இன்னும் சிறிது தூரம்தான்

இரண்டு புறநானூறுப் பாடல்கள் நினைவுக்கு வரும்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. நான் மருத்துவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவ அறைகளில் காத்திருந்த மணித்தியாலங்களின் கூட்டுத்தொகை பத்து முழு நாட்களுக்கு சமமாக இருக்கும்.

 

அப்பொழுது அந்த தம்பதியினர் வந்தனர். இருவரும் முதியவர்கள். ஆணுக்கு 70 வயதுக்கு மேலே; பெண் கொஞ்சம் இளமையானவராகத் தோன்றினார். அந்த மனிதர் அவர் காலத்தில் ராணுவத்திலோ, போலீஸ் உத்தியோகத்திலோ அதிகாரியாக கடமையாற்றியிருப்பார். அப்படி குலையாத உடல் கட்டு. அகலமான நெஞ்சு. அமெரிக்க நடிகர் ஜோன் வேய்னின் தாடையை நினைவூட்டும் முகம். அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க அவர் மனைவி அதை தள்ளிக்கொண்டு வந்தார். உலகத்தில் நடப்பது ஒன்றுமே தெரியாமல் அவர் தலை கவிழ்ந்து நெஞ்சிலே முட்ட உட்கார்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில் ஓர் ஆசனத்தில் அமர்ந்து அவர் கைகளைத் தடவிக்கொண்டே இருந்தார், மனைவி.

 

பெண் களைப்பாகக் காணப்பட்டார். ’நீண்டதூரம் பயணம் செய்து வருகிறீர்களா?’ என்று கேட்டேன். குளிர்காலம் ஏற்கனவே தொடங்கிவிட்டாலும் பெண்ணின் முகத்திலிருந்து வியர்வை பெருகிக்கொண்டிருந்தது. மூச்சு பெரிதாக வந்தது. ஆனால் அந்த மனிதரோ ஒன்றுமே அறியாமல் தன்னை ஒப்படைத்துவிட்டு பேசாமலிருந்தார். ‘நீண்ட தூரம்தான். மூன்று பஸ் பிடித்து வருகிறோம். இரண்டு மணிநேரம் முன்பாகப் புறப்பட்டோம். இந்த மருத்துவரிடம் கடந்த 30 வருடங்களாக வருகிறோம். அங்கே கிட்ட வேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள். என் கணவருக்கு வேறு மருத்துவரிடம் போவதற்கு விருப்பமில்லை. இந்த நாற்காலி மின்கலனில் தானாக இயங்கக் கூடியது. ஆனால் அவரால் இன்று இயக்க முடியவில்லை. அதுதான் தள்ளிக்கொண்டு வந்தேன்’ என்று கூறிவிட்டு ஒரு மென்பேப்பரை எடுத்து கணவரின் வாயை துடைத்துவிட்டார். பின்னர் கணவரைப் பார்த்து மெல்லிய குரலில் ‘பயப்படவேண்டாம். எல்லாம் சரியாகும்’ என்றார்.

 

நான் நினைத்தது சரிதான். அவர் கணவர் போலீஸ் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். பெரிய அதிகாரி. அவர்கள் ஒன்றாக வாழ்ந்த கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக கார் இல்லாமல் வாழ்வதாகச் சொன்னார். சென்ற மாதம்தான் அவர்கள் காரை விற்றார்கள். ‘உங்களுக்கு கார் ஓட்டத் தெரியாதா?’ என்று கேட்டேன். தெரியும், ஆனால் என்ன பிரயோசனம். என்னுடைய கணவர் சக்கர நாற்காலிக்கு மாறிய பின்னர்தான் பிரச்சினை ஏற்பட்டது. வெளியே போகும்போது அவர் நாற்காலியை இயக்குவார் அல்லது நான் தள்ளிக்கொண்டு போவேன். சிறிது தூரம் என் உதவியுடன் அவரால் நடக்கவும் முடியும். ஆனால் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் அவரைத் தூக்கி என்னால் காரில் ஏற்ற முடியாது. வேறு ஆட்களின் உதவி தேவை. அதனால் காரினால் பிரயோசனம் கிடையாது. விற்றுவிட்டேன்.

 

’எப்படி பஸ்ஸில் பயணம் செய்ய முடிகிறது?’ ’சக்கர நாற்காலிக்காரர்களுக்கு பஸ்சிலே ஓர் அடையாளம் போட்டிருக்கும். பஸ்ஸின் நடுவில் உள்ள கதவுகள் அவர்களுக்காக திறக்கும். பஸ்ஸிலே உள்ள இரண்டு இரும்பு அலகுகள் வெளியே வந்து நாற்காலியை அப்படியே ஆளுடன் சேர்த்து தூக்கி அலுங்காமல் உள்ளுக்கு வைக்கும். நிற்கும் இடம் வந்ததும் அதே மாதிரி இறக்கிவிடும். நல்ல வசதி’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டு பேசாமல் நின்றேன். அவர் சொன்னார். ‘ஒருகாலத்தில் என் கணவருக்கு மதிப்பான வேலை இருந்தது. கார் இருந்தது. இப்போது வேலை இல்லை. காரும் இல்லை.’

 

புறநானூறு பாரி மகளிரின் பாடல் நினைவுக்கு வந்தது. புலம்பல் இல்லாமல் நேராக ஓர் உண்மையை சொல்லிப் போகும் பாடல். அதன் எளிமைதான் அதன் துயர்.

அந்தநாள் அந்த வெண்ணிலா. என் தந்தை இருந்தார், ராச்சியமும் இருந்தது.

இந்தநாள் இந்த வெண்ணிலா. ராச்சியம் இல்லை, என் தந்தையும் இல்லை.

 

சற்று நேரம் ஒன்றுமே பேசத் தோன்றாமல் சும்மா இருந்தார். பின்னர் திடீரென்று என் பக்கம் திரும்பி ‘தார் ரோட்டு முடிந்துவிட்டது. இனி வருவதெல்லாம் கல் ஒழுங்கைதான்’ என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தபோது நெஞ்சு திடுக்கிட்டது.

 

அந்தச் சமயம் தாதி வந்து அவர்களை அழைத்தார். நாலே நாலு அடிதான் வைக்க வேண்டும். கணவரின் கையை மனைவி பிடித்தார். ‘ இன்னும் கொஞ்ச தூரம்தான். இன்னும் கொஞ்ச தூரம்தான்’ என்றபடி அழைத்துச் சென்றார்.

 

என் வளைக் கரத்தை பற்றியபடி கொஞ்சம் நடவுங்கள். நிழலுக்கு போய்விடலாம். சிறிது தூரம்தான். சிறிது தூரம்தான்.

 

‘நிரை வளை முன்கை பற்றி

வரை நிழல் சேர்க, நடத்தி நின் சிறிதே.’

புறநானூறு 255.

END 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta