கடிதம்

அன்பு நண்பர் ஒருவரின் கடிதம்

 

அன்புத் தோழர் அ முத்துலிங்கம் அவர்களுக்கு

இன்று அதிகாலை என்னை அலைபேசியில் அழைத்த எனது நண்பர் இளம் தோழர் மோகன் (காஞ்சிபுரம்) அவர்கள் அந்த ஆள் ஒரு கொலைகாரர் தான் சந்தேகமே இல்லை என்று திடு திப்பென்று சொன்னார். அவரோடு நான் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு…..இதர எத்தனையோ விஷயங்களைப் பேசுபவன் என்பதால் மேற்படி கிரிமினல் குற்றத்தைச் செய்திருப்பவர் எந்தத் துறையைச் சார்ந்தவராயிருப்பார், யாரைச் சொல்கிறார் என்று யோசிப்பதன் முன் அவரே சொன்னார்:

சார், நைட் படிச்சேன் சார், யானையின் படிக்கட்டு,
என்ன மாதிரி கட்டுரை,
நீங்க நேற்று எஸ் எம் எஸ் கொடுத்ததை ஒத்துக்கிறேன் சார்,
அய்யோ, என்ன எழுத்து,
அய்யோ என்ன ஆளு அவரு..
கொன்னுட்டார் சார் மனுஷன்..


விஷயத்துக்கு வருவோம்…
மூன்றாம் தேதி எங்கள் சங்கம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி எனும் சிற்றூரில் நடத்தி வரும் எளிய பள்ளியின் பத்தாம் ஆண்டுவிழா சென்று விட்டு நேற்று திரும்பியதும் (இது பற்றிய விரிவான லிகிதம், விரைவில்..), வீடு வரும் வழியில் காலையிலேயே உயிர்மையைக் கேட்டு வாங்கிக் கொண்டு கடை வாசலிலேயே இன்டெக்ஸ் பக்கத்தில் உங்கள் கட்டுரை/சிறுகதை (அது சரி, இரண்டுக்கும் ஒரு போதும் வித்தியாசம் காணப் போவதில்லை, நான், உங்கள் எழுத்தின் வளப்பத்தில்!) ஏதேனும் வந்திருக்கிறதா, ஆம் எனில், எந்தப் பக்கத்தில் என்று ஐம்பதாம் பக்கத்தைக் குறித்துக் கொண்டேன். அலுவலகம் செல்லும்போது ரயிலில் கையில் எடுக்கும்போது மூன்று மணி நேரம் தாமதமாகப் படிக்கிறோமே என்ற குற்ற உணர்வோடு உங்களை ஸ்பரிசித்துப் படிக்கத் தொடங்கி வழக்கம் போலவே உங்களது விவரிப்பின் லாகிரியில், அடுத்தடுத்து விஷயங்களை நகர்த்தும் உங்களது தேர்ச்சியான நடையில் நான்கு மூழ்கி அவ்வப்பொழுது தலையை வெளியே எடுத்து காகங்கள் சிலிர்த்துத் தண்ணீரைப் பூவைச் சிதறுமே அப்படி ஒரு சிதறல் சிதறிக் கொண்டு மீண்டும் மூழ்கிக் களித்த அடுத்த வினாடியில் நண்பர்கள் சிலருக்கு இப்படி ஒரு செய்தியை அனுப்பி வைத்தேன்: அ முத்துலிங்கத்தின் யானையின் படிக்கட்டு, உயிர்மை ஜனவரி. அருமை.  என்று. இது தான் நீங்கள் இன்று காலை கொலைகாரர் ஆக என்னிடமே திரும்பி வந்து சேர்ந்த கதை.

யானையின் படிக்கட்டு,  சமகாலத்து பண்பாட்டுச் சூழல், வாசிப்புத் திறன், மனனக் காலை, நினைவாற்றல், பொது அறிவு, சமூக நோக்கு, ஆக்கல்-அழித்தலின் பொத்தானை யார் யார் கையிலோ கொடுத்துவிட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கும் நமது சம காலத்து சாபம் இவை குறித்த கவித்துவ விமர்சனமாக அழகாகப் பேசுகிறது.

சூப்பர் மார்கெட் பெண்மணி பத்தாயிரம் பொருள்களின் ரகசிய எண்ணையும் மூளையில் பதிந்து வைத்திருப்பதும், வாடிக்கையாளர் வைக்கும் தேர்வில் அனாயசாமாகத் தேறியபிறகும் அடக்கத்தோடு நடந்து கொள்வதும் கட்டுரையின் முற்பகுதி வாசிப்பில் மின்னுகிறது. (முந்திரிக்கு என்னம்மா கோட் என்றால், வறுத்ததா, வறுக்காததா, உப்பு போட்டதா, இல்லாததா, முழுசா, உடைந்ததா..என்று துணைக் கேள்வி போட்டுவிட்டு பதினோரு எண்களைக் கொண்ட அந்த ரகசிய எண்ணை அவர் அடித்து கணினியில் விலையைக் காட்டுவது அபாரம்). எனக்கு, கோவில்பட்டி ராமையா நினைவுக்கு வந்தார், தசாவதானி அவர். பதின் கவனகர் என்று சொல்வார்கள். கண் பார்வை இழந்திருந்த அவர் ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றிலும் நிகழும் பத்து விஷயங்களின் மீது அசாத்தியமான நினைவாற்றலை வெளிப்படுத்தியவர். கல்லீரல் பற்றிய உடல் நலக் கட்டுரையில் நான் அதை அவரோடு ஒப்பிட்டேன்.

பிறகு கட்டுரையில் குதித்து வரும் சின்னஞ்சிறுமி செல் ஃபோனை வைத்துக் கொண்டு இணையதள தொடர்பை நிமிட்டி, நிமிட்டி கட்டுரையாளர் கேட்கும் பொது அறிவு தொடர்பான எந்தக் கேள்விக்கும் சொடுக்கில் விடை கண்டெடுத்துச் சொல்வது நிகழ்கால அறிவியல் தேடலின் பரிணாமம். ஆனால், நடைமுறை கேள்வி ஒன்றிற்கு சிந்திக்கத் தெரியாத அந்த செல் ஃபோன் அந்தச் சிறுமியைக் கவிழ்த்துவிடுவதும், இந்த ஆடம் போங்கு, அழுகுணி அந்தச் செல்லக் குட்டி கோபித்துக் கொண்டு ஓடுவதும் ரசமான உண்மைத் தரிசனம்.

அதிலிருந்து தொடர்கின்ற உங்கள் தொடர் சிந்தனை ஓட்டத்தில் அரண்மனையில் ஏன் படிக்கட்டுகள் ஒவ்வொரு அடியிலும் நீண்டு நீண்டு பின் அடுத்த அடிக்கு உயர்ந்து போகின்றன என்ற வியப்புக்குப் பதில் சொல்லி முடியும் இடம் அற்புதம், அழகு, அருமை…

நேற்றே முற்பகல் நேரத்தில் மேற்கு தாம்பரத்தில் ஒரு தேநீர்க்கடையில் வைத்து முதன்முறை அறிமுகமான ஒருவரிடம் மிகச் சுருக்கமான இந்தக் கட்டுரையைச் சொல்லவும், முதலில் அசுவராசியமாக கேட்கத் தொடங்கிய அந்த மனிதர் அடேங்கப்பா சுருக்குன்னு எத்தனை செய்தியை ஒரு கட்டுரையை வைத்து சார் எடுத்துச் சொல்றாரு..புது விஷயம், புது சிந்தனை..மறக்க முடியாது சார் என்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்த நண்பரிடம் நன்றி  சொல்லிவிட்டுப் போனார்.

மேற்படி தெளிவான தடயங்கள், சாட்சிகள், நீங்களே கைப்பட எழுதியிருக்கும் எழுத்து பூர்வமான தஸ்தாவேஜுகளின்  அடிப்படையில் நீங்கள் ஒரு கொலைகாரர் என்ற குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பளித்து முடிக்கிறேன்..

எஸ் வி வேணுகோபாலன்..

 


 

 

 

About the author

2 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta