ஆறுதலாகப் பேசுவோம்

சில வருடங்களுக்கு முன்னர் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் ரொறொன்ரோ வந்திருந்தார். இவர் நவீன தமிழ் இலக்கியங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவருடைய சேவையை பாராட்டி கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் இவருக்கு வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருதை வழங்கி கௌரவித்திருந்தது. ரொறொன்ரோவில் சில கூட்டங்களிலும் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக பேசினார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்கள், சவால்கள் பற்றி பேசும்போது ஓர் இடத்தில் அவர் மொழிபெயர்த்த நாவலின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் வாசித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வாசித்த ஒவ்வொரு வரியும் எனக்கு புரிந்தது.

 கூட்டம் முடிந்த பிறகு அவரிடம் பேசினேன். 'இந்த நாவலை நான் ஏற்கனவே தமிழில் படிக்க முயன்றிருக்கிறேன். முப்பது பக்கங்களுக்கு மேலே என்னால் படிக்க முடியவில்லை. முற்றிலும் பேச்சுவழக்கு மொழியில் எழுதப்பட்டிருந்ததால் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. என்னிடம் ஆறு தமிழ் அகராதிகள் இருக்கின்றன ஆனால் அந்த வார்த்தைகள் அகராதிகளில் இல்லை. நீங்கள் எப்படி இதைப் படித்து புரிந்துகொண்டு மொழிபெயர்த்தீர்கள்?' என்று கேட்டேன்.

 அவர் சிரித்துவிட்டு 'எனக்கும் இதே பிரச்சினை இருந்தது. பல வார்த்தைகள் புரியவில்லை. ஆகவே ஆசிரியரை தொடர்புகொண்டு அவரிடமே விளக்கம் கேட்டு மொழிபெயர்த்தேன்' என்றார். 'ஆசிரியரைத் தொடர்புகொண்டுதான் ஒரு புத்தகத்தை புரிந்துகொள்ளவேண்டுமா? என்னைப்போன்ற வாசகர்கள் என்ன செய்யலாம்?' என்றேன். அவர் சிரித்துவிட்டு 'வேறு என்ன? ஆங்கிலமொழிபெயர்ப்பில் படிக்கவேண்டியதுதான்' என்றார்.
 ஒரு முறை இதே கேள்வியை ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டேன். அவர் தன்னுடைய மாணவர் ஒரு நாவலை எழுதினார் என்றார். அது முழுக்க முழுக்க பேச்சுவழக்கு மொழியிலேயே இருந்தது. ஒரு குறிப்பிட பிராந்திய இனக்குழு பேசும் மொழி. அதைப் புரிந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூற்றிலும் குறைவுதான். எந்த மொழியில் எழுத வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வு. என்ன புத்தகத்தை வாங்கவேண்டும் என்பது வாசகர் தேர்வு  என்றார்.

 வட்டார வழக்கில் எழுதுவதற்கு நான் எதிரியல்ல. அவர்கள் எழுதிவிட்டு போகட்டும். பேராசிரியர் சொன்னதுபோல புத்தகம் வாங்குவது வாசகரின் தெரிவு. உதாரணத்துக்கு நான் என் கிராமத்து மொழியில் ஒரு நூல் எழுதினால் அதை அந்தக் கிராமத்தவர்கள் மட்டுமே முழுவதுமாக வாசித்து புரிந்துகொள்ளலாம். அதுகூட சில சமயங்களில் சந்தேகம்தான் ஏனென்றால் சில வார்த்தைகள் எங்கள் வீட்டுக்காரர்களுக்கு மட்டுமே புரியும்; பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு புரியாது.

 ஒருமுறை நான் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'ஆறுதலாகப் பேசுவோம்' என்று சொன்னேன். அவர் சிரிக்கத் தொடங்கிவிட்டார். 'ஆறுதல்' என்றால் 'தேற்றுவது, வருத்தத்திலிருந்து மீட்டு தெம்பு தருவது' என்று பொருள். 'ஆறுதலாகப் பேசுவோம்' என்றால் இலங்கை வழக்குப்படி 'சாவகாசமாக, ஓய்வாக இருக்கும்போது பேசுவோம்' என்பது பொருள். இப்படி சிறு விசயங்களில்கூட நாம் சறுக்கும்போது முழுக்க முழுக்க வட்டார வழக்கில் எழுதப்படும் ஒருபுத்தகத்தை அந்த வட்டாரத்தைச் சேராத ஒருவர் படித்து புரிந்து கொள்வது என்பது கடினமான விசயம்தான்.

 ஓர் ஆங்கில எழுத்தாளருடன் நான் சண்டை போட்டிருக்கிறேன். அவர் பாவித்த சில சொற்கள் எனக்கு புரியவில்லை. அவை அகராதியிலும் இல்லை. 'நாங்கள் இதைப் படித்து எப்படி பொருள் கொள்வது?' என்று கேட்டேன். அவர் 'ஒரு வாசகருக்கு எல்லாச் சொற்களும் புரியவேண்டிய அவசியம் இல்லை. பத்துவீதம் புரியாவிட்டாலும் பரவாயில்லை' என்றார். 'அது எப்படி? நான் புத்தகம் வாங்குவதற்கு முழுக்காசையும் அல்லவா கொடுத்திருக்கிறேன். பத்துவீதம் கழித்துக்கொண்டு கொடுக்கவில்லையே?' என்றேன். இப்பொழுது அந்த ஆசிரியர் என் கடிதங்களுக்கு பதில் போடுவதை நிறுத்திவிட்டார்.

 ஒரு வார்த்தை இருந்தால் அதைப் பாவிக்கவேண்டும் என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர் ஜேம்ஸ் ஜோய்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளர். இவர் யூலிசிஸ் நாவலை எழுதியபோது அதிலே மூன்று 'கெட்ட' வார்த்தைகள் இருந்தன. அவர் காலத்து பதிப்பகங்கள் நாவலை நிராகரித்தன. ஆகவே அவரால் புத்தகத்தை வெளியிட முடியவில்லை. பாரிஸுக்கு போய் அங்கே வெளியிட்டார். அதை வெளியிட்டு 12 வருடங்களுக்கு பிறகுதான் அமெரிக்கா புத்தகத்தை அங்கீகரித்தது. மேலும் இரண்டு வருடங்கள் சென்று இங்கிலாந்தும் புத்தகத்தை வெளியிட்டது. அதை தொடர்ந்து டி.எச். லோரன்ஸ் Lady Chatterley's Lover ஐ எழுதினார். அதிலே 44 'கெட்ட' வார்த்தைகள் இருந்தன. அதன் பின்னர் எழுத வந்தவர்கள் அந்த வார்த்தைகளை தாராளமாகப் பாவித்ததில் அவை தேய்ந்துவிட்டன. இப்பொழுது அந்த வார்த்தைகள் அதிர்ச்சி தருவதில்லை. அதிர்ச்சி வேண்டுமென்றால் இன்னொரு புது வார்த்தையை உண்டாக்கவேண்டும்.

 வழக்கமாக கிறிஸ்மஸ் வரும்போது எனக்கு ஒரு பரிசு கிடைக்கும். அதைக் கொடுப்பவர் கனடாவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர்.  சென்ற வருடம் எனக்கு ஒரு தமிழகராதி பரிசு கிடைத்தது. 1842ல் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி. ஆசிரியன்மார்: சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை. அகராதியை பின்னிருந்து முன்னாக ஒற்றையை தட்டிப் பார்த்துக்கொண்டு வந்தபோது ஒரு வார்த்தை கண்ணில் தென்பட்டது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சீவகசிந்தாமணியை கண்டுபிடித்தபோது உ.வே.சா பட்ட மகிழ்ச்சி. ஏனென்றால் கடந்த பத்து வருடங்களாக நான் அந்த வார்த்தையை தேடிக்கொண்டிருந்தேன். அகராதிகளை ஆராய்ந்து, புலவர்களையும் தொந்திரவு படுத்தியிருந்தேன். அந்த வார்த்தை என் கண் முன்னே நின்றது.

 திரௌபதி பாண்டவர்களுடன் வனவாசம் புறப்பட்டபோது திருதராட்டிரன் விதுரனிடம் அந்தக் காட்சியை வர்ணிக்கச்சொல்லி கூறுவான். விதுரனும் 'திரௌபதி தன் அளகபாரத்தை விரித்து முகம் முழுவதையும் மூடிக்கொண்டு, கண்ணீர் சொரிய பாண்டவர் பின்னால் செல்கிறாள்' என்று விவரிப்பான். அளகம் என்றால் பெண்மயிர். பெண்மயிர் என்று ஒன்றிருந்தால் ஆண்மயிர் என்று ஒன்றும் இருக்கவேண்டும். அதற்கு என்ன வார்த்தை? பல புலவர்களை  கேட்டதில் ஒருவருக்கும் தெரியவில்லை.  அந்த அகராதியில் நான் தேடிய வார்த்தை கிடைத்தது. சூளி – ஆண்மயிர் என்று போட்டிருந்தது.

 மச்சகன்னி என்றால் பெண். அதற்கும் ஒரு ஆண்பால் இருக்கத்தானே வேண்டும். ஆண்மயிர், பெண்மயிர் என்று வார்த்தைகள் இருப்பதில் என்ன பெருமை? ஆங்கிலத்தில் சில வார்த்தைகளைக் காட்டி இதற்கெல்லாம் தமிழ் சொல் கிடையாது, எனவே ஆங்கிலம்தான் உயர்ந்தது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். இப்படியான சர்ச்சைகளில் பிரயோசனமே இல்லை. தமிழில் உள்ள எத்தனையோ வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் சொற்களே இல்லை. உதாரணம் சுமங்கலி, உவன், விளாவு, சம்பந்தி என்று ஆயிரம் வார்த்தைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆகையால் தமிழ் உயர்ந்தது என்று ஆகாது.

 முதன்முதல் ஆங்கில அகராதி தயாரித்தபோது அதில் 40,000 வார்த்தைகள் சேகரமாகியிருந்தன. ஆனால் அப்பொழுதே தமிழில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகள் வந்துவிட்டன. இப்பொழுது ஆங்கிலத்தில் 10 லட்சம் வார்த்தைகள் சேர்ந்துவிட்டன. தமிழில் எத்தனை வார்த்தைகள் என்று தெரியவில்லை ஆனால் சமீபத்திய  க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியிலிருந்து உருவாகியிருக்கிறது என்பதை நினைக்க வியப்பு மேலிடுகிறது. ஒரு மொழியில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்பதை வைத்து அந்த மொழியின் உயர்வை தீர்மானிக்க முடியாது. படைப்புகளை வைத்துத்தான் அது தீர்மானிக்கப்படுகிறது. திருக்குறளில் 9000 வார்த்தைகள்தான் உள்ளன. சேக்ஸ்பியர் 24,000 வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.

  ஆரம்பத்தில் மனிதன் சைகையினால்தான் தகவல்களைப் பரிமாறிக்கொண்டான், வார்த்தைகள் அதன் பிறகுதான் வந்தன. இன்று கூட ஒருவருக்கு தொலைபேசியில் ஓர் இடத்துக்கு வழி சொல்லும்போது கைகளை நீட்டிக் காட்டித்தான் சொல்கிறோம். இரவிலே சைகை காட்டினால் அப்போது புரியாது. அப்படித்தான் மெள்ள மெள்ள மொழி பிறந்தது. ஒவ்வொரு தலைமுறையும் புதுப்புது வார்த்தைகளை உண்டாக்க மொழியும் வளர்ந்தது. மனிதனிடம் மட்டுமில்லை மிருகங்களிடமும் மொழி இருக்கிறது. வெர்வெட் என்ற குரங்கு ஆபத்து சமயத்தில் வெவ்வேறு ஒலிகளை எழுப்புகிறது. கழுகை ஒரு குரங்கு கண்டால் ஒருவித சத்தத்தை எழுப்பும். உடனே மற்றைய குரங்குகள் பற்றைகளில் ஒளிந்துகொள்ளும். பாம்பு என்றால் இன்னொரு ஒலி. அந்த ஒலிக்கு  குரங்கள் மரத்தில் ஏறும். சிறுத்தை என்றால் இப்போது வேறு ஒலி. குரங்குகள் மரத்தில் மட்டும் ஏறினால் போதாது, சிறுத்தையும் ஏறும். ஆகவே அந்த ஒலி கேட்டதும் குரங்குகள் மெல்லிய கிளைகளில் போய் தொங்கிக்கொள்ளும். சிறுத்தை அங்கே போகமுடியாது. ஒரு குரங்கு வார்த்தைகளை உண்டாக்கும்போது மனிதன் எத்தனை வேகமாக வார்த்தைகளை கண்டுபிடித்திருப்பான்.
  
        புத்தகக் கடையில் ஒரு நண்பர் நெடுநேரம் புத்தகங்களை கையிலே எடுத்து எடுத்து வைத்து பார்த்துக்கொண்டே இருந்தார், ஆனால் ஒன்றையும் வாங்கவில்லை. என்ன விசயம் என்றேன். அவர் சொன்னார், 'எனக்கு வாசிப்பு பிடிக்கும். ஆனால் வார்த்தைகள் அதிகமாகி படிப்பதற்கு கடினமாக இருக்கிறது.' வார்த்தைகள் இல்லாத புத்தகமா? அப்படியானால் அவர் ஓவியப் புத்தகத்தைதான் வாங்கிப் பார்க்கவேண்டும். நண்பர் என்ன சொல்ல வந்தார் என்றால் புதுப்புது வார்த்தைகள் எல்லாம் வந்துவிட்டதால் வாசிப்பது கடினமாகிக்கொண்டே வருகிறது என்பதுதான்.

 எவ்வளவு புது வார்த்தைகள் வந்தாலும் மொழிக்கு போதாது; சில இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இலங்கையரான ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சி English Patient என்று ஒரு நாவல் எழுதினார். அந்த நாவலில் ஒரு பெண்ணின் 'தொண்டைக் குழி' அழகாயிருக்கிறது என்றும், இத்தனை லட்சம் வார்த்தைகள் உள்ள ஆங்கில மொழியில் தொண்டைக் குழிக்கு  ஒரு சொல் இல்லையே என்றும் அதன் கதாநாயகன் வருந்துவார். தமிழிலே தொண்டை குழிக்கு தனி வார்த்தை இல்லாவிட்டாலும் முலையில் உள்ள துளைக்கு 'இல்லி' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. 'இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை' என்று புறநானூறு சொல்லும். மொழி எவ்வளவுதான் வளமானதாக இருந்தாலும் ஏதாவது ஒரு சொல் அங்கே பற்றாமல்தான் போகும். அதனால் மொழி ஆற்றல் குறைந்தது என்று சொல்லமுடியாது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் சமஸ்கிருதத்தில் 'வாய்'  என்ற உறுப்புக்கு ஒரு சொல் இல்லை என்றார். என்னாலே நம்பவே முடியவில்லை. சமஸ்கிருதத்தில் எழுதும்போது 'முகத்தினால் சாப்பிட்டார்கள்' என்று எழுதுவார்களாம். அதனால்தான் சமஸ்கிருதத்தை 'வாய் இல்லாத மொழி' என்று சொல்கிறார்கள்.

  புதுச் சொற்களை உண்டாக்கவேண்டியது அவசியம்தான். ஆனால் இருக்கும் பழைய சொற்களை நாம் பயன்படுத்தாமல் விட்டால் வேறு யார் பயன்படுத்துவார்கள். 21,000 வார்த்தைகள் அடங்கிய க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் 'அறாவிலை' (நியாயமற்ற விலை) 'அலவாங்கு' (கடப்பாரை) போன்ற இலங்கை வார்த்தைகள் இடம் பெற்றுவிட்டன. அவை எங்கே  மறைந்துவிடுமோ என்ற பயம் இருந்தது, எப்படியோ அவை உயிர் பெற்றுவிட்டன.

 ஒருநாள் வெளியே போய்விட்டு திரும்பி வீட்டுக்கு வந்தபோது என் மனைவி 'எங்கே போய்விட்டு வருகிறீர்கள்?' என்று கேட்டார். நான் 'சூளி வெட்டிவிட்டு வருகிறேன்' என்றேன். மனைவி முகத்தில் ஒரு வெளிச்சமும் இல்லை. ஒன்றும் புரியாமல் என்னையே பார்த்தார். நான் அதை விளக்கி சொல்ல முனையவில்லை. அகராதி இருந்தால் அதில் சொல் இருக்கவேண்டும். சொல் இருந்தால் அதை பாவிக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். இனிமேல் எழுதும்போது சூளி, இல்லி, மீதூண், அறாவிலை, அலவாங்கு, நூதனசாலை போன்ற வார்த்தைகள் என் எழுத்தில் இருக்கும். வாசகர்களுக்கு புரிகிறதோ இல்லையோ என்பது என் பிரச்சினை அல்ல. யாராவது ஒருவர் என் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
  

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta