நம்பமுடியாது

'நம்பமுடியாது' என்றேன்.

சுரேஷ் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் பேசிய ஒரு மணி நேரத்தில் 'நம்பமுடியாது' என்ற வார்த்தையை 16 தடவை சொல்லிவிட்டேன். எதிர்பார்த்ததிலும் பார்க்க அவர் இளமையாகத் தோற்றமளித்தார். உபசரிப்பவரிடம் போதும் என்று சொல்லும்போது ஒரு சிரிப்பு சிரிப்போமே அப்படி சுரேஷ் சிரித்தார். என்னைப்போல 'நம்பமுடியாது' என்று சொல்லும் பலரை அவர் சந்தித்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவர் இமைகளுக்குள்ளால் சிரிக்கும்போது அதற்கு முன்னர் இருந்ததைவிட அழகாகத் தெரிந்தார்.

சுரேஷ் ஜோகிம் கனடாவில் வசிக்கும் தமிழர். உலகத்தில் அதிகமாக விற்கும் புத்தகம் பைபிள்; அதற்கு அடுத்தபடி விற்பனையாவது 'கின்னஸ் சாதனைகள்' புத்தகம். நூறு நாடுகளில், 25 மொழிகளில் வெளியாகும் அந்தப் புத்தகத்தில் அவருடைய பெயர் 63 தடவை வருகிறது. அத்தனை உலக சாதனைகளை படைத்துவிட்டார். மீரா ஜாஸ்மினுடன் அவர் நடித்து வெளிவந்த 'சிவப்பு மழை' அவருடைய 59வது சாதனை. அதன்பின்னரும் நிறுத்தாமல் சாதனைகள் செய்துவருகிறார். கடந்த ஜூலை மாதம் கனடா ஸ்காபரோ நகரில் தனது 63வது சாதனையை, தொடர்ந்து 200 மணித்தியாலங்கள் நிறுத்தியிருக்கும் சைக்கிளை ஓட்டி, நிலைநாட்டினார். இந்தச் சாதனையால் Operation Eyesight  தொண்டு அமைப்பு மூலம் இந்திய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் மக்களுக்கு கண்பார்வை கிடைக்கிறது. இதுவரை இவர் செய்தது சின்னச்சின்ன சாதனைகள். இவர் பிரம்மாண்டமான சாதனை ஒன்றுக்கு தயாராகி வருகிறார். அதைச் சொன்னபோதுதான் நான் 'நம்பமுடியாது' என்று சொன்னேன்.
 
சின்ன வயதில் சுரேஷ் யாழ்ப்பாணத்தில் மாமா வீட்டில் வளர்ந்தார். அவருடைய மாமா ஒரு பாதிரியார் என்பதால் அவரை பார்க்க வருபவர்கள் எல்லோரும் ஏதாவது காரணத்திற்காக  அழுதுகொண்டு வருவார்கள். 'ஐயா, என்ரை மகனை ராணுவம் பிடிச்சுக்கொண்டு போட்டுது.' 'ஐயா, என்ரை மகளைக் காணவில்லை.' இப்படி தொடர்ந்து முறைப்பாடுகள். அந்தச் சின்ன வயதிலேயே இந்த மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது, ஆனால் எப்படி உதவலாம் என்பது  தெரியவில்லை.

இளைஞனாக முதன்முறை கொழும்புக்கு சென்றபோது அங்கே ஒரு புத்தகத்தை பார்த்தார். அதிலே மைக்கேல் ஜாக்சன், மொகமட் அலி, மடோனா போன்றவர்களின் பெயர்கள் எல்லாம் இருந்தன. அது உலக சாதனைகள் கின்னஸ் புத்தகம். உலகத்தின் கவனத்தை கவர்வதற்கு இப்படி ஒரு வழி இருப்பது அவருக்கு தெரியாது. உலகத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பினால் தானும் தன் பங்குக்கு ஏதாவது உதவி செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக அவருடைய முதல் சாதனை கொழும்பில் நடந்தது. 1996ம் ஆண்டு, 42 நாட்கள், அதாவது 1000 மணித்தியாலங்கள் தொடர்ந்து 3495 கி. மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்தார். அவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து நிறைய சாதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார்.

'இந்த சாதனைகளுக்கு பயிற்சி எடுப்பதில்லையா?' என்று கேட்டபோது இல்லை என்றார். 'அவுஸ்திரேலியாவில்  கையிலே செங்கல்லைத் தூக்கிக்கொண்டு 126.675 கி.மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்திருக்கிறேன். இது உடலை வருத்தும் போட்டி. கையிலே ரத்தம் சொட்டும். இரண்டு தடவை கையை வருத்துவதில் என்ன பிரயோசனம். சாதனை அன்றுதான் முதன்முதல் செங்கல்லைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். சாதனைக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லை. எல்லாம் மனதுதான்' என்றார்.

'சிவப்பு மழை சாதனை?'

'இதுவரை 13 நாட்களில் சினிமா படம் எடுத்ததுதான் உலக சாதனை. அந்த சாதனையைத்தான் 11 நாள், 23 மணித்தியாலம், 45 நிமிடத்தில் படத்தை எடுத்து முடித்து சென்னையில் முறியடித்தோம். இதில் நடித்த மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் மற்றும் இயக்கிய கிருஷ்ணமூர்த்தி, பாடல் எழுதிய வைரமுத்து, இசையமைத்த தேவா எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது.  மூன்று செட், மூன்று காமிரா என்று வைத்து மாறி மாறி படப்பிடிப்பு நடந்தது. இரவிரவாக சூட்டிங் முடிந்து அதிகாலை 5 மணிக்கு தூங்கப் போவேன். ஆனால் 6.30 க்கு என்னை மறுபடியும் எழுப்பிவிடுவார்கள். உடனே மேக்கப் போட்டு தயாராக வேண்டும். பல இரவுகள் நித்திரை இல்லாமல் தொடர்ந்து வேலைசெய்து முடிக்க வேண்டியிருந்தது. ஒரு தருணத்தில்கூட தோற்றுவிடுவேன் என்று நான் நினைத்ததில்லை. இதை நான் சாதனைப் படமாக மட்டும் பார்க்கவில்லை. ஈழத்துப் போரின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் மூன்றையும் சொல்லிய ஒரு படமாகவும் பார்க்கிறேன்.'

தடங்கல்கள் வந்திருக்குமே?

'நிறைய. படம் தொடங்க முன்னர் உதவி டைரக்டராக நியமிக்கப்பட்ட ஒருவர் விபத்தில்  இறந்துவிட்டார். படம் சூட்டிங் நடந்தபோது ஒரு பையன் ராட்சச காற்றடியில் கையை விட்டு விரல் துண்டாகிவிட்டது. அபசகுனம் என்றெல்லாம் சொன்னார்கள். படம் முடிய முன்னர் பணம் முடிந்துவிட்டது. எல்லாத்தையும் தாண்டித்தான் சாதிக்கவேண்டியிருந்தது.'

நடிப்பு அனுபவம் எப்படி?

'உலகத்தின் பல காமிராக்களுக்கு முன் நான் நின்றிருக்கிறேன். அமெரிக்காவின் சி.என்.என், இங்கிலாந்து பி.பி.சி, கனடா டிவி, அவுஸ்திரேலியா டிவி, ஆனால் அவை எல்லாமே செய்தி சானல்கள். சினிமா காமிரா என்பது வேறு. புகழ் உச்சியில் இருக்கும் நடிகர்கூட 14 தடவைகள் ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் நடிக்கவேண்டியிருக்கும். நேரம் என்ற வசதி எங்களுக்கு  கிடையாது. எனக்கு வசனம் பிரச்சினையாக இருந்தது. ஒருத்தர் பின்னுக்கு நின்று சொல்ல நான் நடித்தபடி வசனத்தை சொல்லவேண்டும். ஆரம்பத்தில் தடுமாறினேன், ஆனால் சில நாட்களில் பிடித்துக்கொண்டேன். மீரா தேசிய விருது வாங்கிய நடிகை. ஓர் இடத்தில் நான் நடித்து முடிந்த பிறகு அவர் கைதட்டினார். அதுதான் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த ஆகப்பெரிய விருது.

ஏதாவது மறக்க முடியாத சம்பவம்?

'விவேக்குடன் நடித்ததுதான். அவருடன் சேர்ந்து வரும் இடங்களில் எல்லாம் நான் நடிக்கவேண்டியதை மறந்து சிரித்துவிடுவேன். இயக்குநர் 'என்ன சார், இருக்கிறதே கொஞ்சநேரம். நீங்களே சிரித்து கெடுத்துவிடுவீர்கள் போல இருக்கே' என்பார். அவருடன் சிரிக்காமல் நடித்து முடித்ததுதான் என்னுடைய பெரிய சவால்.'

சுரேஷ் அவருடைய திட்டங்களை விவரிக்கத் தொடங்கியபோது பல இடங்களில் 'நம்பமுடியாது' என்று நான் சொல்லிக்கொண்டே வந்தேன். சின்ன வயதில் அவர் நினைத்ததுபோல இன்று பல மில்லியன் டொலர்கள் அவருடைய சாதனைகள் மூலம் அநாதரவான சிறுவர் சிறுமிகளுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இதுவரை அவர் ஒரு சாதனையிலும் தோல்விடைந்தது கிடையாது. 'சிவப்பு மழை' தனியொருவர் சாதனை அல்ல, ஒரு குழு செய்யவேண்டியது, ஆகவே தோல்வியில் முடியும் என்றே பலர் நினைத்தார்கள் ஆனால் 12 நாட்களுக்கிடையில் படத்தை முடித்து கின்னஸ் சான்றிதழ் பெற்றுவிட்டார்.

அவருடைய அடுத்த பெரிய சாதனை ஹொலிவுட் ஆங்கிலப் படம். கனடாவில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் சுரேஷ் 35 வேடங்களில் நடிக்கிறார். மூன்று இயக்குநர்கள், ஒருவர் கனடியர், இன்னொருவர் அமெரிக்கர் மூன்றாவது தமிழர். அது சுரேஷ்தான். கதையும் அவர்தான், ஆனால் வசனம் ஒரு ஹொலிவுட் எழுத்தாளர் எழுதுகிறார். அமெரிக்கா, பிரான்ஸ், ரஸ்யா, சீனா, ஜப்பான் என ஐந்து கதாநாயகிகள். பிரதானமான ஆறாவது கதாநாயகி பிரபல ஹிந்தி நடிகை. பெயரை இப்போதைக்கு வெளியிடவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெறும். அவையும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் அமைத்ததாகத்தான் இருக்கும்.

அவர் சொன்ன கதையும் அபூர்வமானது. விறுவிறுப்பும், திருப்பங்களும், எதிர்பாராத முடிவும் கொண்டதாக கதை அமைந்திருந்தது. கின்னஸ் சாதனை மட்டுமல்ல ஒன்றிரண்டு ஒஸ்கார் விருதுகள் பெறுவதும் நோக்கம். ஏற்கனவே ஒஸ்கார் விருதுபெற்ற சிலர் படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார்கள். 63 உலகசாதனை படைத்த ஈழத்தமிழர் ஒருவர் ஒஸ்கார் மேடையில் நின்று ஒரு விருதை பெறுவார் என்பதை நாங்கள் ஏன் நம்பத் தயங்கவேண்டும்..

அவருடைய நாளாந்த வாழ்க்கையிலும் பல விசயங்கள் நம்பமுடியாததாகத்தான் இருக்கின்றன. அவர் தினசரி தேகப்பயிற்சி செய்வதில்லை. உணவுக்கட்டுப்பாடு சுத்தமாகக் கிடையாது. என்ன வேண்டுமானாலும், எப்போ வேண்டுமானாலும் சாப்பிடுகிறார். அவர் எங்கேயிருந்தாலும் சோறும் கறியும் முக்கியம். ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு முட்டைக் கோப்பி குடிக்கிறார். இரவு ஒரு மணிக்கு பின்னர் தூங்கப் போகும் அவர் காலையில் குறித்த நேரத்துக்கு எழும்புவதென்பது கிடையாது. ஆனால் அவர் மூளையில் புது சிந்தனைகள் முளைத்தபடியே இருக்கின்றன.

பெரிய பெரிய திட்டங்கள் நடக்கும்போது சின்னச்சின்ன சாதனைகள் அது பாட்டுக்கு தொடரும். அவருடைய அடுத்த பெரிய திட்டம் உலக சமாதானத்திற்காக உலகத்தைச் சுற்றிய ஓட்டப் பயணம். 55 நாடுகளில், 88 நகரங்களைத் தொட்டு 6000 கி.மீட்டர் தூரம் ஓடுவது. இந்த ஓட்டம் டிசெம்பர் 25, 2012ல் கிறிஸ்மஸ் அன்று ஜெரூசலம் நகரில்  தொடங்கி ஜுன் 24, 2013 அன்று மாலை கனடாவின் மிஸிசாகா நகரில் கனடிய பிரதமர் முன்னிலையில் முடிவுக்கு வரும். இந்த ஓட்டத்தின் மூலம் உலக சமாதானத்துக்காக நூறு கோடி கையெழுத்துக்கள் பெறுவதோடு ஒரு பில்லியன் டொலர்களும் திரட்டப்படும். இதன் நோக்கம் 24 ஜூன் நாளை உலக சமாதான நாளாக உலக முழுவதும் அறிவிப்பது.

'கனடிய பிரதமர் ஹார்ப்பரை சந்திப்பதில் பிரச்சினை இல்லையா?' என்று கேட்டேன்.  'இல்லையே. முதலில் என்னை அவருடைய மனைவிதான் சந்தித்தார். ஹார்ப்பருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் நான் ஹீரோ. அவர்களுடைய கின்னஸ் புத்தகத்தில் நான் கையெழுத்து வைத்தேன். பின்னர் பிரதமர் வந்து என்னுடன் பத்து நிமிடம் பேசினார். அடுத்து நான் ஒபாமாவை சந்திப்பதாக இருக்கிறேன்.' நான் பிரச்சினை இல்லையா என்று கேட்கவில்லை.

'அதற்குப் பிறகு என்ன பெரிய திட்டம்?'

'தற்போது துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபாதான் உலகத்தில் ஆக உயர்ந்த கட்டிடம். அதைத் தாண்டி சீனா ஒன்று கட்டி வருகிறது. அதையும் மீறும் வகையில் கனடாவில் ஒரு கட்டிடம் எழும்பவேண்டும்.'
'யார் செய்யப் போகிறார்கள்?'
'நான்தான்' என்றார்.
'நம்பமுடியாது' என்றேன்.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta