தெரிய வந்தன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார்.  விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி எல்லோரும் நடிக்கும் படம்ள்.  ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நான், அதாவது ரஜினிக்கு மாமா. கிழிந்த பனியனுடன் மரத்தின் கீழ் நின்று நான் பேசிய வசனத்தை நம்பி எனக்கு இந்த வேடத்தை கொடுத்திருந்தார்கள். மேலும் சில விவரங்கள் வெளியே வந்தன. முதலில் என் இடத்தில் நடிப்பதற்கு லியோனிதான் தெரிவாகியிருந்தார். அவருக்கு வசதிப்படாததல் நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். சாலமன் பாப்பையாவும் இதில் நடிக்கிறார், ஆகவே பட்டிமன்றம் தொடர்பான ஒரு கதையாக இருக்குமோ என்றுகூட எனக்குள் ஊகம் ஓடியது.

’நீங்கள் நாற்பது  நாள் லீவு எடுக்க முன்னர் இதையெல்லாம் கேட்டு தெரியவேண்டும் என்று நினைக்கவில்லையா?’

நான் என்ன பெரிய நடிகரா இதையெல்லம் கேட்பதற்கு. ஏ.வி.எம் பெரிய நிறுவனம். அவர்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாது. உடனே வேறு ஆளைத் தேடத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இன்னொரு தடவை திரும்ப வருமா?

உங்கள் முதல்நாள் அனுபவத்தை சொல்லுங்கள்?

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கதையை சொல்ல மாட்டார்கள். துண்டு துண்டாக அன்று என்ன தேவையோ அதைமட்டும் சொல்வார்கள். அன்றைய சூட்டிங்குக்காக கீழ்ப்பாக்கத்தில் ஒரு நடுத்தர வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ரஜினியும், விவேக்கும் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க பொய் வேடமிட்டு வரும் அதிகாரிகள். நான் கதவைத் திறந்து ‘யார் நீங்க? என்ன வேணும்?’ என்று கேட்கவேண்டும். அவ்வளவுதான். எனக்கு ஒரு வேட்டியும், தோய்க்காத  பனியனும் தந்திருந்தார்கள். அதுதான் என்னுடைய மேக்கப். கையை என்ன செய்வது? எங்கே பார்ப்பது? எப்பொழுது பேசுவது? குரலை எவ்வளவு உயர்த்தவேண்டும்? எல்லாமே எனக்கு குழப்பம்தான்.

ஷங்கருக்கு 16 உதவியாளர்கள். எல்லாமே முன்பே திட்டமிட்டபடி கச்சிதமாக நடக்கவேண்டும். முன்கதவை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க வேண்டியது முக்கியம். ஒரு நொடிகூட பிந்தக்கூடாது. படப்பிடிப்பு சரியாக வரவேண்டுமென்பதால் ஒரு உதவி டைரக்டர் தரையிலே படுத்துக்கிடந்தபடி (காமிராவுக்கு தெரியாமல்) கதவை திறப்பார். நான் திறப்பதுபோல பாவனை செய்ய வேண்டும்.

டைரக்டர் ’அக்சன்’ என்றதும் நான் நடந்து சென்று கதவைத் திறந்து ‘யார் நீங்கள்? என்ன வேணும்?’ என்று கேட்கவேண்டும். காமிரா ஓடிக்கொண்டிருந்தது. ஆயிரம் சனங்களுக்கு முன் நின்று பேசும் பட்டிமன்றப் பேச்சாளருக்கு ஒரு வார்த்தையும் வெளியே வரவில்லை. எட்டுத்தரம் அதே காட்சியை எடுத்தார்கள். நான் ஒரே பிழைய திரும்பத் திரும்ப செய்யவில்லை. ஒவ்வொரு தடவையும் ஒரு புதுவிதமான பிழையை கண்டுபிடித்து செய்தேன். எனக்கு அவமானமாகி விட்டது. அப்பொழுதெல்லாம் டிஜிட்டல் காமிரா வரவில்லை. பிலிம் ரோல் வீணாக ஓடிக்கொண்டிருந்தது. என்னாலே ஷங்கருக்கு பெரும் நட்டம் வந்துவிடும் என்றுபட்டது. அது மாத்திரமல்ல, ரஜினி எத்தனை பெரிய நடிகர். விவேக் சாதாரணமானவரா? நான் எட்டுத்தரம் நடித்தால் அவர்களும் அல்லவா எட்டுத்தரம் நடிக்கவேண்டும். இரண்டு மணி நேரமாக கீழே படுத்துக்கிடந்த உதவி டைரக்டர் நாரியைப் பிடித்த படி எழுந்து நின்றார். நான் ஷங்கரிடம் ’எனக்கு நடிப்பு வராது. என்னை விட்டுவிடுங்கள்’ என்றேன்.

அவர் நிம்மதி அடைவார் என்று நினைத்தேன். மனிதர் அசையவே இல்லை. ‘நீங்கள் எத்தனை படத்தில் நடித்திருக்கிறீர்கள்?’ என்றார். ’இதுதான் முதல் தடவை.’ ’அப்ப எப்படி நடிப்பு வராது என்று சொல்லலாம். எங்களுக்கு நடிப்பு வேண்டாம், நீங்கள் இயற்கையாக இருங்கள். காட்சி சரியாக அமையும்’ என்றார். அதுதான் என் முதல் நாள் அனுபவம். வாழ்நாளுக்கும் மறக்க முடியாது. எப்படியோ பின்னர் சமாளித்து நடித்தேன்.

ரஜினியை நீங்கள் முதன்முதல் சந்தித்த அனுபவம் எப்படி இருந்தது?

அதுவும் ஆச்சரியம் தான். ஒருவருமே அறிமுகம் செய்து வைக்கவில்லை. என்னைப் பார்த்த உடனேயே ’பட்டி மன்றம் சுனாமி’ என்று அழைத்தார். என்னுடைய பட்டி மன்றப் பேச்சுக்களை பலதடவை டிவியில் பார்த்திருப்பதாகச் சொன்னார். அதற்குப் பின்னர் அவருடன் பழகுவது கொஞ்சம் எளிதாயிற்று.

படத்திலே சுஜாதாவின் வசனம் கச்சிதமாக இருக்கும். ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது. ஷங்கர் அந்த விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ’பழகலாம் வாங்க’ என்று ரஜினி திடீரென்று எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். எங்கள் வீடு என்றால் உதவி டைரக்டர் கீழே படுத்துக்கிடக்க நான் கதவு திறந்த கீழ்ப்பாக்கம் வீடு அல்ல. அதேபோல ஒன்றை ஸ்டூடியோவில் உருவாக்கிவிட்டார்கள். ரஜினியை நாங்கள் துரத்துவோம். அவர் பக்கத்துவீட்டுக்குப் போய் சாலமன் பாப்பையாவோடும் அவருடைய இரண்டு பெண்களோடும் கூத்தடிப்பார். இதை பார்க்க எங்களுக்கு கோபமாகவும் வயிற்றெரிச்சலாகவும் இருக்கும். அவர்கள் வீட்டுக்குப்போய் திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வாங்கோ என்போம். ஸ்ரேயா நாங்கள் இரண்டு கோர்ஸ் முடிச்சிருக்கோம் என்று சொல்வார். அப்படியே செட் முழுக்க சிரிக்கும். சுஜாதா ஒருவரால் மட்டுமே அப்படி எழுதமுடியும். அவருடைய முத்திரை அது.

நீங்கள் சுஜாதாவை சந்தித்தீர்களா?

ஒரு முறை செட்டுக்கு வந்தார். நான் அவரிடம் சென்று ’ஹலோ’ என்று சொல்ல, அவரும் சொன்னார். அடுத்த வார்த்தை அவரிடமிருந்து பெயரவே இல்லை. சிவாஜி படத்தின் 175ம் நாள் விழா கலைஞர் தலைமையில் சிறப்பாக நடந்தது. மேடையிலே சுஜாதாவுக்கு பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். ஹலோ சொன்னேன். என்னிடம் திரும்பி ஒரு வசனம் பேசவில்லை. எல்லா வசனங்களையும் அடுத்த படத்துக்கு பாதுகாக்கிறார் என நினைத்துக்கொண்டேன்.

சாலமன் பாப்பையா உங்கள் குருவல்லவா? அவருடன் நீங்கள் படத்தில் சண்டை போட்டபோது  எங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. உங்களுக்கு எப்படி இருந்தது?

அது மோசமான அனுபவம். அவர் என்னை ’ஏ வத்தல்’  என்று அழைப்பார். படத்திலே அவருடைய பெயர் தொண்டைமான். நான் அவரை ‘ஏ தொண்ட’ என அழைக்கவேண்டும் என்று இயக்குநர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். எப்படி அழைப்பது, என் குருவாச்சே! மதிய நேரம் காரவானில் ரஜினியும் ஷங்கரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கதவைத் தட்டிவிட்டு நான் மெல்ல உள்ளே நுழைந்தேன். ‘நான் யோசித்துப் பார்த்தேன். என்னால் அந்த சீனில் அவரை ’ஏ தொண்ட’ என்று அழைக்க முடியாது. அவர் என் குரு’ என்றேன்.

ஷங்கர் ரஜினியை திரும்பிப் பார்த்தார். பின்னர் ஆச்சரியத்தோடு என்னை நோக்கி ‘இது திரைப்படம். ஒரு கற்பனைக் கதை. உண்மை கிடையாது. உங்களுடைய பெயர் ராமலிங்கம். அவருடைய பெயர் தொண்டைமான். ராமலிங்கம்தான் அவரை அப்படி அழைக்கிறார். நீங்களல்ல.’ இப்படி எனக்கு ஒரு நீண்ட புத்திமதி வழங்கி என்னை நடிக்க வைத்தார்.

சூட்டிங்கின்போது ஷங்கர் கோபப்படுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஏதாவது நடந்ததா?

ஒரேயொரு சம்பவம்தான். வாழ்நாளுக்கும் மறக்க முடியாது. விவேக் எங்களை வற்புறுத்தி விருந்து கொடுப்பதற்காக ரஜினி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். நான், என் மனைவி மற்றும் மகள் ஸ்ரேயா. எங்களுக்கு மேளதாளத்துடன்  கோலாகலமான பெரிய வரவேற்பு நடக்கும்.  அங்கே மேசை நிறைய உணவு பரப்பியிருக்கும். எல்லாமே ஐந்து நட்சத்திர ஹொட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட விலையுயர்ந்த உனவு வகை. ’சாப்பிடு, சாப்பிடு’ என்று உபசரிப்பார்கள். விவேக் ஆமைக்குஞ்சு பொரித்து வைத்திருக்கிறது என்று ஆசைகாட்டித்தான் எங்களை அழைத்து வந்திருப்பார். நான் எங்கே ஆமைக்குஞ்சு என்று ஆரம்பிப்பேன். வடிவுக்கரசி சோற்றை அள்ளி அள்ளி உமா பத்மநாபனுக்கு (ஏன் மனைவி) ஊட்டுவார். விவேக்கும், மணிவண்ணனும் என் வாயில் இரண்டு பக்கமும் நண்டுக் கால்களை தொங்கவிட என் உருவமே மாறிவிட்டது. விவேக் 24ம் புலிகேசி என்று என்னை வர்ணிப்பார். ரஜினி சோற்றையும் குழம்பையும் பிசைந்து பிசைந்து ஸ்ரேயாவுக்கு ஊட்டுவார்.  

ஸ்ரேயா பற்றி சொல்லவேண்டும். சாதரணமாக முகத்தில் ஓர் உணர்ச்சியும் தெரியாது. படப்பிடிப்பு ஆரம்பமானதும் எழுந்து நடப்பார். யாரோ பின்னுக்கு இருந்து அவரை இழுப்பதுபோல  இருக்கும். முகம் திறந்து மெல்லிய சிரிப்பு வெளியே வரும். அன்று ஸ்ரேயா அவ்வளவு அந்த சீனில் ஒத்துழைக்கவில்லை. நீண்ட நேரம் படப்பிடிப்பு போய்க்கொண்டே இருந்தது.  இயக்குநர் நினைத்ததுபோல காட்சி அமையவில்லை. ஷங்கருக்கு கோபம் வந்துவிட்டது. ஸ்ரேயாவை நோக்கி கத்தத் தொடங்கினார். ’என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க. எத்தனை டேக் போகுது.’ மீதியை எழுத முடியாது. ஸ்ரேயா அழத்தொடங்கினார். படப்பிடிப்பு நின்றுபோனது. அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினார்கள்.  மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது காட்சி எப்படியோ அமைந்துவிட்டது. எல்லோருக்கும் மகிழ்ச்சி.

அப்போதுதான் ரஜினி ஒரு விசயம் சொன்னார். பாவம் சின்னப் பெண், அழுதுவிட்டார். ஆனால் இந்தப் பேச்சு அவருக்கு மட்டுமில்லை. அடிக்கடி டைரக்டர்கள் கடைப்பிடிக்கும் யுக்திதான்.  செட்டிலேயே வயது குறைந்தவர் ஸ்ரேயா. ஆகவேதான் கோபம் அவர் மேலே பாய்ந்தது. உன்மையிலேயே இந்தக் கோபம் செட்டில் நடித்த எல்லோர் மேலேயும்தான். பெரியவர்களைத் திட்ட முடியாது. பாவம் ஸ்ரேயா என்றார்.

மணிவண்ணனைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?

சொற்களை முதலில் எண்ணிவிட்டு பேசத் தொடங்குவார். அருமையான மனிதர். என்னிடம் மனம்விட்டுப் பேசுவார். நான் சைவ உணவுக்காரன் என்பதால் உணவு விசயத்தில் எனக்கு பிரச்சினை வருவதுண்டு. மணிவண்ணன் வீட்டிலிருந்து அவருக்கு தினமும் அருமையான சைவ உணவு வரும். அவர் என்னுடன் பகிர்ந்துகொள்வார். அவரோடு பழகியதையும் அவர் வீட்டு உணவின் சுவையையும் மறக்க முடியாது.

உங்களுடைய சக நடிகர்கள் எல்லோருமே உங்களுக்குப் புதிது. அவர்கள் ஏற்கனவே படங்களில் நடித்தவர்கள். உங்களை நீங்களே அறிமுகப் படுத்தி நடித்தீர்களா?

எங்கே முடிந்தது. அறிமுகம் செய்யும் பழக்கம் எல்லாம் கிடையாது. உங்களுக்கு கொடுத்த வசனத்தை பேசி நடிக்க வேண்டியதுதான். என்னுடைய மனைவியாக நடித்தவர் உமா பத்மநாபன். மகளாக நடித்தது ஸ்ரேயா. அவரவருக்கு கொடுத்த காட்சியில் நடித்துவிட்டு அவர்கள் போய்விடுவார்கள். எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. உதவி டைரக்டர் அடிக்கடி ஞாபக மூட்டுவார். அது உங்கள் குடும்பம், ஒட்டி நில்லுங்கள், பக்கத்து வீட்டுக்காரர்போல தூரத்தூர நில்லாதீர்கள். பெரிய அசௌகரியமாக உணர்ந்தேன்.

இன்ன இடத்தில் இப்படி நடிக்கவேண்டும் என சொல்லித் தருவார்களா? அல்லது உங்களுக்கு வேண்டியமாதிரி செய்யலாமா?

அப்படியெல்லாம் உங்களுக்கு வேண்டிய மாதிரி நடிக்க முடியாது. இன்னமாதிரி நடிக்கவேண்டும் என்று அந்தக் காட்சியை விளங்கப்படுத்துவார்கள். நடித்துக் காட்டமாட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கும்வரை திருப்பித் திருப்பி எடுப்பார்கள்.

படத்திலே ரஜினி குடும்பம் வீட்டுக்கு பழக வந்திருக்கும். நான் பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டு தலையை துடைத்துக்கொண்டே வருவேன். ஆசி வாங்குவதற்காக ரஜினி குடும்பம் என் காலிலே விழ வருவார்கள். நான் பாய்ந்தோடிப்போய் பக்கத்திலிருந்த நாற்காலியில் துள்ளி ஏறிவிடுவேன். அப்படிச் செய்யச் சொல்லி ஒருவரும் சொல்லித்தரவில்லை. அந்த நேரம் தோன்றியதை நானாகச் செய்ததுதான்.  அதை ஒன்றும் வெட்டாமல் ஷங்கர் அப்படியே படத்தில் வைத்திருந்தார். என்னுடைய நடிப்பின் வெற்றிக்கு சான்று என அதை நான் எடுத்துக்கொண்டேன்.

40 நாட்கள் படப்பிடிப்புக் குழுவுடன் அலைந்தீர்கள். வெளிமாநிலம் எல்லாம் போனீர்களா?

டெல்லி , பூனே போன்ற இடங்களுக்கு நானும் போனேன். ரஜினி போகும் இடங்களில் கூட்டம் சேர்ந்துவிடும். வெளிமாநிலத்தில் நிம்மதி இருக்கும் என்று நினைத்தேன். பூனேயில் நம்பமுடியாஅளவுக்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. அப்பொழுதுதான் புரிந்தது ரஜினியின் புகழ் எங்கே எங்கே எல்லாம் பரவி விட்டது என்று. என்னால் நம்பவே முடியவில்லை.

உங்களுக்கு ரஜினியுடன் தனியாக உட்கார்ந்து பேசும் சந்தர்ப்பம் எப்போதாவது கிடைத்ததா?

ஒரு முறை நாங்கள் இருவரும் காரில் பயணம் செய்தோம். அவர் படாடோபம் இல்லாத எளிய மனிதர். நான் பல நாட்களாக கேட்கவேண்டும் என திட்டமிட்டிருந்த கேள்வியை கேட்டேன். ’நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு போகிறீர்கள். அங்கே உங்களுக்கு அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாக கூறியிருக்கிறீர்கள். அங்கே நான் போனால் எனக்கும் கிடைக்குமா?’ ’யாருக்கு என்ன கிடைக்கும் என்று எனக்கு எப்படித் தெரியும். நீங்கள்தான் அங்கே போக வேண்டும். நீங்கள்தான் அதை உணர முடியும். நீங்கள் ஒருமுறை வாருங்கள். இமயமலை சும்மாதானே இருக்கிறது’  என்றார்.

இமயமலை சும்மா இருக்கிறது. இந்தக் கொரோனா காலத்தில் நானும் சும்மாதான் இருக்கிறேன். ஆனால் சந்திப்பு என்னவோ நடப்பதாகத் தெரியவில்லை.

END

About the author

3 comments

  • உங்கள் எழுத்துக்களில் இன்னும் இளமை தளும்புகிறது.. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை படித்தப் பின் இன்று உற்சாகமாக உணர்கிறேன்..
    நன்றி அய்யா.
    முகமது யாசின்

  • கட்டுரையில் என் மனைவி என்பதற்கு பதிலாக ஏன் மனைவி என்று சொல்லி இருப்பது எதேச்சையாக அமைந்திருந்தாலும் பொருத்தமாக தான் இருக்கிறது. இமயமலை சும்மாதான் இருக்கிறது இந்த கதை சும்மா இல்லை.

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta