விதையின் ஆற்றல்

  நான் கலிபோர்னியாவுக்கு போனபோது அங்கேயிருக்கும் ஆக வயது கூடிய மரத்தைப் பார்க்க விரும்பினேன். உலகத்திலேயே ஆக வயதுகூடிய மரம் அங்கே வாழ்ந்தது. அதன் வயது 4770 வருடங்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். மரத்தின் பெயர் மெதுஸெலா.அந்த மரத்தை நான் பார்க்கவில்லை ஆனால் நண்பர் என்னை றெட்வுட் மரம் ஒன்றை காட்ட அழைத்துச் சென்றார். அந்த மரத்தின் வயது 1100 வருடங்கள். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தபோது அந்த மரத்துக்கு அப்போதே வயது 600. அதன் கீழே நின்று அதன் நுனியை பார்க்கவே முடியவில்லை, 200 அடி உயரம் இருக்கலாம். அந்த மரத்தின் விதை காற்றினால் பரப்பப்படுகிறது. பார்ப்பதற்கு மிக லேசாக இருக்கும் சிறிய விதை. இந்த சின்ன விதைக்குள் இருந்து பிரம்மாண்டமான விருட்சம் தோன்றியிருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை.  இத்தனை ஆற்றல் வெளிவரத் தயாராக இத்தனை சின்ன விதைக்குள் அடைபட்டுக் கிடந்தது என்பது சிந்திக்கவைத்தது.

 

ஒன்றின் உருவத்தையோ அதன் ஆரம்பத்தையோ வைத்து அது பிற்காலத்தில் எப்படி வரும் என்பதை ஒருவரும் சொல்ல முடியாது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது முழுக்க முழுக்க உண்மையில்லை. அயின்ஸ்டீன் படிக்கும்போது மிகச் சாதரணமான மாணவராகத்தான் இருந்தார். ஆசிரியர்கள் அவர்மேல் பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டிருக்கவில்லை.

ஹரியட் பீச்சர் என்பவர்தான் Uncle Tom's Cabin நாவலை எழுதினார். பெரிதாக திட்டமிடாமல் 1852ல் அவசரமாக எழுதிய நாவல் இது. அமெரிக்க அடிமைகளின் துயரைச் சொல்லிய நாவல். அந்த நாவல் எழுதப் பட்டபோது அதை பெரிய இலக்கியம் என்று ஒருவரும் கொண்டாடவில்லை. ஆனால் அது ஒரு விழிப்புணர்வு அலையை உருவாக்கியது. அடிமை விடுதலைக்கு வித்திட்டது. அது எழுதி சில வருடங்களின் அடிமை விடுதலை பிரகடனத்தை ஆப்பிரஹாம் லிங்கன் நிறைவேற்றினார். அடிமை விடுதலைக்காக அவர் ஒரு போரைக்கூட நடத்தவேண்டியிருந்தது. நாவல் எழுதிய ஆசிரியரை ஒருமுறை ஆப்பிரஹாம் லிங்கன் சந்தித்தபோது அவரிடம் 'இந்தச் சிறிய பெண்ணா அந்தப் பெரிய போரை ஆரம்பித்து வைத்தது ' என்று  சொன்னாராம். 19ம் நூற்றாண்டில் ஆகக் கூட விற்பனையான் நாவல் என்ற பெயரை அது பெற்றது. நாவலை எழுதிய பெண்மணி இந்தப் பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. எங்கே எப்போது எவரிடமிருந்து ஆற்றல் வெளிப்படும் என்பதை முன்கூட்டி ஒருவருமே அனுமானிக்க முடியாது.

இப்பொழுது டிவிட்டர் பிரபலமாகியிருக்கிறது. இதைக் கண்டு பிடித்து நாலுவருடம்தான் ஆகிறது. ஆனால் இதன் பரப்பும் ஆற்றலும் வியக்கவைக்கிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரே சமயத்தில் ஒரு தகவலை அனுப்பிவிட முடிகிறது. ஒவ்வொரு பிரபலரும் ஒரு டிவிட்டர் வைத்திருக்கிறார். அவரை ஆயிரக் கணக்கான ஆர்வலர்கள் தொடருகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா டிவிட்டரை சரியானமுறையில் பயன்படுத்தியதுதான் அவருடைய வெற்றிக்கான காரணம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

லான்ஸ் ஆர்ம்ஸ்ரோங் என்பவர் ஏழு தடவை Tour de France சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றவர். ஒருமுறை கலிபோர்னியாவில் அவருடைய விலையுயர்ந்த பந்தய சைக்கிளை யாரோ திருடிவிட்டார்கள். லான்ஸ் ஆர்ம்ஸ்ரோங்க் டிவிட்டரில் ஒரு தகவல் கொடுத்தார். சில மணி நேரங்களில் அவர் சைக்கிள் மீட்கப்பட்டது. 

இன்று டிவிட்டரின் வளர்ச்சி எங்கேயோ போய்விட்டது. இதில் பிரச்சினை என்னவென்றால் 140 எழுத்துக்களை மட்டுமே உபயோகித்து தகவல் அனுப்பவேண்டும்.  ஆகையால் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லும் அவசியம் ஏற்படுகிறது. சொற்களைச் சுருக்கி வசனங்களை சுருக்கி ஒரு புதுமொழியையே உண்டாக்கி வருகிறார்கள். பழக்கமில்லாத ஒருத்தர் டிவிட்டர் வாசகத்தை படித்து புரிந்து கொள்வது சிரமம்.
HAND – Have a nice day
TIA – Thanks in advance
PEANUT – Very special person

இப்படி பல சொற்கள் பாவனைக்கு வந்துவிட்டன. சில விதைகள் ஊன்றியவுடன் முளைவிடும்; சில பத்து இருபது வருடங்கள்கூட மண்ணில் கிடந்து நல்ல தருணத்திற்காக காத்திருந்து வெளியே வரும்.  டிவிட்டர் என்ற பிரம்மாண்டமான விருட்சத்துக்கு ஒரு விதை ஊன்றப்பட்டிருக்கிறது. எதிர் காலத்தில் டிவிட்டர் மொழியில் கவிதைகள் கட்டுரைகள் எழுதப்படலாம். நாவல்கள் வரலாம். ஒரு புது மொழிக்கு தேவையான டிவிடர் அகராதி உருவாகலாம். இந்த விருட்சத்தின் நிழல் மற்ற மரங்களை சாப்பிட்டு விடும் பயம் அதிகரித்திருக்கிறது.

BFN – Bye for now.
இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta