மாம்பழம்

""அந்த வருடம் எங்கள் வீட்டு மாமரத்தில் காய்கள் எக்கச்சக்கமாக காய்த்து தொங்கின. ஐயாவும், அம்மாவும் தங்கள் வாழ்நாளில் மரங்கள் அப்படி காய்த்து கொட்டியதை கண்ணால் கண்டதில்லை என்று சொன்னார்கள். எங்கள் வளவில் பலவிதமான மாமரங்கள் நின்றன. இப்பொழுதுபோல அப்போதெல்லாம்  ஒட்டுமாங்கன்றுகள் கிடையாது. மரங்களின் பெயர்களோ புதுவகையாக இருக்கும். ’ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய் அளவுக்கு பெரிசாக வளர்ந்து தன் பாரத்தை தானே தாங்க முடியாமல் வெடித்துவிடும். இன்னொரு வகை ’மத்தளம்தூக்கி’. நார்ச்சத்துள்ள இனிய பழம். இன்னொன்று ’வெங்காயம் காய்ச்சி’. இதை பழுக்க வைப்பதில்லை, இதில் வெங்காய வாசனை வரும் ஆகவே கறிக்கு பயன் படுத்துவார்கள். இன்னும் செம்பாட்டான், அம்பலவி, வெள்ளைக் கொழும்பான், கிளிமூக்கு, விலாத்து என்று பலப்பல வகை.


எங்கள் முற்றத்தில் நின்றது கறுத்த கொழும்பான் மாமரம். அது ஒன்றுதான் ஒட்டு மாங்கன்றாக வாங்கி வைத்து வளர்த்து அப்போது பெரிய மரமாகி காய்த்தது. மாங்காயின் நிறம் கரும்பச்சை. அது பழுத்தவுடன் பொன் நிறமாக மாறிவிடும். அதன் சுவையோ தித்திப்பு. பழத்தில் நாரே கிடையாது என்பதால் வெட்டியும் சாப்பிடலாம், தோலை உரித்து கடித்தும் சாப்பிடலாம். தேன்போன்ற இனிப்புடன்  தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறங்கும்.


எங்கள் வீட்டு மாமரங்களுக்கு இதுதான் ராசா என்று சொல்லலாம். இதன் உச்சாணிக் கிளையில் இருந்து அடிக்கொப்பு வரை பிஞ்சுக் காய்கள் காய்த்து தொங்கின. வீட்டுக்கு வருபவர்களும், போவோரும் ஒரு நிமிடம் நின்று இந்த அதிசயத்தை பார்க்காமல் போவதில்லை. இலைகளே தெரியவில்லை, எங்கும் குலக்கு குலக்காக மாங்காய்கள்தான். அடிக்கொப்புகள் பாரம் தாங்காமல் வளைந்து கொடுத்ததில் மாங்காய்கள் நிலத்தை தொட்டு சரிந்துகிடந்தன. என்னுடைய அம்மா சின்னச் சின்னக் கிடங்குகள் கிண்டி மாங்காய்களை நிலத்தில் அரைபட விடாமல் ஒவ்வொன்றாக தொங்கவிட்டார்.


மரத்திலே தொங்கும் காய்களை அணிலோ காகமோ கொத்தும் வாய்ப்பு இருக்கும், ஆனால் குழிகளில் மறைந்துபோய் கிடக்கும் மாங்காய்களுக்கு ஆபத்து கிடையாது. அது தவிர பழுக்கும்போது நிலத்தின் சூட்டினால் அவை நாலு பக்கமும் சமனாக ஒரே நேரத்தில் பழுக்கும். தின்பதற்கும் தேன்போல இருக்கும் என்று அம்மா சொன்னார்.  எங்கள் மூத்த அண்ணர் அதிபுத்திசாலியாக இருக்கவேண்டும். ஒரு சீட்டிலே தன் பெயரை எழுதி ஒரு மாங்காயில் கட்டி தொங்கவிட்டார். ஒவ்வொரு மாங்காயாக குழியிலிருந்து இழுத்துப் பார்த்து நல்ல தொக்கையான மாங்காயை அவர் தெரிவு செய்திருந்தார். அது பழுக்கும்போது அவருக்கு சொந்தம் என்பதை இப்போதே எழுத்துமூலம் அறிவித்துவிட்டார். உடனே சின்ன அண்ணர் ஒரு சீட்டில் தன் பெயரை எழுதி தொங்கவிட்டார். என் தம்பியும் சீட்டுக் கட்டினான். நானும் என் முழுப்பெயரையும் எழுதி, சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக Form 1A என்பதையும் சேர்த்து எழுதி தொங்கவிட்டேன். மிஞ்சியது தங்கச்சிதான். பாவம் அவளுக்கு தன் பெயரை எழுதத் தெரியாது. மூன்று வயதுதான் ஆகிறது. நான் அவள் பெயரை எழுதி அவள் தேர்வு செய்த ஒரு மாங்காய் காம்பில் கட்டி  விட்டேன்.


வீட்டுக்கு வருபவர்கள் இப்பொழுதெல்லாம் மாங்காய்களையும் அத்துடன் தொங்கும் சீட்டுக்களையும் அது யாருக்கு சொந்தம் என்ற விவரங்களையும் ஐயம்திரிபு இன்றி கற்றுச்கொண்டு சென்றார்கள்.  தினமும் நாங்கள் காலையில் எழுந்ததும் எங்கள் எங்கள் மாங்காய்களை குழிகளில் இருந்து உருவி வெளியே எடுத்து அவற்றின் பருமனையும் நிறத்தையும் குணத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் அவற்றை பாதுகாப்புக்காக உள்ளே அனுப்பிவிடுவோம். இப்படி இரவு பகலாக அவற்றை பராமரித்தோம்.


முதலில் பழுத்தது இரண்டாவது அண்ணரின் மாங்காய்தான். ஒருநாள் காலை அவர் சத்தம் எழுப்ப நாங்கள் ஓடிச்சென்று அந்த அதிசயத்தை பார்த்தோம். அவர் காம்பை பிடித்து இழுக்க மாம்பழம் வெளியே வந்தது. பார்த்தால் தங்க நிறத்தில் சுற்றிவர சமனாகப் பழுத்திருந்தது. சின்ன அண்ணர் மாம்பழத்தை தொட்டபோது காம்பு தானாகக் கழன்றது. அதன் தோலை உரித்து நின்ற நிலையில் கடித்து கடித்து சாப்பிட்டார். ‘நல்ல இனிப்பாயிருக்கிறது’ என்று அடிக்கடி சொன்னார். நாங்கள் அவருடைய வாய் அசைவைப் பார்த்தபடி நின்றோம்.


அதற்கடுத்து பெரியண்ணருடைய பழம் பழுத்தது. அவர் அதை நறுக்கி வைத்து ஒவ்வொரு துண்டாக சாப்பிட்டு முடித்தார். என்னுடைய பழமும் என் தம்பியின் பழமும் ஒரே நாளில் பழுத்தன. நாங்கள் இருவரும் அவற்றின் வழுவழுப்பையும் அழகையும் எல்லோருக்கும் காட்டிவிட்டு தோலை உரித்து சாப்பிட்டோம். ஆக எஞ்சியது தங்கச்சியின் மாங்காய்தான். அது ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வந்தது. அவளுடைய தலையளவுக்கு பெருத்த பிறகு நிறம் வைக்கத் தொடங்கியது. ஒருநாள் காலை பழுத்து கனிந்து சாப்பிடுவதற்கான பருவத்தை எட்டியது. அண்ணர் அதை ஆய்ந்து அவளிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்க  கைகளில் அவளுக்கு போதிய பலம் கிடையாது. ஆனாலும் அவள் அதை கீழே இறக்கவில்லை. குழந்தையை அணைத்துப் பிடிப்பதுபோல நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு வீடு முழுக்க அலைந்தாள். ஒரு புதுப் பொம்மை கிடைத்ததுபோல மகிழ்ச்சி. மதியம்வரை அதை நெஞ்சைவிட்டு கீழே இறக்கவில்லை. அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்கு கிடையாது.


எங்கள் பெரிய ஐயா மாதத்தில் இரண்டு மூன்று தடவை வீட்டுக்கு வருவார். அவரைக் கண்டதும் நாங்கள் எல்லோரும் ஓடி ஒளித்துவிடுவோம். எங்கள் ஐயாவிலும் பார்க்க அவர் உயரமானவர். அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் வீடு சிறுத்ததுபோல காணப்படும். வெள்ளை மயிர் முளைத்திருக்கும் தட்டையான அகலமான நெஞ்சு. எப்பொழுது பார்த்தாலும் முகத்தில் கறுப்பும் வெள்ளையும் கலந்த மூன்றுநாள் தாடி முள்ளுப்போல நீட்டிக் கொண்டிருக்கும். ஓயாமல் நீர் வடியும் இடது கையிலே ஒரு துணி சுற்றியிருக்கும். ஊசி போடுவதற்கு கோழிகளைப் பிடிப்பதுபோல எங்களை ஒவ்வொருவராகப் பிடித்து அவருக்கு கொஞ்சவேண்டும். கன்னம் குத்தி எரியும். ஆனால் அவர் விடாப்பிடியாக எங்களை துரத்திக் கொண்டுவந்து பிடித்துவிடுவார்.


அன்றைக்கு அவர் வந்தபோது பொம்மையை அணைப்பதுபோல மாம்பழத்தை கட்டிப்பிடித்து அன்று முழுக்க விளையாடிக்கொண்டு இருந்த தங்கச்சி அவருக்கு கொண்டுபோய் அதை இரண்டு குட்டிக் கைகளாலும் நீட்டிக் காட்டினாள். அவர் மாசுமறுவற்ற அந்த மாம்பழத்தை வலது கையிலே பெற்றுக்கொண்டு அதை திருப்பி திருப்பி பார்த்தார். நாங்கள் வாயை ஆவென்று பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஐயா நினைத்தார் அதை அவள் அவருக்கு தருகிறாள் என்று. ‘என்ரை பிள்ளை எனக்கு தாறியோ?’ என்றார். அவள் தலையை ஆட்டினாள். என்னுடைய தங்கச்சி எல்லாத்துக்கும் தலையை ஆட்டுவாள். பிறக்கும்போது அவள் மரபணுவில் அது எழுதப்பட்டிருந்தது. அது அவருக்கு தெரியாது. பெரிய ஐயா துணி சுற்றிய அகலமான கையினால் மாம்பழத்தின் தோலை உரசித் துடைத்துவிட்டு தோலுடன் சேர்த்து ஒரு கடி கடித்தார். அவருடைய மூன்றரைப் பற்கள் மாம்பழத்தை குதறிப் பிய்த்து துண்டு துண்டாக்கின. என்னுடைய நடு நெஞ்சை யாரோ பிய்த்து எடுத்ததுபோல இருந்தது. சாறு வழிந்து நாடியில் இறங்கி அவர் நெஞ்சு மயிரை நனைத்தது. நாங்கள் ஏற்கனவே வாயை எட்டியமட்டும் திறந்து வைத்திருந்தபடியால் வாயை மேலும் பெருப்பிக்க முடியாமல் அப்படியே திகைத்துப்போய் பார்த்துக்கொண்டு நின்றோம்.
END

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta