இலவசமாகக் கிடைத்த கையெழுத்து

ஒரு விருந்திலே நண்பர் ஒருவர் என்னைக் கண்டு முறைப்பாடு செய்தார். நண்பர் என்றால் ஒன்றிரண்டு தடவை அவரை முன்னே பார்த்ததுண்டு. அவ்வளவுதான். 'நீங்கள் புத்தகம் வெளியிட்டீர்களாமே. எனக்கு ஒரு புத்தகம்கூட தரவில்லை. உங்கள் கையெழுத்தை வைத்து ஒன்று தாருங்கள்' என்றார். இவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. நான் ஒரு புத்தகம் வெளியிட்டால் அதை வீடு வீடாக எடுத்துச் சென்று கதவை தட்டி ஆட்களிடம் இலவசமாக கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

 'புத்தகக் கடையில் கிடைக்கிறது. நீங்கள் வாங்கலாமே?' என்றேன். அவருடைய முகம் வேறு யாரோவுடைய முகம்போல மாறிவிட்டது. நான் அவருக்கு புத்தகம் இலவசமாகத் தரவில்லையென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு குயவன் பானை செய்தால் அதனை இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? ஓவியர் படம்  வரைந்தால் அதை மற்றவர்களுக்கு இலவசமாகத் தருவாரா? ஓர் எழுத்தாளர் பலவருட காலம் பாடுபட்டு உழைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டால் ஏன் அதை எல்லோரும் இலவசமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

 நான் எப்படி இலவசமாக புத்தகம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டேனோ அப்படியே என்னுடைய புத்தகத்தையும் இலவசமாக கொடுக்க விரும்பமாட்டேன். யாராவது எனக்கு ஒரு புத்தகத்தை தரவந்தால் நான் அதற்குரிய விலையை கொடுக்கவே முயற்சி செய்வேன். அது ஒரு மரியாதை என்றே  நம்புகிறேன். இலவசமாக ஒரு நண்பருக்கு புத்தகம் கொடுத்தால் அவர் அதை எப்படியும் வாசிக்கப்போவதில்லை. உங்களை சந்தோசப்படுத்தவே அவர் புத்தகத்தை ஏற்கிறார் என்பது என் கருத்து.

 எனக்கு அகில் சர்மாவின் ஞாபகம் வந்தது. அவர் பிரபலமான ஆங்கில எழுத்தாளர். சிறுகதைகள் எழுதி பல பரிசுகள் பெற்றவர். அவருடைய An Obedient Father நாவலை வாசித்த பிறகு ஒரு பத்திரிகைக்காக நான் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அப்போது அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முழுநேர எழுத்தாளராக அப்போது இல்லை. நியூயோர்க்கில் ஒரு பிரபலமான சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஓர் எழுத்தாளர் என்பது அவருடன் வேலை பார்த்தவர்களுக்கு தெரியாது. அவருடைய நாவல் வெளிவந்தபோது பல   பத்திரிகைகள் அதைப்பற்றி எழுதின. தொலைக்காட்சி அவரைப் பேட்டிகண்டது. அப்பொழுது அவருடன்  வேலை செய்தவர்கள் அவரிடம் குறைபட்டுக்கொண்டார்கள். 'நீங்கள் பெரிய எழுத்தாளராமே. எங்களுக்கு ஏன் சொல்லவில்லை. எனக்கு ஒரு நாவல்கூடத் தரவில்லையே.' அகில் சர்மா சொன்னார். 'இவர்கள் வருடத்துக்கு ஒரு மில்லியன் டொலர்களுக்கு குறையாமல் சம்பாதிப்பவர்கள். என்னிடம் வந்து இருபது டொலர் நாவலை  இலவசமாகத் தரவேண்டும் என்று குறைபட்டார்கள். உண்மையில் அவர்கள்  நண்பர்கள்     என்றால் எனக்கு மரியாதை செய்வதற்காக ஒரு நாவலை காசுகொடுத்து வாங்கி அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லவேண்டும். அவர்களுடைய நட்பு 20 டொலர் இலவச நாவலை தாண்டவில்லை.'

 மைக்கேல் சீடன்பேர்க் என்பவர் ஒரு பழைய புத்தகக்கடை நடத்தினார். ஒரு நாள் ஒரு காதலனும் காதலியும் அவருடைய கடைக்குள் நுழைந்தார்கள். அரை மணி நேரமாக புத்தகங்களை பார்வையிட்டபிறகு காதலன் கேட்டான், 'உனக்கு ஒரு புத்தகம் வேண்டுமா?' அவள் சொன்னாள்,  'இல்லையே, என்னிடம் ஏற்கனவே ஒரு புத்தகம் இருக்கிறது.' இளையவர்கள் புத்தகம் படிப்பதில்லை என்பதை நிறுவுவதற்காக மேற்படி உதாரணத்தை சீடன்பேர்க் அடிக்கடி கூறுவார். ஆனால் உண்மை  எதிர் திசையில்தான் இருக்கிறது. காசு கொடுத்து புத்தகம் வாங்குவோரின்  எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வட அமெரிக்காவில் ஒரு வருடத்தில் விற்கும் புத்தகங்களின் மதிப்பு 26 பில்லியன் டொலர்கள். சென்னை புத்தகச் சந்தையில் விற்பனையாகும் புத்தகங்களின் தொகையும் கணிசமான அளவில் கூடிக்கொண்டே வருகிறது. முன்பு எப்பொழுதும் கண்டிராதபடி புத்தகங்கள் தரத்துடன் நல்ல தாளில் கண்ணுக்கு இதமான அச்சில் வெளிவருகின்றன.

 ஒன்றிரண்டு பேர் இலவச புத்தகங்களை நம்பியிருக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் காசு கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு தயங்குவதே இல்லை. யாழ்நூலகம் அழிந்து கிட்டத்தட 30 வருடங்கள் கழிந்த நிலையில் அவர்களுக்கு புத்தகங்கள் சேர்ப்பது முக்கியமானது. உலகத்தின் முதல் நூலகம் அலெக்சாந்திரியாவில் இருந்தது. சீசரின் எகிப்திய படையெடுப்பின்போது இந்த நூலகம் எரிந்து சாம்பலானது. இதுவே முதன்முதல் எரிக்கப்பட்ட நூலகம். அமெரிக்காவின் Library of Congress பிரிட்டிஷ் படையெடுப்பின்போது எரியூட்டப்பட்டது. ஆனால் உலகத்திலேயே ஓர் அரசு தன் சொந்த நாட்டு நூலகத்தையும் அதிலிருந்த 97,000 நூல்களையும் எரியிட்டு அழித்தது என்றால் அது இலங்கையில்தான் முதன்முதல் நடந்தது.  இன்று அதே இடத்தில் எவ்வளவு பெரிய நூலகத்தை கட்டினாலும், எத்தனையாயிரம் புத்தகங்களை வாங்கி அடுக்கினாலும் அழிந்துபோன ஓர் ஓலைச்சுவடிக்கு அது ஈடாகாது. இது புலம்பெயர்ந்தவர்களுக்கு தெரியும். அந்த அநீதியை அவர்களால் மறக்கவும் முடியாது. தாம் சென்று வாழும் இடங்களில் சொந்தமாக புத்தகங்களை சேகரித்து அந்த இழப்பை ஓரளவுக்கு ஆற்றிக்கொள்கிறார்கள். 

 நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்து எனக்கு ஒரு நண்பர் இருந்தார். பத்திரிகைகளில் வரும் முக்கியமான செய்திகளை எல்லாம் வெட்டி நறுக்குகளாக பாதுகாப்பார். மாத இதழ்கள், வார இதழ்கள், புத்தகங்கள் என்று தனியான அடுக்குகள் வைத்திருப்பார். அநேகமாக  பழைய புத்தகக் கடைகளுக்கு போய் பழைய புத்தகங்களை வாங்குவார். நவீன இலக்கியங்கள் மொழிபெயர்ப்புகள்  பழைய இலக்கியங்கள் என ஒன்றையும் தவறவிடமாட்டார். அவரிடம் ஒரு கொள்கை உண்டு. இருபது வயதுவரை கையிலே அகப்பட்டதை எல்லாம் படிக்கவேண்டும். இருபதிலிருந்து நாற்பதுவரை தேர்ந்த இலக்கியங்களையும், அறிவு நூல்களையும் படிக்கவேண்டும். அதற்கு பிறகு என்று கேட்டால் தொடர்ந்து மற்றவர்கள் எழுதுவதையே படித்துக்கொண்டிருந்தால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். நாற்பது வயதுக்கு பிறகு நீங்கள் சிந்திப்பது அதிகமாகவும் வாசிப்பது குறைவாகவும் இருக்கவேண்டும் என்பார். 

 புத்தகம் வாங்குவதிலும் அவரிடம் ஒரு நுட்பம் இருந்தது. ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. உடனேயே அவருடைய புத்தகம் உலகளாவிய ரீதியில் விற்பனையாகி உச்சத்தை தொடுகிறது. நோபல் பரிசுத் தேர்வில் இரண்டாவதாக ஒருத்தர் வந்திருப்பார். அவரை ஒருவருமே கவனிப்பதில்லை. அவர் பெயர்கூட வெளியே வராது. அவர் எழுதிய நூல் எவ்வளவுதான் உயர்ந்ததாக  இருந்தாலும் அது கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. புறநானூறு தொகுப்பில் 401 வது பாடல் என்று ஒன்றிருந்திருக்கும். அது தொகுக்கப்படவில்லை. யார் கண்டது? அது உயர்ந்த கவிதையாக இருந்திருக்கலாம். எப்படியோ விடுபட்டுப்போய்விட்டது. புத்தகங்களை தேடும்போது விடுபட்டதையும் சேர்த்து தேடவேண்டும். பழைய புத்தகக் கடைகளில்தான் அபூர்வமாக விடுபட்ட புத்தகங்கள் கிடைக்கும் என்பது அவர் அடிக்கடி சொல்வது. 

 ஓர் உண்மைக் கதை. பழைய புத்தகம் ஒன்றை  வாங்கிய என் நண்பர் ஒருவருக்கு  வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆங்கிலப் புத்தகத் தொகுப்பை வெளியிட்டார். விற்றதுபோக மீதமிருந்த புத்தகங்களை எல்லாம் தன் நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்த¡ர். யாருக்கு அன்று அவர் புத்தகம் இலவசமாகக் கொடுக்கப்போகிறார் என்ற விசயம் முன்கூட்டியே தெரியாததால் பொதுவாக 'அன்பு நண்பருக்கு' என்று எழுதி கையெழுத்திட்டு எடுத்துப் போவார். நண்பர்களை கண்டதும் அதைக் கொடுப்பார். இப்படியே அவர் இலவசமாகக் கொடுத்து வந்ததில் ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்த கடைசிப் புத்தகத்தையும் கொடுத்துவிட்டார். ஏற்கனவே கையெழுத்துப் போட்டு கொடுத்த புத்தகத்தை நண்பரிடமிருந்து எப்படி திரும்பப் பெறுவது? ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிக்கொண்டு போனதில் தற்செயலாக அவர் பதிப்பித்த புத்தகம் அகப்பட்டது. அதை திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. அந்தப் புத்தகத்தில் 'அன்பு நண்பருக்கு' என்று எழுதி இவருடைய  கையொப்பமும் இருந்தது. யாரோ அன்பளிப்பாகப் பெற்ற அவருடைய புத்தகத்தை பழைய புத்தகக் கடையில் விற்றுக் காசாக்கிவிட்டார்கள். நான் கடைசியாக விசாரித்த அளவில் நண்பர் அந்தப் புத்தகத்தை விற்றவரை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்.

 சமீபத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தையும் சொல்லவேண்டும். அதைச் சொல்வதற்காகவே இதை எழுதத் தொடங்கினேன். கடந்த 60 வருடங்களாக எழுதிவரும் மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர் ஒருவருடைய புத்தகத்தை கடந்த வாரம் வாங்கினேன். அதில் ஓர் இடத்தில்  எழுதியிருந்ததை படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'ஐந்தாறு ஆண்டுகளாகவே என்னால் பல விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளமுடியாமல் போவதை உணர்ந்திருக்கிறேன். என் குடும்பம்வரை இதை அவர்களும் உணர்ந்திருந்தாலும் என் நண்பர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒருநாள் மாலை சுமார் அரைமணி நேரத்திற்கு என் வீட்டுக்கு செல்லும் வழி மறந்துவிட்டது. அதைவிட இன்னும் தீவிரமானது என் பெயர், முகவரி மறந்துவிட்டது. ஆனால் மொழி மறக்கவில்லை.'

 ஓர் எழுத்தாளர் அவர் பெயரை மறந்தால் நிலைமை என்னவாகும். அவர் வேறு பெயரில்தான் எழுதவேண்டி வரும். அவருக்கு எழுத்துமூலம் கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் வேறு யாருக்கோ போகும். நல்ல காலமாக அந்த ஞாபகமறதி நீடிக்கவில்லை. அரை மணி நேரத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. அவர் பெயர் அசோகமித்திரன்.

 நான் மதிக்கும் எழுத்தாளர்களில் இவரை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். இவர் எழுதிய புத்தகங்களில் அநேகமானவற்றை  படித்திருக்கிறேன். நானும் ஜெயமோகனும் கடைசியாகச் சந்தித்தபோது அரைவாசி நேரம் இவரைப் பற்றியே பேசினோம். நான் எழுத்தாளர்களின் கையெழுத்துகளைச் சேகரிப்பதில்லை. பல ஆங்கில தமிழ் எழுத்தாளர்களைச் சந்தித்திருந்தாலும் அந்த எண்ணம் தோன்றியதில்லை. சிலநேரங்களில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்களைச் சந்தித்தபோது புத்தகங்களில் அவர்களுடைய கையெழுத்துகளை பெற்றிருக்கலாமே என்று நினைத்ததுண்டு. அதிலும் அசோகமித்திரனின் கையெழுத்திட்ட புத்தகம் என்னிடம் ஒன்றுகூட இல்லையே என்று நினைத்து சமயத்தில் வருந்தியிருக்கிறேன்.

 நான் சமீபத்தில் வாங்கிய அசோகமித்திரனின் புத்தகத்தின் தலைப்பு 'நினைவோடை.' முதல் பக்கத்தை தற்செயலாகத் தட்டியபோது எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. அதிலே இப்படி அழகான கையெழுத்தில் எழுதியிருந்தது.

நண்பர் ராஜகோபாலுக்கு
மிக்க அன்புடன்
அசோகமித்திரன்
வேளச்சேரி, 27.2.2010.

 இந்தப் புத்தகம் எப்படியோ என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. கையெழுத்து வைத்தவரோ, அதைப் பெற்றவரோ, புத்தகத்தை எனக்கு விற்றவரோ செய்த தவறு என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. இந்தப் புத்தகத்தை என்ன வந்தாலும் நான் திருப்பிக் கொடுப்பதாயில்லை. புத்தகத்தில் குறிப்பிட்ட விலையிலும் பார்க்க எட்டு மடங்கு காசு கொடுத்து அதை நான் வாங்கியிருந்தேன். இன்னும் எட்டுமடங்கு யாராவது தருவதாய் இருந்தாலும் அது நடக்காது. இது எங்கே வரவேண்டுமோ அங்கே வந்திருக்கிறது. புத்தகமும் கையெழுத்தும் என்னுடனேயே இருக்கும்.


 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta